Aran Sei

E – அடிமைகள்: போனால் போகட்டும் போடா… – அதிஷா எழுதும் தொடர் (பகுதி – 9)

முந்தைய பகுதியில் FOMO பற்றிய விளக்கங்களை விரிவாக பார்த்தோம். பார்க்காதவர்கள் முதலில் அதை படித்துவிட்டு வந்துடுங்க…

FOMO இந்த டிஜிட்டல் தலைமுறைக்கு மட்டுமே சொந்தமானதுதானா… அதற்கு முன்னால் 80களில் 90களில் வாழ்ந்தவர்களுக்கு இந்த FOMO இருக்கவில்லையா. பக்கத்துவீட்டுக்காரர் டிவி வாங்கிவிட்டார் என்பதற்காக நம்மால் டிவி வாங்க முடியவில்லையே என வெதும்பவில்லையா… நண்பர் ஏதோ ஒரு எழுத்தாளரின் அத்தனை புத்தகங்களை படித்துவிட்டதாக பெருமையாக சொல்லும்போது அதை கேட்டு வெறியேறி நாமும் தேடி தேடி புத்தகங்களை வாசிக்க முயற்சி செய்துகொண்டிருக்கவில்லையா… மற்றவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள் என்பதாலேயே நாமும் ரஜினி படத்தை முதல்ஷோ முதல்காட்சி பார்க்கிவில்லையா…  எல்லோரும் ஆண்டுதோறும் திருப்பதிக்கு போகிறார்கள் என திருப்பதிக்கு செல்லவில்லையா… அப்போதெல்லாம் பொறாமை வந்துவிடவில்லையா… அப்போதெல்லாம் இந்த FOMO எனப்படும் தவறவிடுதலின் பதற்றங்கள் இருக்கவில்லையா…

எல்லா கேள்விகளுக்கும் ஆம் என்பதுதான் விடை. ஆனால் இன்று நாம் எதிர்கொள்கிற அளவுக்கு அது இருக்கவில்லை என்பதுதான் சிக்கலே. அன்றைக்கு நாம் அடுத்தவருடைய அன்றாட நடவடிக்கைகளை இந்த அளவுக்கு இன்று பார்க்கிற அளவுக்கு நெருங்கி தெரிந்துவைத்திருக்கவில்லை. அடுத்தவர் என்கிற வட்டம் மிகச்சிறியதாக இருந்தது. அந்த மிகச்சிறிய வட்டத்திலும் நம் காதுகளை வந்தடைகிற தகவல்களில் உண்மையாகவே மிக மிகச்சிறந்தவைகள் மட்டும்தான் தெரியவந்தன.

அதோடு தான் பண்ணுகிற எல்லா செயல்களையுமே ஊரை கூட்டி சொல்லி சொல்லி பெருமை பீத்துகிறவர்களை நாம் இடதுகையால் புறந்தள்ளுகிறவர்களாகவே இருந்தோம். ஆனால் இன்று பெருமைபீத்துதல் என்பது சமூகவலைத்தளங்களில் வாடிக்கையான சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. பீஃப் பிரியாணி சாப்பிட்டாலும் பிலீவர் பாட்டு கேட்டாலும் எல்லாமே நமக்கு சாதனைதான். ஏன் என்றால் செய்கிற அத்தனை செயலுக்கும் லைக்ஸ் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அதனால் அன்றாட விஷயங்களை கூட எப்படி வித்தியாச வித்தியாசமாக பண்ணி அதில் சாதிப்பது என்று திட்டமிடுகிறோம். துக்க செய்தியை கூட தூக்கலாகத்தான் சொல்லுகிறோம். எந்த அளவுக்கு என்றால் ‘தாதா மர்கயா’ என இறந்துபோனவர்களோடு செல்பி எடுத்துப்போடுகிற அளவுக்கு!

யோசித்துப்பாருங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய வாரயிறுதிகள் எப்படி இருந்திருக்கின்றன. நாம் என்னவெல்லாம் செய்தோம். திட்டமிட்டோம். டிவியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டுவில் தொடங்கி டிவி பார்த்துக்கொண்டு சாப்பிட்டு மதிய கறிசோறு மாலை நேர புதுப்படம் என முடிந்து அடுத்த திங்கள் கிழமை வேலைக்கு அலுப்பில்லாமல் கிளம்பும்படி எளிமையாகத்தான் இருந்திருக்கிறது. இன்று பலருக்கும் வாரயிறுதி இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. சனி,ஞாயிறு இரண்டுநாள் விடுமுறை. ஆனாலும் அந்த நாட்கள் போதவில்லை. ஓடிடியில் பின்ச் வாட்ச்சிங் பண்ணுகிறோம்… ட்ரெக்கிங் போகிறோம்… யோகா தியான வகுப்புகளுக்கு செல்கிறோம்… பல ஆயிரம் ரூபாய் செலவில் தியேட்டருக்கு சென்று புதுப்படம் பார்க்கிறோம்… ஆனாலும் Monday blues என சலிப்புதான் எஞ்சுகிறது. காரணம் நாம் எதையோ தவறவிட்டிருக்கிறோம் என்கிற ஏக்கம் மற்றும் அது உண்டாக்கும் பதற்றம். காரணம் யாரோ ஒருவரின் ட்ரெக்கிங் அனுபங்கள், யாரோ ஒருவர் சைக்ளிங் செய்து சாதித்த வெற்றிகள், யாரோ ஒருவர் சனிக்கிழமை இரவில் பண்ணி பார்ட்டிகள், யாரோ ஒருவர் யாரோ ஒரு சாமியாரின் சத்சங்கத்தில் அடைந்த பேரனுபவம் என எத்தனை எத்தனை அனுபவங்கள் என நாம் மீண்டும் மீண்டும் சமூகவலைத்தளங்களில் பார்க்கிற அடுத்தவரின் ஆச்சர்ய அனுபவங்கள்!

FOMO என்கிற சொல் 2003ல் தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டுதான் ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டது. இது குறித்த அச்சமும் இதிலிருந்து மீள்வதன் முக்கியத்துவம் பற்றியும் கடந்த இருபதாண்டுகளாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம் இதன் தாக்கங்கள் நம் அன்றாட வாழ்வை பாதிக்கவைக்க ஆரம்பித்திருப்பதுதான்!

சரி இந்த FOMOவிற்கான அடிப்படையான காரணங்கள் என்ன

1 – முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நமக்கு கிடைக்கிற அதிவேக இன்டர்நெட். இன்று ஒரே க்ளிக்கில் ஏராளமான விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு மணிநேரத்தில் இரண்டாயிரம் பேருடைய வாழ்க்கையை எட்டிப்பார்த்துவிட முடியும்!

2 – மக்கள் தங்களுடைய perfect version ஐ மட்டுமே பகிர்ந்துகொள்வதும், அதற்கேற்றபடி நம்முடைய சூழலும் இணையமும் மாறத்தொடங்கி இருப்பது. உதாரணத்திற்கு போட்டோ எடிட்டிங் செயலிகளின் பெருக்கம்… அறிவோ அழகோ எல்லாமே நூறு சதவீத முழுமையாக இருக்கவேண்டும்… குறைபாடு என்பது குற்றம் என்கிற மனநிலை அதிகரித்துள்ளது!

3 – சாதாரண செய்திகளை தகவல்களை கூட ஏதோ அதிரவைக்கும் விஷயம்போல நம்மிடையே திணிக்கிற ட்ரெண்டிங் கலாச்சாரம். இது நம்மிடையே உருவாக்கும் கவனச்சிதறல்

4 – இன்று இணையத்தில் நாம் உபயோகிக்கிற அத்தனை தளங்களும் நமக்குள் தவறவிடுதலின் பதற்றத்தை உருவாக்கும் வண்ணமே உருவாக்கப்படுகின்றன. Push notification, Timeline என எல்லாமே அப்படித்தான் வடிவமைக்கப்படுகின்றன. Swiggy, Amazon அனுப்புகிற Push notificationகளை கவனித்தால் இது புரியும்! தவறவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும் என்கிற மாதிரி இருக்கும்.

சரி இந்த FOMOவின் பிடியில் சிக்காமல் இணைய சமுத்திரத்தை நீந்திக்கடப்பது எப்படி?

1 – ஒப்பிடாதீர்கள் – அடுத்தவர்களோடு உங்களை ஒப்பிட்டுக்கொள்வதை முதலில் நிறுத்துங்கள். இங்கே அவரவர் அவரவர் வாழ்க்கையில் என்ன செய்ய முடியுமோ அதை நிறைவாக முழுமையாக முழு திறனோடு செய்துகொண்டுதான் இருக்கிறோம். யாரோ ஒரு புகைப்படக்காரர் நன்றாக புகைப்படம் எடுக்கிறார் என்றால் அது அவருடைய வேலை பிழைப்பு… யாரோ ஒரு நடிகர் ஜிம்பாடியாக இருக்கிறார் என்றால் அது அவருடைய பணிக்கு தேவையான ஒன்று… நாமும் அப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்கான முயற்சிகளில் இறங்குவதில் தவறில்லை. ஆனால் அந்த எல்லையை எட்ட முடியவில்லையே நாம் நூறு சதவீத பர்பெக்ட் ஆள் இல்லையே என்கிற பதற்றம் கொள்ளத்தேவையில்லை.

2 – திட்டமிடுங்கள் – நம்முடைய நேரத்தை அர்த்தமுள்ள விஷயங்ளில் உண்மையாகவே நம்மை மகிழ்விக்கிற (சமூகவலைதளங்களை போன்ற தூண்டப்பட்ட மகிழ்ச்சியாக இல்லாமல்) விஷயங்களில் அதிகமும் ஈடுபடுத்திக்கொள்ளுவது நல்லது. ஒரே நேரத்தில் நம்மால் நூறு விஷயங்களில் விற்பன்னர் ஆக முடியாது என்பதை புரிந்துகொண்டு எல்லா பக்கமும் கிடந்து உருளாமல் ஒருபக்கமாக கவனத்தை குவிக்கும் வகையில் நம்முடைய பொழுதுபோக்கு நேரத்தை திட்டமிடவேண்டும்

3 – Log out – சமூகவலைத்தளங்களை உபயோகிக்காதீர்கள் என்பதைவிட அதை உபயோகிப்பதற்கான நேரம் இதுதான் என்பதை தெளிவாக வகுத்துக்கொள்ளுங்கள். கழிப்பறையிலும் சரி அலுவலக கூட்டங்களிலும் குழந்தைகளோடுநேரம் செலவழிக்கும்போதும் என எல்லா நேரமும் பார்த்துக்கொண்டே இருக்கிற பழக்கத்தை மாற்றி சமூகவலைத்தளங்களுக்கான நேரம் இதுதான் என்பதை திட்டமிடுவது நல்ல பலன் தரும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்ததும் Log out ­செய்யுங்கள். அடுத்த முறை லாகின் பண்ணி உள்ளே செல்லவேண்டும் என்கிற எண்ணமே பல நேரங்களில் உபயோகத்தை தடுக்கும் என்கிறார்கள்!

4 – Unfollow – உங்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத யாரை விடாப்பிடியாக பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்தொடர்கிறீர்களோ அவருடைய பக்கத்திலிருந்து முதலில் வெளியேறுங்கள். உங்களுடைய டைம்லைனை தனிநபர் அப்டேட்களாக இல்லாமல் இருக்கும்படி மாற்றுங்கள். பயனுள்ள விஷயங்களை பகிர்கிற தளங்களை பின்தொடர முயற்சி செய்யுங்கள்.

5 – கவனமாயிருங்கள் – உங்களுக்கு பிடித்த விஷயங்கள் எது எதை எல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாயிருங்கள். அது மிகமிக முக்கியம். Targeted Consuming of Information ஒன்றுதான் இந்த Fomoவிலிருந்து நம்மை மீட்க உதவுகிற மிக முக்கியமான விஷயமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்ள்.

இந்த ஐந்து விஷயங்கள் தவிர முக்கியமான ஒன்று பிரக்ஞையோடு இருப்பது. நாம் சமூகவலைதளங்களில் நம்முடைய நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய ஆற்றலை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். அதை எதில் செலவழிக்கிறோம் அதனால் நமக்கு உண்டாகும் விளைவுகள் என்ன எனபதில் கவனம் முக்கியம். அது இல்லாத போது எளிதில் இந்த FOMO பொறியில் சிக்கிவிடுவோம்.

– விலங்குகள் உடைப்போம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்