தகவல் போதை… (Information Addiction) பற்றி முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். தகவல்போதைக்கான அடிப்படையான சில காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது நம்முடைய தேடல். நம்முடைய ஆர்வகுறுகுறுப்பு என்கிற இயற்கையான உணர்வு, இது மூளையில் எப்படி தகவல் போதையை தூண்டுகிறது. அது பணம் மற்றும் துரித உணவுகள் தருகிற அதே ஹார்மோன் ஏற்றத்தை தரக்கூடியது என்பதையும் இணையத்திற்கு நாம் அடிமையாவதை அது எப்படி தூண்டுகிறது என்பதையும் ஆறாவது அத்தியாயத்தில் பார்த்தோம்.
இந்த தேடல் தவிர இன்னும் இரண்டு காரணிகள் உள்ளன. ஒன்று அச்சம். இன்னொன்று பொறாமை! இந்த இரண்டு உணர்வுகளுக்குமாக சேர்த்து ஒரே பெயர்தான். FOMO அதாவது FEAR OF MISSING OUT.
இன்றைய சமூக வலைதளங்கள் அத்தனைக்குமான அடித்தளமே இந்த FOMOதான். இந்த FOMOவால்தான் Notifications வராத போதும் போனை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த FOMOவால்தான் OTT தளங்களில் ஏதேதோ வெப்சீரிஸ்களை திரைப்படங்களை அர்த்தராத்திரியில் தூங்காமல் விழுந்து விழுந்து பார்க்கிறோம். அமேசானில் ஃப்ளிப்கார்ட்டில் நிறைய நிறைய பொருள்கள் வாங்குகிறோம். யூடியூபில் பழியாய் கிடக்கிறோம். வாட்ஸ் அப்பில் ஏராளமான தகவல்களை தேடி தேடி சேர்க்கிறோம். அவசியப்படாத போதும் சமூகவலைதள ட்ரெண்டிங் அழுத்தத்தால் புது போன் வாங்கினாலும் சரி… புத்தகங்கள் வாங்கினாலும் சரி அத்தனைக்கும் பின்னால் இருப்பது உங்கள் ஆர்வம் மட்டுமல்ல.. இந்த FOMOவும்தான்.
சமூகவலைதளங்களில் ஒரு ரவுண்டு வந்தால் ஒருவிஷயத்தை புரிந்துகொள்ளலாம். இங்கே யாருமே சாதாரண ஆட்களே இல்லை. எல்லோருமே பெரிய சாகசக்காரர்களாக, மாபெரும் மேதைகளாக, அறிவுஜீவிகளாக, தினமும் உடலை பேணிக்காக்கும் பலசாலிகளாக, விதவிதமான உணவு உண்கிற Foodieகளாக, நன்றாக நடனம் ஆடகூடியவராக, ஜாலியானவராக, எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக, புல்லட்டில் உலகம் சுற்றுபவராக, எப்போதும் சிரிக்க சிரிக்க பேசுகிறவராக இப்படி இன்னும் பல விதமான மனிதர்களாக…இருப்பதை காணலாம். ஒரே ஆளே புரட்சியாளர், அரசியல் விமர்சகர், சினிமா ஆர்வலர், இலக்கிய கர்த்தா, அறிவியல் ஆராய்ச்சியாளர் என பல முகங்களோடுதான் வலம்வருகிறார்கள்.
இங்கே சாதாரணர் என்கிற அடையாளத்தை தாண்டிய ஏதோவொன்று எல்லோருக்குமே அவசியமாக இருக்கிறது. அது நமக்கு நாமே வெவ்வேறு விதமான முகமூடிகளை அணியச்செய்கிறது.
தினமும் பல துன்பங்களை துயரங்களை சந்திக்கிற வேலைப்பளுவில் சிக்கி இருக்கிற அன்றாட குடும்ப பிரச்சனைகளை சந்திக்கிற கடன் சுமை உடலநலகுறைபாடுகள் மனநல சிக்கல்கள் கொண்ட மனிதர்களாக யாருமே தங்களை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை! இங்கே எல்லோருமே சாதனையாளர்கள்தான்… மன்னர்கள்தான்.
BEST ME என்பதுதான் சமூகவலைதளங்களின் விதி. ஆயிரம் செல்பிகளில் பெஸ்ட் செல்பியை தேடி எடுத்து பகிர்வதைப்போல ஆயிரம் செயல்களில் சிறந்தது மட்டுமே பதிவேற்றம் காண்கிறது. மீதமுள்ள 999 மறைக்கப்படுகிறது அல்லது பதிவேற்றம் காண்பதில்லை.
அதனால்தான் டைம்லைன்களில் காணுகிற எல்லோருக்குமே ஏதோ ஒரு டேலன்ட் இருக்கிறது. எல்லோருமே வெற்றி பெறுகிறார்கள். எல்லோருமே எப்போதும் தங்களுடைய ஆகச்சிறந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது எல்லோருக்குமே எல்லாமே தெரிந்திருக்கிறது. எல்லோருக்குமே எப்படி சிறப்பாக பேரன்போடு வாழ்வது, எப்படி பணத்தை சேமிப்பது, எப்படி ஆரோக்கியமாக வாழ்வது, எப்படி கிரிக்கெட் ஆடுவது என அனைத்தும் தெரிந்திருக்கிறது. அதிலும் வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களை பார்த்தால் தெரியும், அனைவருமே உலகின் அத்தனை தத்துவங்களையும் அனைவருமே கரைத்து குடித்திருக்கிறார்கள் என்பது.
இப்படி ஒரு மெய்நிகர் உலகில் நாம் மட்டும் ‘டொக்காக’ இருப்பது எவ்வளவு வேதனை. எனக்கு ஆட வராது, எனக்கு அரசியல் தெரியாது, ரசிக சண்டை போட தெரியாது, அட ஒரு செல்பி கூட உருப்படியாக எடுக்க தெரியாது, எனக்கு மூக்கு வேறு அமைப்பாக இல்லை… என வைத்துக்கொள்வோம். நாலுநாள் சமூகவலைதளங்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ஐந்தாவது நாள் நான் வாழறதே வேஸ்ட்டோ என்கிற எண்ணம் வந்துவிடும். வரும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிற குணம் நமக்கெல்லாம் இயல்பாகவே இருந்தாலும் சமூகவலைதளங்கள் அந்த குணத்திற்கு உரம் போட்டு வளர்க்கின்றன. வெளி உலகில் பக்கத்து வீட்டுக்காரரோடு மட்டுமே நம்மை நாம் ஒப்பிட்டு வேதனை பட்டால்… இணையத்தில் லட்சம் பேரோடு நம்மை நாமே ஒப்பிட்டு துயரக்கடலில் மூழ்கிவிடுகிறோம்.
இது நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறது. சிறந்த உணவை உண்பவனை பார்த்து, சிறந்த செயலை செய்பவனை பார்த்து, சிறப்பான உடை உடுத்தியவனை பார்த்து, சிறப்பான ஒன்றை பகிர்பவனை பார்த்து பொறாமை கொள்ள செய்கிறது. (இந்த பொறாமை இயற்கையாக எழக்கூடிய ஒரு சாதாரண உணர்வுதான்… குற்றவுணர்வு கொள்ளத்தேவையில்லை)
நாமும் கூட எதையாவது செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தத்தை தூண்டுகிறது. நல்ல ஐபோனாக வாங்கி புகைப்படம் எடுக்கிறோம்… நீளநீளமாக எதையோ எழுதி கவிதை என ஹேஷ்டேக் போட்டு ஷேர் பண்ணுகிறோம். அமேசான் ஆபரில் புதிய சைக்கிள் வாங்கி தினமும் சைக்ளிங் செல்கிறோம்… நெட்ப்ளிக்ஸில் Money Heist பார்த்து பெல்லச்சாவ் பெல்லச்சாவ் என புரியாத மொழியில் புரியாத பாட்டு பாடுகிறோம். இதைதான் FOMO என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுதான் இணையபோதைக்கான மாபெரும் தூண்டுதலாக இருப்பது.
FOMO என்றால் என்ன என்பதை கூகுள் இப்படி விளக்குகிறது. anxiety that an exciting or interesting event may currently be happening elsewhere, often aroused by posts seen on social media.
எங்கோ யாரோ எவரோ அனுபவிக்கிற ஒரு மகிழ்ச்சியான உணர்வை உற்சாகத்தை சமூகவலைதளங்களின் வழி இணையத்தின் வழி அறிந்துகொள்வதால் உண்டாகும் ஏக்கம் அல்லது கவலை. இந்த ஏக்கத்தால்தான் நாம் மீண்டும் மீண்டும் சமூக வலைதள டைம்லைன்களை பார்க்கிறோம். வெவ்வேறு மனிதர்கள் அனுபவிக்கிற வெவ்வேறு விதமான மகிழ்ச்சிகளை பார்த்து பார்த்து ஏக்கம் கொள்கிறோம். அல்லது அதை நாமும் பிரதிபலிக்க முயல்கிறோம்!
இந்த உணர்வுதான் சமூகவலைதளங்களால் தொடர்ந்து நமக்கு தூண்டப்படுகிறது. அவ்வகையில்தான் சமூகவலைதள டைம்லைன்களின் அல்காரிதங்கள் உருவாக்கப்படுகின்றன. எங்கெல்லாம் நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம், யாரையெல்லாம் மிகவும் ரசிக்கிறோம், எதெல்லாம் நம்மை ஏங்கவைக்கிறதோ அதுவெல்லாம் டைம்லைனை நிரப்புகிற ரகசியம் இதுதான்.
நமக்கு FOMO இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஒரு சின்ன டெஸ்ட்
1 – தொடர்ச்சியாக காரணமின்றி டைம்லைனை Refresh செய்து கொண்டே இருக்கிறீர்களா…
2 – புதிதாக என்ன செய்தி வந்திருக்கிறது… மக்கள் எதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய ட்ரெண்ட் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா
3 – எல்லோருமே பேசுகிற ஒரு ட்ரெண்ட் பற்றி நமக்கு எதுவமே தெரியாத போதும் அதைப்பற்றி எதாவது சொல்லி அல்லது வெளிப்படுத்தி எதையாவது பகிரும் அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
4 – இணையத்தில் தொடர்ந்து இயங்குகிற குறிப்பிட்ட சிலரை மட்டும் தினமும் பாலோ செய்து அவர்கள் தினமும் என்ன எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படங்கள் பகிர்கிறார்கள் என தவறவிடாமல் பார்க்கிறீர்களா?
5 – நீங்கள் அன்றாடம் பின்பற்றுகிறவரை போலவே இணையத்தில் செயல்படவும் பிரதியெடுக்கவும் முயற்சி செய்கிறீர்களா?
6 – உங்கள் வாழ்க்கையில் எதுவுமோ குறைவது போலவோ என்ன செய்தாலும் ஒரு மனநிறைவு இல்லாதது போன்ற உணர்வு எப்போதும் இருக்கிறதா?
7 – நீங்கள் வாழ்க்கையில் எந்த சாதனையுமே செய்ததில்லை… முழுமையாக வாழவில்லை என்கிற உணர்வு அடிக்கடி வருகிறதா?
இது சுயபரிசோதனைதான். மார்க்கெல்லாம் தேவையில்லை.
சரி, இந்த FOMO முந்தைய தலைமுறைக்கு இருக்கவில்லையா… அவர்கள் எல்லாம் பொறாமை படவில்லையா… அவர்களுக்கு ஏக்கங்கள் இருக்கவில்லையா… ஓவரா இருக்கே என்று கேட்கலாம்… அடுத்தவரை பார்த்து ஏங்குகிற குணம் பல கோடி ஆண்டுகளாக இருந்தது… ஆனால் FOMO போல் இல்லை. இது மில்லினியத்திற்கு பிறகு முளைத்த விஷக்காளான்.
இதை எப்படி எதிர்கொள்வது?
– விலங்குகள் உடைப்போம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.