Aran Sei

ஓடிடியில் ‘யாருக்கும் அஞ்சேல்’ ? – இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி

Credit: DSR Medias

நடிகை பிந்து மாதவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்க்ததில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சேரன் இயக்கிய ’பொக்கிஷம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் பிந்து மாதவி. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். ’புரியாத புதிர்’ மற்றும் ’இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளராக கவின் ராஜ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக தியாகராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் பேசினோம்.

படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?

ஊட்டியில் முப்பது நாட்கள் ஒரே ஷெட்யூலில் ஷூட் முடித்தோம். குழுவினர் எல்லாருமே மிகவும் ஒத்துழைப்பு கொடுத்ததால் எட்டு டிகிரி குளிர், மழை எதுவுமே சிக்கலாக தோன்றவில்லை.

உங்களுடைய ’புரியாத புதிர்’, ’இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படங்களின் நீட்சி இந்த திரைப்படத்தில் இருக்குமா?

என்னுடைய முந்தைய படங்களுக்கும் “யாருக்கும் அஞ்சேல்” திரைப்படத்துக்கும் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. என் ஒவ்வொரு படமுமே கதைக்களம், கதை சொல்லும் விதம், கதையின் பின்னணி, கதாபாத்திர வடிவமைப்பு என அத்தனை வகையிலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுதான் இருக்கும்.

படத்துக்கான முன்னனி கதாப்பாத்திரங்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

தமிழ் சூழலுக்கும் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள கலாச்சாரத்திற்கும் சம்மந்தம் இல்லாத இரண்டு என்.ஆர்.ஐ முகங்கள் தேவைப்பட்டன. எப்படி ஃப்ரேம் வைத்தாலும் பிந்து மாதவி இந்த மண்ணுக்கு தொடர்பில்லாத வெளிநாட்டினர் போலவே தெரிவார். அதனால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருந்தார்.
மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷனா பானி நடித்திருக்கிறார். அவர் பெங்காலைச் சேர்ந்தவர் என்பதால் அவரும் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்.

லாக்டவுனால் படத்தின் வேலை பாதித்ததா?

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகே லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட எந்த போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளையும் தொடங்க முடியாமல் இருந்தது. லாக்டவுன் தளர்த்தப்பட்ட பிறகு அந்த வேலைகளை ஆரம்பித்தோம். இன்னும் சில இறுதிகட்ட பணிகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன.

படம் வெளியிடும் தேதி குறித்து எதுவும் திட்டமிட்டுள்ளீர்களா?

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை எப்படி வெளியிடுவது, ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதா என்பது குறித்து தயாரிப்பாளர்களோடு ஆலோசித்து வருகிறேன். இன்னும் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்ட உடனே டீசர், ட்ரெய்லர் வெளியிடப்படும்.

பெண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி படம் எடுப்பதில் இருந்த சவால்கள் குறித்து?

சமீப காலங்களில் பெண்களை மையப்படுத்தி நிறைய தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. ஹீரோ, ஹீரோயின் என்ற எந்த பாலின பாகுபாடும் இல்லை. வணிக ரீதியில் படம் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளருக்கு நம்பிக்கை அளிக்கும்படி இருந்தால் போதுமானது. இந்தப் படத்துக்கு தயாரிப்பாளரின் முழு ஆதரவும் இருந்ததால் எனக்கு அது போன்ற சிக்கல் எதுவும் இருக்கவில்லை.

படம் என்ன ஜானர்?

இது வெறும் க்ரைம் த்ரில்லர் மட்டும் இல்லை. இதிலும் ஒரு ட்ராமா இருக்கும். இந்தக் கதையும் சமூகம் சார்ந்துதான் இருக்கும். எந்தப் படத்தையும் குறிப்பிட்ட ஒரு ஜானருக்குள் அடக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

உங்கள் அடுத்த திரைப்படம்?

இன்னும் ஒரு மாதத்திற்குள் என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்