Aran Sei

பள்ளிகள் திறப்பு – சில நாட்களுக்கு வகுப்ப நேரத்தை குறைக்க வேண்டும் – பிரின்ஸ் கஜேந்திர பாபு

Credits The Hindu

தமிழகத்தில் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் அரசு ஊரடங்கு அறிவித்திருந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

ஊரடங்கு தளர்வுகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாகத்  தெரிவித்துள்ளார்.

9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, அரண்செய் -யிடம் பேசிய கல்வியாளர் பிரிண்ஸ் கஜேந்திரபாபு, பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

“குழந்தைகளுடைய உளவியல் மீதும் உடல்நிலை மீதும் அக்கறை கொண்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 14-லிருந்து 18 வயது வரையிலானவர்கள். நாம் சொல்வதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கிறது. மிரட்டாமல் அவர்களை அன்போடும் அக்கறையோடும் அணுக வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

“முக்கியமாக, பள்ளிகளை நன்றாக சுத்தம் செய்வது, கிருமினாசினி தெளிப்பது, தகுந்த காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்வது, கை கழுவ தண்ணீர் வசதி, மாணவர்கள் கைகளை கிருமினாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கான வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் எல்லாப் பள்ளிகளிலும் செய்யப்பட வேண்டும்.” எனக் கூறினார்.

“மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்கான வாய்ப்பினை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு வகுப்பு நேரத்தைக் குறைக்கலாம். முழுநேரம் பள்ளி இயங்க வேண்டிய கட்டாயம் இல்லை. பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.” என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளுக்கு முதல் நாளே பாடம் நடத்தாமல், அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, கலை இலக்கியங்களின் துணையோடு உளவியல் ரீதியாக அவர்களை இலகுவாக்கியப் பிறகு படிப்படியாக பாடங்களைத் துவங்கலாம் எனவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

“ஒவ்வொரு பள்ளியும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் மிகுந்த அக்கறையோடு தனிமைப்படுத்தி மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பதட்டத்துக்கு உள்ளாக்கவோ பயமுறுத்தவோ கூடாது.” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்..

“9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கப்பட வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும்படி சத்துணவு வழங்க வழிவகை செய்ய வேண்டும். மாணவர்களுடைய உடைநிலையில் அக்கறை செலுத்தி தேவைப்பட்டால் சத்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு தகுந்த வழிகாட்டுதலும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் எனவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்