Aran Sei

`சில்க் ஸ்மிதாவ இந்தத் தலைமுறைக்குக் காட்டணும்’-இயக்குநர் மணிகண்டன்

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘அவள் அப்படிதான்’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ பட இயக்குநர் மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார்.

விஜயலெட்சுமி

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை சில்க் ஸ்மிதா. விஜய லெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா, ஆந்திர மாநிலம் ஏலூரில் 1960-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி பிறந்தார். சிறுவயதில் வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போனது. இவரது குடும்பத்தினர் இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அந்தத் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் வீட்டை விட்டு வெளியேறி, பிழைப்பும் புது வாழ்க்கையும் தேடி சென்னைக்கு வந்தார்.

சில்க் ஸ்மிதாவாக மாறிய கதை

ஒப்பனை கலைஞராகத் திரைத்துறைக்கு வந்த விஜயலெட்சுமியை, ‘ஸ்மிதா’ என்ற புனைபெயர் கொடுத்து, தனது வண்டிச்சக்கரம் திரைப்படத்தின் மூலம் ’சில்க்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகரும் கதாசிரியருமான வினுச்சக்கரவர்த்தி நடிக்க வைத்தார். அதன் பின் அவர் பெயர் ’சில்க் ஸ்மிதா’ ஆனது. வண்டிச்சக்கரம் படத்தின் வெற்றி அவருக்குப் பல வாய்ப்புகளைத் தேடிக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். அதன் வெற்றிகள் அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டு போனது. 1980-களில் வெளிவந்த தமிழ்த்  திரைப்படங்களில் இவரின் நடனங்கள் இடம் பெற்ற திரைப்படங்கள் அதிகம். தமிழகத்தின் எல்லா மூலையிலும் ரசிகர்களைப் பெற்றார்.

நன்றி : Twitter

சில்க் ஸ்மிதா என்ற ‘நடிகை’

ரஜினிகாந்துடன் நடித்த மூன்று முகம், பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை, பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை மற்றும் அதன் இந்தி மொழி ஆக்கம் சத்மா போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அதிகம் பாராட்டப்பெற்றன. மேலும் தாலாட்டு கேட்குதம்மா, லயனம் போன்ற படங்களும் இவரின் நடிப்புத் திறனைக் காட்டு விதமாக இருந்தன. சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடத்தில் நடித்த படங்களும் வெற்றிப்பெற்றன என்றதால், அவரின் நடிப்புத் திறன் மறைக்கப்பட்டு, முழுக்க முழுக்க கவர்ச்சி நடிகையாகவே அவரின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

கடைசி முடிவு

1996-ஆம் ஆண்டு, சென்னையில அவருக்குச் சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்பில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் கடன் தொல்லை, சொந்த வாழ்க்கை பிரச்சனை போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆந்திராவின் ஏலூரிலிருந்து புது வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள சென்னைக்கு வந்த 19 வயது விஜயலெட்சுமி, 35 வயதில் சில்க் ஸ்மிதாவாக இறந்து போனார்.

மறக்காத ரசிகர்கள்

சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களால், மறக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறார். புகழ்ச்சியும், வீழ்ச்சியும், மர்மங்களும் நிறைந்த இவர் வாழ்க்கை, இதற்கு முன்பே 2011-ஆம் ஆண்டு ‘தி டார்டி பிட்சர்ஸ்’ என்ற தலைப்பில் இந்தியில் படமாக்கப்பட்டது. அந்தப் படம் சில்க் சிமிதாவை தவறாகச் சித்திரிக்கும் படி இருப்பதாக நடிகரும் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவருமான வினுச்சக்கரவர்த்தி குற்றம் சாட்டினார்.

நன்றி : twitter

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்க, விளம்பரப் பட இயக்குநரும் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தின் இயக்குநருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு ‘அவள் அப்படிதான்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் குறித்து ’அரண்செய்’க்கு இயக்குநர் மணிகண்டனிடம் அளித்த பேட்டியில்,

சில்க் ஸ்மிதா வாழ்க்கையைப் படமாக எடுக்கக் காரணம் என்ன?

சில்க் ஸ்மிதா தமிழில் இருந்த முக்கியமான நடிகையில் ஒருவர். அக்கால தமிழ்சினிமா ரசிகர்கள் முதல் இப்போது இருக்கும் 90ஸ் கிட்ஸ் வரை எல்லோருக்கும் அவரைத் தெரியும். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.

இந்த ஜென்ரேஷனுக்கு ’இப்டி ஒரு நடிகை இருந்தாங்க. கீழலருந்து வந்து சினிமாவுல மிகப்பெரிய உச்சத்துக்குப் போனாங்க. ஒரு மகாராணி மாதிரி ஆனாங்க. அப்படி இருந்தவுங்களுக்குக் கடைசில ஒரு ட்ராஜடியா வாழ்க்கை முடிஞ்சது’னு சொல்றோம்.

இதற்கு முன்பே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘தி டார்டி பிட்சர்ஸ்’ என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திலிருந்து ‘அவள் அப்படிதான்’ எப்படி வேறுபடுகிறது?

டார்டி பிட்சர்ஸ் திரைப்படம் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்குப் பூச்சுற்றுவது போல இந்தி ரசிகர்களுக்கு ஏற்ற கமெர்சியல் எலெமன்ட்களை வைத்துச் சுற்றி எடுக்கப்பட்ட படம்.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன் சாரும், முரளி சாரும் பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருப்பவர்கள். பிஆர்ஓ-வாக இருந்து படிப்படியாகத் தயாரிப்பாளர் ஆனவர்கள். அதனால் அவர்களுடன் சேர்ந்து எடுக்கும் இத்திரைப்படம் நேர்மையாகவும் மக்களும் பிடிக்கும் விதத்திலும் இருக்கும்.

இந்தத் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் மொத்த வாழ்க்கையையும் படமாக்குகிறீர்களா? இல்லை திரை வாழ்க்கை மட்டுமா?

அதற்கான கதை விவாத வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. முழு வாழ்க்கை வரலாறுமா இல்லை திரை வாழ்க்கை மட்டுமா இல்லை அதில் ஒரு பகுதி மட்டுமா என்று விரைவில் அறிவிப்போம்.

சில்க் ஸ்மிதாவைப் பற்றிய வாழ்க்கை தகவல்களை, நிகழ்வுகளை எங்கே எடுக்குறீங்க?

இதற்காக ’க்ரவுண்ட்’ ஒர்க் செய்துகொண்டிருக்கிறோம். அவருடைய பூர்வீகம், வாழ்வு, திரை வாழ்க்கை எல்லாவற்றைப் பற்றியும் ஆய்வு செய்து தேவையானதை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் நடிகை தேர்வு செய்துவிட்டீர்களா? மற்ற துணை நடிகர்கள் தேர்வு?

இன்னும் யாரும் முடிவு செய்யவில்லை. அதற்கான வேலைகளில்தான் இருக்கிறோம். எல்லாம் முடிவு செய்யப்பட்டவுடன். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்