Aran Sei

ருவாண்டா, குஜராத், ஈழ இனப்படுகொலைகளிலும் உலக அரசியலிலும் வலதுசாரி ஊடகங்கள் – பகுதி 5

மேற்கு-கிழக்கு-வலது – அடையாளச் சிக்கலால் வளரும் வலது

மேற்கு ஐரோப்பாவின் அரசியல் சூழலை ஆய்வு செய்த ஹோலி கிராஸ் கல்லூரியின் பேராசிரியர் அந்தோனிஸ் எலினாஸ், தனது ‘மேற்கு ஐரோப்பாவில் ஊடகங்களும் தீவிர வலதுசாரிகளும் : தேசியவாத காய்நகர்த்தல்’ (‘The Media and the Far Right in Western Europe: Playing with Nationalist Card ’) என்ற 2010-ம் ஆண்டு வெளிவந்த நூலில் கூறுவது

“உலகமயமாக்கல், குடிமக்களுக்கும் நாடுகளுக்குமிடையே இருந்த பிணைப்பினை அறுத்து, ஒரு அடையாளச் சிக்கலை உருவாக்கியுள்ளது. அது, பரந்துபட்ட தேசிய அடையாளத்திற்கான தேவையையும், கலாச்சாரப் பாதுகாப்பிற்கான கோரிக்கைகளையும் வலுப்படுத்தியுள்ளது. இதனை அரசியல் நோக்கில் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பல இடங்களில் புதிய அரசியல் போட்டி தோன்றியுள்ளது.”

“இதில் குடியேற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு தேசிய அடையாள அரசியலைக் கையிலெடுக்கும் போக்கு உள்ளது. இருந்தாலும், கடந்த காலங்களிலும் குடியுரிமை சட்டங்களும் தஞ்சம் பெறுவதற்கான ஒழுங்குமுறைகளும் பெரும் உக்கிரமான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவை தங்களுக்கு இடையேயான போட்டியில், வரலாற்று நினைவுகளை அரசியல்படுத்தி, ஐரோப்பிய சமூகங்கள் தங்களது கடந்த காலங்களை நினைவுகூர்வதில் உள்ள கசப்பானதும் பாகுபாடானதுமான சர்ச்சைகளை மீண்டும் வெடித்தெழச் செய்துள்ளன.”

“1980 முதல் 2006-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் தீவிர வலதுசாரிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தீவிர வலதுசாரிக்கு, ஊடக ஆதரவு நிலவும் இடங்களில் வளர்ச்சி அதீதமாகவும், இல்லாத இடங்களில் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டும் காணப்படுகின்றன.”

10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சுட்டியுள்ள போக்கே இன்றளவும் நீடித்தாலும், இடைப்பட்ட கால நிகழ்வுகள் ஏற்படுத்தியிருப்பவை கலாச்சார சிக்கலா? அல்லது குடியமர்வினால் எழுந்திருக்கும் இடச் சிக்கலா? என எளிதில் பிரிக்கவியலா தெளிவின்மை உள்ளது. இதனை முதலாகக் கொண்டும், வாக்குறுதியளிக்கப்பட்ட மாற்றங்கள் நடைமுறையில் செயல்படாததன் மீதான மக்களின் கோபத்தைக் குவிக்கும் முயற்சிகளாலும், தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு மேற்கு-கிழக்கு என இரு பகுதிகளிலும் பெருக்கியுள்ளது.

2011-ம் ஆண்டு துவங்கிய சிரிய உள்நாட்டுப் போர் நிகழும் சூழலில், அந்நாட்டின் பெருமளவு மக்கள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்தனர். இந்த குடிப்பெயர்வு, “அடையாளமில்லா கலப்பு மக்கள்தொகையினை ஐரோப்பாவில் உருவாக்கிவிடும்” என்று வெளிப்படையாக எச்சரித்து, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் போன்றோர் தஞ்சமடைந்த இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைக் கக்கினர்.

ஆனால் ஹங்கேரி, போலந்து நாடுகளில் இக்குடியமர்வு பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை என்பது உண்மை. சுவீடன் நாட்டில், பெருகும் அரசு நலன்களுக்கான சார்புநிலை, குற்றங்கள் பெருகுவது, இவற்றுடன் இணைத்துப் பார்க்கப்படும் கலாச்சார இடப்பெயர்வு ஆகியன தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவுநிலையாக மாறியுள்ளது.

இத்தாலி மற்றும் கிரேக்க நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடுங்கோன்மையும், பொருளாதார நெருக்கடியின் போது ஐரோப்பிய மத்திய வங்கி விதித்த கொடுமையான சிக்கனக் கட்டுப்பாடுகளும், தீவிர வலதுசாரி ஜனரஞ்சகம் வளர வாய்ப்பளித்துள்ளன. தேசியவாத அரசியலை கட்டமைக்கும் முயற்சியில் மேலும் புதிய அமைப்புகளும் தோன்றியுள்ளன, ஏற்கனவே செயல்படும் கட்சிகளும் ஆங்காங்கே வலதுசாரி ஜனரஞ்சகப் போக்கை தழுவியுள்ளன.

அரசியல் வெளிச்சத்திற்கான மதகுகள்

சில ஐரோப்பிய நாடுகளில் அரசு ஒளிபரப்பு சேவைகளும், சலுகை விலையில் வழங்கப்படும் செய்தித்தாள்களும் பெரும் சந்தை பரப்பைக் கொண்டுள்ளன. ஊடகங்களில் இடது சார்பு அதிகம் பேர் நம்பும் நாடுகளில் தீவிர வலதுசாரி இணைய ஊடகங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. புதிதாக மற்றும் சிறியதாக துவங்கப்படும் கட்சிகளுக்கு தங்கள் கருத்தியலைப் பரப்ப ஊடகங்களின் துணை தேவையுள்ளது. இவற்றை ஆதரிக்கும் ஊடகங்கள் நிறைந்துள்ள நாடுகளில் இக்கட்சிகள் ஊடகங்களின் உதவியால் பெரிதாக உருவகப்படுத்தப்பட்டு ஒரு நம்பத்தகுந்த பிம்பத்தை பெறுகின்றன. இத்தகைய உதவிக்கான கவனிப்புகள் பின்னர் அக்கட்சிகளால் நிறைவளிக்கும் வகையில் செய்யப்பட்டு விடுகின்றன.

மேலும், தீவிர வலதுசாரி தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை, ஆளும் அதிபர் அல்லது பிரதமருடன் (அவர்கள் இசைவுடனேயே) விவாதம் நடத்தும் வாய்ப்பை உருவாக்கி அவர்கள் மீது பெரும் வெளிச்சம் பாய்ச்சுவது, ஊடகங்கள் மதகுகளாக செயல்படும் சக்தி பெற்றவையாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. எல்லை கடந்த பரஸ்பர கருத்துப் பகிர்வுடன் இயங்கும் தீவிர வலதுசாரி இணையக் குழுக்கள் டிரம்பை ஆதர்சமாக வைத்து அவரது பொய்களையும் போலி அறிவியலையும் ஐரோப்பாவிலும் பரப்புவதைத் தொடர்கின்றன.

பிரதிபலிக்கும் நிழல்களின் பிரதிபிம்பங்கள்

ஒற்றைப் பிரச்சனையும் கட்டமைக்கப்பட்ட நெருக்கடிகளும்

இத்தாலிய மார்க்சிய அறிஞர் கிராம்சி தனது “இயற்கையாக வளர்ந்தெழும் நெருக்கடி” கோட்பாட்டில் – “முதலாளித்துவ அமைப்பின் ஒவ்வொரு துறையையும் தொடுகின்ற ஒரு நெருக்கடி (பொருளாதாரம், புவி அரசியல், கருத்தியல், தொற்றுநோயியல், கலாச்சாரம், சுற்றுச்சூழல் போன்ற அனைத்திலும்) வளர்ந்து வெடிக்கும் போது, ஆளும் வர்க்கங்களால் தீர்க்கவியலாத, அமைப்புகளுக்குள்ளிருக்கும் அடிப்படை முரண்பாடுகள் பட்டவர்த்தனமாக வெளிப்படுகின்றன. ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கம் பலவீனப்படுத்தப்பட்டு, புரட்சிகரமற்ற சூழ்நிலைகளுக்கும் புரட்சிகர சூழ்நிலைகளுக்கும் இடையிலான வரலாற்று மாற்றங்களைக் குறிக்கும் நிகழ்வாக அது அமையும்.” என்று கூறுகிறார்.

ஒவ்வொரு துறையையும் தொடும் நெருக்கடிகள் இருப்பினும் – ஒற்றைப் பிரச்சனை குறித்த குவியமும், கட்டமைக்கப்படும் நெருக்கடிகளும், ஜனரஞ்சகத் தலைமைகளும், அவை குறித்தான வலதுசாரி ஊடகப் பிரதிபலிப்பும், தீவிர வலதிற்கு ஆளும் அதிகாரத்தை உலகெங்கும் ஆங்காங்கே வழங்கியுள்ளது.

BRICS கூட்டமைப்பில் தென்னாப்பிரிக்கா, சீனா தவிர்த்த ஏனைய நாடுகளிலும், ஹங்கேரி, போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், துருக்கியிலும் வலதுசாரி ஜனரஞ்சக மற்றும் தேசியவாத கட்சிகள் ஆட்சியில் உள்ளன. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிறுவப்பட்ட வலதுசாரி கட்சிகள் ஜனரஞ்சக போக்குக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் மைய சார்பு என்று வெளிப்படுத்திக்கொள்ளும் அரசு வலதுசாரி போக்குடன் பெரும் மக்கள் கிளர்ச்சிகளினூடே நகர்கிறது. ஜெர்மனியில் பெருகும் வலதுசாரி ஜனரஞ்சகத்திற்கு இணையாக ஆளும் கட்சியும் இணையான அரசியல் முன்னெடுப்புகளில் நகரும் என நம்பப்படுகின்றது. ஜப்பானின் ஷின்சோ அபே (Shinzo Abe) தேசியவாத திசையில் நாட்டை கொண்டு சென்ற பின்னர் பதவி விலகியுள்ளார்.

அமேசானில் அணைய மறுத்த காட்டுத்தீ

பிரேசிலின் தீவிர வலதுசாரி அதிபர் பொல்சனாரோ (Jair Bolsonaro) போலி செய்திகள் மூலம் சமூக ஊடகங்களில் ஊழலுக்கும் குற்றங்களுக்கும் எதிரானவராக தனது பிம்பத்தைக் கட்டமைத்து வெற்றிபெற்றவர். பா.ஜ.க. வின் அதிகாரபூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவைப் போன்றே, அதிகாரபூர்வமற்ற ‘வெறுப்பு அலுவலகம்’ என்றழைக்கப்படும் ‘Office of Hate’ மற்றும் எண்ணற்ற தானியங்கி பாட்டுகளின் துதிபாடல்களுடன் வலம் வருகிறார். ஊடக எதிர்ப்பு, பெண்ணிய எதிர்ப்பு மற்றும் பால்புதுமையினர் மீதான வெறுப்பு ஆகியனவற்றை இவரது ட்விட்டர் பதிவுகளில் வெளிப்படையாகக் காணலாம்.

காயங்களையும் தொழில் முடக்கங்களையும் கொணர்ந்திருக்கும் பிரெக்சிட்

வலதுசாரி பழமைவாத கட்சியின் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது. ஒப்பந்தமற்ற இப்பிரிவிற்கு வித்திட்ட பொதுவாக்கெடுப்பில் இந்த ஒற்றை பிரச்னையை மட்டும் பிரதானமாக வைத்து இயங்கிய தீவிர வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான UKIPன் நீகல் ஃபராஜ் தம் பரப்புரைகள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அப்பரப்புரைகளுக்கு ஆரன் பேங்க்ஸ் என்னும் தொழிலதிபர் மற்றும் அரசியல் நன்கொடையாளர் நிறுவிய Leave.EU என்னும் இணையதளம் பெரும் உதவி புரிந்தது.

அதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு, டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு ஒரு நாள் முன்பாக, வெஸ்ட்மான்ஸ்டர் (Westmonster) என்னும் இணையதளத்தைத் துவங்கினார். இது ஸ்டீவ் பேனனின் Brietbart மற்றும் வலதுசாரி செய்திகளைத் தொகுத்து வழங்கும் அமெரிக்க ஊடகமான ‘டிரட்ஜ் ரிப்போர்ட்’ (Drudge Report) ஆகியனவற்றைப் போலவே வடிவமைக்கப்பட்ட இணையதளம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துசெல்லும் கோரிக்கைக்கான ஆதரவு, டிரம்பிற்கான ஆதரவு, திறந்த எல்லைகள், பெருநிறுவன மற்றும் ஸ்தாபன எதிர்ப்பு சார்ந்த பரப்புரைகளை இத்தளம் மேற்கொண்டது. இதன் உருவாக்கம், டிரம்ப் கட்டமைத்த ஜனரஞ்சகம் பிரிட்டனிலும் காலடியெடுத்து வைப்பதற்கான ஒரு படியாகப் பார்க்கப்பட்டது.

இத்தகைய இணையதளங்கள் தவிர்த்து, பொதுவாகவே இந்தியாவைப் போன்றே பிரிட்டனின் ஊடகங்களும் தீவிர வலதுசாரி ஆதரவுடன் இயங்குகின்றன. இவற்றின் குடியேற்றத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாடு குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக தழைப்பிற்கு வழிகோலுவதிலிருந்து தடம்புரளும் ஊடகங்கள்

இருண்ட கண்டம் என்று உலக ஊடகங்கள் சித்தரிக்கும் ஆப்பிரிக்காவில், பெரும்பான்மையான நாடுகளில் ஊடக சுதந்திரம் இருட்டடிக்கப்பட்டிருக்கும் சூழலில், ஜனநாய நாடான தென் ஆப்பிரிக்காவிலும் வலதுசாரி ஜனரஞ்சகம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இனப்பாகுபாடு காலத்தில் நிலவியதைப் போலவே, வெள்ளை மேலாதிக்க வெறுப்புக் குற்றங்கள், பண்ணைக் கொலைகள் என்று குறிப்பிடப்படுவதும், இதற்கு எதிரான ஒன்றுகூடல்கள் ஏதுமற்ற ஒன்றாக தவறாகச் சித்தரிக்கப்படுவதும், சமூக ஊடகப் பிரபலம் என்பதாலேயே பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்று வாய்ச்சொல் வீரர்கள் மக்கள் தலைவர்களாகக் கட்டமைக்கப்படுவதும் ஊடகங்களில் வழக்கமாகியுள்ளது.

கொல்வதற்கான இசை

ஃபாசிஸ்டுகளும் நாஜிக்களும் வானொலிப் பரப்புரைகள் மூலம் இனப்படுகொலைகளை நிகழ்ந்தேற்றியதன் பிரதிபிம்பமாக, 1994-ம் ஆண்டில் ருவாண்டா நாட்டில் நிகழ்த்தப்பட்ட வெறியாட்டம், 100 நாட்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட டூட்ஸி இனத்தவர்களயும், மிதவாத ஹுட்டுக்களையும் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது. குஜராத்தில் நிகழ்ந்தது போலவே, இத்திட்டத்திற்கான செயல்பாடுகள் ஓராண்டு காலத்திற்கு முன்னரே துவங்கப்பட்டு விட்டன.

1993-ம் ஆண்டு கபூகா என்னும் பெருந்தனவந்தரின் முதலீட்டில் மில் கொலீன் (Radio Television Libre des Mille Collines – RTLM) என்னும் வானொலி துவங்கப்பட்டது. இவ்வானொலி, டூட்ஸி இனத்தவர்களைத் தவறாமல் கரப்பான்பூச்சிகளுடன் ஒப்பிட்டு, வளர்ந்த மரங்களை வெட்டிச் சாயுங்கள் என்று மக்களை ஊக்கப்படுத்தியது. இனப்படுகொலை துவங்கியவுடன், கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பெயர்களும், அவர்கள் இருக்கக்கூடும் என அறியப்பட்ட இடங்களுக்கான குறிப்புகளும் ஒலிபரப்பப்பட்டன.

வெகுசில வானொலி நிலையங்களே இயங்கி வந்த சூழலில், சில தீவிரமான தொகுப்பாளர்கள் மற்ற வானொலிகளில் இருந்தாலும், தொடர்ச்சியான பரப்புரைகளையும் வெறுப்பை விதைக்கும் வரிகள் கொண்ட இசையையும் ஒலிபரப்பி, தாக்குதல் நிகழ்த்துமளவிற்கு மக்களைத் தயார்படுத்தியதை, நேரடியாகவும் இனப்படுகொலையில் பங்குபெற்றது குறித்த தப்பிப்பிழைத்தவர்களின் நினைவுக்குறிப்புகளில் இருந்தும் அறிய முடிகிறது.

இவ்வானொலியை இயக்கிய கபூகா, 1997-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் உருவாக்கப்பட்ட ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாணையம் என்னும் சர்வதேச நீதிமன்றத்தால், ஏழு இனப்படுகொலை குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்டார். ஆனால் இவ்வெறியாட்டத்தை, இனப்படுகொலை என்று காலத்தே அறிவிக்காத, அதை நிறுத்துவதற்கான பேரழுத்தம் கோராத, உலக ஊடகங்களின் நுட்பமான செயலாக்கத்தில் ஒரு ஒத்திசைவு இருக்கத்தான் செய்கிறது.

எதுவும் கடந்து போகும்

ஈழத்தில் விடுதலைக்கான போர் நிகழ்ந்த சூழலில், இனப்படுகொலையை ஆதரிக்கவும், அதைக்கடந்து போகும் மனநிலையையும் விதைத்து, போருக்குப் பிந்தைய சூழலில் இழப்புகளையும், அவலங்களையும், மீட்கவியலா நல்லிணக்கத்தையும், செய்திகளின் ஒப்பனைகளில் ஒளித்துவைத்தும், நிகழ்த்தப்படும் ஊடக நாடகங்கள் வெளிப்படையாகவே அறிந்து கொள்ளத்தக்கவை.

இனப்படுகொலையில் துவங்கி அதன் பிரதியுடனேயே இப்பகுதி நிறைவுறுவது தற்செயலல்ல.

250 பண்பலை வானொலி நிலையங்கள் செயல்படும் இந்தியாவில், தனியார் வானொலி நிலையங்களில் செய்திகளை ஒலிபரப்ப அனுமதி இல்லை. அனைத்திந்திய வானொலியின் செய்தி அறிக்கையினை வேண்டுமானால் ஒலிபரப்பலாம். பாகிஸ்தான் நாட்டில், பர்வேஸ் முஷரஃபின் தாராளவாத நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பு 2000-ம் ஆண்டிலிருந்து துவங்கியது. வங்கதேசத்தில் அரசியலுக்கும்-வர்த்தகத்திற்கு இடையேயான வலுவான ஆதிக்கம், யார் தனியார் ஊடகங்களை உருவாக்கி இயக்கலாம் என்பதை தீர்மானிப்பதாக இருக்கின்றது.

அரசாட்சி-பெருநிறுவனம்-ஊடகம்-அடியாட்கள் ஆகியவற்றின் காலத்திற்கு ஏற்ப பரிணமிக்கும் பலவித சேர்க்கைகளின், அடிக்குறிப்புகளைப் பற்றிய தொகுப்பாக, இப்பகுதியை தொகுத்துஉ பார்க்கும்போது, வலதுசாரி ஊடகங்கள் அடையக்கூடிய இலக்குகளுக்கு வரம்புகள் இருப்பதும், அவை எப்பொழுதும் ஏதேனும் ஒன்றைச் சார்ந்திருக்கும் நிலையையும், நிரந்தரமாக இருக்கும் அரசு அவற்றின் இயங்கு பரப்பையும் வீச்சையும் எப்பொழுதும் கைக்கொள்ளவியலும் என்ற மெய்ப்பாடுகள் தெளிவுடன் தெரியலாம்.

(தொடரும்)

(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்