Aran Sei

இதுவரை கண்டிராத மோசமான அரசாங்கம் இதுதான்: பிரசாந்த் பூஷண்

 

உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல் அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், வழக்கறிஞர்- சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் நீதித்துறை மற்றும் அரசு குறித்தும், நம்பிக்கையை கைவிடக்கூடாததன் அவசியம் குறித்தும் ‘தி குவின்ட்’  ஆங்கில வலைத்தளத்திற்கு அளித்த பேட்டியின் தொகுப்பு.

உங்களுக்கு ரூ.1 அபராதம் விதிக்கப்பட்டபோது பலர் நீங்கள் இந்த அபராதத்தைச் செலுத்த மாட்டீர்கள் அல்லது அபராதத்தைச் செலுத்த விரும்பமாட்டீர்கள் என்று கூறிவந்தார்கள். உங்களுக்கும் இந்த எண்ணம் உதித்ததா?

இல்லை, எனக்குச் சிறைக்குச் செல்லும் ஆசை இல்லை. சிறைத் தண்டனை விதித்தால் சிறைக்குச் செல்ல தயார் என்று கூறியிருந்தேன். ஆனால் எனக்கு விதிக்கப்பட்டதோ ரூ.1 அபராதம் என்பதால் அதைச் செலுத்த நான் முடிவெடுத்துள்ளேன்.

உங்களை எதிர்மறை கருத்துக்களை முன்வைப்பவராக உச்சநீதிமன்றத்தில் பார்த்திருக்கிறோம். இந்த சூழ்நிலையை சமாளிக்கையில் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எவ்வாறான மனநிலை இருந்தது?

என் குடும்பத்தினர் எனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் என்னவாகும் என்று அச்சத்திலிருந்தார்கள். ஆனால் எனக்கும் எனது தந்தைக்கும் அந்த அச்சம் இல்லை. சிறைத் தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு நான் வந்திருந்தேன். பலர் சிறைக்குச் செல்வதுண்டு. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் என் முன்னோர்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 2 வருடங்களாகச் சிறையில் இருக்கிறார்கள்.

அதிகபட்சமாக 6 மாத காலம்தான் என்னைச் சிறையில் அடைக்க முடியும் என்பதால் அந்த நாட்களைப் புத்தகம் படிக்கவும், நீதித்துறை பற்றிய புத்தகம் எழுதவும், சிறையின் நிலைமையைப் புரிந்துகொள்ளவும், அங்குள்ள நபர்களைச் சந்திக்கவும், அங்கே எவ்வாறான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் செலவிடலாம் என்று நினைத்திருந்தேன்.

நீங்கள் சிறைக்குச் செல்வது அவர்களுக்கும் சிக்கலாக இருக்கும் என்று கூறுவது சரியாக இருக்குமா?

ஆம், என்னைச் சிறைக்கு அனுப்புவது சிக்கலாகிவிடும் என அவர்கள் கருத வாய்ப்பிருக்கிறது.

2014க்கு முன்னர் கூட பெரும் சிக்கல் இருந்திருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் 2014 க்கு பிறகுதான் ஜனநாயகத்தை சிதைக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பதற்கு காரணம் என்ன?

2014க்கு முன்னர் பல பிரச்சினைகள் பல விதங்களிலிருந்தது, ஆனால் 2014க்கு பின் அது புது பரிமாணங்களை எடுத்திருக்கிறது. கொலைக்கூட்டம் பயமின்றி தெருக்களில் திரிகிறது, சமூகவலைத்தளங்களில் உலவும் இந்த கொலைக்கூட்டம் சர்வசாதாரணமாகக் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்களை விடுகிறது.

பிரதான ஊடகங்களை, வகுப்புவாத வெறுப்பையும் பொய் பரப்புரைகளை செய்ய உபயோகிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் உண்மை எது பொய் எது என்று பிரித்தறிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். விஞ்ஞான மனப்பான்மை மற்றும் பகுத்தறிவின் மீது தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமரே அறிவுக்கு புறம்பான கருத்துக்களைப் பரப்புகிறார். காலநிலை மாற்றம் என்பதே இல்லை, விநாயகரின் துதிக்கை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார். அவரது அமைச்சர்கள் ‘கோ கொரோனா கோ’ என்று கூறுகின்றனர். இது கொரோனாவை வெளியேற்ற விடாது.

இது நமது சமூகத்தின் மீதான முழு அளவிலான தாக்குதல். 2014க்கு முன்னர் இந்த அளவிற்கு எதுவும் நடக்கவில்லை, நடக்கவேயில்லை. இந்த நாட்டில் அல்லது உலக அளவில் கூட நாம் இதுவரை கண்டதில் மிக மோசமான அரசாங்கம் இதுதான்.

சமநிலையைக் கொண்டுவருவதற்கும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்கும் இளம் வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது நம்பிக்கையைக் கைவிடும் நேரம் வந்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்லை, நான் அவ்வாறு எண்ணவில்லை. நான் அவ்வாறு நினைப்பதாக இருந்தால் நானும் நம்பிக்கை இழந்திருப்பேன். நான் நீதித்துறையை விமர்சிப்பது சீர்திருத்தங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான். நாம் நம்பிக்கையை இழந்துவிட முடியாது. நாம் நம்பிக்கை அற்றவர்களாக மாற முடியாது. நாம் நம்பிக்கை ஏற்படுத்தும் நிலையை நோக்கி உழைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களும், இளம் வழக்கறிஞர்களும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும். அவர்களின் வாழ்க்கையும் வேலையும் அவர்களின் முன் இருக்கிறது, அது இந்த நீதித்துறையின் முன்னும் இருக்கிறது. ஆகையால் நீதித்துறை செயல்படாமலும் ஊழல் நிறைந்ததாகவும் இருந்தால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக இவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் சில உயர் நீதிமன்றங்கள் சில தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இதன் மூலம் மக்கள் நம்பிக்கையைப் பெறத் தொடங்கியுள்ளனர். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கபீல் கான் வழக்கு, தேவங்கன கலிதாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையின் மூலம் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. மாறுபட்ட கருத்து உரிமையைப் பாதுகாப்பதில் உச்சநீதிமன்றம் முன்னோடியாகத் திகழவேண்டுமா அல்லாது இதனை உயர் நீதிமன்றத்திற்கு விட்டுவிட வேண்டுமா?

இல்லை, அவர்கள் (உச்ச நீதிமன்றம்) மிக முக்கியமான பங்கை வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், யுஏபிஏவின் (ஊபா சட்டம்) அரசியலமைப்பு செல்லுபடியை மறுபரிசீலனை செய்வது உச்சநீதிமன்றத்தின் தற்போதைய வேலையாகும். என்னைப் பொறுத்தவரை, இது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று கருதினார்கள், ஆனால் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு பிரச்சனையாளராகவும், தொடர்ந்து பொதுநல வழக்கு தொடர்பவராகவும், இப்பொழுது நீதித்துறையில் ‘லாபி’ செய்ய முயற்சிக்கும் ஒரு நபராகவும் பார்க்கப்படுகிறீர்கள். பல ஆண்டுகளாக நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பொருத்திப் பார்க்கையில் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

யார் மீது பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதோ அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இது உள்ளது. துரதிர்ஷ்டவசமாக நம் சமூகத்தில் இதுபோன்ற பல உயர்மட்ட ஊழல்கள் நடைபெறும் காரணத்தினால் இது போன்று பல பொதுநல வழக்குகளைத் தொடரவேண்டிய தேவை இருக்கிறது. நான் என்னால் நடத்த முடிந்த வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்துகிறேன், மிக முக்கியமாக நான் கருதும் வழக்குகளுக்கே முன்னுரிமை அளிக்க முயல்கிறேன். இதுவரை தேவையற்ற எந்த ஒரு விடயத்திற்கும் பொதுநல வழக்கு தொடர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

பின்னோக்கி பார்க்கும்போது சஹாரா-பிர்லா வழக்கு அல்லது மருத்துவ லஞ்ச வழக்கு போன்ற முக்கியமான வழக்குகளில் ஏதாவது சில வழக்கிற்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு அதிக வேலைகளைச் செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை, சஹாரா-பிர்லா வழக்கு மற்றும் மருத்துவ லஞ்ச வழக்கிலும் அமைப்புக்குள் இருப்பவர்களே எனக்குத் தகவல் அளித்ததால் மற்றவர்களைவிட நான் அதிகமான தகவலை வைத்திருந்தேன். இவ்வகை வாய்ப்புகள் எப்போதாவது ஒரு முறைதான் வரும். தகவலளிப்பவர்கள் நான் இதனைச் சரியான முறையில் எடுத்துச்செல்வேன் என்று நம்புவாதால் எனக்கு இந்த வாய்ப்புகள் வருகின்றன.

தீர்ப்பின் முடிவில் நீங்கள் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதால், இந்த தீர்ப்பு ஒரு புதிய பிரச்சினையின் தொடக்கமா அல்லது முடிவா?

நீங்கள் தீர்ப்பை அவ்வாறே எடுத்துக் கொண்டால், அது நிச்சயமாக நீதித்துறைக்கு எதிராகப் பேசுவதை மிகவும் கடினமாக்குகிறது. ஆனால் இந்த தீர்ப்பால் தூண்டப்பட்ட தீவிர விவாதம் வருங்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைத் தளர்த்த உதவும் என்று நான் நினைக்கிறேன்.

சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு அல்லது நேர்மறையான உணர்வு உருவாகியுள்ளது. இந்த ஆற்றலை எவ்வாறு எடுத்துச்செல்லத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

இந்த தீர்ப்பினால் என் மீது கவனம் குவிந்துள்ளது. ஆகையால் ஏதேனும் இயக்கத்தை நடத்திச் செல்லக் கூடிய தலைவனாக நான் சிலரால் பார்க்கப்படுகிறேன். என்ன செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதனை கூறுவதன் மூலம் மக்களின் ஆற்றலை வழிநடத்த முயல்கிறேன். எனவே என்ன பாத்திரமாக இருந்தாலும், நான் தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட நபர் அல்ல. நான் அதற்குள் செல்லப் போவதில்லை.

உங்களது முன்னாள் சக ஊழியரான ஆஷிஷ் கெதன் நீங்கள் பாகுபாடாக, குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும் போராடுபவர் என்று கூறியுள்ளார். அவர் சொல்வது சரியா?

ஆஷிஷ் கெதன் இப்போது அல்லது மிகச் சமீப காலம்வரை எஸ்ஸார் குழுவின் சட்ட துணை இயக்குநராக இருந்தார். நான் தொடர்ந்த மூன்று பொதுநல வழக்குகளில் எஸ்ஸார் குழு சிக்கியிருந்தது. ஆகையால் ஆவர் என்னைத் தாக்குகிறார். இது ஒரு முட்டாள்தனமான தாக்குதல். ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கும் அறமற்ற சுயலாபத்தை குறித்தாவது அவர் வெளிப்படையாக கூறியிருக்க வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்