Aran Sei

ஜாதி : உலகப் பெருந்தொற்று -கிருபா முனுசாமியின் புதிய தொடர்

 

ஜாதி: உலகப் பெருந்தொற்று – அறிமுகம்

“இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தால், இந்தியாவின் ஜாதி ஒரு உலகப் பிரச்சினையாக மாறும்” – பி.ஆர். அம்பேட்கர்.

9 மே 1916-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் “இந்தியாவில் ஜாதிகள்: அவற்றின் இயங்கியல், தோற்றம் மற்றும் வளர்ச்சி” என்ற தன்னுடைய மானுடவியல் ஆய்வில் புரட்சியாளர் பி.ஆர். அம்பேட்கர் அவர்கள் கூறியது இன்று உண்மையாக மாறியிருக்கிறது.

தங்களுடைய தாய் நாட்டிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்த இந்தியர்கள், அவர்களோடு சேர்த்து அவர்களின் பண்பாட்டையும் எடுத்துச் சென்றனர். ஆனால், அந்த பண்பாடானது ஜாதிய, சமூக, பாலின ஏற்றத்தாழ்வுகளோடு உள்ளிணைக்கப்பட்டிருக்கும் பொழுது, அவர்கள் கொண்டு சென்றது வெறும் பண்பாட்டை மட்டுமல்ல, அந்த ஏற்றத்தாழ்வுகளையும் தான். இது மத வழிபாடு, திருமணம், குடியிருப்பு போன்ற தனிநபர் உரிமைகளோடு மட்டும் நிற்காமல் வேலை வாய்ப்புகளிலும், சமூக உறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு இனக்குழுவிற்கு இடையேயான பிரச்சனையாக இருந்து அவர்கள் குடிப்பெயர்ந்த சமூகத்தின் நவீனத்தன்மையையும், உலகளாவிய மனித உரிமைகள் வழியாக வளர்த்தெடுத்த சமத்துவ கட்டமைப்பையும் சீர்குலைக்கும் போது அந்நாட்டின் தேசிய பிரச்சனையாகவும் மாறுகிறது.

பணியிடத்தில் ஜாதிய பாகுபாடு குறித்த முதல் வழக்கை கடந்த 2011-ம் ஆண்டு விசாரித்தது இங்கிலாந்தின் தொழிலாளர் தீர்ப்பாயம். ஜாதிய பாகுபாட்டிற்கு எதிராக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த, சமத்துவ சட்டம், 2010-ல் ஜாதிய பாகுபாட்டை சேர்க்க 2017-ல் பொது கருத்துக்களை கோரியது இங்கிலாந்து அரசு. கௌரவம் தொடர்பான வன்முறைகளும், கட்டாய திருமணங்களும் சமூக விரோத நடத்தை, குற்றம் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் 2014-ன் சட்டப்பிரிவு 121-ன் படி ஐக்கிய பேரரசில் ஒரு குறிப்பிட்ட குற்றமாக 16 ஜூன் 2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில ஆறாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் ஜாதி அமைப்பு, இந்தோ-ஆரிய இடம் பெயர்வுக் கோட்பாடு மற்றும் இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்த பாடங்களை கண்டித்து டெக்சாஸ் மாநிலத்தை மையமாகக் கொண்ட வேத அறக்கட்டளையும், அமெரிக்க இந்து கல்வி அறக்கட்டளையும் கடந்த 2005-ம் ஆண்டு வழக்குகளைத் தொடுத்தனர், புதிய சட்ட மசோதா கொண்டுவரும் வரை சென்றனர். இதனை கண்டித்து ஜாதியொழிப்பு, சமத்துவ அமைப்புகளும் வழக்குகள் தொடுத்தன, பிரச்சாரம் செய்தன.

அமெரிக்காவில் ஜாதிய பாகுபாடு குறித்து கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பொது கணக்கெடுப்பை நடத்தியது ஈகுவாலிட்டி லாப்ஸ். இரண்டு தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை ஜாதிய பாகுபாட்டோடு நடத்தியதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜூன் 2020-ல் சிஸ்கோ நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது கலிஃபோர்னியாவின் நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித் துறை.

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய மனித உரிமை ஒப்பந்தங்களில் ஜாதி என்ற சொல் நேரடியாக குறிப்பிடப்படவில்லை எனினும், 1965-ம் ஆண்டின் அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் பிரிவு 1 (1)-இன் படி ஜாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு மற்றும் இன பாகுபாடு ஆகிய வரையறைகுள் அடங்குமென ஐக்கிய நாடுகளின் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு 1996-ல் இந்தியா தொடர்பான அறிக்கையில் உறுதி செய்தது.

இங்ஙனம், இந்தியாவில் தொடங்கிய ஜாதி இன்று உலக பெருந்தொற்றாக உருவெடுத்திருக்கிறது. 1956-ம் ஆண்டு இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை பௌத்தம் தழுவ அழைப்பு விடுக்கும் போது, ஜாதிய அமைப்பின் பிறப்பிடமான இந்து மதம் ஒரு பெருந்தொற்று என புரட்சியாளர் பி.ஆர். அம்பேட்கர் அவர்கள் குறிப்பிட்டதும் எப்படி இன்று உண்மையாக இருக்கிறது என்பதையும் இத்தொடரில் காண்போம்.

கிருபா முனுசாமி
கிருபா முனுசாமி

(கட்டுரையாளர் கிருபா முனுசாமி உச்சநீதி மன்ற வழக்கறிஞர் மற்றும் செயல்பாட்டாளர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்