Aran Sei

கீதா பிரஸ் முதல் அர்னாப் கோஸ்வாமி வரை – இந்தியாவின் மாபெரும் வலதுசாரி ஊடக இயக்கம் – பகுதி 4

உடோப்பியாவும் உருமாறிய வலதுசாரி ஊடகவெளியும்

ஊடகங்கள் இவ்வாறு இயங்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, தொழில்நுட்ப-அரசியல் செயற்பாட்டாளர்களின் பல நேர்காணல்களில், தேசம் என்று அழைக்கப்படும் அடிவானத்தை நோக்கிய ஒரு வலுவான இழுவையைக் காண முடிந்தது. இங்கே எழும் பிரச்சினைகள், சுத்தமான காற்று, நல்ல சாலைகள், திறமையான அமைப்புகள் ஆகியவற்றுக்குள்ளேயே இறுதியாக அடங்கி விடுவதையும் காணமுடிந்தது.

“நான் விரும்புவது எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை.” என்று ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மிகவும் அப்பட்டமாகக் கூறினார். இத்தகைய கற்பனையில், நடைமுறை இருத்தலியல் பிரச்சினைகளும், தேசம் என்று அழைக்கப்படும் ஒரு சுருக்கமான கருத்தாக்கமும் ஏதோ ஒர் புள்ளியில் பின்னிப் பிணைந்து விடுகின்றன.

பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) இந்தக் கற்பனையைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை ஆரம்பத்தில் கண்டறிந்தது, தொழில்நுட்ப செயல்பாட்டிற்கு தூண்டியது. பல சந்தர்ப்பங்களில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் படித்த நடுத்தர வர்க்கத்துக்கு இருந்த பிணைப்பு முக்கியப் பங்காற்றியது. இந்த ஆற்றல்தான், பா.ஜ.கவின் டிஜிட்டல் பரப்புரை இயந்திரத்தை, அதன் ஆரம்ப ஆண்டுகளில் சிதறிய, பரவலாக்கப்பட்ட முயற்சிகளிலிருந்து, முறையான ஒழுங்கமைவுடன் கூடிய தற்போதைய கட்டமைப்பு வரை விரியச் செய்துள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஜெஃப்ரி அலெக்ஸ்சாண்டர் நவதாராளமயம் என்பது எளிமையான அல்லது பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமே உருவாகியிருக்கக்கூடும் என்பதைத் தன்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை என்கிறார். அது 1980-களில் வலுவிழக்கத் தொடங்கியிருந்த இடதுசாரி கருத்தியலுக்கு வலதுசாரியின் செயல்திறனுடன் கூடிய எதிர்வினை என்று கருதுவதாகக் கூறுகிறார்.

2012-ம் ஆண்டு முதல் இந்தியாவின் ஊடகவெளிகளில் நிகழ்த்தப்பட்ட வலதுசாரி எதிர்வினைகளையும் அந்த பார்வையிலேயே காண முயற்சிக்கலாம்.

செயல்படும் ஊடகங்கள் பெருநிறுவனங்களால் கையகப்படுத்தப்படுதல், பக்கச்சார்பு மாறிய பிறகு ஊடகவியலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுதல், மையநீரோட்ட ஊடகங்களின் ஆசிரியர் குழுவின் வலதுசாரி பக்கச்சாய்வு, NitiCentral, OpIndia, Postcard போன்ற தீவிர வலதுசாரி போலிச்செய்தி ஊற்றுக்கண் இணையதளங்களின் உருவாக்கம், குஜராத்தில் முழுநேர பரப்புரைக்கான நமோ டிவி, பல்லாயிரக்கணக்கான சமூக ஊடகக் கணக்குகள்/பக்கங்கள்/குழுக்கள், தனிநபர் காணொளி ஊடகங்கள், இணைய மன்றங்கள் மற்றும் துரித தகவல் பரிமாற்ற சேவைகள், மின்னஞ்சல் பத்திரிக்கைகள், தானியங்கி செயலிகள் என தீவிர வலதுசாரி கருத்தாக்கப் பரப்புரைக்கான கட்டமைப்பு உருவானது.

முத்தாய்ப்பாக, அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் மற்றும் பாரத் தொலைகாட்சிகள் உருவாக்கப்பட்டன. மாறுபட்ட இத்தகைய ஊடகச் சூழல் தேர்தல் வெற்றி இலக்கைக் கடந்து அரசின் ஒலிபெருக்கிகயாக இன்றும் தொடர்கின்றது.

2015-ம் ஆண்டிற்கு பிறகு துரித இணைய சேவை, மலிவான தொலைதொடர்பு சாதனங்களின் வருகை ஆகியவை இந்த ஊடகங்களை பலமட்டங்களில் கொண்டு சேர்த்தது. சற்றே உற்று நோக்கினால், இவ்வூடகங்கள் ஒரு ஒத்திசைவுடன், மேலிருந்து கீழ் நோக்கி ஒழுங்குடன் பாயும் தகவல் பரிமாற்றத்தைக் கொண்டுள்ளன, இயக்குபவர்களுக்கும் இயங்குபவர்களுக்குமிடையே வியூகத்துடன் அமைக்கப்பெற்ற இடைவெளியுடன் இயங்குகின்றன என்பதைக் காணலாம்.

இவற்றில் NitiCentral போன்ற சில 2016-ம் ஆண்டுவாக்கிலேயே தம் பணி இலக்கு எட்டப் பெற்றது என்று செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன. அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக இருந்த இன்ஃபோஸில் நிறுவன முன்னாள் ஊழியர் சஷி ஷேகர் அத்தளத்தின் செயல்நிறுத்தத்திற்குப் பிறகு, ஒன்றிய அரசின் சட்டரீதியான தன்னாட்சி ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலராக 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறார்.

இந்நிறுவனம் பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்திகள் வாசிக்கும் தூர்தர்சன், அகில இந்திய வானொலி ஆகியவற்றை தன் பொறுப்பில் உள்ளடக்கியது.

தீவிர வலதுசாரி ஊடகங்கள் அடிப்படையில் ட்ரோல்களா?

இந்த ஊடகங்கள் பரப்பும் கருத்தாக்கங்கள், புனைவு கதைகள், போலிச் செய்திகள், போலி அறிவியல், வரலாறு ஆகியவை வெறுப்புக் குற்றங்கள், வன்கொடுமைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல்கள், கும்பல் வன்முறைகள் ஆகியவை நிகழ்வதற்கு தூண்டுதலாக இருக்கின்றன.

இத்தகைய பரப்புரைகளை சலிக்காமல் வெளிப்படையாக மேற்கொள்வோர் – மோடியால் ட்விட்டரில் பின்தொடரப்படும் ஆசிகளைப் பெற்றவர்களாகவும், பெரும்பாலான நேரங்களில் திரையுலக (கங்கனா ரணாவத், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்…), விளையாட்டு (குறிப்பாக கிரிக்கெட் (சேவாக், விராத் கோலி…) மற்றும் சமீபத்தில் இறகுப்பந்து), வர்த்தக உலக, சமூக ஊடக பிரபலங்களாகவும், நவ யுக மத போதகர்களாகவும் இருக்கின்றனர்.

இத்தகைய கருத்துக்களை அவர்களே உதிர்ப்பதன் மூலமாகவும், ஏனையோர் உதிர்த்தவற்றை கிளிப்பேச்சாக பரப்புவதன் மூலமாகவும், இவர்களின் இந்த நடவடிக்கைகளை பின்னர் மையநீரோட்ட ஊடக விவாதப் பொருள்களாக மாறுவதன் மூலமும் – விவாதங்களின் குவியத்தை இடமாற்றுதல், சிதைத்தல், மையப் பிரச்சனைகளுக்குத் திரையிடுதல் ஆகியன ஊடகங்களின் துணையுடன், ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக நிகழ்ந்தேறுகின்றது.

இப்போக்கினை செய்தியாளர் சுவாதி சதுர்வேதி, தனது ‘நான் ஒரு ட்ரோல்’ (I am a troll’) என்னும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த ஊடகங்களின் வளர்ச்சி போலிச் செய்திகளை கட்டுடைக்கும் இணையதளங்கள் உருவாகுவதை அவசியமாக்கியுள்ளது.

அவற்றில் பிரதானமான ஆல்ட்-நியூஸ் இணையதளத்தின் நிறுவனர் பிரதீக் சின்ஹா, அரசியல் விருப்பத்துடனும் அரசின் தலையீட்டுடனும்உருவாகுவதாகக் கருதப்படும் போலிச்செய்திகளை தடுப்பது குறித்தான கேள்விக்கு “இச்செய்திகளின் ஊற்றுக்கண்கள் அளப்பரியதாகையால் இவற்றின் வேகத்தை மட்டுப்படுத்த முடியுமே தவிர எப்பொழுதும் முழுமையாக தடுக்கவியலாது.” என்று பதிலளித்துள்ளார்.

இந்திய யதார்த்தத்தின் மாபெரும் வலதுசாரி ஊடகம்

மோடி தனது புதிய இந்தியா எனும் கற்பனை உலகில் வானொலி ஊடகவியலாளராக வலம் வருவதற்கு, புத்தாயிரத்திற்குப் பிறகான தொடர்ச்சியான ஊடக பிம்பக்கட்டமைப்பு அடிப்படை. என்றாலும் அது ஒரு முழு நூற்றாண்டிற்கும் மேலாக இடையறாது பரப்புரை மேற்கொண்டிருக்கும் மாபெரும் வலதுசாரி ஊடக இயக்கத்தின் தொடற்சியாலேயே சாத்தியமானது.

அம்மாபெரும் ஊடக இயக்கம் சனாதனம்-பார்ப்பனீயம். 18-ம் நூற்றாண்டின் ஜெர்மானிய தத்துவவியலாளர் ஹெகல், நவீன மனிதனின் காலைப் பிரார்த்னைக்கான மாற்று செய்தித் தாள்கள் என்று குறிப்பிடுகிறார்.

அதற்கு நேர்முரணாக, அரசியல் கருத்தியலை பிரார்த்தனையாக வீதிகள்தோறும், வீடுகள்தோறும் சென்று சேர்த்து ஒன்று அறுபட்டாலும் மற்றொன்றை பிடித்துத் தொடரலாம் என்னுமளவிற்கு கண்ணிகளை தன்னகத்தே கொண்டு வியாபித்து, சிக்கலான சங்கிலிப்பிணைப்பாக ஒரு கட்டுமானத்தை கொண்டுள்ளது, சனாதனம்-பார்ப்பனியம் என்ற ஊடக இயக்கம்.

இந்திய யதார்த்தத்தில் வலதுசாரி ஊடகங்களை இதன் கிளைகளாகவே காணலாம். ‘கீதா பிரஸ் மற்றும் இந்து இந்தியாவின் உருவாக்கம்’ (‘Gita Press and the making of Hindu India’) என்னும் நூலினை எழுதிய அக்ஷய முகுலின் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், அதனை ‘பனியாக்களின் பக்தி மாதிரி’ எனக் கொள்ளலாம்.

அரண்செய் இணைய ஊடகத்தின் நேர்காணலில் (‘அத்துமீறும் YouTubers’) இதழியல் முனைவர் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஃபிரான்சிஸ் ஹாரிஸ் ராய் ஒரு கேள்விக்கான பதிலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

“நான் எனது இளமைக்காலம் முழுமையும் நமது வழமையான ஊடகங்களையே பார்த்து வளர்ந்துள்ளேன். ஆனால் இணைய பயன்பாடு பெருகிய பின்னர் சமூக ஊடகங்களின் பயன்பாடு விரிவடைந்த 2010-ம் ஆண்டிற்குப் பிறகு யூடியூப் போன்ற தளங்களில் வந்த காணொளிகளைப் பார்த்தபிறகு தான் தமிழகத்தில் ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளெல்லாம் உண்பார்கள் என்பதையே அறிந்து கொண்டேன்.”

“நான் வாழும் சமூகத்தின் மிக இயல்பாக இருக்கும் பண்பாட்டுக்கூறினை இவ்வகையில் முதன்முதலில் அறிந்து கொண்ட போது மிகவும் வியப்படைந்தேன். நமது வழமையான ஊடகங்கள் நமது சமூகத்தை அவர்களின் கருத்தாக்கத்திற்கேற்ற திரை போர்த்தியே காட்சிப்படுத்தும் போக்கு தொன்றுதொட்டு உள்ளது. அவர்கள் எனக் குறிப்பது ஊடகவெளியில் நிறைந்திருக்கும் சமூகக்கட்டுமானம் வழங்கும் சலுகை பெற்றோரை.” என்றார் அவர்.

மோடியின் பழைய குஜராத்தில் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய உள்ளூர் அச்சு ஊடகங்கள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைகளில் ஆற்றிய பங்கு பெரிதும் விமர்சனத்திற்குள்ளானது.

மானுடவியலாளர் பர்விஸ் காசீம்-ஃபச்சந்தி இந்நிகழ்வு தொடர்பான தனது ‘குஜராத் படுகொலைகள்: இந்தியாவில் இந்து தேசியம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள்’ (Pogrom in Gujarat: Hindu Nationalism and Anti-Muslim Violence in India) என்னும் நூலில், இந்நிகழ்விற்கு முந்தைய ஓராண்டு காலமாக, தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாகவும், அவை குறித்த ஊடகப் பதிவுகள் மூலமாகவும் இந்துக்களின் சைவ உணவு தொடர்பான உணர்வுகளும், தியாகத்தின் மொழியும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதற்கும், இந்து தேசியவாதம் என்ற பெயரில் சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளைத் கடந்து ஆர்வமுள்ள நடுத்தர வர்க்கங்களை அணிதிரட்டுவதற்கும் எவ்வாறு கையாளப்பட்டன என விளக்கியுள்ளார்.

மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பார்வையில், ஃபிரான்சிஸ் மற்றும் காசீம்-ஃபச்சந்தி, இருவரின் கருத்துப் பதிவுகளையும் இருவேறு நிலப்பகுதிகளின் மாதிரிகளாக எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, பொதுவாகவே இந்திய ஊடகங்கள் இந்துத்துவ தேசியம் என்னும் கருத்தியல் புகுத்த நினைக்கும் ஒற்றைத்தன்மையை அனிச்சையாக எப்பொழுதுமே கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன என்பது புலப்படும்.

காலனிய ஆட்சிக் காலத்தில், தொழில் ரீதியாக பலம் வாய்ந்த முதலாளித்துவ மார்வாரி சாதிக்குழுவினர் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும் சாதியப் படிநிலையில் தாம் கீழிருப்பதாக நம்பினர். எனவே தம் நிலையை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு, ராம சரித்திர மனஸ் பஜனைகளுக்கும், பசுக்களை பாதுகாக்கும் கோசாலைகளின் பராமரிப்பிற்கும் நிதி வழங்கினர்.

அதன் தொடர்ச்சியாக கீதா பிரஸ் என்னும் பதிப்பகத்தை 1923-ல் நிறுவி இதிகாசங்களை மலிவாகவும் தரமாகவும் அச்சிட்டு சாதிகள் கடந்து அனைத்துத் தரப்பினரின் இல்லங்களுக்கும் சென்று சேர வழிவகுத்தனர். அவர்கள் ஆலயங்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கும் தலித்துகளின் இல்லங்கள் உட்பட.

1926-ம் ஆண்டு ஹனுமான் பிரசாத் பொட்டார் என்பவரின் பொறுப்பில் ‘கல்யாண்’ (Kalyan) எனும் அச்சு இதழினைத் துவங்கினர். இது ஒரு அரசியல் வேலைத்திட்டமாக, பக்தி என்ற வெளிப்பூச்சுடன் இந்துமகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் பேசும் இதழாக இருந்தது. இஸ்லாமியர்களின் இனப்படுகொலைக்கான பகிரங்க அறைகூவல் விடுத்ததால் 1946-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. 1951-52-ம் ஆண்டு முதல் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நேரடி பரப்புரையை மேற்கொண்டது.

1960-களில் பொதுவுடைமை இயக்கத்தின் மீதான அச்சத்தால் அவர்களைப் போன்றே துண்டுப்பிரசுரங்கள் வழங்குவதே ஒரே வழி என நம்பினர். இன்றளவும் தொடர்கின்றனர்.

ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, தாகூர், அன்னி பெசன்ட், காந்தி போன்றவர்கள் இவ்விதழுக்காக எழுதியுள்ளனர். இந்து இந்தியா, இந்துத்துவ தேசியம் என்னும் தீவிர வலதுசாரி கருத்தியலை வளர்த்தெடுத்ததில் இந்த கோரக்பூர் அச்சு ஊடகம் பெரும் பங்காற்றியுள்ளது.

ஃபிரன்ட் லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அக்ஷய முகுலின் நூல் குறித்தான ஒரு உரையில் கல்யாண் இதழின் செயல்பாடுகள் பெனடிக்ட் ஆண்டெர்சனின் அச்சு முதலாளித்துவத்துவ கோட்பாட்டினை மெய்ப்பிப்பது போல இந்துத்துவ தேசியத்தை வளர்ந்துள்ளது என பதிவு செய்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் சன் குழுமம், ஸ்டார் குழுமம், சிறப்பு சேவைகளை நல்கும் டி.டி.ஹெச் சேவைகள் மற்றும் ஓ.டி.டி தளங்கள், கீதா பிரஸ்ஸின் சனாதன விரிவாக்க திட்டத்தில் இயற்கையான பங்கேற்பாளர்களாகத் தம்மை இணைத்துக்கொண்டது போல் தெரிவது இயல்பு.

அர்னாப் கோஸ்வாமிக்கும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி சபையின் (BARC) முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் பார்த்தோ தாஸ் குப்தாவிற்கும் இடையே நிகழ்ந்த வாட்ஸ்ஆப் உரையாடல்கள் வெளிவந்திருக்கும் சூழலில், அர்னாப் இந்திய இராணுவ வீரர்களின் உயிர்களுக்கும் குடிமக்களின் உயிர்களுக்கும் ஆபத்து விளைவித்திருக்கக் கூடிய “தேசத்துரோகியா” என்னும் கேள்வியும் அதைச் சுற்றிய விவாதங்களும் ‘’தேசிய’ ஊடகங்கள் என மார்தட்டிக்கொள்ளும் ஊடகங்களில் பரவலாக இல்லை என்றாலும் சில மாற்று ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன.

வெற்றிடத்தை நிரப்பும் இரைச்சலாக எப்பொழுதும் நிறைந்திருக்கும் தேசியவாத வகுப்பெடுக்கும் விவாதப் பங்கேற்பாளர்களின் குற்ற உணர்ச்சியற்ற கள்ள மௌனத்துடன்.

(தொடரும்)

(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்