Aran Sei

E – அடிமைகள்: டிஜிட்டல் ஜாதகம் – அதிஷா எழுதும் தொடர் (பாகம் – 7)

ரு மனிதனின் வருங்காலம், எதிர்காலம், நிகழ்காலம் என அனைத்தையும் தெரிந்துகொள்ள ஒரு எளிமையான வழி இருக்கிறது. அந்த வழி நிச்சயமாக ஜோசியம் இல்லை. மரபணு உதவும்…. ஆமாம் மரபணு சோதனை செய்தாலே போதும் என்கிறது அறிவியல். நம் மரபணு என்பது பிறப்பதற்கு முன்பிருந்தே நம் உடலே எழுதிக்கொள்ளும் ஒரு பயோலாஜிக்கல் டயரி. நம் உடலுக்குள் நடந்தது, நடக்கப்போவது, நடக்கவேண்டியது என எல்லா தகவல்களையும் இது சேமித்து வைத்திருக்கும். இதில் நம் தகவல்கள் மட்டுமில்லை நம் பாட்டன் முப்பாட்டன் என நாம் ஆண்ட பரம்பரையாக அடிமை பரம்பரையாக இருந்த எல்லா தகவல்களும் இருக்கும் என்பதெல்லாம் பழைய தகவல்.

அதுபோலவே கடந்த இருபதாண்டுகளில் நம் ஒவ்வொருவருக்கும் உருவான இன்னொரு புதிய மரபணு ஒன்று உள்ளது. இந்த மரபணுவையும் நோண்டி நொங்கெடுத்தால் பல அதிரவைக்கும் உண்மைகள் புலப்படும். அந்தத் தகவல்களை எல்லாம் வைத்துக்கொண்டு யாரையும் எதுவும் செய்ய முடியும். ‘’பார்க்க அப்பாவி போல இருக்கும் இவரா இப்படிப்பட்ட காரியங்களை செய்தது’’ என யூடியூபில் வீடியோ போட்டு வைரல் அடிக்கலாம். அவ்வளவு அதிபயங்கர ரகசியங்களை கொண்ட இந்த புதிய மரபணுவுக்கு பெயர் ‘’DIGITAL DNA’’  ஆமாம் இணையம் பயன்படுத்துகிற ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிற எல்லோருக்குமே இந்த ‘’டிஜிட்டல் டிஎன்ஏ’’ உண்டு.

இந்தக்கட்டுரையை படிக்கிற உங்களுக்கு நிச்சயம் இருந்தே தீரும்.

வெளியே என்னதான் எலியாக இருந்தாலும் இணையத்தில் நாமெல்லாம் ஒரு புலிதான். முகத்தை காட்டத்தேவையில்லை என்கிற வசதி… கட்டற்ற சுதந்திரம். அட்ரஸ் கொடுக்க தேவையில்லை.

பண்றதெல்லாம் பண்ணிவிட்டு Browser Historyஐ அழித்துவிட்டால் எல்லாவற்றையும் மறைத்துவிடலாம் என்கிற உலகமகா டெக்னிக் வேறு நமக்கு தெரியுமா… அதனாலேயே நம்முடைய நிஜ உலக ஆட்டத்தைவிட இந்த நிழல் உலக ஆட்டம் சற்றே கூடுதலாக குதூகலமாக இருக்கும். இணையத்தில் பேசுவதைப்போல ஒருநாள் ஒரே ஒருநாள் எங்காவது பேசினாலும் செய்தாலும் சிலரெல்லாம் கொலை செய்யப்படக்கூட வாய்ப்புள்ளது. அப்படி செய்யவும் பேசவும் யாருக்கும் தைரியம் இருப்பதில்லை. சமூகவலைதளங்கள் என்பதே யதார்த்த வாழ்விலிருந்து ஒரு தப்பித்தல்தானே… அதனால்தான் இந்த டிஜிட்டல் முகமூடிகளை விரும்பி அணிந்துகொள்கிறோம்.

கொலைகாரர்கள் என்னதான் மறைத்தாலும் அவர்கள் குற்றத்தின் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிட்டுத்தான் செல்வார்கள் என்பது பொதுவான விதி. இணையத்திலும் அப்படித்தான் என்ன ஆட்டம் ஆடிவிட்டு அனைத்தையும் டெலிட் பண்ணிவிட்டாலும் அதன் தடயங்கள் எங்காவது ஒருமூலையில் எப்படியாவது சிக்கிவிடும். காரணம் இணையம் நாம் பண்ணுகிற அத்தனையையும் பல இடங்களில் பதிவு செய்கிறது. எத்தனை முறை டெலிட் பண்ணினாலும், ஹிஸ்டரிகளை குக்கீஸ்களை அளித்தாலும் எதுவுமே அழிவதில்லை!

இணையத்தில் நாம் எது செய்தாலும் நமக்கே தெரியாமல் ஒரு டிஜிட்டல் தடத்தை விட்டுச்செல்கிறோம். டிஜிட்டல் தடம்னா… Digital Footprint. ஒவ்வொரு க்ளிக்கும் ஒரு தடம்தான். ஒவ்வொரு வ்யூவும் ஒரு தடம்தான். ஒவ்வொரு இணையதள விசிட்டும் லைக்கும் ஸ்டேடஸும் ஷேரும் கூட ஒரு தடம்தான். இதுபோக எவ்வளவு நேரம் இணையதளத்தில் இருக்கிறோம், எவ்வளவு நேரம் வீடியோ பார்க்கிறோம் என்கிற தகவல்களும் கூட தடம்தான்.

நீங்கள் Incognito modeல் அமேசானில் சென்று விபூதி வாங்கி பட்டையை போட்டுக்கொண்டு யூடியூபில் பலான படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் புதுப்பட விமர்சனம் எழுதியபிறகு… மொத்த BROWSING HISTORYயையும் அழித்துவிடுகிறீர்கள். அல்லது பலான விஷய ஹிஸ்டரியை மட்டும் அழித்துவிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

நீங்கள் அழித்தாலும் இந்த மூன்று செயல்களையுமே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் இணையம். இதன்வழி ‘’இவன் ஒரு ஆபாச படம் பார்க்கிற ப்ளூசட்டை பக்திமான்’’ என்பதுபோல ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துக்கொள்ளும். அதற்கு பிறகு நீங்கள் எத்தனை முறை பக்தி பாடல் கேட்டாலும், விபூதி வாங்கி வாங்கி அடித்தாலும் இணையத்திற்கு நீங்கள் ஒரு ஆபாசப்படம் பார்க்கிற பக்திமான்தான். ஆனால் அதற்காக இணையம் உங்களை கேவலமாக நினைக்காது. Judge பண்ணாது. Don’t Worry. உங்களுக்கு ஒரு Tag கொடுத்து அடையாளப்படுத்தி வைத்துக்கொள்ளும் அவ்வளவுதான்!

இந்த DIGITALFOOT PRINT எப்படி சேகரிக்கப்படுகிறது.

# நீங்கள் இணையத்தில் என்னென்ன தேடுகிறீர்கள்

# நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்புகிற குறுஞ்செய்திகள்…

# பகிருகிற வீடியோ புகைப்படங்கள்

# உங்களுக்கு மற்றவர்கள் அனுப்புகிற படங்கள் வீடியோக்கள்

# நீங்கள் சமூகவலைதளங்களில் போடுகிற லைக்ஸ் லவ்ஸ் ஷேர்ஸ் ரீட்விட்ஸ்

# உங்களுடைய ப்ரவ்சிங் ஹிஸ்டரி… (இன்காக்னிட்டோ மோடில் இருந்தாலும்)

# உங்கள் லொக்கேஷன்களை Track பண்ணுகிற செயலிகள்

இப்படி டிஜிட்டல் ஃபுட்பிரிண்ட் பல்வேறு வழிகளில் பதிவாகிறது.

உதாரணத்திற்கு நீங்கள் தினமும் எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள்… அலுவலகம் முடிந்ததும் பாருக்கு போகிறீர்களா நூலகம் போகிறீர்களா ஷாப்பிங்கா ஸ்விம்மிங்கா என்பதை எல்லாம் நம்முடைய கூகுள் மேப் நோட் பண்ணிக்கொண்டிருக்கிறது. எதுக்குடா பண்றீங்க என யாரும் கேட்பதில்லை என்பதால் அதுபாட்டுக்கு ஒரு ஓரமாக பண்ணிக்கொண்டிருக்கிறது. நீங்கள் யாரோடு பேசுகிறீர்கள் என்ன பேசுகிறீர்கள் எதைபற்றி பேசுகிறீர்கள் என்பைதயெல்லாம் மெசேஞ்சர்கள் நோட் பண்ணிக்கொண்டிருக்கிறன்றன. உங்களுடைய எடை என்ன இதயதுடிப்பு என்ன எப்போதெல்லாம உங்களுக்கு கோபம் வருகிறது ஆத்திரம் வருகிறது என்பதையெல்லாம் பிட்னஸ் ஆப்கள் குறித்துவைத்திருக்கின்றன. இப்படி நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் இணையம் ஸ்மார்ட்போன் வழி, நம் இணையப்பயன்பாட்டின் வழி எங்காவது எப்படியாவது குறித்துவைத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் டிஜிட்டல் ஃபுட் பிரிண்ட்.

இப்படி உங்களுடைய அத்தனை நடவடிக்கைகளையும் சேர்த்துவைத்து இணையமே உங்களுக்கென ஒரு டிஜிட்டல் டயரியை உருவாக்கிவிடும். அதுதான் இந்த டிஜிட்டல் டிஎன்ஏ!

டிஜிட்டல் டிஎன்ஏ ஏன் முக்கியம்? முந்தைய அத்தியாயத்தில் நாமெல்லாம் ஏன் தகவல் வெறியர்களாக இருக்கிறோம் என்று பார்த்தோமில்லையா… கண்டமேனிக்கு நிறைய உபயோகமற்ற தகவல்களை பைத்தியம் போல படிக்கிறோம் அல்லது பார்க்கிறோம் என்று பார்த்தோமில்லையா… ஆனால் நாம் கண்டமேனிக்கு தேடி தேடி படிப்பதில்லை. ஒரு கணக்கு போட்டுத்தான் சமூகவலைதள அல்காரிதங்கள் தகவல்களை புகட்டுகின்றன. நாம்தான் கண்ணை மூடிக்கொண்டு புவ்வா சாப்பிடும் குழந்தை போல தகவல்களை ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த அல்காரிதங்கள் நம்மிடம் என்ன மாதிரியான தகவல்களை திணிக்கலாம் எப்படியெல்லாம் திணிக்கலாம் எதை கொடுத்தால் நாம் வாலாட்டுவோம் எதை கொடுத்தால் எதிர்த்து நிற்போம் என்பதை எல்லாம்  புரிந்துகொள்ள இந்த டிஜிட்டல் டிஎன்ஏதான் சாவி. இந்தச் சாவியால் நம் மூளையை திறந்துவிட்டால் நம் மூளைக்குள் என்னவெல்லாம் செலுத்தமுடியுமோ அத்தனையையும் செலுத்தலாம். தகவல் திணிப்புக்கு மட்டுமல்ல நம்மை கண்காணிக்கவும் கூட இந்த டிஜிட்டல் டிஎன்ஏதான் அடிப்படை.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 நாவலில் வருகிற பிக்பிரதர் எப்படி உலகத்தையே தன்னுடைய கண்காணிப்பில் வைத்திருந்தாரோ… சிந்தனைகளை கூட கண்காணித்து தண்டனை அளித்துக் கொண்டிருந்தாரோ அதே வேலைகளை இன்று கூகுளும் ஃபேஸ்புக்கும் இன்னபிற இணைய ஜாம்பாவான்களும் செய்கிறார்கள்.

உங்களுடைய ஃபேஸ்புக் போஸ்ட்களை ஆராய்வதன் வழி, நீங்கள் என்ன ஷேர் பண்ணுகிறீர்கள், எவ்வளவு நீளமாக எழுதுகிறீர்கள், எதையெல்லாம் லைக் பண்ணுகிறீர்கள் என்பதை கணக்கிடுவதன் மூலம் உங்களுடைய IQவை துல்லியமாக சொல்லிவிட முடியும் என்கிறது 2013ல் கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி செய்த ஆய்வு ஒன்று. அதை செய்தும் காட்டினார்கள்! அடுத்த ஏழாண்டுகளில் நம்முடைய சமூக வலைதள உபயோக அளவு இன்னும் மாறிவிட்டது… இப்போது உங்கள் ஐக்யூவை கணக்கிடுவது இன்னும் சுலபமாகி இருக்கும். கூடுதல் விபரங்களையும் கூட கணக்கிட முடியலாம். ஐக்யூவை மட்டுமல்ல உங்களுடைய மனநிலையை, உங்களுடைய அரசியல் தேர்வை, உங்களுடைய வாங்கும்திறனை என எதையுமே கணக்கிட முடியும் அளவிட முடியும்!

டிஜிட்டல் டிஎன்ஏக்களை திரட்ட திரட்டத்தான் இந்த ஜாம்பாவன்களின் பலம் அதிகரிக்கும். தீனி போட போடத்தான் அல்காரிதங்களுக்கு அறிவு வளரும்.

ஸ்மார்ட்போன்களின் வரவு முன்பு எப்போதையும் விட இப்படி அந்தரங்க தகவல்களை திரட்டுவதை எளிதாக்கிவிட்டன. நம் மூளைகளை எட்டிப்பார்ப்பது சுலபமாகவிட்டது. ‘மகாபாரத கேரக்டர்களில் நீங்கள் யார்’ என்று ஒரு கேம் திடீரென்று பேஸ்புக்கில் வைரலாகும், உங்கள் வயதான தோற்றம் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டுமா என இன்னொரு செயலி பிரபலமாகும்… இது அத்தனையும் சேரிப்பது என்ன தெரியுமா உங்களுடைய அந்தரங்கமான தகவல்ளை. உங்களுடைய முகப்பதிவுகளை. உங்களுடைய உணர்வுகளை!

ஆன்ட்ராய்ட் போன்கள் நம்முடைய தகவல் பெட்டகமாகவே மாறிவிட்டன. இன்று நம்முடைய ரகசியம் அந்தரங்கம் என்று எதுவுமே இல்லை. ஆன்லைன் பேங்கிங் மூலம் உங்களுடைய பணவர்த்தகத்தை அறியலாம். உங்களால் எவ்வளவு செலவு செய்யமுடியும். நீங்கள் கடன் வாங்கினால் எப்படி திருப்பி செலுத்துகிறீர்கள். என்ன மாதிரியான பொருட்களை எப்போதெல்லாம் வாங்குகிறீர்கள். உங்களுடைய செலவழிக்கும் திறன் என்ன… உங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம். என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் நிறைய காசு செலவழித்துக் கொண்டிருக்கிற ஆளுக்கு அதிகவட்டிக்கு ஈஸியாக கடன் கொடுக்க முடியும்! இதற்கு மூன்று தகவல்கள் தேவை கிரிக்கெட் சூதாட்டம் ஆடுவது, நிறைய செலவழிப்பது, நம்முடைய கடன் அடைக்கும் திறன்… இதை எடுப்பது இன்று எளிதாகிவிட்டது. BIGDATA மாதிரி தொழில்நுட்பங்கள் இந்த சங்கிலிகளை இணைத்து சரியான வாடிக்கையாளரை வலைபோட்டு பிடித்து கொடுத்துவிடுகின்றன!

நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு செயலி அல்லது இணையதளம் அல்லது சமூகவலைத்தளத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதை நாம் பயன்படுத்துகிற முறையின் அடிப்படையில் இந்த டிஜிட்டல் தடங்கள் பதிவாகின்றன. இப்படி பதிவாகிற தடங்களின் குவியல்தான் நம்முடைய டிஜிட்டல் டிஎன்ஏ.

இப்படி சேகரிக்கப்படும் வெவ்வேறு செயலிகளின் தகவல்கள் தனித்தனியாக பயனற்றவையாக தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக சேரும்போது அது வேறொரு வடிவத்தை எட்டி முழுமையான சித்திரத்தை தருகிறது. அந்த சித்திரத்தை தெரிந்துவைத்திருப்பவனால் நம்மை எளிதில் அடிமைப்படுத்திவிட முடியும். காரணம் அது நம் யாருக்கும் வெளிப்படுத்திவிடாத அந்தரங்க சித்திரம்.

இன்று இணையம் இல்லாமல் நம்மால் இயங்கவே முடியாது. இணையத்தில்தான் வரன் பார்த்து கல்யாணம் பண்ணுகிறோம். காதுகுத்துக்கு நாள் குறிக்கிறோம். பிறந்தநாளுக்கு பரிசுகள் வாங்குகிறோம். மரணசெய்தியை பகிர்ந்துகொள்கிறோம். உடைகள், பர்னிச்சர்கள், வீடுகள், பயணச்சீட்டு, பால்பாக்கெட்டு என இணையம் இன்று மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது. தெரிந்த்தோ தெரியாமலோ நாமெல்லாம் அதில் ஒரு வாடிக்கையாளர்களாக ஆக்கப்பட்டுவிட்டோம். என்றால் அந்த வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் கவர்ந்து தங்களுடைய பொருட்களை விற்கலாம் என்பதுதானே விற்பனையாளர்களின் ஒரே லட்சியமாக இருக்கும். அதற்குத்தான் இந்த டிஎன்ஏ சாவி!

2018ல் பேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் அதைதான் செய்தார். தன்னுடைய கோடிக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை அல்லது மூளைக்கான சாவிகளை தூக்கி கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்கிற நிறுவனத்தின் மூலம் அரசியல்வாதிகளுக்கு கொடுத்தார். அந்த காலகட்டத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற அந்த தகவல்கள்தான் உதவின. உலகெங்கும் பல தேர்தல்களில் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. இது ஒரு குற்றம் என நீதிமன்றத்தில் நிற்க வைத்தபிறகுதான்… தன்னுடைய தவறை உணர்ந்து பேஸ்புக்கின் ப்ரைவஸியை பாலிஸியை மாற்றிக்கொள்ளப்போவதாக சொன்னார் மார்க். சொன்னதோடு சரி இன்றுவரை எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. மார்க் மட்டுமல்ல யாருமே மாற்றிக்கொள்ளவில்லை. எல்லோருமே நம்முடைய தகவல்களை சேகரிக்கிறார்கள். அவை விற்கவும் படுகின்றன.

இன்று நம்மால் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் வாழவே முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டோம். நம்முடைய போன்களில் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு Appம் ‘’எனக்கு உங்கள் கான்டாக்ட்ஸுக்கு அனுமதி கொடு, மீடியா பைல்களை பார்க்க அனுமதி கொடு’’ என்று கேட்கிற போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஓகே ஓகே என அழுத்த பழகிவிட்டோம்… ஆனால் அது அடுத்தவர் நம்முடைய வீட்டை எட்டிப்பார்க்க வசதியாக ஜன்னல்களை திறந்துவிடும் செயல் என்பதை கவனிப்பதில்லை. இலவசமான வசதிகளுக்கு நாம் தருகிற விலை நம்முடைய அந்தரங்கம்!

அந்தரங்கத்தை இழப்பதால் என்ன நஷ்டம்.

நான் என்ன பேச வேண்டும்… எதை சிந்திக்கவேண்டும்… எதை படிக்க வேண்டும்… எதற்கு அழவேண்டும் சிரிக்கவேண்டும் என்பதையெல்லாம் சமூகவலைதள அல்காரிதங்கள் தீர்மானிக்கும். அல்காரிதங்கள் நமக்கு எஜமானர்களாக மாறும்.

– விலங்குகள் உடைப்போம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்