Aran Sei

அம்மாவுக்கு மறுமணம்: முன்னின்று நடத்திய மகன்

Widow Remarriage

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற இளைஞர், அப்பா இறந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு, துணையை இழந்த அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார்.

அரண் செய் ஊடகத்துக்கு பாஸ்கர் அளித்த பேட்டி

உங்களைப் பற்றி?

நான் கோவை தனியார் பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில மொழி பயிற்றுனராக பணிபுரிகிறேன். கள்ளக்குறிச்சியில் வளையாம்பட்டு என் சொந்த ஊர். தம்பியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

அப்பா இறந்த பிறகு வீட்டில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தன?

கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அதுவரை அம்மா வேலைக்கு போனதில்லை. நானும் தம்பியும் படித்துக் கொண்டிருந்தோம். படிப்பு நின்று விடக்கூடாது என்று திருப்பூரில் தையல் வேலைக்குச் சென்று பெண்கள் விடுதியில் தங்கிப் பணிபுரிந்து அம்மா எங்கள் இருவரையும் படிக்க வைத்தார். நானும் தம்பியும் பட்டப்படிப்பு படித்தது முழுக்க அம்மாவின் உழைப்பினால் மட்டுமே. அதுவரை அம்மாவைப் பிரிந்து இருந்ததில்லை. இந்தப் பிரிவுதான் முதல் மாற்றம்.

அம்மாவுக்கு மறுமணம் முடிக்கனும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?

20 வயதில் என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அம்மாவை பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்ன போது எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. இப்படி ஒன்று நடந்ததை நான் அம்மாவிடம் காட்டிக்கொள்ளவே இல்லை.

கல்லூரி முடித்து பல ஊர்களுக்கு வேலைக்குச் சென்றதில், பலரைச் சந்தித்து பேசிப்பழகியதில் என்னுடைய பல எண்ணங்களில் மாற்றம் வந்தது. முக்கியமாக நான் காதலித்து, காதலில் பிரிவு நேர்கையில்தான் அம்மா மறுமணம் செய்துகொள்ள வேண்டிய தேவை இருப்பதையே நான் உணர்ந்தேன்.

அம்மாவிடம் மறுமணம் குறித்து பேசியது எப்போது?

2017 மே மாதம் அம்மாவிடம் இதுகுறித்து முதன்முறையாக பேசினேன். ”நீயும் தம்பியும் படிச்சு பெரியாளாகி வேலைக்கு போறிங்க. இப்போ எனக்கு கல்யாணம் பண்ணுனா சரியா இருக்காது” என மறுத்தார். ஊருக்கு போகும்போதெல்லாம் அம்மாவோடு இது சார்ந்து உரையாடிய பிறகுதான் சம்மதித்தார்.

இணையரை அம்மா எப்படி தேர்வு செய்தார்?

மறுமணத்தில் விருப்பம் இருக்கிறது என தெரிந்தவர்களிடம் சொல்லியிருந்தார். நண்பர் ஒருவர் இவரை (இணையரை) அறிமுகம் செய்தார். பக்கத்து ஊர்தான். வீட்டுக்கு வரச் சொல்லி சந்தித்து பேசிய பிறகு, அவரை பிடித்திருப்பதாக அம்மா என்னிடமும் தம்பியிடமும் சொன்னார். ஒரே வாரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

Widow Remarriage

திருமணம் எங்கு, எப்படி நடந்தது? யார் எல்லாம் வந்திருந்தார்கள்?

எங்கள் ஊரை அடுத்த சூலாங்குறிச்சி என்ற கிராமத்தில் ஒரு சின்ன கோயிலில் திருமணம் நடந்தது. திருமணத்தன்று அதிகாலை அம்மா, தம்பி, நான் மட்டும் கிளம்பி சென்றோம். வேறு யாருக்கும் நாங்கள் சொல்லவில்லை. உறவினர்களுக்கு தெரிந்திருந்தாலும் எதுவும் நேரடியாக எங்களிடம் கேட்கவில்லை. அம்மாவுக்கு அவர் இணையர் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்திருந்தார். தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டார்கள்.

அம்மாவின் துணையை நீங்கள் என்ன சொல்லி அழைக்கிறீர்கள்?

அப்பா என்று தான் அழைப்பேன். ஆரம்பத்தில் சிறு தயக்கம் இருந்தது. ஆனால் அப்படி அழைப்பது ரொம்ப நிறைவாக இருக்கிறது.

இரண்டு குடும்பங்களுக்கும் உள்ள புரிதல்?

ஒரு அக்கா, இரண்டு தம்பிகள் என புது உறவுகள் கிடைத்துள்ளார்கள். வாட்சப்பில் புதிதாக ‘Family’ என்று ஒரு குழு உருவாக்கியிருக்கிறோம். இதற்கு முன் அப்படி எதுவும் இருந்ததில்லை. உடன் பிறந்தவர்கள் போல ரொம்ப உரிமையாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள்.

இறுதியாக, ரிலேசன்ஷிப் பற்றி உங்கள் கருத்து என்ன?

உறவுகள் குறித்து என் கண்ணோட்டம் தொடர்ந்து மாறி வந்துள்ளது. தேவை என்பதே உறவின் அடிப்படை. உறவுகள் நிலைத்து நீடிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. வாழ்க்கைத் துணை மீது எதிர்பார்ப்புகளைத் திணிக்காமல் தேவையின் அடிப்படையில் உறவினைக் கட்டமைப்பதையே நான் விரும்புவேன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்