Aran Sei

கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்

ஒரு புகழ்பெற்ற மக்கள் இயக்கம் கொலம்பியாவின் எதேச்சதிகார மற்றும் நவீன தாராளமயவாத அரசிற்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருகிறது. செயற்பாட்டாளர் மற்றும் தலைவரான ஜெனிபர் பெடராசாவுடன் அவர்கள் எவ்வாறு எழுச்சி மற்றும் எதிர்வரும் சவால்ளை ஒருங்கிணைக்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறோம்.

நேர்காணல் காண்பவர் நிக்கோலஸ் ஆலன்.

பிற்போக்கான வரி சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக ஏப்ரல் 28 ல் துவங்கிய கொலம்பியாவின் பொது வேலை நிறுத்தம் இப்போது இரண்டாவது மாதத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

கொடிய காவல் படை மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். அதே நேரம் ஐவன் டியூக்கின் வலதுசாரி அரசாங்கம் போராட்டக்காரர்கள் குதித்து குதித்து சோர்ந்து போய் இறுதியில் வீடு திரும்பி விடுவார்கள் என நம்புகிறது‌ ஃபாரஸ்ட் ஹில்டன் சமீபத்தில் வாதிட்டது போல,” லா ரெசிஸ்டன்சியா  (La Resistencia) ” என்ற இந்த எதிர்ப்புப் போராட்டம் அடக்குமுறைக்கு எதிரானப் போரில் வெற்றி பெற்று வருவதாகத் தெரிகிறது. மேலும் டியூக் அரசு வேறு வழியின்றி சட்டபூர்வமாக நீடிக்க முடியாத நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் வீதியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பொது வேலை நிறுத்தம் 2022 ல் நடைபெறவிருக்கும் தேர்தலின் மீது தனது நீண்ட நிழலை படிய வைத்து வருகிறது,”

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைப்பது மற்றும் போராட்டக்கார்களின் கோரிக்கைகளை நெறிபடுத்துவது ஆகியவை ஒரு குறிப்பிடத்தக்க சவாலை முன்வைக்கிறது. அத்துடன்‌ இந்த வகையில் நாட்டின் பல்வேறு விதமான சமூக இயக்கங்களும் இதில் ஒரு முக்கியப் பங்கை வகித்துள்ளன. ஆனால்  வேலை நிறுத்தத்தின் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய  மூன்று கூறுகள் குறிப்பாக சவாலான வை என்பதை நிரூபித்துள்ளன. பெரும்பாலும் தன்னெழுச்சியாக தோன்றுப் இந்த லட்சக்கணக்கானவர்களின் இயக்கங்கள் அமைப்பு ரீதியான கேள்விகளை எதிர் கொண்டுள்ளன. மேலும் கொலம்பியாவின் முப்பதாண்டு கால நவீன தாராளவாத முறையால் பன்னெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பல்வேறு விதமான கோரிக்கைகளை ஒருங்கிணைப்பது கடினமானப் பணியாகும்‌. இதேப் போல தேசியத்தை தெளிவான நோக்கமாகக் கொண்டுள்ள எதிர்ப்பு இயக்கங்களை  மேலாண்மை செய்வதற்கு கொலம்பியாவின் நிலையில், குறிப்பிடத்தக்க, புவியியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட  சமூக இயக்கங்கள் எப்போதும் பொருத்தமாக இருந்ததில்லை.

இதன் மூன்றாவது கூறு, இந்தப் போராட்டத்தால் மிக அதிக அளவில் ஈர்க்கப்பட்டவர்கள் துணை பாட்டாளி வர்க்க இளைஞர்கள். “நினிஸ்(ninis- நி எஸ்டுடியன் நி ட்ராபஜன்))” என்று அழைக்கப்படும்  படிப்பறிவோ வேலையோ இல்லாத இளைஞர்கள். இதனால் இவர்கள் எந்த ஒரு அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் அல்லது மாணவர்கள் அமைப்புடன் தொடர்பில்லாதவர்கள். பொருளாதார தேக்கத்தின் கடுமையான தாக்கத்தை சுமப்பதன் மூலமும், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பின்விளைவுகளிலிருந்தும் கொலம்பியாவின் இந்த இளைஞர்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வெறித்தனமான அரசியல் மயமாக்கல் செயல்முறைக்கு உட்பட்டுள்ளனர். கொலம்பியாவில் ஒரு புதிய தலைமுறை இடதுசாரி போராளிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவர்தான் ஜெனிஃபர் பெடராசா. நாட்டின் மிகப்பெரிய மாணவர்கள் அமைப்புகளில்  ஒன்றின் (Asociacion Columbia de Represents Estudiantiles de la Education Superior) பிரதிநிதியாக அண்மையில் பணியாற்றி வந்த அவர் தற்போது இளைஞர்கள் தலைமையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்தில் முக்கிய செய்தி தொடர்பாளராகவும், அமைப்பாளராகவும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

திரைப்படத்திற்கு மறுதணிக்கை செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா – மக்கள் கருத்துத் தெரிவிக்க ஜூலை 2 வரை அவகாசம்

பெடராசா நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும் மற்றும் டியூக் நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை முன் வைப்பதற்கும் பொறுப்பான  அமைப்பான தேசிய வேலைநிறுத்தக் குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றுபவர். பலதரப்பட்ட கோரிக்கைகளும், குழுக்களும் இதில் ஈடுபட்டிருப்பது  ஒரு பெரும் தடையாக இருக்கும் நிலையில், இந்தக் குழு எப்படி நேர்மையாக அவற்றை எல்லாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த எதிர்ப்பு இயக்கத்தைக் கொண்டு செல்ல முடியும் என்ற கேள்வியை முன் வைத்துள்ளது. இத்தகைய ஒரு நிலையில், முதலில் கொண்டுவரப்பட்ட வரி சீர்திருத்த மசோதாவையும், கொலம்பியாவின் பொது சுகாதார அமைப்பை மேலும் தனியார் மயமாக்க கொண்டு வரப்பட்ட கண்டனத்திற்குரிய சுகாதார சீர்திருத்த முன்மொழிவையும்,  திரும்பப் பெற வைத்ததில் பெற்ற வெற்றியில் தனது பங்களிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

ஹில்டன் விளக்கியது போல் பெடராசா, பொது விவாத மேடைகளில் வலதுசாரி எதிர்கட்சியினர் பேச அஞ்சும் அளவு தவிர்க்க முடியாத சோசலிச சிந்தனையாளர் என்பதுடன், அந்த வகையில் அமெரிக்காவின் அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டெஸ்( மிக இளம் வயதில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின்  முற்போக்கு  பெண் சிந்தனையாளர்) அவர்களை விட பெருமளவில் முற்போக்கானவர். பிற சோசலிச, இடதுசாரி தலைவர்கள் சந்தித்த பல இடையூறுகளையும் சந்தித்தவர். அவரது புகழ் பரவிய போது ஏராளமான மிரட்டல்களையும் அவர் எதிர்கொண்டார். ஏராளமான கொலம்பிய இளைஞர்களின் தீவிரத்தன்மை அவர்களுடைய  வயதிற்கும் மீறிய அரசியல் பக்குவத்தைப் பெற்றிருப்பது போலவே, பெடராசாவும் மிரட்டல் தந்திரங்களைத் தாண்டி வந்துள்ளார். கொலம்பியாவின் மாபெரும், திடீர் சமூக எழுச்சியில் உள்ள சவால்களை ஒருங்கிணைப்பது பற்றியும், எதிர்ப்புகளை பொதுவான அரசியல் செயல்திட்டத்தில் ஒன்று குவிக்கும் உந்துசக்தி பற்றியும், போராட்டத்தின் உடனடி கோரிக்கையான டியூக்கின் பதவி விலகல் என்பதையும் தாண்டி அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் நவீன தாராளவாதத்தை  கேள்வி எழுப்புவதை நோக்கி ஒன்று குவிப்பது பற்றியும்   பெடராசா “ஜாக்கோபினின்” ஆசிரியர் நிக்கோலஸ் ஆலனுடன் உரையாடுகிறார்.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

 நி.ஆ.: நீங்கள் இடதுசாரி அரசியலில் எவ்வாறு ஈடுபாடு கொண்டீர்கள்? எவ்வாறு மாணவர் தலைவரானீர்கள் என்று கூறுங்கள்

 ஜே.பெ.:  நான் கொலம்பியாவின் முக்கியமான பீடபூமிக்கு  (Paramos) அருகிலிலுள்ள புகாராமாங்கா என்னும் நகரத்தில் வாழ்ந்த சிறு வயதிலிருந்தே செயற்பாட்டாளராக இருந்தேன். நான் எனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்தேன். அப்போது சான்டர்பன் பீடபூமியில் திறந்தவெளி சுரங்கத் திட்டத்திற்கு எதிராக வளர்ந்து வந்த பெரிய அளவிலான எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டேன். 2011 ல் கொலம்பியாவில் மட்டுமல்ல, சிலி, மெக்சிகோ மற்றும் ஏறத்தாழ அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மாணவர் இயக்கம் எழுச்சிப் பெற்றது. நானும் எனது நண்பர்களும் அந்த இயக்கப் பேரணிகளில் கலந்துக் கொண்டோம். அது மாணவர் இயக்கத்தில் ஈடுபடுவதில் முடிந்தது.

இறுதியில் நான் நாட்டின் முக்கியமான, மிகப்பெரிய பொதுப் பல்கலைக்கழகமான கொலம்பியா தேசியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கு சென்றதும்தான் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு போதுமான நிதி உதவி அளிக்கப்படாமல் மிக மோசமான நிலையில் இருப்பதைக் கண்டேன். ஒரு குளிர்காலத்தில், வகுப்பறை கூரை இடிந்து என்மீதும் எனது வகுப்புத் தோழர்கள் மீதும் விழுந்தது. அப்போதுதான் ஒரு மாணவர்களைப் நிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் தேவையை அறிந்தோம். அவர்கள் தலைவராக என் பெயரை பரிந்துரைத்தனர். நானும் தேர்தலில் வெற்றி பெற்றேன்.

2018 ல் நான்  தேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கொலம்பியாவில் மாபெரும் மாணவர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. இதுதான் டியூக்கிற்கு எதிரான முதல் வேலைநிறுத்தப் போராட்டம் என்பதுடன், இதுதான் இதன்பிறகு நடந்த பல எதிர்ப்புப் போராட்ட அலைகளுக்கு வித்திட்டது. உண்மையில் இது வெற்றிகரமான போராட்டமாக இருந்தபோதும், எங்களைப் போன்ற தலைமையிலிருந்தவர்கள் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகித் துன்புறுத்தப் பட்டோம். “மாணவர்கள் சார்பாக நான் காங்கிரசில் பேசச் சென்ற நிகழ்வுதான் முக்கியமானது. நான் பேசும் போது எனது ஒலி பெருக்கியை அணைத்து விட்டனர். இதுதான் அனைத்திற்கும் காரணமாக அமைந்தது.”

எனது தோழர்களுடன் நாங்கள் சிலியில் உள்ள CONFECH ஐ ஒத்த பல்கலைக்கழகங்கள் மற்றும்  பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே  மாணவர் இயக்க கூட்டமைப்பை உருவாக்க  திட்டமிட்டோம். எங்கள் அமைப்பு Association Columbian de Representantes de la Estudiantiles de la Education Superior (Acrees) என்று பெயர் பெற்றது.

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

நி.ஆ.: நீங்கள் அண்மைக்காலம் வரை தேசிய வேலை நிறுத்தக் குழுவில் மாணவர் பிரதிநிதியாக இருந்தீர்கள். தற்போது கொலம்பிய வீதிகளில் நிலைமை எப்படி உள்ளது? குழுவிற்கும், எதிர்ப்புப் போராட்டத்திற்கும் என்ன உறவு?

ஜெ.பெ.: கொலம்பிய சமூகத்தில் அணிதிரட்டப்பட்ட பல பிரிவுகள் உள்ளன. ஒருவகையில் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்  அமைப்பாக்கப்பட்ட சமூக இயக்கங்களின் எல்லையைத் தாண்டிவிட்டன. நிச்சயமாக, சமூக இயக்கங்களுக்கு  முக்கியமான ஒழுங்குப்படுத்துவதில் அல்லது அமைப்பாக்குவதில் எவ்வித பங்கும் இல்லை எனக் கூற முடியாது. ஆனால் புதிதாக அணிதிரட்டப்பட்ட பிரிவுகளை ஒன்றிணைத்து, தேசிய வேலைநிறுத்தக் குழுவில் சேர அமைப்பாக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஊக்குவிப்பது தேசிய வேலை நிறுத்தக் குழுவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இப்போது அவர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு குழுவில் சேர்வது ஏன் அவசியம்? தற்போதுள்ள அடிப்படையான சவால்களில் ஒன்று, இந்த பகுதிவாரியாக சில சமயத்தில் தனித்தனியாக

நடக்கும் போராட்டங்களையும் ஒன்றிணைக்க வேண்டும். எங்களுடைய கண்ணோட்டத்தில், வீதிகளில் இருக்கும் சக்திகளை ஒன்றிணைப்பதற்கு இந்த ஊக்குவிப்பு மிக அவசியம் ஆகும். அரசு பிரிவு பிரிவாக பேச்சு வார்த்தை நடத்தும் தந்திரத்தை கையாளும் போது இது மிகவும் அவசியமாகும். அதாவது பழைய முறையில் பிளவு படுத்தி இறுதியில் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என அரசு நினைக்கிறது.

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

இப்போது, ஆர்ப்பாட்டங்களில் குழுவின் பங்கு பற்றி கூற வேண்டுமெனில், எதிர்ப்பு போராளிகளின் நூறு விழுக்காடு கோரிக்கைகளையும் குழுவில் பிரதிபலிக்கச்  செய்வது சாத்தியமில்லை. அமைப்பாக்குவதில் அதிலும் குறிப்பாக இளைஞர்களை அமைப்பாக்குவதில் ஒரு தெளிவான, தீவிரமான பின்னடைவு இருப்பதால் இது மிகப் பெரும் பணி ஆகும். இந்தப் போராட்டங்கள்  பெரிதும் நினிக்களால்(nini) பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால், அவர்களை அமைப்பாக்க எந்தவித மாணவர் அமைப்போ அல்லது தொழிற்சங்கமோ அவர்களிடம் இல்லை என்பதே இதன் பொருள். இதில் மற்றொரு சிரமம் என்னவெனில், இந்த போராட்டங்கள் முறையாகப் படிப்படியாக வடிவமைக்கப்படவில்லை. ஒரு நாளுக்கு மறுநாள் ஒரு கோடி பேர் தெருக்களில் திரண்டனர். இது முற்றிலும் ஒருங்கிணைக்கப்படாத சமூக வெடிப்பு. மேலும் வேலை நிறுத்தத்தை அறிவித்த அதே மாதத்தில் இந்த மக்கள் அனைவரையும் அமைப்பாக்கி, ஏதாவது ஒரு வகையில் தேசிய வேலைநிறுத்தக் குழுவுடன் இணைக்க எங்கள் முழு நேரத்தையும் செலவிட்டோம்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: ‘பாராஸ்’ எனப்படும் கால்பந்தாட்ட ரசிகர் மன்றங்கள் மிகப் பெரிய அளவில் இந்தப்  பேரணிகளில் பங்கேற்றனர். ஆனால் அவர்களுக்கு அவர்கள் சொந்த தனிநலன்கள் உள்ளன. அவர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு தங்களுக்கான செய்தித் தொடர்பாளர்களைத்  தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்கள் தேசிய வேவைநிறுத்தக் குழுவில் அவர்களை இணைத்துக் கொள்ள பேசி வருறோம். பாராஸில் பங்கேற்பது என்பதுதான் பெரும்பாலான இளைஞர்கள் அமைப்பில் சேருவதற்கான பொதுவான வழியாக உள்ளது. எனவே நாங்கள் அவர்களை எங்கள் அமைப்பிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறோம். அதே சமயம், மிக அதிக அளவில் முன் வைக்கப்படும் சமூக கோரிக்கைகளில், குறிப்பாக உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும் கூட, வேலை நிறுத்தக் குழு முன்னெடுத்துள்ள  கோரிக்கைகளுடன் ஒன்றுபட்டுள்ளன. ஒரு ஆய்வு செய்ததில், உள்ளூரிலிருந்து வந்துள்ள 95% கோரிக்கைகள், வேலை நிறுத்தக் குழு எழுப்பும் கோரிக்கைகளாகவே உள்ளன.

நாங்கள் வரி சீர்திருத்தத்தை திரும்பப்பெறச் செய்தோம். நிதி அமைச்சரை பதவி விலகச் செய்தோம். சுகாதார சீர்திருத்த மசோதாவை நிறுத்தினோம். இவையாவும் துல்லியமாக ஒரு வகையில் இளைஞர்களையும், எதிர்ப்பாளர்களையும் அணிதிரட்ட உதவின. அதே ஆய்வு, நாங்கள் கேட்டபோது அதில் 63% பேர்  தாங்கள் தேசிய வேலை நிறுத்தக் குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததை காட்டியது.  இப்போது இது நூறு விழுக்காடு ஆதரவல்ல. ஆனால் மாணவர்களை, சங்கங்களை, பெண்களை, ஆப்பிரிக்க-பழங்குடியினரை, தொழிலாளர்களை, பழங்குடி மக்களை இன்னும் மற்றவர்களை ஒன்று சேர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால் இந்தப் பிரச்சனையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

நி.ஆ.:  நான் சற்றே குழுவின் கோரிக்கைகளை பரிசீலனைச் செய்தேன். முதல் பார்வையில் அவை மிகவும் அவசரமானவையாகத் தெரிகிறது: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது விளிம்பில் உள்ள ஒரு சமூகத்தை வரைகிறது.

ஜெ. பெ. : அது சரிதான்.  இந்தக் குழு ஒரு அவசர ஆவணத்தை முன்வைத்துள்ளது. அதன் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் அது மிகமிக அவசரமானதுதான். அந்த அவசர ஆவணத்தின் தன்மை என்ன? நெருக்கடி காரணமாக தற்போது மிகவும் மோசமான  சூழ்நிலையில் இருக்கும் பத்து மில்லியன் கொலம்பிய மக்களுக்கு ஊதியத்திற்கு இணையான உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை வருமானத்தை வழங்குவது மிகவும் முக்கியமானதும், மையமானதும் ஆகும்.  இரண்டாவது கோரிக்கை  சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதம் மற்றும் பணி முறை படுத்துதல் என்பது ஆகும். பொது பல்கலைக்கழகங்களுக்கான கல்விக் கட்டணத்திற்கு தற்காலிக தடை என்பது மூன்றாவது கோரிக்கை ஆகும். இது பள்ளிகளில் நேரடி வகுப்பை துவங்குவதற்கான நிலைமைகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியது. நான்காவது கோரிக்கை மிகவும் மோசமான நிலையில் உள்ள தேசிய தொழில்துறையைப் பாதுகாப்பது பற்றியது. 2020 ல் உருளைக் கிழங்கு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது கொரோனா நோய் தொற்றுக்கிடையில் முகக் கவசமின்றி சாலைகளில் உருளைக் கிழங்கை விற்றனர். ஏன்? ஏனெனில் பெல்ஜிய உருளைக்கிழங்கு இறக்குமதி முழுத் துறையையும் திவாலாக்கியது. அடிப்படையில், கிராமப்புறங்களில் தாங்கள் உற்பத்தி செய்தவற்றை அவர்களால் விற்க முடியவில்லை. எனவே தேசிய தொழில்துறையை பாதுகாப்பது என்பது தரமான வேலை உத்தரவாதத்தை உள்ளடக்கியது. கொலம்பியாவில்

80% முறையான வேலை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிலேயே உள்ளது. இவையாவும் இந்த நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவைகளில் ஒன்று. இந்த தேசிய தொழிலை பாதுகாப்பது என்பதில் டியூக்கின் தொழிலாளர் சீர்திருத்த மசோதாவை திரும்பப்பெறச் செய்வதும் ஒரு பகுதி ஆகும். நாங்கள் கடந்த 2019 லிருந்து இதை நோக்கித்தான் அணிவகுத்து வருகிறோம். இது தொழிலாளருக்கான முன்னுரிமையை அதிகரிக்கும்.

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

பெண்ணிய இயக்கங்கள் எழுப்பிய, பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றியது ஐந்தாவது கோரிக்கை. தனிமைப்படுத்துதலின் போது பெண்களுக்கான வேலை வாய்ப்பின்மை அதிகரித்ததோடு பாலின வன்முறையும் அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியாக நாம் ஒருவரை சார்ந்திருக்குமாறு செய்வது பெண்களை தவறாக நடத்துவதற்கு மட்டுமல்ல கொலை செய்வதற்கும் மிகச்சாதகமான விளைநிலமாக இருக்கிறது. பெண்ணிய இயக்கங்கள் பாலின வன்முறைக்கு எதிராக அவசர நிலையை அறிவிக்குமாறு டியூக்கிடம் கேட்கிறார்கள். ஆனால் அவரோ அதனை ஒருபோதும் கண்டுகொள்ளவில்லை. கடைசி கோரிக்கை பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை நிறுத்துவது. போராட்டக்கார்களின் அழுத்தத்தால் அண்மையில் தனது பதவியை விட்டு விலகிய நிதி அமைச்சர் ஆல்பர்டோ கராஸ்குயிலோ வரி சீர்திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால்  அரசுக்குச் சொந்தமான, முக்கியமான, கொலம்பிய நாடு பெரிதும் நம்பியுள்ள  அரசு நிறுவனமான

ஈக்கோபெட்ரோல் எஸ்.ஏ‌ வை தனியார் மயமாக்கி விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

     இப்போது டியூக் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் எதிர்கால பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு முன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூட விரும்பவில்லை. இதை விளக்க வேண்டுமெனில் டியூக் இந்த “உரையாடல்” நடைமுறை என்று அழைப்பது பேச்சுவார்த்தையை தவிர்ப்பதற்காகவும், ஒருபக்கம் கட்டுப்பாடில்லாத அடக்குமுறை நடவடிக்கைகளை சுதந்திரமாக கட்டவிழ்த்து விட்டு போராட்டக்காரர்களை வென்று விடலாம் என  தன்னிடம் உள்ள அனைத்தையும் வைத்து பந்தயம் கட்டுவதாகவுமே உள்ளது.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

நி.ஆ.: டியூக் போன்ற எதேச்சாதிகார அரசிடம் எந்த அளவு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

ஜெ.பெ.: தேசிய வேலை நிறுத்தக் குழுவை “உரையாடல் சுற்றுக்கு(round of dialogue)” வருமாறு அரசு அழைத்தது. ஆனால் நாங்கள் “உரையாட” வரவில்லை “பேச்சுவார்த்தையே (negotiate)” நடத்த வேண்டும் என்கிறோம். 2019 ம் ஆண்டு போராட்டத்தின் போதும் இதையேதான் செய்தார். அவர் பேச்சுவார்த்தை என்ற ஒன்றிற்கு முனைப்புக் காட்டாமல் வெறும் “உரையாடல்” என்று கூறி எவ்வாறாயினும் தான் நிறைவேற்றப் போகும் தனது கொள்கைகளை சட்டபூர்வமானதாக்கும் தந்திரமாக இந்த உரையாடலைப் பயன்படுத்திக் கொண்டார்.

உண்மையில், 2020 லேயே எங்கள் தேசிய அவசர திட்டம் அரசுக்கு கொடுக்கப்பட்டு விட்டது‌. பதினோரு மாதங்கள் இனப் பிறகும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது முற்றிலும் ஜனநாயக விரோத, தன்னிச்சையான அரசாங்கம். கொலம்பியாவின் சமூக நெருக்கடியை கையாள முற்றிலும் தகுதியற்றது. அரசின் இத்தகைய பதில் தராத நிலை, வீதிகளில் இறங்கத் தயங்கும் மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை பெறுவதே அதன் கொள்கை என்பதைக் காட்டுகிறது. இவ்வாறு அளவிற்கதிமாகப் படைகளை குவிப்பது எங்கள் தலைமுறைக்கு முற்றிலும் புதிது. பேரணியில் கலந்துக் கொள்ளாதவர்களையும் கூட காவல்துறை சுட்டுக் கொல்வதை நீங்கள் பார்க்கலாம்.

எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அரசியல் அமைப்பு உரிமை மீது அரசு நேரடியாக தாக்குதல் நடத்துவதில் இறங்கி இருக்கிறது. கொலம்பிய அரசாங்கத்தில் சட்ட அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த தேவையான முக்கியமான மூன்று கொள்கைகளான நியாயத் தன்மை, சட்டத் தன்மை அல்லது விகிதாச்சாரத் தன்மை ஆகியவை இங்கே இல்லை. இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் அதே நேரத்தில், தேசிய அவசர பட்டியலை நிறுத்துவதும், புறக்கணிப்பதும்தான் அரசின் தந்திரம். இந்த நிலையில், போராட்டத்திற்கு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மட்டுமே அவசர பொது கொள்கை முடிவுகளில் சிலவற்றை அடைய முடியும். எடுத்துக்காட்டாக நாங்கள் கொலம்பியா முழுவதும் பரவலாகக் காணப்படும் பசிப் பிரச்சனையைத் தீர்ப்பதை நோக்கி நகர வேண்டும்.

பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்

நாங்கள் ஏற்கனவே பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். அதற்காக வேலை நிறுத்தத்திற்கு நன்றி கூறுகிறோம். முட்டை, ரொட்டி, பால், காபி மற்றும் பிற அடிப்படை பொருட்களுக்கு மக்கள் மதிப்புக் கூட்டு வரி செலுத்த வேண்டியதில்லை. தலா பங்கு வருமானச்(EPS) சந்தையை வலுவாக்கும் சுகாதார சீர்திருத்த மசோதாவை வீழ்த்தியதன் மூலம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறோம். அது அடிப்படையில் சுகாதார அமைப்பில் இடைத்தரகர்கள் மக்கள் சுகாதார நலனை தவிர்க்கும் அளவு அதிக செலவுடையதாக மாற்றி இருப்பார்கள்.

இந்த அனைத்து வெற்றிகளும் மக்கள் வாழ்க்கையில் ஒரு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் அடிப்படை ஊதியம் என்பதே தற்போது பேச்சுவார்த்தையின் முக்கிய நிலைப்புள்ளியாக உள்ளது. ஏனெனில் அது உண்மையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் உடனடியான தேவையான முன்னேற்றத்தை குறிக்கிறது. இப்போது 2022 ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்தான் இந்த அரசியல் மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கும். சுதந்திர வர்த்தக உடன்பாடுகளுக்கும், பிற ஆழமான கட்டமைப்பு மாற்றங்களுக்கும் அரசு தலைமையில் ஏற்படும் ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. இந்த பெரும கோரிக்கைகள் 2022 அதிபர் தேர்தல் விவாதத்தில்  எழுப்பப்படும் என நான் நினைக்கிறேன்.

முக்கிய குறிக்கோள் டியூக்கின் பதவி விலகலாகத்தான் இருக்க வேண்டும் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். ” டியூக்கிற்கு தேர்தலுக்கு முன் இன்னும் 11 மாதங்கள் பதவிக்காலம் உள்ளது,” ஆனால் பிரச்சனை என்னவென்றால் டியூக் பதவி விலகினால் அவருக்குப் பதிலாக துணை குடியரசுத் தலைவர் மார்ட்டா லூசியா ராமிரஸ் பதவிக்கு வருவார். இவர் டியூக்கை விட அதிக பிற்போக்குவாதி ஆவார். துணை அதிபரிடமிருந்தும் நாம் தப்பித்தால் அடுத்து அரசுக்கு மிக நெருக்கமான கட்சியைச் சேர்ந்த காங்கிரஸின் தலைவர் அந்தப் பதவிக்கு வருவார்.  இவை எல்லாவற்றையும் வைத்து நான் சொல்வது என்னவென்றால், கொலம்பியா இன்றிருக்கும் மோசமான நிலைக்குத் தள்ளிய, கடந்த ஏழு முறையாகத் தொடர்ந்த, டியூக் இன்றும் மையமாக பின்பற்றும் பொருளாதார மாதிரியின் மீதுதான் கவனம் குவிக்கப்பட வேண்டும்.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

நி.ஆ.: 2022 தேர்தல் பற்றிய உங்கள் பார்வை என்ன? இந்த எதிர்ப்புகள் அதிபர் தேர்தல் விவாதங்களின் நிபந்தனைகளை தீர்மானிக்கும் அல்லது அதன் மீது செல்வாக்குச் செலுத்தும் என நினைக்கிறீர்களா?

ஜெ.பெ.: முதலாவதாக ஜனநாயக மையம் (CD) கட்சியின் டியூக்கும், அல்வாரோ உரீபேயும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள். அந்த அளவுதான் எனக்குத் தெரியும். ஏனெனில் இந்த அரசு அதன் நியாயத் தன்மையை இழந்து விட்டது. ஜனநாயக மையக் கட்சியைத் தோற்கடிப்பதைத் தாண்டி வாக்காளர்களை அரசியலாக்குவதுதான் 2022 தேர்தலின் தீர்மானிக்கும் போக்காக இருக்கும். நீண்ட காலமாக கொலம்பியா அரசியல் உணர்வற்ற  சமூகமாகவே இருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று போல் உள்ளார்கள் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. அந்நிலையில் எதற்காக வாக்களிக்க வேண்டும்? அல்லது  அதை விட மேலானதாக ஏன் என் வாக்குகளை விற்கக் கூடாது? என்ற மக்களின் கருத்து தற்போது மாறிவிட்டதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசியல் மயமாவதில் ஆழமான நடைமுறைக்கு (இளைஞர்கள் மட்டுமல்ல என்றாலும்) உட்பட்டுள்ளனர். இது வாக்குப் பெட்டியில் வெளிப்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்.

கொலம்பியால் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் காரணமாக, 2022  தேர்தல்கள் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனினும் சமூக இயக்கங்கள் தேர்தல் அரங்கத்தில் தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டும். சமூக இயக்கங்கள் தேர்தல் மற்றும் நிறுவன அரசியலில் ஒரு தெளிவானத் தொடர்பை உருவாக்குவதை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசிய இறையாண்மை மற்றும் வேறுபட்ட பொருளாதார மாதிரிக்கான போராட்டமே நாங்கள் 2022 தேர்தலில் கொண்டு செல்ல வேண்டிய மிகப் பெரிய பதாகை என நான் நம்புகிறேன். கொலம்பியாவில் உள்ள அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று, பன்னாட்டு நிறுவனங்கள் நமது இறையாண்மையை அமைப்பு ரீதியாக மீறுவதும், அரசு மக்களின் பின்னால் நின்று கொண்டு, வங்கிகளுக்கும், அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பொதுக் கொள்கையை வகுப்பதும்தான்.

பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை

வரி சீர்திருத்த மசோதா  மூலதனத்தின் இந்த பிரிவினருக்கு முழுமையான வரிவிலக்கு அளித்ததை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இதைவிட – இந்ததொற்று நெருக்கடியில் பொதுச் செலவை முற்றிலும் முடக்கிவிட்டதைவிட- அந்த மசோதா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பால்(OECD) 2019 ல் வரையப்பட்டு, ‘கொலம்பியாவிற்கான பொதுக் கொள்கைக்கான பரிந்துரைகள் என்ற ஆவணம்’ என்றழைக்கப்பட்டதைத் தவிர வேறென்ன அந்த சீர்திருத்தம் செய்தது? இது பன்னாட்டு நிதியம்(IMF), அமெரிக்க பன்னாட்டு வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய பொருளாதார அறிஞர்களை உள்ளடக்கிய, ஓஈசிடியின் வல்லுநர்களால் வழிநடத்தப்பட்டது.

உள்நாட்டில் கூட  தயாரிக்கப்படாத இந்த சீர்திருத்த திட்டத்தைத்தான் மக்கள் எதிர்த்தார்கள் என்பதைத்தான் இவையாவும் கூறுகின்றன. இது எளிதாக நம்ப முடியாதது. அந்நிய தலையீட்டில் உருவான கொள்கை திட்டத்தை காப்பாற்ற கொலம்பிய அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பியது.

நி. ஆ.: இந்தப் போராட்டங்களில் கொலம்பிய இளைஞர்களின் தலைமையை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். மாணவர் பிரிவைப் பார்த்தால், எந்த சூழ்நிலைக்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்?

ஜெ.பெ.:  லத்தீன் அமெரிக்க நாடுகளில், ஒரு நாட்டில் அதன் நிதிக் கொள்கை நவீன தாராளவாதத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த நாடு கொலம்பியாவாகவே இருக்கும்.(நிச்சயமாக அதனுடன் சிலியையும் கூறலாம்) சமீபத்திய  கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மானுவேல் சான்டோஸ் ஆட்சி காலத்திலிருந்தே நடக்கிறது என்றாலும் அதன் பின்புலம் “பொருளாதார தாராளமயமாக்கல்”  என்றழைக்கப்பட்ட 1991 காலத்திலிருந்தே துவங்குகிறது. இதில் தேசிய தொழில் துறையை முற்றிலும் புறக்கணித்து, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து, முன்பு அடிப்படை உரிமையாகக் கருதப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை தனியார்மயமாக்கல் நடைமுறை  முற்றிலும் பிற்போக்கான பொருளாதார திட்டங்கள் ஆகும். இது ஒன்றோடொன்று இசைவாக செய்யப்பட்டது. எடுத்துக்காட்டாக, 1992 ம் ஆண்டு சட்ட எண் 30 பொது நிதியத்தை முடக்கி வைத்தது. இந்த சட்டம் அரசு பொது பல்கலைக்கழகங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய நிதியை முடக்கியது. இது மிகவும் மோசமானது. ஏனெனில், கல்விச் செலவு  அதிகரித்து வரும் அதே வேளையில் தேசிய, வட்டார அரசுகளிடமிருந்து பயிற்சிக் கட்டணத்தை உயர்த்த அழுத்தம் தரப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும்  நிர்ணயிக்கப்பட்ட அதே நிதியில் மூன்று மடங்கு அதிகமான மாணவர்களைச் சேர்த்து அரசு பிரச்சனையை தீர்க்க முயல்கிறது. கொலம்பியாவின் பொது பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையை அடையும் அதே நேரத்தில், ஐஸ்டெக்ஸ்(ICETEX) எனும் பகுதி பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனம் வேகமாக வளர்ந்தது. ஆனால் இறுதியாகக் பார்த்தால் உண்மையில் அது ஒரு வணிக வங்கி. அதாவது நம்முடைய வரிப்பணத்திலிருந்து மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுத்து, வட்டியை மூலதனமாக்குவதை ஊக்குவிக்கிறது. பொதுப் பல்கலைகழகங்களுக்கான அரசு நிதி வெட்டப்பட்ட அதே சமயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் ஐஸ்டெக்சின் நிதிநிலை 1300 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை பொது பல்கலைக்கழகத்தில் நுழைய முடியாத மாணவர்கள், இறுதியில் மிக அதிக கடனாளி தலைமுறையினராக மாறி விட்டனர். பொது பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவர்கள்  முற்றிலும் பாழான ஒரு கல்வி முறையிலேயே பயின்றனர்.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

கொலம்பியாவின் கல்வி முறை சிலியை ஒத்ததாகவே உள்ளது.  நீங்கள் நாற்பதாயிரம் மாணவர்களை எடுங்கள். அவர்களுக்கு உயர்ந்த வட்டியில் கல்விக் கடன் கொடுத்து, அவர்களை மிகப்பெரிய மேல்தட்டு  தனியார் பல்கலைகழகத்தில் சேர்த்து விடுங்கள். பிறகு ஒரு ஒட்டுமொத்த தலைமுறையின் கல்விப் பிரச்சனையையும் தீர்த்து விட்டதாக அறிவித்து  விடுங்கள். இவை எல்லாம் பொது பல்கலைகழகங்கள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் நடக்கிறது. அவர்கள் தனியார் கல்வி முறைக்கே 3.6 பில்லியன் கொலம்பிய பெசோக்களை நாற்பதாயிரம் மாணவர்களுக்காக ஒதுக்கினார்கள். அதே அளவு பணம் நாட்டில் உள்ள 32 பொது பல்கலைக்கழகங்களுக்கும் ஆண்டு முழுவதற்குமாக ஒதுக்கி உள்ளனர். இது நிதிநிலை அறிக்கைப் பிரச்சனை இல்லை என்றாலும் கல்வியில் தாராளமயவாத கருத்தாக்கத்தைப் பற்றியதாகும்‌.

மில்டன் ஃப்ரைடுமேன் ” கல்வியில் அரசாங்கத்தின் பங்கு” என்ற நூலை எழுதி உள்ளார். அதில் அவர் அரசு கல்வி கொடுப்பதில்- செலவுகள் மற்றும் கடன் தருவது தவிர என்ற பொருளில்-தலையிடக்கூடாது என்கிறார்.  சான்டோஸ் கொண்டு வந்த முறையை எதிர்த்துத் தான் 2018 ல் நாங்கள் அணிவகுத்துச் சென்றோம்.

கொரோனா – நாட்டை நெருக்கடியில் தள்ளிய மோடி வழிபாடு

நி.ஆ.: சிலியில் நாம் கண்டது போலவே, கொலம்பிய இளைஞர்கள் வெறும் கல்வி முறையை எதிர்ப்பது மட்டுமல்ல முழு நவீன தாராளமயவாத அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து விரக்தி அடைந்து விட்டார்கள் என்று உணர்கிறோம்.

ஜெ.பெ‌: இளைஞர்களை வீதிக்குத் தள்ளிய இந்த நெருக்கடிக்கு ஒரு பொருளாதார உந்துதல் இருக்கிறது என நான் நம்புகிறேன். இதற்காக அவர்கள் கிளர்ச்சியாளர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லது அவர்களது ஆர்வம் கல்வியில் மட்டுமே தனிச்சிறப்பாக  இருக்க வேண்டும் என்பதில்லை. நெருக்கடியின் பொருளாதார பரிமாணம் மதிப்பிடப்பட்டு புள்ளியியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. கடந்த  15 ஆண்டுகளில் கொலம்பியா மிக உயர்ந்த அளவு வறுமை நிலையில் உள்ளது. 42 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இது மூன்றில் ஒரு பங்கு குறைந்த பட்ச ஊதியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதை குறிப்பிட வேண்டியது முக்கியமானது. மூன்றில் ஒரு பங்கு வருமானம் என்பது ஒன்றுமே இல்லை. இதனைவைத்துக் கொண்டு வாழ முடியாது. 2 கோடியே 10 லட்சம் மக்கள் இந்நிலையில் வாழ்கிறார்கள். இளைஞர்களை எடுத்துஇஅ கொண்டால்,

குடும்பத்தைக் காப்பாற்றும் 50.4% இளைஞர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இது ஒரு குறிப்பான நிகழ்வு. இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையில் மிக அதிக அளவில் உற்பத்தி கட்டத்தில் இருக்க வேண்டும் என்றாலும், அவர்கள் மிக அதிக வறுமையில் இருக்கின்றனர். நான் இளைஞர்கள் என்று கூறும் போது தர்க்கரீதியாக வேலையில் இருப்பவர்களாகவும், அதிகம் வருமானம் ஈட்டுபவராகவும் இருக்க வேண்டிய 34 வயதுடையவர்களையும் சேர்த்துதான் கூறுகிறேன்.

இதற்கு மாறாக, 33% இளைஞர்கள் “நினிக்கள்”எனப்படும் படிப்பும், வேலையும் இல்லாத இளைஞர்கள். இதை நெருங்கிப் பார்த்தால் இவர்களில் 72%பேர் இளம்பெண்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்த நெருக்கடி மாறுபட்ட விகிதத்தில் அதிலும் குறிப்பாக இளம் பெண்களை பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.

இப்போது  இந்த நெருக்கடிக்குக் காரணம் என்ன? நோய் தொற்று மட்டுமல்ல. அது சுத்தமாக அரசு கூறும் தவறான கணக்கு. நோய்த் தொற்றுக்கு முன்பே கட்டமைப்பு வேலையின்மை இரண்டு இலக்கங்களில் இருந்தது.

1990 களின் தாராளமயமாக்கலும், தடையற்ற வர்த்தக உடன்பாடுகளும் நமது தொழில் மற்றும் விவசாய எந்திரத்தை முற்றிலும் பாழாக்கி விட்டன. நாம் துணி, பால், அரிசி, உருளைக்கிழங்கு, காபியையும் கூட இறக்குமதி செய்வது எளிதில் நம்ப முடியாதது. ஏனெனில் கொலம்பியா காபி விளைவிக்கும் நாடு. தேசிய உற்பத்தியில் விநியோகம் செய்ய வேண்டிய இந்தப் பொருட்களை அந்நிய உற்பத்தி அடித்துச் சென்றுவிட்டது. முன்னர் தொழிலாளர் சந்தையாக இருந்த காபி, அரிசி, துணி மற்றும் விவசாயத் துறை ஆகியவை திவாலாகிவிட்டன. அந்த இடத்தை  பிற நாடுகளின் மலிவான உழைப்பு பிடித்து விட்டன. இதுதான் பொருளாதார தாராளவாதம் நமக்குக் கொடுத்தது. இதனால் நமது உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மாத கதவடைப்பைக்கூட தாங்க முடியாமல் போயிற்று. அரசு வேலையின்மைக்குக் காப்பீடோ, அடிப்படை வருமானமோ தரவில்லை.  தேவை மிகவும் குறைந்து விட்டதால் உத்தரவாதம் தரப்பட்ட குறைந்த பட்ச வருமானம் கூட இல்லை.

எனவே நோய்த் தொற்றுதான் உண்மையில் வெட்டும் புள்ளியாக இருந்தது. ஆனால் அதற்கு முன் இருந்த நிலைமைகளின் விளைவுதான் இது. தொழில் நிறுவனங்களையும், முறையான உழைப்பும் சந்தையையும் ஒருங்கிணைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. தொழிற்சங்கங்கள் கொலம்பியாவில்  முறைசாரா வேலைவாய்ப்பு 63% என்று கூறுகின்றன. இந்த நெருக்கடியில் இந்த முறைசாரா பிரிவினர்தான் முதலில் வேலையிழந்தவர்கள் என்பதுடன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். எனவே இந்த அரசியல் முடிவுகள் ஒன்று சேர்ந்துதான் இளைஞர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளன. நேர்மையாக கூறுவதானால்,நான் என்பதே பெற்றோர்களின் வாழ்க்கை நிலையை அடைய அளவற்ற  உழைப்பை செலுத்த வேண்டும். எனது தலைமுறை முந்தைய தலைமுறையைவிட மிகவும் ஏழ்மைக்குள்ளாகி விட்டது. இவையாவும் 1990 களில் பொருளாதாரத்தை திறந்து விட்டதன் கூடவே நடந்தவையாகும். மீண்டும், இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மாற்றி எழுதுவது கொலம்பியாவின் பெரிய அரசியல் சவாலாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இயக்கங்கள் வெறும் உயர்கல்வி கோரிக்கைக்காக மட்டுமே வீதியில் இறங்கிப் போராடவில்லை. நாங்கள் வரி சீர்திருத்தத்திற்கு எதிராகவும், மரியாதைக்குரிய வேலை, சுகாதார மறுசீரமைப்பிற்கு எதிராகவும் மேலும் பல பிரச்சனைகளுக்காகவும் போராடுகிறோம். சிறந்த உணர்வில் இது மிகவும் அரசியலாக்கப்பட்ட வேலை நிறுத்தம். கடந்த 27ஆண்டுகளாக கொலம்பியாவை ஆண்ட அரசியல், பொருளாதார மாதிரிகளால் நமக்கு என்ன நடந்தது என்பதை இளைஞர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர்.

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, 2022 ம் ஆண்டு வாக்கெடுப்பில் நான் பேசிய பிரச்சனைகள் 83 விழுக்காடு இளைஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் என்று தெரிவிக்கிறது. இந்த புரிதலில் நான் என்ன வரப் போகிறது என்பது குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

www jacobinmag.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

  

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்