Aran Sei

சூரரைப் போற்று : படத்தில் நேர்மை இல்லை – ராஜ சங்கீதன் விமர்சனம்

Sorry folks!

‘சூரரைப் போற்று’ இஸ் நத்திங் பட் எ ஒரு நவதாராளமய சினிமா. அப்துல் கலாம், டெண்டுல்கர், தோனி வரிசையில் நெடுமாறன் ராஜாங்கம்!

இந்தியாவின் மிக ரகசியமான இடத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு சாதி இல்லை. வர்க்கம் இல்லை. ஆனால் ஒருவர் ஏர் டிபன்ஸ் வரை சென்று பார்த்துவிட முடிகிற வேலையைச் சட்டெனத் தூக்கி எறிந்து, விமான நிறுவன முதலாளி ஆகிவிட முடிகிறது.

உடுப்பி ஹோட்டல் வருகிறது; எம்எஸ் சுப்புலட்சுமி படம் வருகிறது; விவேகானந்தர் படம் வருகிறது; ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் ஓர் அம்மாள் உதவ வருகிறார்; அப்துல் கலாமும் வருகிறார்.

சூர்யா நிறைய காட்சிகளில் கறுப்புச் சட்டை போட்டு வருகிறார். விமான நிலையம், விமான முதலாளி அலுவலகம், மத்திய அரசு அலுவலகம் எனப் பல இடங்களுக்குச் சென்று சவுண்டு விடுகிறார். சண்டை போடுகிறார். பிறகு மீண்டும் அதிசய கிராமத்துக்குப் பத்திரமாக வந்து விடுகிறார். திருக்குறள் பேசுகிறார்; சாதி மறுப்பு பேசுகிறார்.

ஊரிலிருந்து ஒருவன் விமானம் விடப் போகிறானென்றதும் ஊர் மக்கள் அனைவரும் சாதி, செனத்தி என எதையும் கேட்காமல் தண்டட்டி முதற்கொண்டு நிலம் வரை அடமானம் வைத்து ‘செக்’குகளை (!!!₹&#) அவனுக்கு மொய் செய்து உதவுகிறார்கள். ஆதிக்க சாதி போலும்.

நாயகி நன்றாக இருக்கிறார். கிராமத்து தமிழ் என என்னவோ பேசுகிறார். ஆய்த எழுத்து மீரா ஜாஸ்மினை தெளிவாகப் பிரதியெடுக்க இயக்குநர் இன்னுமே கூட அவருக்கு உதவியிருக்கலாம். (நாயகி கதாபாத்திரம் ஃபெமினிச பாத்திரமாமே.. அய்யோ.. அம்மா!)

படத்தில் என்னைக் கவர்ந்த விஷயம் ஒன்றுதான். அரசியலை முன்னிறுத்த விரும்புகிற நடிகருக்கும் மேட்டுக்குடித்தனத்தை மறைக்க முடியாத உயர்சாதி இயக்குநருக்கும் சரியான அரசியல் கொண்ட கம்யூனிச வசனகர்த்தாவுக்கும் இடையே நடக்கும் திரைக்கதைதான் அது. படத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

நம் கனவுகள் எல்லாவற்றையும் சிறகுகளாகப் பொருத்தி ஓர் அனிதாவை மருத்துவம் படிக்க அனுப்பினால் அந்தப் பிஞ்சைக் கொன்று திருப்பி அனுப்பி வைக்கும் பார்ப்பனப்பனியா மேலாதிக்க தேசத்தில், ஒரு தனி நபர் நினைத்தது போல் வெற்றி அடைய முடியுமென அரசியல் பொருளாதாரக் காரணம் எதையும் பேசாமல் காட்டும்போது எத்தனை பொய்யான நம்பிக்கைகளை அது உருவாக்கும்?

ஓர் உயர்சாதி விமான முதலாளியை ஓர் உயர்சாதி ஆல் இந்தியா ரேடியோ பெண்ணின் உதவியோடு வென்று இறுதியில் ஒரு கிராமத்தானை ஓர் உயர்சாதி பெண்ணுடன் சமமாக உட்கார வைத்து, அவனை சமமாகப் பாவிக்கவும் வைத்து விடுகிறார் நெடுமாறன்.

Aviator ஆங்கிலப் படத்தில் வரும் முதலாளிகளுக்கிடையேயான சண்டை இப்படத்தைக் காட்டிலும் நேர்மையாக இருக்கும்.

ராஜ சங்கீதன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்