Aran Sei

இந்திய வலதுசாரி ஊடக வெளியின் தோற்றமும் தனிச்சிறப்புகளும் – பகுதி 3

மீம் சூழ் உலகு

பண்பாட்டுத் தளத்தில் இருந்த, ஒரு சித்திரக்கதையில் இடம்பெற்ற ‘Pepe the Frog’ என்னும் பாத்திரம் தீவிர வலதுசாரிகள் அடையாளமாகவும், வெறுப்புச் சின்னமாகவும் பல நிறுவனங்களால் பார்க்கப்படுவதும், மீம் என்னும் வடிவத்தின் தாக்கமும் வலதுசாரிகள் பயன்பாட்டில் அதன் வீச்சினை சுட்டிக்காட்டப் போதுமானதாக இருக்கின்றன.

தீவிர வலதுசாரி அணிதிரட்டலை எளிதாக்கிய சமூக ஊடகங்கள்

தீவிர வலதுசாரிகள் தங்கள் கருத்துக்களை பரப்ப பல்வேறு இணைய சேவைகள் மூலம் பின்தொடர்பவர்களை அணிதிரட்டுகின்றன. சொந்த வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், மாற்று செய்தி ஊடக தளங்கள், முக்கிய சமூக ஊடக தளங்கள், அனாமதேய மன்றங்கள், உடனடி செய்தி சேவைகள் என மக்கள் உலாவும் அனைத்துத் தளங்களிலும் அவர்கள் பரவியுள்ளனர்.

கருத்தியல் ரீதியாக இயங்கும் இணையதளங்கள் செய்தி, காட்சிகள், புகைப்படங்கள், பங்கேற்பு முறைகள் என பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளன. பல இணையதளங்கள், பிரபலமான மையநீரோட்ட செய்தித் தளங்களின் கட்டமைப்பைப் போலவே தங்கள் தளங்களையும் வடிவமைத்து அவ்வூடகங்களின் மேலாதிக்கத்திற்கான தங்கள் எதிர்ப்பாக மாற்றுச் செய்திகளைப் பதிவிடுகின்றன.

அதிக அளவில் பயன்படுத்தப்படும் உத்தி என்னவென்றால், செய்திக் கட்டுரைகளைத் தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப சிறு குறிப்பான மாறுதல்களைச் செய்து உலவ விடுவது. சார்பற்ற செய்திகள்கூட பலநேரங்களில் அரசியல்படுத்தப்பட்டு தவறான தகவல்களுடன் பரப்புரைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வியூகத்துடன் கூடிய உள்ளடக்கம், வெறுப்புப் பேச்சு, திட்டமிடப்பட்ட பரப்புரைகள் ஆகியவற்றின் மூலம் சமூக ஊடகங்களில் கவனத்தையும் ஈடுபாட்டையும் வலதுசாரிகள் ஈர்க்கின்றனர். ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்கள் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவரின் சதி வலை பின்னும் இணையதளங்களை முடக்கின. இது இத்தகைய வலதுசாரி தீவிரவாத சக்திகளை இணையத்தில் செயல்பட அனுமதிக்கலாமா என்னும் விவாதம் எழுப்பியது.

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பிறகு, பார்லர் (Parler) என்னும் குறுவலைப்பதிவுத் தளம் வெறுப்புப் பரப்புரைகளுக்காக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தளம் இயங்குவதற்கு பெரும் நிதிக்கொடை வழங்கிய ரெபெக்கா மெர்சர் ராபர்ட் மெர்சரின் புதல்வி.

4chan, 8kun, Voat, Gab போன்ற பயனர் விவாத மன்றங்கள் தீவிர வலதுசாரிகளின் முக்கியமான மையங்களாக மாறியுள்ளன. இத்தகைய மன்றங்கள் அனாமதேய பங்கேற்பை அனுமதிக்கின்றன, மேலும் எத்தகைய கருத்துக்களை வெளியிடலாம், எது கூடாது என்பதற்கு மிகக் குறைந்த விதிமுறைகள்தான் உள்ளன அல்லது விதிமுறைகளே இல்லை என்ற நிலைப்பாட்டை இந்த மன்றங்கள் கடைப்பிடிக்கின்றன.

தீவிர வலதுசாரிகள் தங்கள் தாக்குதல்களைப் பற்றி விவாதிக்கவும், அவற்றுக்கு ஆதரவை திரட்டவும் 8kun மன்றத்தைப் பயன்படுத்திய பின்னர் அம்மன்றம் எதிர்மறை கவனத்தைப் பெற்றது.

பிரேஜர்யூ (PragerU – Prager University) என்னும் செயலி எதிர்தரப்பின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்றும், விவாதங்களில் எந்த வாதங்களை வைக்க வேண்டும் என்றும் 5 நிமிடக் காணொளிகள் மூலம் வலதுசாரிகளுக்கு உடனடி உதவியாளராகச் செயல்படுகின்றது.

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலுக்கு பிறகு குறியாக்கம் (Encryption) பொருந்திய செயலிகளான டெலகிராம், சிக்னல் போன்றவையும், கேப் (Gab), மீவீ (MeWe), கிளவுட்ஹப் (CloutHub) போன்ற சமூக ஊடகத் தளங்களும் தங்கள் செயலாக்கங்களை மாற்றியுள்ளனர். இச்செயலிகளிலும் தளங்களிலும் கண்காணிப்பு பெருக்கப்படுவதாலும், தொழில்நுட்ப வரம்புகளாலும் பரப்புரைகளை அதிக ஆதரவாளர்களுக்கு எளிதாக நிகழ்நேரத்தில் கொண்டு செல்வது தற்போது சற்றே தொய்வடைந்துள்ளது.

சதி வலைப் பின்னல்களினூடே விரியும் ஊடகவெளி

நரமாமிசம் உண்ணும், குழந்தைகளை பாலியல் நோக்குடன் அணுகும், சாத்தானை வழிபடும், குழந்தை கடத்தலில் ஈடுபடும் சதிக்குழு ஒன்று டொனால்ட் டிரம்பிற்கு எதிராக செயல்படுவதாகவும், டிரம்ப் அவர்களுக்கு எதிரான புயல் ஒன்றை வீசவிருப்பதாகவும் நம்புகிறது QAnon என்ற சதி வலை இணைய ஊடகம். அது பரப்பும் கருத்தாக்கத்தை நம்புபவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கருத்தாக்கம் பொய் என முறியடிக்கப்பட்டாலும், இதனை நம்புபவர்கள் நாடுகள் கடந்து ஐரோப்பாவிலும் தலை தூக்க துவங்கிவிட்டனர். ஒருமுறை கூட டிரம்ப் இந்த நம்பிக்கையாளர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததில்லை.

கண்காணிப்பு முதலாளித்துவ (Surveillance Capitalism) காலத்தில், பயனர்களின் சுய தகவல்களும் மின்னணு அடையாளங்களும், இலவச சேவைகள் மூலம் பெறப்பட்டு வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், டீப் ஃபேக்குகள் (Deep Fakes) எனப்படும் காட்சிப் படங்களில் முகங்களையும் குரலையும் மாற்றித் தரும் சேவைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் செய்திகளை எழுதிப் பிரசுரிக்கின்றன.

இந்த காலகட்டத்தில், முதல் தலைமுறையில் வாக்காளர்களாகவும், அடிமட்ட செயற்பாட்டாளர்களாகவும் தோன்றி, தற்போது தானியங்கி இயந்திரங்களாக பரிணமித்துள்ள வலதுசாரி ஆதரவாளர்கள் எவ்வாறு உருமாறக் கூடும்? பரிணமிக்கும் வலதுசாரி ஊடகங்களின் செயற்பாட்டால் எத்தகைய மாற்றங்கள் நிகழும்? இதனை சுவாரசியமான (?!) ஒரு புதினத்திற்கான ஆரம்பப்புள்ளியாக வைத்துக்கொள்ளலாம்.

புதிய இந்தியா – வரையறுக்கவியலா வலதுசார்பு

அமெரிக்காவின் வலதுசாரி போக்கு, பொருளாதார தாராளமயத்தையும் சமூக பழமைவாதத்தையும், இரண்டையும் உள்ளடக்கியது. இந்திய ஒன்றியம், பன்முக சமூகமாக பல மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகவும், வர்க்க இடைவெளி, சாதியப்படிநிலை, மத பேதம் என சமத்துவமின்மைகளின் கூடாரமாகவும் இருக்கின்றது. இச்சமூகக் கட்டமைப்பில் ஊடகங்களின் உரிமையாளர்களும் பிரதான செய்தி அறைகளில் இயங்கும் ஊடகவியலாளர்களும் வர்க்க-சாதியப்படி நிலையின் மிகக்குறுகிய வட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடக் கூடியவர்களாக உள்ளனர்.

ஆசிரியர் குழுக்களிலும் பன்முகத்தன்மையின் வறட்சி நீடிக்கின்றது. இந்த கள யதார்த்தத்தின் பின்னணியில் தற்போது இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் தீவிர வலதுசாரி தத்துவமான கலாச்சார தேசியம், இந்தியாவை இந்துத்துவமயமாக்குதல், இந்துத்துவத்தை இராணுவமயமாக்குதல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், வலதுசாரி ஊடகங்கள் என்று எல்லை வரையறை செய்வது அவ்வளவு எளிதல்ல. சமூகப் பழமைவாதத்தை ஏற்கும் இடது, நவதாராளமயத்தையும் உலகமயமாக்கலையும் எதிர்க்கும் வலது எனக் குறுக்குக் கலவை கருத்தியல்கள் உலவும் போக்கு நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான ஊடகங்கள் பக்கச் சார்பு இருந்தாலும், தங்களை நடுநிலை ஊடகங்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

தலைப்புகளைப் பொறுத்து சார்பினை மாற்றிக் கொள்வதாகவோ, ஒரே குழுமத்திற்குள்ளேயே மாறுபட்ட பக்கச் சார்பு கொண்ட ஊடகங்களாகவோ, எப்பொழுதும் ஆளும் வர்க்கச் சார்பு கொள்வதாகவோ என பல வார்ப்புகளில் செயல்படுகின்றன.

‘திங்க் ரைட்’ (Think Right)

2014-ம் ஆண்டு இந்திய ஒன்றியப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தீவிர வலதுசாரி இயக்கமான ஆர்எஸ்எஸ். ஸின் பிரதான சேவகர் நரேந்திர மோடியின் பிம்பத்தைக் கட்டமைக்கும் பொருட்டு நெட்ஒர்க்18 நிறுவனர் ராகவ் பால் ஒரு அமைப்பை உருவாக்கினார். அதனை அடித்தளமாக வைத்து ஒரு மாநாடு ஒன்றை நடத்த விரும்பினார். அமைப்பிற்கு அவரிட்ட பெயர், ‘திங்க் ரைட்’.

இந்த வலதுசாரி சாய்வு, ஆசிரியர் குழுமத்தின் முடிவுகளின்படி இனி செய்திகளை வழங்கவியலுமா என்ற கேள்வியுடன் இணைந்து நிற்க, “வலது என்றால் நம்மை இந்துத்துவத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள மாட்டார்களா?” என்று ஆசிரியர் மற்றும் துணைஆசிரியரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இறுதியில் அது பெயர்மாற்றம் செய்யப்பட்டு அனைவரின் ஒப்புதலுடன, ‘திங்க் இந்தியா’ (Think India) என நடந்தேறியது.

என் நண்பர்கள் ஏன் மோடியை ஆதரித்தனர்?

மோடி தனது கட்சியின் பற்றுக்கோடுகளைத் தகர்த்து, அதிகார மையத்திற்கு எதிரானவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். தனக்கு துதிபாடா ஊடகங்களைப் புறந்தள்ளி, முழுநேர பரப்புரை ஒளிபரப்பும் தனிநபர் ஊடகமாகத் திக்கெங்கும் பறந்தார். வளர்ச்சி-நல்ல நாள் என்னும் சொல்லாடல்களைப் பல்மட்ட தொழில்நுட்ப உதவிகளுடனும், தன்னார்வ மற்றும் வேலைக்கு அமர்த்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் (I.T. Cell) இடையறா பரப்புரைகள் செய்தார். அவற்றுக்கு மத்தியில் பெருமுதலின் துணையுடன் ஒரு அலையைக் கட்டமைத்துக் கொண்டிருந்தார்.

இதற்கு மத்தியில் எப்பொழுதும் அரசியலெனும் வார்த்தையைக் கேட்டால் ஒதுங்கியே இருக்கும் நண்பர்கள் சிலர் மோடிக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பல்துறைகளில் வல்லுனர்களாகவும், வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் முழுநேரப் பணியாளர்களாகவும் வலம் வருகிறவர்கள் இவர்கள். சமூகக்கட்டுமானத்தின் சலுகையால் இயல்பிலேயே தோன்றியது எனக் கருதும் வண்ணம் வலதுசாரி சார்பு கொண்டிருப்பவர்கள். ஆனால், அதனை பகட்டுடன் வெளிக்காட்டிக்கொள்ளத் தயங்குபவர்கள் அவர்கள்.

ஆனால், திடீரென ஒருங்கிணைந்த செயல்திட்டத்தின் செயற்பாட்டாளர்கள் போல தீவிர இந்துத்துவ தேசியவாத ஆதரவையும் இஸ்லாமிய வெறுப்பையும் உமிழத் துவங்கினர். இவ்வுணர்ச்சிகள், வெளிப்படுத்தியே ஆகவேண்டிய ஒன்றாகத் தொற்றுவது நம் சமூகத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒன்றில்லைதான். என்றாலும், எந்தப் புள்ளியில் இவர்கள் தங்கள் கூடுகளை விட்டு வெறுப்பை உமிழும் பரப்புரைகளை வெளிப்படையாக மேற்கொள்ள எத்தனித்தனர் என்பதைப் புரிந்துகொள்ள நான் முயற்சித்த போது அவற்றின் மைய இணைப்புச் சரடுகளாக தெரிய வந்தவை :

  • அவர்களுக்கு சமூகக்கட்டுமானம் வழங்கிய சலுகை பற்றிய புரிதலின்மை,
  • பெருநகர வசிப்பு,
  • சிற்சில சமூக நோக்கங்களில் பங்குபெறும் வாய்ப்பளித்து தங்களைச் செயற்பாட்டாளர்களாக் கருதிக்கொள்ள வைக்கக்கூடிய ஊடகங்களின் வாசிப்பு,
  • மிகக்குறிப்பாக வெகுசமீபத்தில் ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் மற்றும் பாபா ராம்தேவ் போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட போதகர்களின் பயிற்சி வகுப்புகளில் பங்குபெற்று அவர்களின் தலைமையால் ஈர்க்கப்பட்டமை ஆகியவை.

இவற்றை, அந்நண்பர்களே உறுதி செய்திருந்தனர்,

2019-ம் ஆண்டு லைவ்மின்ட் இணையதளத்தில் வெளிவந்த, ‘பாதிக்கப்பட்டவர்களாக ஆகத்துடிப்பவர்கள்: இந்தியாவின் இணைய வலதுசாரிகள்’ (The wannabe victims: India’s online right) என்ற கட்டுரையில் சுட்டப்பெற்ற ஒரு தகவல் தொழில்நுட்ப ஊழியரான பெங்களூருவாசியின் நேர்காணல் மேற்கூறிய அனுபவப் புரிதலை மீண்டுமொருமுறை சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

ஆசை-தெரிவுநிலை பார்வையில் இந்திய ஊடகவெளி

அக்கட்டுரையை எழுதிய சஹானா உடுப்பா, ஜெர்மனியின் மியூனிக் பல்கலைக்கழகத்தில் (எல்.எம்.யூ) ஊடக மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரியும் முன்னாள் கன்னட மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கையாளர். இவர் தனது ‘உலகமயமான இந்தியாவில் செய்திகளை உருவாக்குதல்: ஊடகம், மக்கள், அரசியல்’ (Making News in Global India: Media, Publics, Politics) என்ற நூலில் இந்திய ஊடகவெளி பற்றிய புதியதொரு பார்வையை வழங்குகின்றார்.

இந்திய ஊடகவெளியில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகவே அச்சு செய்தி ஊடகங்களில் தனியார் முதலீடு உள்ளது. காட்சி செய்தி ஊடகங்களிலும் பொழுதுபோக்கு வானொலி-இணைய ஊடக சேவைகளிலும் தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிறகு தனியார் முதலீடுகள் பெருகின. உலக முதலீடுகளும் பெற்று தனிப்பட்ட ஊடகங்கள் இன்று குழுமங்களாக வளர்ந்துள்ளன.

இவற்றின் இயங்கியலை, பண்டமாக்கலின் தொடர்ச்சியாகவும், ஜனநாயக மறுமலர்ச்சிக்கான பொறிகளாகவும் விளக்கும் பார்வைகளில் இருந்து வேறுபட்டு ஆசை-தெரிவுநிலை (desire-visibility) என்னும் சட்டகத்தை கட்டமைத்து விளக்குகின்றார், சஹானா உடுப்பா.

1990-களின் பிற்பகுதியிலும் 2000-ன் ஆரம்ப ஆண்டுகளிலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவான அச்சு ஊடகங்களும் காட்சி செய்தி ஊடகங்களும், இந்தியாவை உலக சக்தியாக சித்தரிக்கத் துவங்கினர். நகர்ப்புற நடுத்தர வர்க்கம், குறிப்பாக உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் கற்பனைக்கு முக்கியமானவர்கள். அவர்கள் ஒரு புதிய இந்தியாவின் முகவர்களாக இருந்தனர்.

அதிகம் ஊடாடத்தக்கவையாக மாற வேண்டும் என்ற அழுத்தத்தின் கீழ் செய்தி ஊடகங்கள், பார்வையாளர்களை நேரடியாகச் செய்தி உருவாக்கத்திலும் குடிமை பிரச்சாரங்களிலும் ஈடுபடுத்தத் துவங்கின. சாலைக்குழிகள் முதல் அரசாங்க ஊழல் வரை அவர்களைச் சுற்றியுள்ளவற்றிற்கு நேரடிப் பொறுப்பை ஏற்குமாறு நடுத்தர வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தில் கூட இந்நடுத்தர வர்க்கம் செயலாற்றாத ஒன்று அல்ல என்பது உறுதி. இருப்பினும், புத்தாயிரத்தின் தொடக்கத்தில், நகர்ப்புற நடுத்தர வர்க்கம் ஊடக வசதி கொண்ட குடிமைப் பரப்புரைகளின் மூலமும் இணைய அடிப்படையிலான ஊடகங்களின் வளர்ந்து வரும் பயன்பாடு மூலமாகவும் அரசின் மீது கூடுதலான நேரடி உரிமை கோரல்களைத் துவங்கியது.

பெங்களூரு போன்ற நகரங்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னணியில் இருந்தனர். இணைய வலைப்பின்னல் பற்றிய அறிவும் உயர் தொழில்நுட்ப நிபுணர்களுடன் தொடர்புடைய குறியீட்டு மூலதனமும் சேர்ந்து பொதுக் கருத்தாக்கத்தை வடிவமைப்பதில் அவர்களின் கூற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது.

பண்ட நுகர்வு என்பதைக் கடந்த குடிமைச் செயல்பாடுகள், கலாச்சார ஏற்றம், சமூகநிலை நகர்வு, நான், எனது உடல் என்பதைப் பற்றிய மீள் கற்பனை ஆகியவற்றை மையப்படுத்திய தனிமனித ஆசை குறித்த மாதிரியும் (desire model), கலாச்சார விழுமியங்கள், அரசியல் பண்பாடு, சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பன்முகக் குரல்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்டமைக்கப்பட்ட சமூகத் தெரிவுநிலை மாதிரியும் (visibility model) ஊடகங்களால் ஒருங்கே பயன்படுத்தப்பட்டன. இவை இரண்டிற்குமிடையில் நீடித்த-நீடிக்கும் அழுத்தம் நகர்ப்புற சூழலைக் கட்டமைத்தது, கட்டமைக்கின்றது.

ஆங்கில மொழி ஊடகவியலார்கள் ஒருபுறம் பெருமுதலுடன் உலகை வலம் வரும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யவியலாத நிலையில், கிராமப்புறம் குறித்தான பதிவுகளைச் செய்யவேண்டிய தேவையில்லை என்று முடிவு செய்து, நகர்ப்புற வளர்ச்சி மீதும் அதனைச் சார்ந்த கற்பனை உருவாக்கத்தின் மீதும் மட்டும் கவனம் செலுத்தினர்.

வட்டார மொழி ஊடகவியலாளர்கள், மொழி என்ற ஒற்றைப்புள்ளியில் வடக்கு, தெற்கு, வந்தேறி என்ற மொழிவாரி எல்லைக்கோட்டு அரசியல் திரட்சிக்கு அருகில் இருந்ததால் வட்டார செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். முதலில் இவர்கள் ஆங்கில ஊடகங்களின் நவதாராளமய கொள்கைப்பிடிப்பை எதிர்த்தாலும் பின்னர் வளர்ச்சி என்னும் போக்கில் தம்மை பிணைத்துக் கொண்டனர்.

ரியல் எஸ்டேட் (Real-Estate) என்னும் துறையின் அபார வளர்ச்சியில் ஆங்கில ஊடகங்களின் பங்கு பெருமளவு இருந்தது. கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பினையும் வட்டார மொழி ஊடகங்கள் அவ்வப்போது எடுத்துக்கொண்டன. அதேவேளையில் அச்சு வகுப்புவாதம் (‘Print Communalism’) – இலாப நோக்கில்லாமல், பிணக்கில்லா குழுக்களை இணைக்கவும், ஏனைய சாதிகளை சாடுவதற்கும் உருவாக்கப்பட்ட உள்ளூர் ஊடகங்கள் வட்டார மொழிகளில் வளர்ந்தது.

இவை காலனிய பிரிட்டிஷாரிடம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெறுவதற்காக அமைக்கப்பெற்ற அமைப்புகளுடன் தொடர்புடையவை அல்ல. செய்தியாளர்களின் சமூகப் படிநிலை செய்திகள் உருவாக்கத்தில் பெரிதும் தொடர்புடையவையாக இவ்விரு ஊடகங்களிலும் இருந்தது.

பெங்களூரு விமான நிலைய இடமாற்றம் குறித்த பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திக்கட்டுரைகளை ஒப்புநோக்கில் ஆய்வு செய்து அதன் வழியாகவும் ஊடகங்களின் சார்பு குவியங்களை சுட்டிக்காட்டுகிறார் , சஹானா உடுப்பா.

ஸ்டெர்லைட் ஆலை நிறுத்தத்திற்கான போராட்டம்-அதன் பின் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, சென்னை-சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் ஆகியன குறித்த பதிவுகளில் தனி மனித-நிறுவன ஆசையை மட்டுமே பிரதிபலிப்பவை, அவலங்களைச் சுட்டி தெரிவுநிலை பெறச்செய்து நீதி கோரும் சமூகப் பார்வை கொண்டவை என எளிதில் பிரித்தறியலாம்.

(தொடரும்)

(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்