Aran Sei

ஜூம் மீட்டிங்களும், டீ-செலவுச் சிக்கனமும் – பாமரன்

ண்பர் பாதசாரிதான் கேட்டார்….

”ஏம்ப்பா… நீ இன்னும் நம்ம செல்வத்தோட புக்க படிக்கலியா… செம நக்கல் புடிச்ச எழுத்துப்பா…” என்று. அப்போதுதான் செல்வம் அருளானந்தத்தின் “எழுதித் தீராப் பக்கங்கள்” நூல் குறித்தே அறிந்தேன். இத்தனைக்கும் அந்தப் புத்தகம் வெளிவந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது.

சரி தலைவர் சொல்லிவிட்டாரே என்று தேடிப்பிடித்து வாங்கினால்…. புத்தகம் நையாண்டின்னா நையாண்டி அப்படிப்பட்டதொரு நையாண்டி.

ஈழத்திலிருந்து வந்த படைப்புகளில் தளையசிங்கம்…. டேனியல்… எஸ்.பொ… செ.யோகநாதன்… கணேசலிங்கன்…. தொடங்கி இன்றைய குணா கவியழகன்… சயந்தன்…. தமிழ்நதி வரைக்கும் ஓரளவுக்கு நூல்களை வாசித்திருந்தாலும் இப்படிப்பட்ட உச்சகட்ட பகடி எழுத்தை வாசித்ததில்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்த நூலை வாசிக்கும்போது ஆள் பகடியில் மட்டுமில்லை…. மனதைத் துயர்மிகு உணர்வுகளில் தள்ளிவிடக்கூடிய எழுத்துக்கும் சொந்தக்காரன் என்பது புரிந்தது.

(இதை வாங்கியே தீருவேன் என அடம் பிடிப்பவர்கள் அழைக்க வேண்டிய எண் :  தமிழினி பதிப்பகம் : 044 28490027 )

 

தென்னையும் முருங்கையும் வாகையும் சூழ் வீட்டை விட்டுக் கொழும்புக்குக் கிளம்புவதில் தொடங்குகிறது “எழுதித் தீராப் பக்கங்கள்.”

தனது நண்பர் அருள்நாதரோடு மற்றொருவரும் சேர்ந்து கொள்ள…

முதலில் கொழும்பில் இருந்து மாஸ்கோ…

பிறகு மாஸ்கோவிலிருந்து பெல்ஜியம்…

அப்புறம் பெல்ஜியத்திலிருந்து கள்ளத்தனமாக பிரான்சுக்குள் நுழைவது… இதுதான் திட்டம்.

மாஸ்கோ போய் இறங்குவதில் இருந்து தொடங்குகிறது இவர்களது லூட்டி.

தங்கியிருக்கும் ஓட்டலின் அறையில் குளிப்பதற்கான பாத் டப்பில் குளிக்காமல் அதற்கு வெளியில் நின்று அருள்நாதர் ஆசை தீர குளித்துக் கொண்டிருக்க… மரத்தரையில் பெருகிய வெள்ளம் கீழ்த் தளத்தில் உள்ள அறைகளுக்குள் உற்சாகமாய்ப் பாய்ந்தோடுகிறது.

கதிகலங்கிப் போன கீழ்தளத்திலிருந்த ஒரு அம்மணி பாய்ந்தோடி மேலே வந்து கதவைத் தட்ட… அவசரத்தில் ஆதாம் ஏவாள் கோலத்தில் வந்து கதவைத் திறந்து  காட்சி தருகிறார் அருள்நாதர். கழுத்தைப் பிடித்துத் தள்ளிய குறையாக ஓட்டிக் கொண்டு போய் வேறிடத்தில் தங்க வைக்கிறார்கள் மாஸ்கோ அதிகாரிகள்.

ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி பெல்ஜிய விமான நிலையத்தில் தங்கள் பொற்பாதங்களைப் பதிக்கிறார்கள். இவர்களை ரகசியமாக பிரான்சுக்குள் கூட்டிச் செல்லும் கார் டிரைவரும் வந்து சேருகிறார்.

நீண்ட இரவு நேரப் பயணத்தில் முதலில் ஒரு எல்லையோர செக்போஸ்ட்டில் அதிகாரிகள் காரை நிறுத்த… ”நாங்கள் இலங்கை கவர்மெண்ட்டில் வேலை செய்பவர்கள். அரசு வேலையாய் செக்கோஸ்லோவாக்கியா செல்கிறோம். அதற்கு முன்னதாக பிரான்சைப் பார்க்கும் ஆசையில் வந்திருக்கிறோம்… எங்களை அனுமதியுங்கள்” என்று டன் கணக்கில் அவர்கள் காதில் பூ சுற்றுகிறார்கள்.

“இந்த டகால்டி வேலையெல்லாம் வேண்டாம்… நீங்கள் போய் முதலில் பிரான்ஸ் தூதரகத்தில் விசா வாங்கி வாருங்கள்…. அப்புறம் விடுகிறோம்.” என்று திருப்பி அனுப்புகிறார்கள் அந்த அதிகாரிகள்.

சரி இந்த பார்டர் செக்போஸ்ட் வேண்டாம்…. இன்னும் 100 மைல் தாண்டி ஆளரவமற்ற இன்னொரு செக் போஸ்ட் இருக்கிறது… அங்கு போவோம் என்று மீண்டும் தொடர்கிறது பயணம்.

பனி பெய்யும் இரவில் வெட்டவெளியில் இருந்த  அந்த பார்டர் செக் போஸ்டை அடைந்து அங்குள்ளவர்களிடம் மீண்டும் அதே கதையைச் சொல்ல… அங்கிருந்த குடிவரவு அதிகாரிகள் உலக வரைபடத்தையே அலசி ஆராய்ந்தும் ”சிறீலங்கா” என்கிற நாடு அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

மீண்டும் மறுப்பு…. மீண்டும் கெஞ்சல்…

அந்த நேரம் பார்த்து இரு அழகிகள் மற்றொரு காரில் அங்கு வந்து சேர… ’இவர்களோடு ஜொள் விடும் வேளையில் இந்த சனியன்கள் வீணாக  இங்கே எதற்கு?’ என்கிற எரிச்சலுற்சாகத்தோடு எல்லையோர தடையைத் தூக்கி விட்டு ”போய்த் தொலையுங்கள்” என்று பிரான்சுக்குள் வழியனுப்பி வைக்கிறார்கள் அந்த பெல்ஜிய அதிகாரிகள்.

இப்படியாகத் தொடங்குகிறது எண்பதுகளின் துவக்கத்தில் போய் இறங்கிய பிரான்ஸ் தேசத்து புலம் பெயர் வாழ்வு. மொழி தெரியா தேசத்தில் மாட்டிக் கொண்டு அல்லாடிய கணங்கள்…. விலா நோக சிரிக்க வைக்கும் சம்பவங்கள்…. சந்தித்த அற்புதமான தோழமைகள் என விரிகிறது இந்த ”எழுதித் தீராப் பக்கங்கள்”.

பாரிஸ் நகரினது கட்டிடமொன்றின் மூன்றாவது மாடிக்கு மேல் இருந்த கூரையில் உள்ள அறையில் சன்னலோர தரிப்பிடமும்… அதன் கீழே விரிக்க ஒரு போர்வையும்… போர்த்திப்படுக்க ஒரு போர்வையுமாய் தஞ்சமடையும் செல்வத்தினது நினைவுகள் அக்கூரையினூடே தனது ஈழத்து வீட்டை நோக்கிப் பயணிக்கிறது.

ஊரில் கூரை வேய்தல் என்பது எப்பேர்ப்பட்ட உற்சாக அனுபவம். கூரை வேய்வதற்கான நாளைத் தேர்ந்தெடுத்தவுடன் பனை மரங்களை வைத்திருக்கும் காணிக்காரரிடம் சென்று சொல்லி விட்டு வருவது…

அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்று ஓலை வெட்டுபவர்களிடம் முன்பதிவு செய்து விட்டு வருவது….

அதிகாலையிலேயே எழுந்து ஓலை வெட்டைப் பார்ப்பதற்குத் தயாராவது…

தற தறவென அவர்கள் மரம் ஏறுவதும்…. சர சரவென ஓலைகள் அசைந்தாடி கீழே விழுவதுமான காட்சிகளை ரசிப்பது…

என்று கழிந்த கணங்கள் எல்லாம் நம்மையும் அம்மரத்தடியில் கொண்டு போய் நிறுத்தும்.

கூரை வேய்வதற்கெனவே வந்திறங்கும் கலகக்காரர் வியேந்தம்மான் இவரது பாட்டியின் சகோதரன் தான்.

வேட்டியோ லுங்கியோ எதைக் கட்டினாலும் கோவணம் தெரிய கட்டும் குசும்பு…

அக்கா சாவுக்கு சர்ச் துக்கமணி அடிக்கவில்லையென்று அந்த மணியையே கழட்டிக் கொண்டு போன குறும்பு…

கோயிலுக்கு வழக்கமாய் கொடுக்க வேண்டிய காசினைக் கொடுக்காததால் ”நீ செத்தால் உன் சடலத்தை அடக்கம் செய்ய விடமாட்டேன்” என்ற ஃபாதரிடம் “அப்ப சடலத்தை நீயே வைச்சிரு” என்கிற தெனாவெட்டு….

இதெல்லாம் சேர்ந்த கலவைதான் வியேந்தம்மான்.

மனிதர் வாயைத் திறந்தாலே வண்டை வண்டையாய் வந்து விழும் வார்த்தைகள். பக்கத்தில் பாட்டி இருந்தாரென்றால் ”அடேய்… மக்கள் மருமக்கள்… குஞ்சு குறுமன் நிற்கிற இடத்தில என்னடா இப்படி கதைக்கிறாய்…? நீ கட்டாயம் நரகத்துத்தான் போவாய்”  எனத் திட்டினால்….

“ஓமடி ! ஓமடி ! உங்களைப் போல எல்லோரும் மோட்சத்துக்குப் போனால்… யாரைப் போட்டு ”அந்தாள்” (கடவுள்) நரகத்திலை எரிக்கிறது? தென்ன மட்டையையோ? அது அங்க கிடக்கோ என்னமோ தெரியல… எங்களைப் போல ஆட்களைத்தான் போட்டெரிக்க வேணும்” என்கிற நெத்தியடி பதில் வந்து விழும் வியேந்தம்மானிடம் இருந்து.

ஆனாலும் கூரை வேய்வதில் அவர்தான் கிங்.

வீடு வேய்ச்சலின் போது காலையில் அவிக்கிற குழல் புட்டும் கருவாட்டுப் பொரியலும்… சம்பலும்…. மதியம் மாதகலுக்குப் போய் வாங்கி வந்த மீன் குழம்புச் சாப்பாட்டுக்கும் பாரிஸ் நகரத்தையே எழுதி வைக்கலாம்.

”இப்போ எங்கள் இனத்துக்கே ஒரு கூரையில்லாமல் போய் விட்டது. அதை வேய்ந்துதர எந்த வியேந்தம்மானும் எங்கள் மத்தியில் இல்லை.

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில்தான் நெஞ்சு திடுக்கிட்டது. நாளை அதிகாலை வெள்ளன எழும்பி போலீசில் அகதியாய் என்னைப் பதிவு செய்ய வேணும். இன்னாருடைய மகன்…. இந்த சாதிக்காரன்… இந்த ஊர்க்காரன்… இப்படியெல்லாம் பெயர் இருந்த எனக்கு இப்போது புதுப்பெயர் சூட்டப் போகிறார்கள்.

நாளையிலிருந்து.

என் பெயர் அகதி.” என முடிக்கிறார்….

இல்லையில்லை தொடங்குகிறார் செல்வம் அருளானந்தம்.

பாரிசுக்கு வந்து சேர்ந்த மறுநாள் அகதிகளுக்கான விசா பெறும் அலுவலகத்துக்கு அறையிலிருந்த ”தட்சூனை” அழைத்துக் கொண்டு  போகச் சொல்கிறார் இவரது மச்சான். தட்சூன் இவருக்கு முன்பே பிரான்சுக்கு வந்து விட்டவர். யாழ்ப்பாணத்தில் வசதியான வியாபார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தந்தையிடம் கோபித்துக் கொண்டு தாய் கொடுத்த பணத்தில் பாரிஸ் வந்து சேர்ந்தவர்.

ஒயின் பிரியரான இவரால் ஏற்படும் அலப்பரைகள் தனி ரகம்.

விசா பதிவு முடிந்து வெளியில் வந்ததும் “பாரிசில் ஏதாவது பார்க்கப் போகிறீர்களா? என்று தட்சூன் கேட்க நம்மாள் “பிரான்ஸ் என்றதும் என் நினைவுக்கு வருவது நெப்போலியன் தான்” என்கிறார்.

”இவ்வளவு சீக்கிரமாகவா…? இங்கே குடிப்பதென்றால் நிறைய செலவாகும். இரவு ரூமில்தான். ஆனாலும் நெப்போலியன் வாங்க மாட்டார்கள் வாலண்டைன் தான்” என்று கூற….

இது என்னடா சிக்கலாய் இருக்கு என்கிற அதிர்ச்சியோடு “நெப்போலியன் என்பவர் உலகத்தை அதிரச் செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர்” என்று விளக்க வேண்டி வருகிறது.

விளக்கமும் விளங்காமல் நெப்போலியன் நினைவுச் சின்னம் இருக்குமிடம் என்று வேறொன்றைக் கூட்டிப் போய் காட்ட தலை சுற்றி விடுகிறது.

”சரி நெப்போலியனால் நமக்கு ஆகப்போகிறது ஒன்றுமில்லை. உங்களை இன்னொரு இடத்திற்கு அழைச்சிட்டுப் போறேன். அது ஒரு அற்புதமான சினிமா. இதை வாழ்க்கையில் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று கூட்டிப் போக…

ஆங்கிலமே புரியாத நமக்கு பிரெஞ்சுப் படம் எங்கே புரியப் போகிறது என்கிற குழப்பத்தோடு உள்ளே நுழைய…. சில நொடிகளிலேயே புரிந்து விடுகிறது…. இந்தப் படம் பார்ப்பதற்கு பிரெஞ்ச் மட்டுமல்ல… எந்த மொழியுமே தேவையில்லை என்பதும்… அதைவிட அதில் நடிப்பதற்கு ஆடையும் அவசியமில்லை என்பதும்.

அலறியடித்துக் கொண்டு வெளியில் வருகிறார்கள்.

ஆனாலும் தட்சூன் ஒரு ஜெண்டில்மேன். யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விசாரிக்கவோ விமர்சிக்கவோ மாட்டார். தான் உண்டு தான் குடிக்கும் ஒயின் உண்டு என்று மட்டுமே இருப்பார்.

”இந்த நாடுகள் என்னதான் வளர்ந்தாலும் இன்னும் முன்னேற வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கு. பைப்பில் காஸ் வருது…. ஒயரில் மின்சாரம் வருது… பைப்பில் குடிநீர் வருது… அதுபோல ஒயினுக்கும் ஒரு லைனைப் போட்டு விட்டு பில்லை அனுப்பலாம்…” என்கிற பிரெஞ்சு தேசத்திற்கான அரிய யோசனை ஒயின் கிடைக்காத பொழுதொன்றில் அவரில் உதித்த யோசனைதான்.

தட்சூனுக்கு அம்மா நினைவு வந்து விட்டால் வீட்டுக்கு போனைப் போட்டு அழத் தொடங்குவார். மறுமுனையில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாவின் அழுகுரல் கேட்கும். நண்பர்கள் போனைப் பிடுங்கி வைக்கும்வரை இது நீடிக்கும்.

”நான் செத்தால் உடம்பை ஊருக்கு அனுப்பக்கூடாது. இங்கேயுள்ள சோசியல் சர்வீஸில் கொடுத்து விடுங்கள்” என்பார்.

இவரது இந்த ”தட்சூன்” பெயர்க்காரணமே விநோதமானது. மாணிக்கதாசன் என்கிற பெயர் இங்குள்ளவர்களுக்குப் புரியாது என்று “தாசன்” என சுருக்கி தன் பிரெஞ்ச் முதலாளியிடம் சொல்ல…. அவருக்கு அதுவும் வராமல் ”தட்சூன்” ஆக்கி விட… பிற்பாடு அனைவரிடமும் அந்தப் பெயரே நிலைத்து விடுகிறது.

பிற்பாடு அறையைவிட்டு வேறொரு இடத்திற்கு மாறிய தட்சூனின் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போகிறது.

செல்வம் பாரீசை விட்டுப் புலம் பெயர்ந்து கனடாவில் கரையேறிய சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏதொ ஒருநாள் தன் மச்சானிடம் “தட்சூனை”ப் பற்றி விசாரிக்க…. அவர் எப்போதோ இறந்துவிட்ட செய்தியைச் சொல்கிறார்.

”அய்யோ…. எனக்குத் தெரியாமல் போயிற்றே” என்று அதிர்ந்தவரிடம்….

”இங்கே இருக்கிற எங்களுக்குத் தெரியவே ஆறு மாதம் ஆகிவிட்டது. அவரைப் பொறுப்பேற்க ஒருவரும் இல்லாததால் அரசாங்கமே அடக்கம் செய்து விட்டதாம்..” என்கிற துயர தகவலைச் சொல்லியிருக்கிறார் அவர்.

ஆனால் இப்போதும் போர்தோ ஒயினை அருந்தும் போதெல்லாம் தட்சூனின் நினைவு வந்து கலங்கத்தான் வைக்கிறது செல்வத்தை.

”சோசலிச நேசன்” குகன் அறைக்கு வந்து சேர்ந்த கதை… பாஸ்போர்ட் இல்லாமல் ரயில் பெட்டிக்கு அடியில் பதுங்கி இத்தாலிக்குப் பயணிப்பட்ட கதை… பெட்டியில் யாருமில்லை என்கிற நினைப்பில் ஜீன்சைக் கழட்டி லுங்கிக்கு மாறும் வேளையில் எதிர்பாராது பார்த்துவிட்டு அலறிய பெண்ணால் ”அகோரி”யாய் அவதரித்து கைதான கதை…

அகதியாய்ப் புலம் பெயர்ந்தாலும் சாதீயத்தையும்  அந்நிய நாட்டுக்கு கூடவே சுமந்து வந்த பள்ளி நண்பன் மேவின் போன்றவர்களது அநாகரீகம்…

பாரீசில் பொங்கல் விழா கொண்டாட அழைத்து வரப்பட்ட ஃபாதர் ஒடியோ இவர்களிடம் பட்டபாடு….

மலையக நண்பன் அமுதன் துயருற்ற ஒரு பெண்ணை அடைக்கலத்திற்காக எட்டு நண்பர்கள் கொண்ட அறைக்கு அழைத்து வந்த கதை… அதனால் அறையே தலைகீழாய் மாறிய கதை… அவர்களுக்குள் துளிர்த்த கள்ளம்கபடமற்ற பேரன்பு…

என எழுதிக் கொண்டே போனால் முன்னூறு பக்கங்களுக்கு மேல் எழுதுவேன் நான். ஆனால் புத்தகமே மொத்தம் 240 பக்கம்தான்.

தன் புலம் பெயர் வாழ்வின் எண்ணற்ற அழியாத நினைவுகளை நம் முன் இறக்கி வைத்திருக்கிறார் செல்வம் அருளானந்தம். முதலிலேயே சொன்னபடி பக்கத்துக்குப் பக்கம் பகடியும் சுய எள்ளலும்தான் புத்தகம் முழுவதும்.

எல்லாவற்றை விடவும் இந்த புத்தகத்தின் ஹைலைட்டான நையாண்டி என்னவென்றால் இதனது ”அணிந்துரை”தான்.

சார்லி சாப்ளின்…. எம்.ஆர்.ராதா…. ஜிம் கேரி… கலைவாணர்… கவுண்டமணி… மணிவண்ணன்…. வடிவேல்…. இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து வந்து இவரோடு குத்த வெச்சுக் குடும்பம் நடத்தினாலும் எள்ளலுக்கும்… பகடிக்கும்… பல்லாயிரம் கிலோமீட்டராவது தூரமிருக்கிற படைப்பாளி ஒருவர் இதற்கு அணிந்துரை எழுதியிருப்பதுதான்.

அவர்தான் : ஜெயமோகன்.

ஆனால்….

சும்மா சொல்லக்கூடாது….

உண்மையிலேயே நம்ம செல்வம் அருளானந்தம் உலக மகா குசும்பன் தான்.

*****

”சேதுராமன் கிட்ட ரகசியமா?” என்கிற மாதிரி… ரஜினியிடம் அரசியலா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. நாம் ஒன்று கேட்டால் ஊரே மூக்கில் விரல் வைக்கிற மாதிரி அவர் வேறொன்றைச் சொல்லுவார் பாருங்க…

அவரது உட்சபட்ச அறிவே துக்ளக்கைத் தாண்டாத அறிவு. இந்த லட்சணத்தில் சமூகநீதி பற்றிக் கேட்பதா ? சாதி ஒழிப்பைப் பற்றிக் கேட்பதா? மொழிக் கொள்கை பற்றிக் கேட்பதா? மொழித் திணிப்பு பற்றிக் கேட்பதா? உலகமயமாக்கல் பற்றிக் கேட்பதா? தாராளமயமாக்கல் பற்றிக் கேட்பதா? ஆதிச்சநல்லூர் அகழாய்வு பற்றிக் கேட்பதா ? கீழடி கண்டெடுப்புகள் பற்றிக் கேட்பதா?

எதைக் கேட்க…?

எப்படிக் கேட்க…?

கேட்கலாம்தான்.

ஆனால்….

அதற்கப்புறம் நம் காது குளிர்கிற மாதிரி அவர் உதிர்க்கிற தத்துவங்களைக் கேட்டு நாம் தான் ஐ.சி.யூ.வில அட்மிட் ஆக வேண்டி இருக்கும்.

அதுவும் சமூக வலைத்தளங்களில் அவரது அரசியல் வருகை குறித்து அடித்துத் துவைத்து அலசி காயப்போட்டுவிட்டார்கள் ஏகப்பட்ட பேர். வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.

“SAVE RAJINI” பிரச்சாரம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கலாம்.

அது அவரையும் தப்பிக்க வைத்த மாதிரி இருக்கும்….
நாமும் தப்பிப் பிழைத்த மாதிரி இருக்கும்.

So…. எதுக்கு வம்பு…?

*****

சொந்த செலவில் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு இந்த Zoom Meeting குகள் தான் என்பது எனது தாழ்மையான எண்ணம். நம்மோடு கலந்துரையாட வேண்டியவர் ஐரோப்பாவில் இருக்கிறார் நாம் ஆப்பிரிக்காவில் இருக்கிறோம் என்றால் அது அத்தியாவசியம்தான். ஆனால் அந்தந்த ஊரில் உள்ளவர்களோடு உரையாடுவதற்கே இந்த ஆப்பில் அமர்ந்து ஆப்படித்துக் கொள்வதற்கு முடிவு கட்டியாக வேளை வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன்.

கொரோனோ பீதி கிளப்பியவர்களே ஊர் முழுக்க உலா வரும்போது நாம் மட்டும் கணிணித் திரையே கதியென்று இருப்பது சரியா என்பதுதான் நமது கேள்வி. ஏனெனில் இந்த அரசுகள் விரும்புவதும் இதைத்தான்.

நமது ஆட்களிலும் பலர் சிறப்பு விருந்தினருக்கு டிக்கெட் போட வேண்டியதில்லை… ரூம் போட வேண்டியதில்லை… அரங்குக்கு அலைய வேண்டாம்… போஸ்டர்…. நோட்டீஸ்… எதுவும் வேண்டாம்…. அட… டீ செலவு கூட மிச்சம்தான் என்று கணிணியே போற்றி என்று கவுந்தடித்து உட்கார்ந்து கொள்கிறார்கள்.

ஆனால் மக்களின் எதிரிகளோ செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் என்கிற பெயரில் சுட்டுக் கொல்வதாகட்டும்… மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு ஜாமீன் மறுப்பதாகட்டும்… தேர்தல் ”வெற்றி”களைக் கொண்டாடுவதாகட்டும்… சூலாயுத யாத்திரை…. கடப்பாரை யாத்திரை என வீதியில் உலா வருவதாகட்டும்… என்று எதுவுமே தடைப்படவில்லை.

ஆனால் விவசாயிகள் ஒன்று கூடினால் மட்டும் கொரோனாக் கூச்சல் போடுகிறார்கள்.

”நீ தனித் தமிழ்நாடு கேட்பாயோ…. மாநில சுயாட்சி கேட்பாயோ… இல்லை காவியைத் திட்டுவாயோ…. கதரைத் திட்டுவாயோ… எதுவாக இருந்தாலும் ஜூம் மீட்டிங்கில் உட்கார்ந்து கேட்டுக்கோ…. திட்டிக்கோ… ஆனால் வெளியில் மட்டும் வராதே…. மக்களைச் சந்திக்காதே” என்பதுதான் அவர்களது தற்போதைய தந்திரம்.

மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே பாதுகாப்பின் பேரால் ஒதுங்குவது இனியும் சரியல்ல. வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் இனியாவது தொடங்கட்டும் கருத்தரங்குகளும்…. கூட்டங்களும்.

பேரிடர் காலமென்றாலும் தற்காப்புகளோடு மக்களைச் சந்திப்பது எப்படி என்று நாம் சிந்தித்தாக வேண்டிய வேளையிது.

*****

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்