இந்தியாவின் கொள்கை மற்றும் நடைமுறையில் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறியுள்ளார். ஆளும் கட்சி, அரசியலமைப்பிலிருந்து இந்த வார்த்தையை நீக்க முயற்சிக்கக்கூடும். ஆனால் ‘வெறுப்புச் சக்திகளால்’ நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மாற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
“மதச்சார்பின்மை என்பது ஒரு சொல் மட்டுமே. அரசாங்கம் அதை அரசியலமைப்பிலிருந்து வெளியே எடுத்தாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பின் காரணமாக அது ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பாகவே இருக்கும்” என்று சஷி தரூர் தனது புதிய புத்தகமான ‘தி பேட்டில் ஆஃப் பிளாங்கிங்’ (The Battle of Belonging) குறித்து பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, பாஜகவின் மிதவாத வடிவமாக முயற்சிப்பது, காங்கிரஸ் தன்னை பூஜ்ஜியமாக்கிக் கொள்வதற்குச் சமம் என்று அவர் கூறியுள்ளார். பாஜகவின் கொள்கைகளின் நீர்த்துப்போன வடிவங்களை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ள சசிதரூர் காங்கிரசில் மதச்சார்பின்மை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தனது கட்சி மென்மையான இந்துத்துவத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்பட்டதைப் பற்றிக் கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் சில தாராளவாத இந்தியர்களுக்கு மிகவும் உண்மையான மற்றும் உறுதியான அக்கறை இருப்பதை அவர் அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், “காங்கிரஸ் கட்சியில் எங்களை ஒரு ‘பிஜேபியின் மிதவாத வடிவமாக’ ஆக மாற்றிக்கொள்ள அனுமதிக்க முடியாது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்” என்றும் அவர் கூறி உள்ளார்.
“காங்கிரஸ் எந்த விதத்திலும் அல்லது வடிவத்திலும் பாஜக அல்ல. நாங்கள் எவ்வாறு இல்லையோ அவ்வாறு மாற முயற்சிக்கக்கூடாது. என் பார்வையில் நாங்கள் அதற்கு முயற்சிக்கவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் இடையில் வேறுபாட்டைக் காட்டுகிறது என்பதை சஷி தரூர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். “நாங்கள் எல்லோரையும் அரவணைக்கும் மற்றும் வேறுபாடு காட்டாத இந்துமதத்தை மதிக்கிறோம். அதேசமயம் இந்துத்துவா என்பது பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கோட்பாடாகும்” என அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல் ஆபத்தில் உள்ளதா என்பது குறித்து பேசிய அவர், “இந்த வார்த்தை ஒரு சொல் மட்டுமே; ஆனால் அரசாங்கம் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை அரசியலமைப்பிலிருந்து வெளியே எடுத்தாலும், அது ஒரு மதச்சார்பற்ற அரசியல் அமைப்பாகத்தான் இருக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“எல்லாவற்றிற்கும் மேலாக, வழிபாட்டுச் சுதந்திரம், உங்கள் மதத்தை வெளிப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், சிறுபான்மை உரிமைகள் மற்றும் அனைத்துக் குடிமக்களின் சமத்துவம் ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். ஒரு வார்த்தையை நீக்குவதன் மூலம் அவற்றை மறைத்துவிட முடியாது” என அவர் வலியுறுத்தி உள்ளார்.
“ஆளும் அரசு அதைச் செய்ய முயற்சிக்கக்கூடும். மதச்சார்பின்மையை அழிக்கவும், அதற்குப் பதிலாக ஒரு குறுங்குழுவாத வழியை உருவாக்கவும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி உள்ளது. அது இந்தியச் சமுதாயத்தில் மதச் சிறுபான்மையினர்களின் இடத்தை மாற்றுகின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இருப்பினும், மக்கள் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்,” என்றும் சஷி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
பிடிஐ -யில் வெளியான செய்தியின் சுருக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.