Aran Sei

‘துக்ளக் தர்பார்’ – பொதுப் புத்தியில் இருந்து எழும் அரசியல் அறியாமை!

`துக்ளக் தர்பார்’ அரசியல் படம் போல தோற்றம் கொண்டிருந்தாலும், அது அரசியல்வாதிகளைப் பற்றிய படம். `அரசியல் ஒரு சாக்கடை’, திராவிட அரசியல்வாதிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று பார்ப்பன ஊடகங்கள் 1967 முதல் உருவாக்கிய பொதுப் புத்தியின் அடிப்படையில் ஒரு காலத்தில் ஜோக்குகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது அவை திரைப்படங்களாக வெளிவருகின்றன. `அமைதிப்படை’ இப்படியான படம் என்ற போதும், அதன் இயக்குநர் மணிவண்ணன் தனது படத்தைத் தாண்டி, பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாடுகளைக் காட்டமாகப் பதிவுசெய்து வந்தவர். திராவிட இயக்கத்திற்கும் தனக்குமான உறவை விலக்கிக் கொள்ளாமல், திராவிடக் கட்சிகளில் அரசியல்வாதிகளைப் பற்றிய படமாக வந்தது ‘அமைதிப்படை’.

`துக்ளக் தர்பார்’ பார்க்கும்போது, நிச்சயம் `அமைதிப்படை’ நினைவுக்கு வரும். அதனைச் சரிசெய்ய இறுதிக் காட்சியில், `அமைதிப்படை’ நாகராஜ சோழன் தமிழக முதல்வராக இருப்பதாகக் காட்டுகிறார்கள். `துக்ளக் தர்பார்’ கட்சியின் தொண்டனுக்கும், தலைவனுக்கும் இடையிலான பதவிக்கான சண்டையைப் பற்றிய படமாக வந்திருக்கிறது. விஜய் சேதுபதி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அப்பகுதியின் மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் நல்ல பெயர் வாங்குவது, கட்சிக்குள் தனக்குப் போட்டியாக இருப்பவர்களை ஓரம் கட்டுவது எனப் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்கிறார்.

அமைதிப் படை

திராவிட அரசியலால் தமிழ்நாடு பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் வளர்ந்திருக்கிறது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை. எனினும், தேர்தல் கட்சிகளில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களிடம் புகழ்ந்து பேசாதீர்கள் எனப் பலமுறை எச்சரித்தும், எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஸ்டாலினையும், அவரது மகன் உதயநிதியையும் புகழ்ந்து பேசுவதன் பின்னணியில் இருந்து `துக்ளக் தர்பார்’ முன்வைக்கும் அரசியலை அணுக முடியும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறைசெல்வதற்கு முன்பு சசிகலாவால் முதல்வர் என அறிவிக்கப்பட்டபோது, நாற்காலிகளுக்கு அடியில் ஊர்ந்துகொண்டிருந்தார் பழனிசாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுவது தொடங்கி, காரின் டயரில் விழுவது, ஹெலிகாப்டரைக் கும்பிடுவது என அதிமுகவினர் அடிக்காத கூத்தே இல்லை. இந்தப் பின்னணியைக் கேலிசெய்து, `என்.ஜி.கே’, ‘எல்.கே.ஜி’ முதலான படங்களின் வரிசையில் வெளிவந்திருக்கிறது `துக்ளக் தர்பார்’.

தமிழ்நாட்டு அரசியலின் யதார்த்த நிலையாக இது இருப்பினும், இந்தப் படங்கள் இதனைக் கேலிசெய்வதன் மூலம் சரியான அரசியல் இதுதான் என்று புதிய பாடங்களை எடுக்கத் தொடங்குகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த `மண்டேலா’ திரைப்படம், வாக்காளர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றும் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பேசியிருந்தார்கள். வாக்காளர்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், தேர்தல் மூலம் சமூகத்தில் சீர்திருத்தம் நிகழும் என்று `மண்டேலா’ உருவாகியிருந்தது. `துக்ளக் தர்பார்’ அரசியல்வாதிகள் மனம் திருந்தினால் சமூகம் சீர்பெறும் என்ற கருத்தை முன்வைக்கிறது.

மண்டேலா

`துக்ளக் தர்பார்’ படத்தைப் பொருத்தவரை, கார்ப்பரேட்களுடன் இணைந்து மக்களை வஞ்சிக்கும் அரசியல்வாதிகள் அனைவருக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கிறானாம். அவனை வெளியில் கொண்டுவர இந்த அரசியல்வாதிகளின் பின்னந்தலையில் அடிக்க வேண்டும் என்ற ரீதியில் அபத்தமான கருத்தைப் பேசியிருக்கிறது இந்தப் படம். அரசியல்வாதிகள் மீதான வன்முறையைத் தூண்டுகிறது என்று இன்னும் இதன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கே, படக்குழுவினர் நன்றி கூற வேண்டும்.

இந்தப் படத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது, கவுன்சிலரால் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று மீண்டும் மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்து கல்லா கட்ட முயற்சி செய்திருப்பதாகும். கார்ப்பரேட் பிரதிநிதியாக வரும் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அறிவில்லை என்று போகிற போக்கில் ஒரு வசனம் வருகிறது. சென்னையின் முக்கியமான இடத்தில், அவ்வளவு மக்கள் வாழும் பகுதியை இடித்து, அந்த இடத்தில் வேறொரு கட்டிடம் வரப் போவதாகக் கதையில் சொல்லப்படுகிறது. அது வெறும் இரு தனி நபர்களின் திட்டமாக சுருக்கப்படுகிறது. ஆளும் வர்க்கம் என்பது பல்வேறு உறுப்புகளைக் கொண்டிருப்பது என்றோ, அது தன் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் என்பதையோ மறுத்து, தனிநபர்களின் பிரச்னையாக சுருக்கி, விளையாட்டு காட்டுகிறது `துக்ளக் தர்பார்’.

இறந்த முன்னாள் முதல்வர் ஒருவரின் பங்களாவுக்குள் நுழைந்து, கோப்புகளையும், அவர் பயன்படுத்திய பொருள்களையும் கொள்ளையடித்து, காவலாளியைக் கொன்று சென்றவர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்யும் அளவுக்கு வேறொரு லீகில் பயணித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டு அரசியல். இந்தப் படத்தில் 50 கோடி ரூபாய் காணவில்லை என்று தேடிக் கொண்டு, கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலன் என்பதை அரசியல்வாதிகள் முன்னிறுத்துவதில்லை என்று சொல்லிக் கொண்டே, மக்கள் நலனை திரைக்கதைக்கான ஊறுகாயாகத் தொட்டுக் கொண்டிருக்கிறது `துக்ளக் தர்பார்’.

விஜய் சேதுபதி தமிழக சட்டமன்றம் குறித்து நேர்மறையான கருத்துகளைச் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் நடித்த `லாபம்’ படம் பொதுவுடைமை குறித்தும், கார்ப்பரேட் குறித்தும் வெளிவந்திருக்கும் இரண்டாவது நாளில் இப்படியொரு அரசியல் கோமாளித்தனத்தைப் பேசும் அவரது படம் வெளிவந்திருக்கிறது. அறிமுக இயக்குநர்கள் அரசியல் குறித்த பரந்துபட்ட அறிவு ஏதும் இல்லாமல் பொதுப் புத்தியில் இருந்து திரைக்கதை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் அறிவியல் அடிப்படையிலும் எந்த லாஜிக்கும் இல்லாத படமாக இருக்கிறது `துக்ளக் தர்பார்’.

விஜய் சேதுபதி மேடைகளிலும், நேர்காணல்களிலும் தான் பேசும் அரசியலைத் தனது படங்களிலும் பேசினால் மக்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால், படத்திலும் அவர் பேசக் கூடாது; படம் பேச வேண்டும். இது எப்படி என்பதைத் தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் யாராவது சொல்லித் தர வேண்டும்.

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்