Aran Sei

காட்டுயிர் புகைப்படக்கலை ஓர் உயிரியல் ஆவணம் – ராதிகா ராமசாமி

காட்டுயிர் புகைப்படத்துறையில் இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்கலைஞர் என்கிற பெருமைக்குரியவர் ராதிகா ராமசாமி. பெண்களின் பங்களிப்பு இத்துறையில் பெருகி வரும் தற்கால சூழலில், இவர் ஓர் முன்னோடியாகத் திகழ்கிறார்.

காட்டுயிர் புகைப்படக்கலையின் ஒரு பகுதியான பறவைகள் புகைப்படக்கலையில் 17 ஆண்டுகளாகத் தீவிர முனைப்புடன் இயங்கி வருகிறார். மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், இமயமலைத் தொடர்களிலும், கென்யா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகளிலும் பறவைகளைத் தேடிய இவரது பயணம் நீண்டது. பறவைகள் புகைப்படக் கலையை அடிப்படையாக வைத்து the best of wildlife moments மற்றும் bird photography என இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார். அரண்செய்க்காக அவரிடம் மேற்கொண்ட நேர்காணல்…

பெண்களின் பங்களிப்பே இல்லாத துறைக்குள் நீங்கள் வருவதற்கு உந்துசக்தியாய் இருந்தது எது?

என் குடும்பச் சூழல் அதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துச்சுன்னுதான் சொல்லணும். நான் பிறந்தது தேனி மாவட்டம். பள்ளிக்காலங்களில் மூணாறு, கொடைக்கானல்னு சுற்றுலா போனப்போ காடுகள் மேலான ஈடுபாடு உண்டாச்சு.

அப்பா ராணுவத்துல இருந்தார். அம்மா அரசுப் பள்ளி ஆசிரியர். படிப்பைத் தாண்டியும் நான் நிறைய செயல்பாடுகளில் ஈடுபடணும்னு அப்பா விரும்பினார். அப்படித்தான் எனக்கு கேமரா வாங்கிக் கொடுத்தாங்க.

குடும்பத்தோட சுற்றுலா போகும்போதும், வீட்டு நிகழ்ச்சிகளிலும் புகைப்படங்கள் எடுத்துக்கிட்டிருந்தேன். பயணங்கள் மற்றும் காடுகள் மேல இயல்பாவே இருந்த ஆர்வம் என்னை இந்தத் துறைக்கு கூட்டி வந்தது.

2003-ம் ஆண்டிலிருந்து காட்டுயிர்களை புகைப்படம் எடுத்துக்கிட்டிருக்கேன். 2008-ம் ஆண்டு தூர்தர்சன் தொலைக்காட்சியில் என்னோட பேட்டி ஒளிபரப்பட்டுச்சு. இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் புகைப்படக்கலைஞர்னு அந்தப் பேட்டியில் என்னை அறிமுகப்படுத்தினாங்க. அதுக்குப் பிறகுதான் எனக்கே அந்த உண்மை தெரிஞ்சுது.

காட்டுயிர் புகைப்படத்துறையில் குறிப்பாக பறவைகளைப் புகைப்படம் எடுப்பதில் அதிக ஈடுபாடு ஏற்பட்டதற்கு பின் ஏதேனும் காரணம் உள்ளதா?

நான் உயிரியல் படிச்சதால தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மேல் இயல்பாவே ஆர்வம் இருந்தது. பொதுவா காட்டுயிர் புகைப்படக் கலைன்னாலே யானை, சிங்கம், புலி, சிறுத்தைன்னு பெரிய விலங்குகளை எடுக்கிறதுதான்னு நினைப்பாங்க. இந்தத் துறையைப் பொறுத்த வரைக்கும் பறவைகள் மற்றும் பூச்சிகளை படம் எடுக்குறது ரொம்ப அட்வான்ஸானது. சிங்கம், புலி, சிறுத்தை மாதிரியான விலங்குகளைப் படம் எடுக்கிறதை விட பறவைகள், பூச்சிகளை படம் எடுக்கத்தான் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும்.

பரத்பூர் சரணாலயத்தில் வலசை வரும் பறவைகளை ஒரு வாரம் தங்கியிருந்து புகைப்படம் எடுத்தேன். பறவைகளை நாம உன்னிப்பா கவனிச்சோம்னா அதுங்களோட நடவடிக்கைகள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும். பறவைகளுக்கு பல விதமான உணர்ச்சிகள் இருக்கு. அதுல இன்னும் ஆராயப்பட வேண்டிய பல விசயங்கள் இருக்கு. நாம எடுக்குற புகைப்படங்கள் ஓர் ஆவணமாகவும் இருக்கும்ங்கிற எண்ணம்தான் பறவைகள் புகைப்படக் கலை மீதான ஈடுபாட்டை உண்டாக்குச்சு.

பறவைகளை புகைப்படம் எடுப்பதில் உள்ள சவால்கள் என்ன?

பறவைகள் அதிகம் துறுதுறுப்பா இருக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்காது. அங்கயும் இங்கயுமா பறந்தபடி சேட்டை பண்ணிக்கிட்டிருக்கும். அதையெல்லாம் நிதானமா புகைப்படம் எடுக்க வேண்டி வரும். வெறும் புகைப்படம் மட்டும் பத்தாது. புகைப்படத்தின் மூலமா ஒரு கதை சொல்லணும். பறவை மட்டும் இல்லாம சுற்றியிருக்கிற நிலப்பரப்பையும் காட்சிப்படுத்தணும். ஏன்னா இந்தப் பறவைகள் எந்த மாதிரியான இடங்களில் வசிக்குதுங்குறதுக்கான ஆவணமா அது இருக்கும்.

பறவைகளின் நடவடிக்கைகள் இனப்பெருக்கம், குஞ்சை எப்படிப் பாதுகாக்கிறது. பெண்ணை ஈர்க்க ஆண் பறவை மேற்கொள்ளும் நடவடிக்கைன்னு பறவைகளோட வாழ்க்கை ரொம்பவும் சுவாரஸ்யமானது. அதையெல்லாம் நாம படமெடுக்கணும்னா பொறுமை ரொம்ப முக்கியம். நாம எதிர்பார்க்குற எல்லாமே நடக்காது. கேமராவும் லென்சும் சேர்ந்து சுமார் ஆறு கிலோ எடை வரும். அதைத் தூக்கிட்டு நாள் முழுவதும் சுத்தி அலைஞ்சும் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத சூழல் வரும். அப்ப விரக்தி அடையக்கூடாது.

அரிய பறவையினங்களை படமெடுத்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்…

நான் புகைப்படம் எடுத்த பறவைகளிலேயே மிகவும் அரிதானதுன்னு ceylon frogmouth பறவையை சொல்லலாம். அதோட வாய் தவளை வாய் மாதிரியே இருக்கும்ங்கிறதால் அதுக்கு இந்தப் பெயர். இந்தப் பறவைகளை இலங்கையிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டும்தான் பார்க்க முடியும். இந்தப் பறவையைக் கண்டுபிடிக்கிறதே ரொம்ப கஷ்டம். ஏன்னா, பழுப்பு நிறத்துல மரத்துல மரக்கட்டை மாதிரி உட்கார்ந்திருக்கும்ங்கிறதால தனியா இதை அடையாளப்படுத்துறது சிரமம்.

2006-ம் ஆண்டு இந்தப் பறவையைப் படம் எடுக்கிறதுக்காகவே மேற்குத்தொடர்ச்சி மலையில் சலீம் அலி பறவைகள் காப்பகத்துக்குப் போய் படம் பிடிச்சேன். himalayan monal னு ஒரு பறவை இருக்கு. அதுவும் மயில் குடும்பம்தான். மயில் மாதிரியே பல வண்ண இறகுகளோட இருக்கும். இந்தப் பறவையை படம் எடுக்கிறதுக்காகவே சிக்கிம் போய் எடுத்தேன்.

புகைப்படங்களுக்காக நீங்கள் மேற்கொண்ட பயணங்கள் பற்றி… 

ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவும், கென்யாவில் உள்ள மசாய்மராவும் உலக அளவில் காட்டுயிர் புகைப்படத்துறைக்கு பெயர் போன இடங்கள். அங்க போய் நிறைய உயிரினங்களை படம் எடுத்திருக்கேன். மலேசியா, தாய்லாந்து. இலங்கை. இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் போயிருக்கேன். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகமா பயணம் பண்ணியிருக்கேன்.

இமயமலைத் தொடர்களில் வாழும் பறவையினங்களை தேடி போயிருக்கேன். சிக்கிம் உத்ராஞ்சல் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை படம் பிடிச்சிருக்கேன். மேற்குத்தொடர்ச்சி மலை பறவைகளைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வரும் முயற்சியில இருக்கேன்.

காட்டுயிர் புகைப்படத்துறைக்கு வருகிறவர்களுக்கு சூழலியல் தொடர்பான விழிப்புணர்வும் தாக்கமும் எந்த அளவுக்கு உள்ளது?

பொதுவாகவே, முன்னைக் காட்டிலும் இப்போ ரொம்ப நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கு. முன்ன காட்டுயிர் பற்றி பலருக்கும் அவ்வளவா தெரியாது. சிங்கம், புலி, யானை, மான் போன்ற உயிரினங்களை மட்டும்தான் பொருட்டா நினைச்சிருப்பாங்க. இன்னைக்கு அந்த நிலை மாறியிருக்கு. பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியிருக்கு. அழியக்கூடிய நிலையில் இருக்கிற பறவைகள் வகைப்படுத்தப்படுது.

இப்படி ஒரு பறவை இருந்ததுங்குறதுக்கும், இந்தப் பறவை இந்தப் பகுதியில இருக்குங்குறதுக்குமான ஆவணமா காட்டுயிர் புகைப்படக்கலை இருக்கு. இந்தத் துறைக்குள்ள வர்றவங்களுக்குத் தானாகவே அது பற்றின விழிப்புணர்வு ஏற்படும். அக்டோபர் மாதத்தில் காட்டுயிர் வாரம்னு அது பற்றின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுது. பெரும்பான்மையான கல்லூரிகளில் காட்டுயிர்கள் பற்றின கருத்தரங்குகள் நடத்தப்படுது.

அசாமில் டிவாங்க் வேலிங்குற உயிரிவளம் நிறைந்த இடத்தில் அணை கட்டும் திட்டத்துக்கு மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவிச்சிருக்காங்க. அந்த இடத்துடைய சூழல் கெடக்கூடாதுங்குற மக்களுடைய எண்ணத்தோட வெளிப்பாடு அது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சமீப காலங்களில் பறவைகள் வர்றதில்லை. ஏன்னா குப்பைகள் கொட்டுறதால நன்னீர் பாழாகிடுது. இது மாதிரியான பல சூழலியல் பிரச்னைகளை வெளிக்கொண்டு வர்றதுல காட்டுயிர் புகைப்படத்துறைக்கும் கொஞ்சம் பொறுப்பும், பங்கும் இருக்கு.

காட்டுயிர் புகைப்படக்கலையை ஒரு தொழில் முறையாக மேற்கொள்ள முடியுமா?

ஏதாவது ஒரு தொழில் பண்ணி சம்பாதிக்கணும்ங்குற எண்ணத்துல இருக்கவங்க இந்தத் துறைக்கு வர்றதால எந்தப் பயனும் இல்லை. காட்டுயிர் பற்றிய ஆர்வமும் ஈடுபாடும் இருக்கணும். இதற்கான படிப்புகள் இருக்கு. முதலில் புகைப்படக்கலை தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும். Wildlife management ங்குற படிப்பு இருக்கு. இதெல்லாம் படிச்சு சரியான புரிதலோட வரலாம். இதுல பெரிய எதிர்காலம் இருக்கு.

காட்டுயிர் புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் கதை சொல்ற மாதிரியான வீடியோக்களுக்கு அதிகம் தேவை இருக்கு. அப்படிப்பட்ட வீடியோக்களை எடுத்தா பிபிசி, நேஷனல் ஜுவாகிரஃபி மாதிரியான நிறுவனங்கள் அதை வாங்கத் தயாரா இருக்காங்க. அது மட்டுமில்லாமல் அதை ஒரு ஆவணப்படமாக எடுத்தாலும் வெளியிட ஓடிடி தளங்கள் இருக்கு.

சிங்கம், புலி மாதிரியான விலங்குகளுடைய புகைப்படங்கள் ரொம்பவும் அதிகமாக எடுக்கப்படுது. அதுக்கு பெரிய சந்தை மதிப்பு கிடையாது. அரிய உயிரினங்களை தேடி எடுக்கணும். பூச்சிகளை படம் பிடிக்கக்கூடிய macro photography, கடல்வாழ் உயிரினங்களை படம் பிடிக்கக் கூடிய marine photography மாதிரியான துறைகளில் நல்ல எதிர்காலம் இருக்கு. திரைப்பிரபலங்களுக்கு அடுத்தபடியா ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களைத்தான் அதிகம் பேர் ஃபாலோ பண்றாங்க. தேவையான அளவு பணமும், புகழும் கிடைக்கும். அதற்கான தகுதிகளை வளர்த்துக்கிறது ரொம்ப முக்கியம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்