19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்திற்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றமான கேப்பிடல் வளாகம் தாக்குதலுக்கு உள்ளானது, இவ்வாண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் தீவிர வலதுசாரிகளால்தான்.
இத்தாக்குதலுக்கு தூண்டி விட்டவரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமூக ஊடகக் கணக்குகள் அவ்வூடகங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களால் முடக்கப்பட்டுள்ளன.
இன்னொரு செய்தியில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது கடந்த ஒன்பது வாரங்களாக வெகுமக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
சம காலத்தில், உலகின் கவனத்திற்குரிய இவ்விரு செய்திகளும் பெரும்பாலான ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும், வலதுசாரி ஊடகங்கள் என அறியப்படும் ஊடகங்களில் இந்தச் செய்திகள் விவரிக்கப்படும் முறையும், அதனால் ஏற்படும் அரசியல்-சமூக-பொருளாதாரத் தாக்கங்களும் உற்றுநோக்க வேண்டிய வரலாற்றுப் போக்குகளாக உள்ளன.
சிந்தனைக்களத்தின் மீதான மெல்லிய ஆதிக்கம் என்ற பார்வையால் ஆய்வறிஞர்களின் கவனத்தைப் அதிகமாக பெறாமலிருந்தது வலதுசாரி ஊடகவெளி. கடந்த பத்து ஆண்டுகளில் உலகெங்கும் தீவிர வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வருவதில் இந்த ஊடகங்களின் பங்கு கணிசமாக இருப்பதை உணர முடிகிறது. எனவே, அவை சமீபத்தில் காலத்தின் கட்டாயமாக கவனத்தை பெற்றுள்ளன.
இத்தகைய ஆய்வு முயற்சிகளின் முடிவாக வெளியிடப்படும் வலதுசாரி ஊடகங்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் அவற்றின் இயங்கியலையும் இக்கட்டுரை அறிமுகம் செய்ய முற்படுகிறது.
தொடரும் வலதுசாரி கருத்தியலின் உள்வாங்கல்
வலதுசாரி கட்டுரையாளர் ஜெய்தீர்த் ராவ், ‘‘தி இந்தியன் கன்சர்வேட்டிவ்: இந்திய வலதுசாரி சிந்தனையின் வரலாறு’ என்ற தனது நூலில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவளித்ததை வைத்து ஜோதிபா பூலே வலதுசாரி சிந்தனையாளர் என முடிவு செய்கிறார். அவர் வலதுசாரி கருத்தாக்கங்களின் வீச்சை நீட்டியிருக்கும் அளவுகோலைக் கொண்டு பாபாசாஹேப் அம்பேத்காரையும், பெரியாரையும் கூட வலதுசாரி சிந்தனையாளர்கள் என்று எளிதில் முடிவு செய்து விடலாம்.
இத்தகைய தொடரும் உள்வாங்கல் சிக்கலுக்கு மத்தியில், வலதுசாரி கருத்தாக்கம் என்பவை எவை என்ற புரிதல் மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, ஊடகங்களின் சார்பு நிலைச் சாய்வினை உணர்ந்துகொள்வதற்கு இது அவசியமாக உள்ளது.
சில சமூக ஒழுங்குகளும் சமூக படிநிலைகளும் தவிர்க்க முடியாதவை, இயற்கையானவை, இயல்பானவை அல்லது விரும்பத்தக்கவை என்ற கருத்தில் நிலைத்திருப்பது வலதுசாரி அரசியல். பொதுவாக, சட்டம், பொருளாதாரம் அல்லது பண்பாட்டின் அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை அது ஆதரிக்கின்றது.
வலதுசாரி கருத்தாக்கத்தின் பொருள் வரலாற்று சகாப்தங்கள், சமூகங்கள், அரசியல் அமைப்புகள், நிலப்பரப்புகள் என ஒவ்வொரு தளத்திலும் வேறுபடுகின்றது.
பிரிட்டனில் பணியாற்றும் அரசியல் துறைப் பேராசிரியர்களான நோயல் ஓ சலிவன், ராஜர் ஈட்வெல் ஆகியோர் வலதுசாரி கருத்தாக்கங்களை பின்வரும் 5 வகைகளாக பிரிக்கிறார்கள்.
- கடந்த காலத்தை நோக்கிய பிரபுத்துவத்தையும், நிறுவனமாக்கப்பட்ட சமயத்தையும் சர்வாதிகாரப் போக்கினையும் ஆதரிக்கும் பிற்போக்குவாத (reactionary) வலதுசாரி கருத்தாக்கம்,
- சட்டத்தின் ஆட்சியையும் சமூக மாற்றங்களையும் ஓரளவு ஏற்றுக்கொண்டாலும், அறிஞர்களை வெறுத்து ஒதுக்கி, தேசியவாதத்தையும் முதலாளித்துவத்தையும் ஆதரிக்கும் மிதவாத வலதுசாரி கருத்தாக்கம்
- இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உருவாக்கங்களான மெக்கார்த்தியிசம், ஜான் பிர்ச் சொசைட்டி, தாட்சரிசம் போன்ற சித்தாந்தங்களையோ, தீவிர தேசியவாதத்தையோ ஆதரிக்கும் தீவிரவாத வலதுசாரி கருத்தாக்கம்
- ஜனநாயக விரோத, குடியேற்ற எதிர்ப்பு, தேசியவாத, இனவாத மற்றும் வலுவான அரசினை ஆதரிக்கும் அதிதீவிர வலதுசாரி கருத்தாக்கம்
- சிறிய அரசு, தடையற்ற சந்தை, கட்டற்ற பொருளாதாரம், தனிநபர் முயற்சியை ஊக்குவிக்கும் புதிய தாராளவாத வலதுசாரி கருத்தாக்கம்
இந்த “சிந்தனை பாணிகள்” ஒவ்வொன்றும் 1789 பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் எழுந்த தாராளமயம், சோசலிசம் உள்ளிட்ட “இடதுசாரி கோட்பாடுகளுக்கான எதிர்வினைகள்” என்று செய்தியாளர் சிப் பெர்லெட் குறிப்பிடுகிறார்.
இன்றைய சூழலில், வசதிக்காக மிதவாத வலதையும், புதிய வலதையும் மைய-வலது எனவும், மற்றவற்றை தீவிர-வலது எனவும் சுருக்கிக் கொள்ளலாம். நவ-பாசிசம், நவ-நாசிசம், மாற்று-வலதுசாரி, வலதுசாரி ஜனரஞ்சகம், வெள்ளை மேலாதிக்கம், வெள்ளை தேசியவாதம், வெள்ளை பிரிவினைவாதம், பேரினவாதம், சமூக விரோதம், யூத எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு, பெண்ணிய எதிர்ப்பு, பால்புதுமையினர் மீதான வெறுப்பு ஆகியனவும் தீவிர-வலதின் சிந்தனை அடுக்குகளில் தோன்றி நிலைத்திருப்பவையே.
வலதின் தூதுவர்கள் – சில வரலாற்றுக் குறிப்புகள்
தற்போதைய சூழலில் வலதுசாரி ஊடகங்களின் எல்லைகள் விரிவடைந்து நேரடி அரசியல் செயல்பாடுகள் புரிவதோடு மட்டுமன்றி, ஜனநாயக அரசுகளை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் நிர்வகிப்பதில் பங்காற்றுவது எனக் குறுகிய காலத்தில் பெரும் ஆதிக்கம் பெற்றுள்ளன. இந்த கருதுகோள் முற்றிலும் தோற்ற மாயை அல்ல.
இங்கிலாந்து அரசியல் ஊடகவியலாளர் எட்மண்ட் ஃபாசெட் தனது ‘கன்சர்வேடிசம்: பாரம்பரியத்திற்கான ஒரு போராட்டம்’ என்னும் நூலில் வலதுசாரி அரசியல் போக்கினை – நேரடி நவீனத்துவ எதிர்ப்பு (1830-1880), மாற்றம், தழுவலும் சமரசமும் (1890-1945), அரசியல் அதிகாரமும் அறிவுசார் மீட்டெடுப்பும் (1945-1980), தீவிர வலதுசாரியம் (1980 – இப்பொழுது வரை) என நான்கு காலகட்டங்களாகப் பிரித்து விவரிக்கின்றார்.
இக்கால வரைவில், சமகால வலதுசாரி ஊடகங்கள் இந்த சகாப்தங்களின் உருவாக்கத்திற்கு எத்தகையதொரு அடித்தளத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளன என்பதை ஆராய்ந்த சில அறிஞர்களின் ஆய்வுச்சுருக்கங்களை இந்தப் பகுதி தருகிறது. மேலும், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலகட்டத்தில் உலகின் சில பகுதிகளில் பரிச்சயமாக அறியப்பட்ட வலதுசாரி ஊடகங்கள் குறித்தும் ஊடகவியலாளர்கள் குறித்தும் அவர்களது உணரப்பட்ட போக்குகள் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பாகவும் இப்பகுதி உள்ளது.
1930-40 காலகட்டத்தில் கொடுங்கோன்மை தழைத்தோங்க உதவிய பாசிச-நாசிச வானொலிப் பரப்புரைகளின் தாக்கங்களும் ஜோசப் கோயபெல்ஸின் பிரச்சார அமைச்சகத்தின் செயல்பாடுகளும் என வரலாற்று காலவரிசைப்படி தொடராமல், இன்று வலதுசாரி ஜனரஞ்சகத்தில் சிக்கியுள்ள பகுதிகளில் இருந்து தொடங்கலாம்.
டிரம்ப் தேசம்
நிக்கோல் ஹெம்மர், விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மில்லர் அரங்க உதவிப் பேராசிரியர், தனது ‘வலதின் தூதுவர்கள்’ என்னும் நூலில் அமெரிக்க வலதுசாரி ஊடக வரலாற்றினை 1940-களில் இருந்து துவங்குகிறார். முதன்மை ஆதாரங்களை நேரடியாக ஆய்வு செய்த வகையில் இவரது புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
முதல் தலைமுறை – ஊடக செயற்பாட்டாளர்களின் காலம்
1940-80 வரையிலான முதல் தலைமுறைக் காலகட்டத்தினை ‘ஊடக செயற்பாட்டாளர்களின்’ காலமாக அவர் விவரிக்கின்றார். 1944 முதல் 1955 வரையிலான காலத்தில் துவங்கப்பட்ட ஹியூமன் ஈவென்ட்ஸ், நேஷனல் ரிவியூ ஆகிய அச்சு ஊடகங்களையும் மேனியன் ஃபாரம் என்ற வானொலி நிகழ்ச்சியினையும் அவர் பிரதானமாக குறிப்பிடுகின்றார்.
இந்த ஊடகங்களைக் கட்டமைத்த ஹென்றி ரெக்னெரி, வில்லியம் பக்லி, க்ளாரென்ஸ் மேனியன் ஆகியோர் 1950 வரை குடியரசுக் கட்சியில் தீவிரமாகச் செயலாற்றியவர்கள். பின்னர் அதிபர் ஐசன்ஹோவருடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டால் வெளியேறி ஊடக வெளியாட்கள் என்ற பின்னணியில் செயல்படலாயினர்.
அதிபர் ஐசன்ஹோவர், பெரும் பணக்காரர்களுக்கான வரிக்குறைப்பையும் சீரான வரவுசெலவு கணக்கையும் காட்டிலும், முன்னாள் அதிபர் ஃபிராங்க்ளின் ரூசெவெல்டின் புதிய ஒப்பந்தத் திட்ட நிரல்களிலும், சமூகப்பாதுகாப்பு திட்ட விரிவாக்கத்திலும் முனைப்பு காட்டிய மிதவாத வலதுசாரிப் போக்கு அவர்களுக்கு அசூயையைத் தந்தது.
மூன்றாவது கட்சியின் தேவைக்கான கோரிக்கை
1952-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு மாநாடு, அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களின் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றால் மோசடி செய்யப்பட்டது என அவர்கள் நம்பினர்.
ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் மாற்றாக மூன்றாவது கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை பிரச்சாரம் செய்தனர்.
சிகாகோ டிரிபியூனினை நிர்வகித்து வந்த மெக்கார்மிக் அதுவரை வெளிப்படையாகக் குடியரசுக் கட்சி சார்புநிலையில் இருந்த தனது ஊடக நிலைப்பாட்டினை சுயேச்சையானதாக மாற்றிக் கொண்டார். அமெரிக்க கட்சி என்று ஒரு கட்சியையும் தோற்றுவிக்க ஆவலாக இருந்தார். ஆனால் எவ்வித கட்சிக் கட்டுமானமும் ஒரு போதும் உருவாகவில்லை.
வியூக மாற்றம்
1956-ம் ஆண்டு நடைபெறவிருந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் அவர்கள் தங்களது வியூகத்தினை மாற்றிக்கொண்டனர். மாற்றுக் கட்சி முக்கியமல்ல, தீவிர வலதுசாரி சிந்தனையுள்ள ஒருவரின் (அதிபர் தேர்தலுக்கான) நியமனம் மட்டுமே முக்கியம் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்தனர்.
அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இருந்து (வரலாற்றுரீதியாக, பருத்தி பண்ணைகளிலும் கரும்பு பண்ணைகளிலும், வேலை செய்ய உழைப்பாளர்கள் வேண்டும் என்பதற்காக, ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பின மக்களை அடிமை வணிகம் செய்வதை ஆதரித்துக் கிளர்ந்தெழுந்த வெள்ளையின முதலாளிகள் நிறைந்திருந்த பகுதி) அத்தகைய சிந்தனையுடன் போட்டியிட்ட ஆண்ட்ரு-வெர்டெல் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
ஆலைத் தொழிலாளர்கள் வருமான வரியினால் தாங்கள் படும் துயர்களைக் கூறி வருந்துவது போன்று நாடகப்படுத்தப்பட்ட ஆவணப்படமொன்றையும் (‘It’s Here—Forced Work Without Pay’) வெளியிட்டனர். இக்கூட்டணி, நாடு முழுவதிலிருந்தும் மொத்தமாக ஒரு லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றது, மேலும் அவை அனைத்துமே தெற்கு மாநிலங்களிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் அவர்கள் பெற்ற படிப்பினைகள் ஏராளம்.
நீடித்த முயற்சி எய்திய வெற்றி: வலதுசாரி அணிதிரட்டல்
தெற்கிலிருந்து மற்றுமொரு வேட்பாளரை நியமனம் வெல்ல வைக்க இயலாது என்ற புரிதலில் இருந்தவர்களுக்கு அரிசோனா மாநில மேலவை உறுப்பினர் பேரி கோல்டுவாட்டர் மிகச்சரியான வேட்பாளராகத் தெரிந்தார், தோற்றத்திலும், இயல்பிலும். 1959-ல் இரண்டாவது முறையாக மாநிலத் தேர்தலில் வென்றபோதே தேசிய அரங்கில் மிகவும் பரிச்சயமான முகமாகவும், குடியரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வேகமாகக் முன்னேறியவராகவும் இருந்ததை அவரது கூடுதல் பலமாக வலதுசாரி பத்திரிகையாளர் குழு கருதியது.
பொதுவுடைமை சித்தாந்த எதிர்ப்பைக்காட்டிலும் தொழிற்சங்கங்களை எதிர்ப்பதில் அவர் காட்டிய முனைப்பில் மனதை பறிகொடுத்தனர்.
மூன்றாவது முறையாக பேரி, மேனியனின் வானொலி நிகழ்ச்சியில் 1959-ல் பங்கேற்றபொழுது மேனியனும் அவரை முழுமையாக நம்பத்தொடங்கினார்.
மேனியன் பேரியின் உரைகளை வடிக்கும் பிரென்ட் பொஸேலைக் கொண்டு ‘ஒரு வலதுசாரியின் மனசாட்சி’ என்ற நூலை எழுத வைத்து வெளியிட்டார். விக்டர் பதிப்பகத்தின் மூலமாக அச்சிட்டு, தானே அதன் விற்பனை, வினியோகத்திலும் ஈடுபட்டார். நன்கொடை தர விரும்பியோரை புத்தகங்களை வாங்கச் செய்து தெருமுனைகளில் எல்லாம் இலவசமாக வழங்கச் செய்தார்.
விற்பனை அதிகரித்து உண்மையிலேயே அதிகம் விற்றுத்தீர்த்த புத்தகமாயிற்று. ஆறே மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் விற்றுத்தீர்த்தன. வலதுசாரி ஊடகங்கள் மட்டுமல்லாது குடியரசுக் கட்சி சார்பு ஊடகங்களும் பேரியை விதந்தோதின. பேரியின் செல்வாக்கு கூடியது. வலதுசாரிகளின் ஆதர்சமாகவும் நம்பிக்கைக் கீற்றாகவும் அவர் விளங்கினார்.
ஆனால், 1960-ம் ஆண்டின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் நியமனத்தில் ரிச்சர்ட் நிக்சன் தடைக்கால விருப்பமாகையால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்று பேரி ஒதுங்கிவிட்டார்.
1964-ம் ஆண்டில் முழுநேர அரசியல்வாதிகளாக பரிணமிக்க நினைத்த வலதுசாரி ஊடகவியலாளர்கள், எதிர்பார்த்தது போலவே பேரிக்கு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமனம் கிடைத்தது. இருப்பினும், தேர்தலில் 38.5% சதவிகித மொத்த வாக்குகளையும், மொத்தம் 52 பிரதிநிதிகளையும் மட்டுமே பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லிண்டன் ஜான்சனிடம் அவர் படுதோல்வி அடைந்தார்.
வலதுசாரி ஊடகவியலாளர்கள் தங்கள் ஆதரவாளர்கள் மீது செலுத்த முடிந்த ஆதிக்கம் மையநீரோட்ட ஊடகவியலாளர்களின் கேள்விகளைச் சந்திப்பதிலும், அவ்வூடகங்களின் விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் இயலாமை 1964-ம் ஆண்டிற்குப் பிந்தைய காலகட்டங்களில் அவர்களின் செயல்பாடுகளுக்கான நிதி திரட்டுவதற்கு பெரிதும் தடையாக இருந்தது.
அக்காலகட்டத்தின் புதிய தொழில்நுட்பமான வானொலியை மிக திறமையாகவும் புத்தாக்கத்துடனும் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் பிரச்சாரத்தின் மீது மாபெரும் தாக்கத்தினை விளைவிக்க முடிந்த க்ளாரென்ஸ் மேனியனை வலதுசாரி ஊடகங்களின் முன்னத்தி ஏர் என நிக்கோல் குறிப்பிடுகிறார்.
பேரிக்காக மேனியன் மட்டுமே 100 வானொலி அரங்குகளுக்கும் மேல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். எழுதியவர் பெயரும், பதிப்பாளர் பெயரும் அறிமுகமானதாக இருக்க, நினைவிலிருக்க வாய்ப்பில்லாத மூன்று புத்தகங்களை குறுகிய காலத்தில் பெருவாரியான மக்களக்குச் சென்றடையச் செய்து, பேரியின் உருவத்தைக் கட்டமைத்து, வேட்பாளர் நியமனம் வரை இட்டுச் சென்றது ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்றளவும் மலைப்பான ஒரு விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
(தொடரும்)
(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.