Aran Sei

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவர்  தலையில் பலத்த காயம் எற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத்தின் ஜேசுவிடம், அரண்செய்  நேர்காணல்.

தொடர்ந்து இந்திய கடல் எல்லையை, தமிழக மீனவர்கள் தாண்டுவதாக இலங்கை கடற்படை தரப்பு கூறுகிறதே? எல்லை தாண்டக்கூடாது என்று மீனவர்களுக்கு முறையாக அறிவுறுத்தப்படுகிறாதா?

இது குறித்து முறையாக மீனவ சங்கங்களும், அரசு அதிகாரிகளும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். கடற்காற்று போக்குகளாலும், மழை நேரங்களிலும் சிலர் தப்பி போவதால், இந்த சம்பங்கள் நடக்கின்றன. ஆனால் இரு நாட்டு ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவிற்கு போக நமக்கு உரிமை உள்ளது.

ஏன் தமிழக மீனவர்கள் கச்சத்தீவிற்கு போக வேண்டியிருக்கிறது?

இராமேஸ்வரம் பகுதி மிக குறைந்த மீன் வளம் உள்ள பகுதி. குறிப்பாக நாங்கள் (ராமேஸ்வரம் பகுதி) மீன் பிடிக்கும் பகுதி.

இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து கச்சத்தீவு 14 கடல் மைல் தூரத்தில் உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால், நம் எல்லை 12 கடல் மைல் தான். நம் இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து முதல் 3 கடல் மைலுக்கு யாரும் மீன் பிடி தொழில் செய்யக்கூடாது. அடுத்த 7 கடல் மைல்களுக்கு வெறும் பாறைகள் தான்.

மிச்சமுள்ள கடல் பரப்பில் தான் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மீனவர்கள் தொழில் செய்ய வேண்டும். மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட விசை படகுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் தொழில் செய்ய அது போதுமான இடமாக இல்லை.

பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க செல்ல எண்ணி,சில நேரம் திசை மாறிப்போவதும் உண்டு. அப்போது இதை போல தாக்குதல்கள், துப்பாக்கி சூடுகள் நடக்கும்.

நன்றி : Daily Mirror

இதற்கு இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்கள்?

இலங்கை அரசுடன் இணக்கமாக இருக்கும் இந்திய அரசு, மீனவர் பிரச்சனையில் ஒரு சுமூக முடிவு எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க முடியாவிட்டாலும், 1974-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தையாவது புதுப்பித்து கொண்டு வரவேண்டும்.

இலங்கையில் தொடர் தாக்குதல்களுக்கு தீர்வு காண, ஜெயலலிதா ஆட்சியில் மூன்று கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தது. அதில் இலங்கை மீனவர்கள் ஒத்து வரவில்லை.

ஏன் இலங்கை மீனவர்கள் ஒத்து வரவில்லை? என்ன காரணம்?

நம் மீனவர்கள் அங்கே மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்களுக்கு மீன் தட்டுப்பாடு ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த கருத்தில், எங்களுக்கு உடன்பாடு இல்லாததால், ஒருமித்த தீர்மானம் எடுக்க முடியவில்லை. இதனால், எல்லா பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இரு நாட்டு அரசுகளும், தங்கள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க, அவரவர்கள் தரப்பிலிருந்து எதாவது செய்திருக்க வேண்டும்.

இலங்கை கடற்படையின் தாக்குதல் இப்போதும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறதா?

ஆம். அடிக்கடி இந்த தாக்குதல்கள் நடக்கும். இது இங்கு வழக்கம். ஆனால் வெளியே தெரியாது. கொஞ்சம் பெரிய காயம் என்றால் தான் வெளியே மீடியாக்களுக்கு வரும்.

எதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால் இங்கே எல்லா வகையான அட்டூழியங்களையும் இலங்கை கடற்படையினர் சுதந்திரமாக செய்கிறார்கள்.இந்த கொரோனா காலத்தில் குறைந்திருந்தது. இப்போது மறுபடியும் தொடங்கிவிட்டது.

தாக்குதல்கள் என்றால் தமிழக மீனவர்களை என்ன செய்வார்கள்?

வலைகளை கிழித்து விடுவது, பிடித்த மீன்களை எடுத்துக்கொள்வது, இல்லை திரும்ப கடலில் கொட்டி விடுவது, எங்கள் படகுகளை முட்டி உடைத்து சேதப்படுத்துவது. எங்களின் தொழில் பொருட்களை அழிக்கப்பார்பது.

ஒரு நாளுக்கு டீசல், வேலையாட்கள் சம்பளம், சாப்பாடு என்று 70 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து போனால், அத்தனையும் நஷ்டமாகும். இதுபோக வலைகள், ரோப்புகள் எல்லாம் சேர்த்து ஒன்றரை லட்சம் ஆகும். இப்படி ஒரு நாளில் இரண்டு லட்சத்திற்கு மேல் இழந்தால், அந்த மீனவ குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடும்.

இந்த கொரோனா தொற்று பிரச்சனையால் கைது செய்வது இல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த தாக்குதல்களை மட்டும் சமாளித்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்.

மீனவர்களை கைது செய்வது என்றால் அவர்களின் படகுகளையும் சேர்த்து பறிமுதல் செய்யப்படுமா? கைதால் வேறென்ன பாதிப்புகள் வரும்?

மீனவர்களை கைது செய்யும் போது படகையும் சேர்த்து கொண்டு போய் விடுவார்கள். ஒரு படகு 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை மதிப்புள்ளது. அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியும், வட்டிக்கு வாங்கி, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தோ விற்றோதான் படகை வாங்குகிறார்கள். அரசு கொடுக்கிற மானிய டீசல்களை நம்பிதான் படகுகள் ஓடுகிறது. இந்த நிலையில், அந்த படகை இலங்கை கடற்படை எடுத்துக்கொண்டால், அந்த மீனவரின் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள்.

மேலும், பல சட்டப்போராட்டங்களுக்கு பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட பல காலங்கள் ஆகலாம். இலங்கை கடற்படையின் அடி உதையில், கை கால்கள் பாதிக்கப்பட்டு திரும்பி வருவார்கள்.

கச்சத்தீவை திரும்ப மீட்பதால், மீனவர்களுக்கு தொழில்ரீதியாக என்ன நன்மை கிடைக்கும்?

கச்சத்தீவை நாம் மீட்பதால், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இன்னும் 15 கடல் மைல் கிடைக்கும். கச்சத்தீவு கடற்பகுதி தான் மீன் உற்பத்தியாகும் சுரங்கம். அங்கிருந்து தான் இந்திய கடற்பகுதிக்கும், இலங்கை கடற்பகுதிக்கும் போகும்.

கடந்த 1974-ஆம் ஆண்டு, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

அந்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது சரத்தில் இரு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவில் தங்கி, வலை உலர்த்திக்கொள்ளலாம், ஓய்வெடுக்கலாம்.

அதே போல், அங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழாவில் எந்த பாஸ்போர்ட் ஆவணங்களும் இல்லாமல் கலந்துக்கொள்ளலாம். இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஆனால் இரு நாட்டு ராணுவங்களும் அங்கு முகாமிடக்கூடாது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்து இட்டிருக்கிறார்கள்.

அதற்கு பின் கடந்த 1976-ஆம் ஆண்டு, இந்த ஐந்தாவது சரத்தில், இரு நாட்டு அரசு செயளர்களும் கூடி பேசி, ’ இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கலாம்’ என்ற வரியை எடுத்து விடுகிறார்கள். அதன் அடிப்படையில், இலங்கை ராணுவம் அங்கு முகாமிட்டிருக்கிறது.

 

கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா (நன்றி : dailymirror.lk)

அங்கு முகாமிட்டுல்ல இலங்கை ராணுவம் என்ன செய்யும்?

நாம் இங்கிருந்து போகும் போது, கச்சத்தீவை நெருங்கையிலேயே, அவர்கள் டெலஸ்கோப்பில் நம்மை பார்த்துவிடுகிறார்கள். உடனே கிளம்பி வந்து தாக்குகிறார்கள். முன்பு தலைமன்னாரில் கடற்படை முகாம் இருக்கும். இப்போது கச்சத்தீவிற்கே வந்து விட்டார்கள்.

மீனவர்கள் ஏன் இந்திய கடற்படைக்கு இது குறித்து புகார் செய்யக்கூடாது ?

அவர்கள் நேரத்திற்கு ட்யூட்டிக்கு வருவார்கள். முடிந்தவுடன் கிளம்பி விடுவார்கள். பாதுகாப்பு என்ற பெயரில் கடல் எல்லையில் வந்து நிற்பார்கள். இவன் எல்லை தாண்டி போனான், அவன் எல்லை தாண்டி போனான் என்று எங்கள் படகுகளின் எண்ணை குறித்துக்கொண்டு, எங்கள் மீதே புகார் பதிவார்கள் நம் கடற்படையினர்.

இரு நாட்டு மக்களும் பங்கு பெறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா பிரசித்திப்பெற்றது. இப்போது அந்த கொண்டாட்டங்கள் தொடர்கின்றதா?

முன்பு இரண்டு நாள் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நடக்கும். ஒரு நாள் இலங்கை மீனவர்கள் கொண்டாடுவார்கள். அடுத்து தமிழக மீனவர்கள் கொண்டாடுவார்கள். இப்போது, மொத்தமே ஒரு நாள் தான் அனுமதிக்கிறார்கள். அதற்குள் தீவை காலி செய்து விட வேண்டும்.

நன்றி : dailymirror.lk

தொடர் தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், அதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்துகிறீர்களா?

இன்று நேற்று அல்ல. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக. வேலை நிறுத்தம், ஆர்பாட்டம், சாலை மறியல், பலரிடம் மனுக்கள். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.ஏகப்பட்ட போராட்டங்கள் செய்து அழுத்து விட்டோம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்