Aran Sei

முத்தையா முரளிதரனின் சுழலும், விஜய் சேதுபதியின் விக்கெட்டும் – பாமரன் (பகுதி – 3)

சூடு…
சொரணை…
சுயமரியாதை… 3

-பாமரன்

எனக்குக் கிரிக்கெட் தெரியாது.

ஆனாலும் மூக்கினால் மோப்பம் பிடிக்கும் புத்தி மட்டும் கொஞ்சம் மிச்சம் உள்ளதனால் “தீராத விளையாட்டுப் பிள்ளை” முத்தைய்யா முரளிதரனின் தற்போதைய ”அரசியல் விளையாட்டினை” கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது.

இதை அப்படியே அக்குவேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார் ஈழத்துப் படைப்பாளியான குணா கவியழகன்.

தனது யூடியூப் வலைப்பக்கத்தில் குணா கவியழகனின் ஆழமான அவதானிப்பு நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்துகிறது.

800 திரைப்படம்குறித்த சர்ச்சைகள் வெளிவந்தவுடன் நம்மூரில் பலருக்கு மலையக மக்கள்மீதான கரிசனம் திடீரெனப் பொத்துக் கொண்டு பீறிட்டிருக்கிறது என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
அப்புறம் முத்தைய்யா முரளிதரனே முதல் முறையாக ”நான் மலையகத்தைச் சேர்ந்தவன்” என்றும்…. ”நிலங்களைப் பறித்து எங்களை விரட்டினர்”… என்றும்… ”என் அப்பா வெட்டப்பட்டார்” என்றும்…. திருவாய் மலர்ந்ததோடு அதிசயத்திலும் அதிசயமாகத் தமிழிலேயே கையெழுத்தும் வேறு பொறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே…. அப்புறம் இதைவிட வேறென்ன வேண்டும் இந்தத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு?

பறித்தது யார்…?
விரட்டியது யார்…?
வெட்டியது யார்…?

என்றெல்லாம் நம்ம முரளி விலாவாரியாகச் சொல்வார் என்று எதிர்பார்த்தால் நம்மைவிடக் கேணையர்கள் வேறெவரும் இருக்க முடியாது.

ஆனால்… இவற்றை நோக்கிப் பயணிக்கும் முன்பாக எனது காலக்கழுதையைச் சற்றே பின்னோக்கிச் செலுத்திப் பார்க்கிறேன்….

ஒவ்வொரு நவம்பர் 15 அன்றும் இலங்கையில் குடியுரிமையே மறுக்கப்பட்ட அந்த மலையக மக்களுக்காகத் தமிழகத்தின் தெருக்கள்தோறும் ”நாடற்றோர் தினம்” சுவரொட்டிகளை ஒட்டித் திரிந்திருக்கிறோம் தோழர்களும் நானும். அது எண்பதுகளின் மத்தியப் பகுதி….

சிங்களரைக் குடியேற்றுவதற்காக… மலையக மக்களது காணிகளைப் பறித்துக்கொண்டு வெளியேற்ற முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்தனர் மலையக மக்கள். அதில் நுவரெலியாவில் உள்ள டெவன் தோட்டத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் சிவனு லட்சுமணன் (11.05.1977). ஆனால் சிவனு லட்சுமணன் உயிரைக் கொடுத்துப் பாதுகாத்து நின்ற அந்தத் தோட்டக் காணிகள் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கான உயர் கேளிக்கை விடுதிகள்.

குடியுரிமையும் மறுக்கப்பட்டு வாக்குரிமையும் மறுக்கப்பட்டு இன்னலைத் தவிர வேறேதும் கண்டிராத அம்மக்களுக்காகக் குரல் கொடுத்த ஈழப் புரட்சி அமைப்பின் (EROS Eelam Revolutionary Organisation) தோழமை அமைப்பான ஈழ நண்பர் கழகத்தில் இணைந்திருந்த எண்ணற்றோரில் நானும் ஒருவன். இந்த ஈரோஸ் இயக்கம்தான் மலையகத்தையும் உள்ளடக்கிய ஈழத்தைக் கோரிய போராளி அமைப்பு. இந்தப் போராளி அமைப்பினது தலைவர்களில் ஒருவர்தான் தோழர் க.வே.பாலகுமாரன். பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டு இறுதிப் போர்வரைக்கும் துணை நின்றவர்.

ஈரோஸின் நிறுவனர்தான் யாசர் அராபத்தின் நெருங்கிய நண்பராக இருந்த தோழர் ரத்னசபாபதி. இந்த இருவருக்கும் ஏற்பட்ட நேசபூர்வமான உறவால்தான் ஈழப் போராளிகளுக்குப் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) போர்ப்பயிற்சி சாத்தியமாயிற்று.

இத்தகைய அமைப்புகளால்தான் இந்தியாவாலும் கைவிடப்பட்ட…. இலங்கையாலும் நிராகரிக்கப்பட்ட மலையக மக்களது வாழ்வாதாரம் குறித்த கோரிக்கைகள் திம்பு பேச்சுவார்த்தையில் இடம்பெற ஏதுவாயிற்று.
இவையெல்லாவற்றுக்கும் முன்பாக மலையகத்தில் தோன்றிய இலங்கை திராவிடர் கழகமாகட்டும் பிற்பாடு வந்த திராவிடர்கள் முன்னேற்றக் கழகமாகட்டும் அம்மக்களது மூடநம்பிக்கைகளைக் களையவும் மொழியுணர்வைப் பேணவும் ஆற்றிய பங்கு மகத்தானது.

வெறும் தொழிற்சங்கவாதப் பிரச்சனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மக்களை சாதி ஒழிப்பிற்காகவும் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்க வைத்தனர். வடக்கு கிழக்கு மக்களுடன் ஒன்றிணைந்து சிங்கள மொழித் திணிப்பிற்கு எதிராக மாநாடுகள் மறியல்கள் என எண்ணற்ற போராட்ட வடிவங்களை முன்னெடுத்ததில் இலங்கை திராவிடர்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரும்பங்குண்டு.

அதைப் போலவே வடக்கு கிழக்கில் இயங்கி வந்த தமிழரசுக் கட்சியினர் மலையக மக்களின் குடியுரிமைக்காகக் குரல் கொடுத்தனர். வடக்கு கிழக்கும் மலையகமும் இணைந்த சத்யாகிரகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த இணைப்பை எப்படிச் சகித்துக் கொள்ளும் பெளத்த சிங்களப் பேரினவாதம்?

இந்த இ.தி.மு.க.வைத்தமிழகத்தின் தி.மு.க.வோடு இணைத்துச் சிங்களர்கள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டபோது “எங்க வழி… தனி வழி” என்று ஆணித்தரமாக மறுத்தனர் அதை வழிநடத்திய தலைவர்கள்.

இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முதலாக 1962 ஜூலை 22 ஆம் தேதி திராவிடர்கள் முன்னேற்றக் கழகம் தடை செய்யப்பட்டது. தடை விதித்தது…. தடையை உடைத்தது… பிற்பாடு போராளி அமைப்புகள் உருவானது… அவற்றில் மலையகத்தைக் கரிசனத்தோடு பார்த்தது…. போன்றவற்றுக்குள் எல்லாம் நுழைந்தால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகி விடும்…. எனவே இந்தச் சுழல் வீச்சு சூரப்புலிக்கு வருவோம் இனி.

சரி… இந்தத் திரைப்படத்தால் முரளிதரனுக்கு என்ன லாபம்…?

கிரிக்கெட்டால் உலகளாவிய புகழ் இருக்கிறது. சரி.

அடுத்து….?

தேவையான பணம் இருக்கிறது. சரி.

அப்புறம்…?

ராஜபக்‌ஷே குடும்பத்தினரின் நெருக்கம் இருக்கிறது. சரி.

அதற்கப்புறம்?

அப்புறமென்ன அடுத்து இருப்பது அரசியல் களம்தானே?

அதில் சில தடைகள் தகர்ந்தால்

எம்.பி யும் ஆகலாம்…

இலங்கையின் அமைச்சராகவும் ஆகலாம்.

ஓய்வு பெற்றாயிற்று என்று அதிகாலை அப்படியே வாக்கிங் போய் விட்டு வரும் வழியில் பால் பாக்கெட்டும் இங்கிலீஷ் இந்துவும் வாங்கிக்கொண்டு வந்து ஈஸி சேரில் சாய அவரென்ன மயிலாப்பூர்வாசியா என்ன?

ஆனானப்பட்ட நீதியரசர்களே ஓய்வுக்குப் பிறகு கவர்னரா…. எம்.பி யா? என்று சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது… 72 இல் பிறந்த இந்த இளைஞனுக்கு மட்டும் இந்த அரசியல் ஆசை வரக்கூடாதா?

அவரைப் பொறுத்தவரை படம் வந்தால் நல்லது.

வராவிட்டால் மிக நல்லது.

ஏற்கெனவே வலம்புரிஜான் பாணியில் “இந்த நாள்…. இனிய நாள்” என்று முத்துதிர்த்து தமிழ் மக்களை எரிச்சலின் உச்சத்திற்குக் கொண்டு போயாயிற்று.

இது சிங்கள பெளத்த நாடுதான் என்று சொல்லி வடக்கு கிழக்கின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாயிற்று.

மிச்சம் இருக்கும் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ”தான் மலையகத்தைச் சேர்ந்தவன்” என்பது.

ஆனாலும் இதை இந்திய வம்சாவளிக்காரன் என்றுதானே சந்தேகத்தோடு பார்ப்பான் சிங்களன்….?

போதாக்குறைக்குத் தமிழகத்தில் பெண்ணெடுத்த வகையில் மிச்சம் மீதி…. தொட்டகுறை…. விட்டகுறை…. என ஏதாவது இருக்காதா என்கிற சந்தேகமும் தொலைந்தால்தானே அரசியல் மைதானத்தில் சுழற்றிச் சுழற்றி வீசலாம் பந்தை….?

பக்கத்துணையாகப் பக்ஷேக்கள் இருந்தென்ன…? சீசரின் மனைவிதானே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்?

அப்போது உதித்ததுதான் PROJECT 800.

இப்போதோ… எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பும் கிளம்பியாயிற்று தமிழகத்தில்.

ஆக….

”என் இனிய சிங்கள மக்களே….!

வடக்கு கிழக்கு தமிழர்களும் என்னை ஏற்கவில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்களும் என்னை ஏற்கவில்லை.

தமிழகத் தமிழர்களும் என்னை ஏற்கவில்லை.

இனியும் என்ன தடை என்னை ஏற்பதில்….?”

என்பதற்காகக் குறி பார்த்து எறிந்த பந்துதான் இந்த 800 திரைப்படம்.

ஆனால் அதில் அறியாமல் விழுந்த விக்கெட்தான் :

நம் நேசத்திற்குரிய விஜய் சேதுபதி.

*****

கடந்த வாரம் முழுக்கத் தமிழகத்தின் தலையாய பிரச்சனை பழம்பெரும் நடிகை குஷ்புதான். அவர் ஏதோ புரட்சிகர கட்சியிலிருந்து ஒரு புண்ணாக்கு கட்சிக்குத் தாவிவிட்டார் என்றோ அல்லெங்கில் புண்ணாக்கிலிருந்து புரட்சிக்குத் தாவி விட்டார் என்றோ ஏக அலப்பரைகள்.

இதற்கெனப் புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுத்த ஆவணங்கள்… செப்பேடுகள்… ஓலைச்சுவடிகள் தொடங்கி யூடியூப் ஆதாரங்கள்வரைக்கும் அள்ளி வீசி விட்டார்கள். ஒரு சாக்கடையிலிருந்து இன்னொரு சாக்கடைக்கு… எனத் தாவும் இந்தச் சமாச்சாரத்துக்கு இவ்வளவு கூச்சலா என்று ஆச்சர்யமாகி விட்டது எனக்கு.
அதை விடவும் நான் அதிர்ச்சியில் உறைந்து போன இன்னொரு விஷயம் இதையொட்டி எனது நண்பன் விசுவநாதன் போன் போட்டு…. “டேய் இதைப்பத்தி எங்க பத்திரிகையில வர்ற மாதிரி பத்துவரி எழுதிக் குடுடா….” என்றதுதான்.

என்னன்னு எழுத….?

”புரட்சிகர” காங்கிரசுக்கும் ”புரட்சிகர” பிஜெபி…க்கும் என்னென்ன வித்தியாசம் என்று எழுதவா? இல்ல…. என்னென்ன ஒற்றுமைன்னு எழுதவா….?

இவன் ”பத்து பர்செண்ட் பரம ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு”ன்னா அவனும் ”ஆமாம்”ன்னு ஒத்தூதுவான்…

அவன் ”சபரிமலைக்குப் பெண்கள் போகக்கூடாது”ன்னு சொன்னா இவனும் ”சரிதாம்ப்பா”ம்பான்….

இவன் இந்தியத் திணிச்சான்னா அவனும் ”கரீக்ட்டு…. கும்மாங் குத்தாத் திணி”ம்பான்….

அவன் ”ஈழமே கூடாது”ன்னா இவனும் ”அட நான் மட்டும் வேணும்ன்னா சொல்றேன்…?”ம்பான்….

”கூடங்குளத்துல ஒலை வைக்கணும்”ன்னு இவன் சொன்னா ”மக்களுக்கும் சேர்த்து வையு”ம்பான் அவன்….

”ராஜீவ் கேசுல ஏழு பேரை விடுவிக்கக் கூடாது”ன்னு அவன் சீராய்வு மனுப் போட்டா… ”அதேதான் நாங்குளும் சொல்றோம்”ன்னு இவன் மறு சீராய்வு மனுப் போடுவான்….

எழுதுனா… இந்த ”மகத்தான” பாரம்பரியத்தைப் பத்தித்தான் எழுதணும். ஆனாலும் உயிர்நண்பன் கேட்ட பத்திரிகைல எப்படி எழுதறது இதையெல்லாம்….? அவுங்குளுக்கும் இதுல பலது ஷாக்கடிக்குமே…ன்னு ஒரே கவலையாப் போச்சு….

ஏன்னா… நண்பன் கேட்டது ஒரு “இடது சாரி” பத்திரிகைக்கு.

ஏனுங்க… எரியற கொள்ளில எந்தக் கொள்ளிங்க நல்ல கொள்ளி…?

(அபத்தங்கள் தொடரும்…)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்