Aran Sei

சூடு… சொரணை… சுயமரியாதை… – பாமரன் எழுதும் தொடர் (பாகம் -2)

ன்னாது….? குமுதத்துல நம்ம தொடரா…? என்று ஹார்ட் அட்டாக்கில் அட்மிட்டே ஆகியிருப்பேன் இதுவே பத்து வருடம் முன்னாடி என்றால்.

ஆனால் இடைப்பட்ட காலங்களில் வெகுஜன ஊடகங்களையே புறக்கணித்து வந்த எனக்கு இப்படியொரு சோதனை மாலனின் கடித ரூபத்தில். போதாக்குறைக்கு அத்தருணங்களில் இந்த வாரப் பத்திரிக்கைகளை எல்லாம் பொதுவெளியில் பிரித்து மேய்ந்து துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அதிலும் குமுதத்துக்குத்தான் முதலிடம்.

இந்த லட்சணத்தில் “குமுதத்தில் தொடர் எழுத முடியுமா?” என கேட்டு கடிதம் வந்தால்….?

தீவிரமான ஆலோசனையில் இறங்கினோம் நண்பர்களும் நானும்.

அப்போதுதான் முடிவாயிற்று…..

குமுதத்தில் மட்டுமல்ல எதில் வேண்டுமானாலும் எழுதலாம்…

ஆனால் அவர்கள் நமது கட்டுரையில் உள்ள ஒற்றை எழுத்தில்கூட கை வைக்காத பட்சத்தில் தாராளமாய் எழுதலாம்…. என்று.

நமது கருத்துக்கள்தான் பத்திரிக்கைகளின் வாயிலாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டுமே தவிர பத்திரிக்கைகளின் கருத்துக்களுக்கு நாம் ஒருபோதும் பலியாகிவிடக் கூடாது என்கிற உறுதியோடு எழுதுவது என்று முடிவாயிற்று.

அப்படித் தொடங்கியதுதான் குமுதம் ஸ்பெஷலில் 1997 இல் வெளிவந்த ”பகிரங்கக் கடிதங்கள்” தொடர்.

எனது தொடரின் முதல் கட்டுரையே பெரும் பிரச்சனையைக் கிளப்பி விட்டு விட்டது. அதுதான், இயக்குநர் கே. பாலச்சந்தருக்கு நான் எழுதிய “சிகரம்ன்னா சும்மாவா?” என்கிற பகிரங்கக் கடிதம்.

கட்டுரையை அனுப்பிவிட்டு நான் குப்புறப்படுத்துக் கொண்டு குறட்டை விட்டுக் கொண்டிருக்க…. கோடம்பாக்கமோ கொந்தளித்து எழுந்து விட்டது.

இது தெரியாமல் ஒரு மாலை நேரம் பழ பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பராக்குப் பார்த்தபடி நகர்வலம் வர…. எதிரில் வந்த நண்பன் ஏதோ பேயைக் கண்டவனைப் போல பீதியோடு என்னைத் தடுத்து நிறுத்துகிறான்.

“டேய் இங்க எங்கடா சுத்திகிட்டு இருக்கே…? அங்க அவனவன் உன்ன ஏலம் போட்டுகிட்டு இருக்கானுக…. இது தெரியாம நீயு…” என்று பதட்டத்தின் உச்சியில் கத்துகிறான்.

மொதல்ல கொஞ்சம் பொறுமையா இரு…. அப்புறம் என்ன விஷயம்ன்னு சொல்லு… என்று நண்பனை நிதானப்படுத்த…

“ஆமா நீ என்னாவது டைரக்டர் பாலச்சந்தரப் பத்தி பத்திரிக்கைல எழுதுனயா…?”

ஆமாம் எழுதுனேன் குமுதத்துல…. இப்ப அதுக்கு என்ன? என்றேன்.

”அதுக்கு என்னவா….? அதுனால பெரும் பிரச்சனையாகி எல்லா டைரக்டருகளும் குமுதம் ஆப்பீசுக்குப் ஒட்டுமொத்தமா படையெடுத்துப் போயி உனக்கு கண்டனம் தெரிவிச்சுகிட்டு இருக்காங்க…. ஒவ்வொரு காரா சர்ர்ர்ரு சர்ர்ர்ருன்னு போறத இப்பதான் டீ.வீ. ல காட்டுனாங்க….” என்று அலறுகிறான் நண்பன்.

அப்புறம்தான் தெரிகிறது….

நான் இயக்குநர் சிகரத்துக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், வஸந்த், அமீர்ஜான், விசு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் படையெடுத்துப் போனதும்…. இயக்குநர் சங்கத்தின் சார்பாக கண்டனக் கடிதம் கொடுத்ததும்…. குமுதம் ஆபீசுக்கு வெளியே சிலர் எனது கொடும்பாவி கொளுத்தியதும்…

ஏறக்குறைய இரண்டு மணி நேர கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு குமுதம் ஆசிரியர் வந்தவர்களை சமாதானப்படுத்த…. அடுத்த இதழில் எனது கட்டுரையை கண்டிக்கும் இயக்குநர் சங்கத்தின் கண்டனக் கடிதத்தை பிரசுரிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளோடு விடைபெறுகிறார்கள் தமிழ் திரைப்பட இயக்குநர்கள்.

பாலச்சந்தரது கல்கி வரையிலான படங்கள் குறித்த எனது பகிரங்கக் கடிதம்…. அதற்கு எதிர்வினையாக இயக்குநர் சங்கத்தின் மறுப்புக் கடிதம் என்கிற அளவில் அந்தப் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இதில் நான் மன்னிப்பு கேட்பது என்கிற கேள்வியே எழவில்லை.

உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு தமிழிலேயே பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதான் என்பது.

அதன்பிறகு அடுத்து வந்த கடிதங்கள்தான்….

“திரையுலக தருமி மேதை மணிரத்னத்துக்கு…”

“தென்னக ரேம்போ வீரப்பன் அவர்களுக்கு…”

“இருபதாம் நூற்றாண்டின் இசை நந்தன் ராசையாவுக்கு…” போன்றவை.

ஆனால்… வைகோ அவர்கள் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பாகவே “நீங்கள் நிச்சயம் அ.தி.மு.க வோடுதான் கரம் கோர்க்கப் போகிறீர்கள்” என்றெழுதிய பகிரங்கக் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பைக் கிளப்ப…. வைகோ அவர்களது கட்சிப் பத்திரிக்கையான ”சங்கொலி” “குமுதத்தின் பாமரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்” என்று வண்டை வண்டையாக என்னை திட்டித் தீர்த்தது.

அப்படி அவர்களுக்கு கோபமூட்டிய கடிதம்தான் :

“பாராளுமன்றப் புலி…. போயஸ் தோட்டத்து எலி…. வைகோ அவர்களுக்கு…” என்கிற அந்த பகிரங்கக் கடிதம்.

ஆனால் அன்று கோபத்தோடு எனது கடிதங்களை எதிர்கொண்ட தலைவன் பாரதிராஜாவாகட்டும்…. ம.தி.மு.க.வின் நிறுவனர் வைகோ அவர்களாகட்டும் பிற்காலங்களில் என்னை நேசபூர்வமாக எதிர்கொண்டார்கள். கருத்தை கருத்தால் சந்திக்கும் பண்பான அணுகுமுறை அது.

பிற்பாடு தீராநதி… நக்கீரன்… விகடன்… புதிய பார்வை… தினமலர்… குங்குமம்… சண்டே இந்தியன்… அந்திமழை… என எண்ணற்ற இதழ்களில் எனது கட்டுரைகள் இடம் பெற்றிருந்தாலும் எழுத்துக்களில் மட்டும் சமரசம் செய்து கொண்டதேயில்லை.

எழுதுகிற எனக்கும் தெரியும்… எழுதச் சொல்லி கேட்கிற அவர்களுக்கும் தெரியும்…. எது எமது நாகரீக எல்லை என்று.

அச்சு ஊடகத்தில்தான் இப்படி என்றில்லை…

தொலைக்காட்சி ஊடகங்களிலும் எனது நிலைப்பாட்டினை இப்படித்தான் வைத்திருக்கிறேன்.

அன்று வந்த ”நையாண்டி தர்பார்”…. தொடங்கி இன்றும் வந்து கொண்டிருக்கிற “நீயா நானா” வரை எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாலும் எனது எல்லைக் கோட்டைத் தாண்டியதேயில்லை.

இன்றோ காட்சி ஊடகத்தின் அடுத்த பரிமாணமாக எண்ணற்ற செய்திச் சேனல்கள். ஆரம்பத்தில் பல விவாத அரங்குகளில் நான் பங்கேற்றாலும்  சிலவற்றில் தேவையே இல்லாமல் வெறுமனே ஜல்லியடிப்பதைப் பார்த்து சலிப்புதான் மிஞ்சுகிறது இப்போது. சில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது நடப்பது அரசியல் விவாதமா? அல்லது தெருநாய்ச் சண்டையா? என்கிற சந்தேகமே வந்து விடுகிறது.

காலை 10 மணிக்கு அன்றைய விவாதத்திற்கான தலைப்பை முடிவு செய்து… மதியம் 4 மணிக்குள் விவாதத்தில் பங்கேற்பவர்களை வலைவீசிப் பிடித்து… இரவு 8 மணிக்குள்  அவர்களை  நேரலையில்   குதறிக்கொள்ள  வைத்து… 10 மணிக்கு வீட்டிற்கு நடையைக் கட்டுவதுதான் இன்றைய விவாதங்களின் லட்சணம்.

ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பின்னணியிலும் பல்வேறு தொழில் முதலீடுகள்.

அந்த முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்ள….

மேலும் மேலும் பல்வேறு துறைகளில் முதலீடுகளைப் போட்டு அதனைப் பெருக்கிக் கொள்ள அந்த முதலாளிகளுக்கு மற்றொரு ”ஜனநாயக முகம்” தேவைப்படுகிறது.

அதுதான் இந்த ஊடக முகம்.

ஆக… அவற்றில் வரும் எந்த விவாதமும் அவர்களது முதலீடுகளைப் பாதிக்காத விவாதமாக இருக்க வேண்டும். அதுதான் விவாதத்தின் மையப் புள்ளியே.

பல துறைகளில் பணங்களை முதலீடு செய்துள்ள இந்த ஊடக முதலாளிகளுக்கு ஆட்சியாளர்களின் தயவு தேவை. ஆட்சியாளர்களுக்கோ பதுக்கிக் கொண்டது போக தேர்தல் நேரங்களில் அள்ளி வீச இம்முதலாளிகளின் கருணை தேவை.

அப்புறம் ஊடக அறமாவது…. வெங்காயமாவது.

இந்த அறமெல்லாம் ஊடக ஊழியர்களுக்குதானே தவிர

ஊடக உரிமையாளர்களுக்கல்ல.

இந்த ரகசியம் தெரிந்தவர்கள் ஒன்று மனநோயாளிகளாக மருத்துவமனைகளில் இருக்க வேண்டும்.

அல்லது சிறைக்கூடங்களில் அடைபட்டிருக்க வேண்டும்.

அதுவுமல்லது என்னைப் போல பட்டும் படாமலும் எதிலும் சிக்கிக் கொள்ளாமலும் எழுதும் பச்சைத் துரோகிகளாக இருக்க வேண்டும்.

நல்லவேளையாக எனது வயிற்றுப்பாட்டுக்கு என ஒரு வேலை இருந்தது….

இப்படித்தான் எழுதுவேன்… இப்படித்தான் பேசுவேன்…. இஷ்டம்ன்னா கூப்புடு…. இல்லேன்னா போயிகிட்டே இரு…. என்று துணிந்து சொல்ல முடிந்தது.

அதற்கு ஒரே காரணம் : நான் இதில் எவற்றிலுமே ஊழியனில்லை.

ஆனால்…

ஒவ்வொரு ஊடகத்திலும் இருக்கும் என்னை விட அர்ப்பணிப்பும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட ஊழியர்களோ….

ஒன்று அதிலிருந்து வெளியேற வேண்டும்.

அல்லது வெளியேற்றப்படுவார்கள்.

 

ஏனெனில்…..

இவைகள் சமூக மாற்றத்திற்காக வந்த ஊடகங்கள் அல்ல.

சமூகத்தில் மாற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காக வந்த ஊடகங்கள்.

பின்னே…..

நாயோட படுத்தா உண்ணியோடதானே எந்திரிக்க முடியும்….?

(இனி அடுத்த வாரத்திலிருந்து புதிய அலப்பரைகள்…)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்