Aran Sei

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததன் பிறகான அதன் வரலாற்றை எமர்ஜென்சிக்கு முன், எமர்ஜென்சிக்குப் பின் எனப் பிரிக்கலாம். எமர்ஜென்சிக்கு முன்னும், எமர்ஜென்சியின் போதும் திமுகவுக்கு இருந்த போர்க்குணம் அதன் பிறகு படிப்படியாகக் குறைந்தது. இந்திய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரும் எமர்ஜென்சியின்போது, இந்திரா காந்தியின் பக்கம் நின்று, மக்கள் விரோதமாக நடந்துகொண்டதும் வரலாறு. எமர்ஜென்சியின் போது தீப்பொறி பறக்க ‘முரசொலி’ நாளிதழில் கட்டுரை தீட்டிய கலைஞர் கருணாநிதியின் பேனா, எமர்ஜென்சிக்குப் பின் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக!’ என்று எதிர் நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் அரசியலை அணுக வேண்டியிருக்கிறது.

ஒரே குழுவினர் என்ற போதும், சார்பட்டா பரம்பரைக்குள் நிலவும் முரண்பாடுகளின் அடிப்படையில் சாதி வேரூன்றியிருக்கிறது. சாதியப் படிநிலையில் தணிகா – ராமன் ஆகியோருக்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டிருக்கிறது; அவர்களுக்கு அடுத்த இடத்தில் ரங்கன் வாத்தியார் – வெற்றிச்செல்வன் ஆகியோருக்கும், அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படும் இடம் கபிலனுக்கும் அளிக்கிறது சாதிய சமூகம்.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

தணிகாவின் இறந்துபோன அண்ணன் முனுசாமி, கபிலனின் அப்பாவை அடியாளாக்க முயன்றதையும், கபிலனின் அப்பா அதற்கு வளைந்துகொடுக்காமல் சென்னையை ஆளும் ரவுடியாக மாறி, முனுசாமியின் சூழ்ச்சியால் வெட்டிக் கொல்லப்பட்டதையும் ஒரு இடத்தில் சொல்கிறார் டேடி கெவின். கபிலனின் அப்பாவை விரட்டும் அதே வன்மம், கபிலனையும் விரட்டுகிறது. ரங்கன் வாத்தியாரிடம் திட்டு வாங்கக் கூட முடியாத முனுசாமி ராமனால் கபிலனிடம் தோல்வியடைவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கதையின் வழியாக ஒரே குழுக்குள் இருக்கும் சாதிய வேறுபாடுகள் பேசப்பட்டிருக்கின்றன.

இணையத்தில் திமுக உடன்பிறப்புகளால் ‘சார்பட்டா’ பரவலாக வரவேற்கப்பட்டாலும், அது திமுக மீதான விமர்சனத்தை மிக நுட்பமாக முன்வைக்கிறது. ரங்கன் திமுகவின் உண்மையான தொண்டன். குத்துச் சண்டையும், கட்சியுமே அவரது வாழ்க்கை. அப்படியிருந்தும் மிசா வழக்கு முடிந்து சிறையில் இருந்து வெளிவரும் ரங்கன் வாத்தியாரைத் திமுகவினரே வரவேற்க மாட்டார்கள். வேலூர் முதலியாருக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

ரங்கன் தன் மீதான புறக்கணிப்பை ஒருபக்கம் அனுபவித்துக் கொண்டே, மறுபக்கம் அவர் இல்லாத நேரத்தில் அதிமுகவின் அடியாளாக மாற்றப்பட்ட தனது சிஷ்யன் கபிலனையும் கைவிட்டு விடுவார். கபிலன் மீதான அவரது நம்பிக்கை தகர்ந்துபோகும் நேரத்திலும், கபிலனின் ஊரும் மக்களும் அவனைக் கைவிட மாட்டார்கள். கபிலனின் தொடக்க கால ஆசானாக ரங்கன் இருந்த போதும், கபிலனை மீண்டும் பாக்சிங் ரிங்கிற்குள் அனுப்பத் தயார் செய்வது பீடி தாத்தா. கபிலனின் பக்கம் எப்போதும் நிற்பது கிறித்துவரான டேடி கெவின்; கபிலனுக்கும், ரங்கனுக்கும் இடையில் இருந்து, இருவரின் நியாயங்களையும் புரிந்துகொண்டு உதவுவது முஸ்லிமான மீரான்.

’காலா’ படத்தில் நிறங்களின் வழியாக அரசியல் பேசிய பா.ரஞ்சித் இதில் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். ரங்கனின் மாணவர்கள் உதயசூரியன் பொறித்த மேலாடையை ரிங்கிற்கு அணிந்து வருவர். இறுதிக்காட்சியில் கபிலன் நீல வண்ண மேலாடையை அணிந்து வருவார். 1957ல் டாக்டர் அம்பேத்கர் மறைவுக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்தியக் குடியரசுக் கட்சி கபிலனுக்கு ஆதரவாக நிற்கும். ரங்கனின் ஆதரவு கபிலனுக்கு இருந்தாலும், அந்தப் போட்டி கபிலனின் தனித்துவத்திற்கானதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த வெற்றியை ரங்கனோ, சார்பட்டா பரம்பரையோ சொந்தம் கொண்டாட முடியாது. அது கபிலனுக்கான வெற்றி.

வாழ்க மக்கள் தலைவன் சுலைமான் அலி அகமது!’ – ‘மாலிக்’ பேசும் அரசியல் என்ன?

எமர்ஜென்சி காலத்தில் போர்க்குணம் மிக்க திமுக தொண்டர்களைத் திரையில் காட்டியிருக்கும் பா.ரஞ்சித், அதே வேளையில் ஒன்றிய அரசுக்கும், இந்திரா காந்திக்கும் விசுவாசமாக இருந்து அதிமுகவையும், மக்களிடையே கள்ளச்சாராயத்தையும், ரவுடித்தனத்தையும் பெருக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனது ஒவ்வொரு திரைப்படத்தையும் சமூகத்துடன் மேற்கொள்ள வேண்டிய உரையாடலின் தொடக்கப்புள்ளியாகக் கருதும் பா.ரஞ்சித் இந்தப் படத்தில் திமுகவும், அதிமுகவும் வெவ்வேறானது என்பதை முன்வைத்திருப்பதோடு, அதிமுகவுடன் அப்படியான உரையாடல் சாத்தியமில்லை என்பதைப் பதிவுசெய்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ திரைப்படமும் எம்.ஜி.ஆர் பிம்பத்தை வைத்து, வடசென்னை மக்கள் வன்முறையின் பக்கம் தள்ளப்படுவது குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் முரணில் உருவான திராவிட இயக்கமும், அதன் நீட்சியாக உருவான திமுக என்ற தேர்தல் கட்சியும் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானித்து வருகின்றன. பா.ரஞ்சித் உள்ளிட்டோர் திராவிடக் கட்சிகளில் தலித்துகளுக்கான இடம் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உருவான தலித் – தலித் அல்லாதார் அரசியல் திமுகவில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திமுகவின் ரங்கன் வாத்தியார் தன்னுடன் தோழமையாக இருந்தாலும், தனக்கான வெற்றியைத் தேடும் கபிலனை இந்த அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

’அட்டகத்தி’ நீங்கலாக, தன்னுடைய மற்ற நான்கு படங்களிலும், ரஞ்சித்தின் முன்னணி நாயகர்கள் சமூகத்தின் சாதிய ஒழுங்கு நிலையை ஏதேனும் ஒரு வழியில் அசைக்கிறார்கள்; அதற்காகக் கடுமையான சாதிய வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். ‘மெட்ராஸ்’ படத்தில் நீதிமன்றத்தில் காளியின் கண்ணெதிரில் அன்பு கொல்லப்படுவது, ‘கபாலி’ படத்தில் கபாலியும், கர்ப்பிணி குமுதவள்ளியும் கடுமையாகத் தாக்கப்பட்டு, கபாலி கைது செய்யப்படுவது, ‘காலா’ படத்தில் காலாவின் மனைவி செல்வியும், மகன் செல்வமும் கொல்லப்படுவது ஆகிய காட்சிகளுக்கு இணையான காட்சியாக இதில் கபிலனுக்கும் வேம்புலிக்கும் இடையிலான போட்டியும், அதன் பிறகு நிகழ்த்தப்படும் வன்முறையும் இருக்கிறது.

கபிலனும் ரங்கன் வாத்தியாரும் பிரியும் தருணமாக அது மாறுவதோடு, எமர்ஜென்சி காலத்து மிசா கைதுகளையும் அந்த ஒற்றைக் காட்சி ஒரே புள்ளியில் இணைக்கிறது. சாதிய வன்மத்தால் அவமானப்படுத்தப்பட்ட அதே ரிங்கில், கபிலன் மீண்டெழுந்து திருப்பியடிக்கும் இறுதிக் காட்சி தலைமுறைகளின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. மற்ற படங்களிலும், முன்னணி கதாபாத்திரங்கள் மீண்டெழுந்து, திருப்பி அடிப்பதும், வெற்றி பெறுவதும் நிகழ்கிறது.

வடிவேலுவுக்கு தமிழ் சினிமா செய்த துரோகம் – கி.ச.திலீபன்

ஆண்களின் விளையாட்டான குத்துச்சண்டை குறித்து, வீரர்களின் வீட்டுப் பெண்களுக்கு கோபம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. போட்டிக்குப் போகும் ஆண்கள், அதனைச் சண்டையாக மாற்றிக் கொள்வதும், அந்தந்த வீட்டுப் பெண்கள் அதுகுறித்து கோபமும், கவலையும் கொள்வதும் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியடைந்து, உடல் வலிமை இழந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர்களை இதற்கு முன் ராபர்ட் டி நீரோ நடித்த ’ரேஜிங் புல்’. சல்மான் கான் நடித்த கமர்ஷியல் திரைப்படமான ‘சுல்தான்’ முதலானவற்றில் பார்த்திருக்கிறோம். அந்தச் சாயலை இதிலும் பார்க்க முடிந்தது. ஹீரோயிசத்தை முன்வைக்கின்ற போதும், கதையோட்டத்தில் பல்வேறு கதாபாத்திரங்களும், மையக் கருத்தாகப் பேசப்படும் சமூக அரசியலும் அதனைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.

’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம், ஐந்தாம் ரவுண்டிலும் நாக் அவுட் செய்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். மேலோட்டமாகத் திமுக ஆதரவுப் படம் போல இருந்தாலும், நுட்பமாக விமர்சனத்தை முன்வைத்து, நேர்த்தியான நடிகர்களையும், தொழில்நுட்பக் குழுவினரையும் பணியாற்றச் செய்திருக்கிறார். நிச்சயம் இந்தியாவில் வெளிவந்த மிக முக்கியமான அரசியல், ஸ்போர்ட்ஸ் ட்ராமா பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ இடம்பெறும்.

ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்