Aran Sei

போராட்டத்தில் களமிறங்கும் ராஜஸ்தான் விவசாயிகள் – கிசான் சங்கம் அறிவிப்பு

டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் உள்ள ஜெய்சிங்பூர் கேரா எனும் பகுதியில், அனைந்திந்திய கிசான் சபை தலைமையில் ராஜஸ்தானை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கும் விவசாய குழுக்களில் பிரதானமானவையாக இருப்பது கிசான் மஹாபஞ்சாயத்து மற்றும் கிசான் சங்கர்ஷ் சமிதி. போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள், சுங்க சாவடிகளை கைப்பற்றி, சாலைகளை மறித்து, பாஜக தலைவர்களின் உருவபொம்மைகளை எரித்து விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகனகாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பஞ்சாப் எல்லைக்கு பேரணியாக சென்றுள்ளனர். பிகானர், நாகௌர், பாரத்பூர், பில்வாரா, உதய்பூர், ஹனுமன்கர் மற்றும் பார்மர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை

அனைத்திந்திய கிசான் சபையின் தலைவரும், ராஜஸ்தானில் உள்ள சிகார் நகரை சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினருமான அம்ரா ராமிடம் , தி வயர் போராட்டங்கள் குறித்து பேசியது.

கேள்வி : மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ராஜஸ்தான் விவசாயிகள் எப்படி பங்காற்றுகிறார்கள்? 

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்தின் அங்கமாகவே ராஜஸ்தான் விவசாயிகள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதோடு கூட, பிரதமர் நரேந்திர மோடி குறைந்தபட்ச ஆதார விலை பற்றி சொன்ன பொய்களை எல்லாம் நாங்கள் அம்பலப்படுத்த நினைக்கிறோம்.

விவசாயிகள் தங்கள் உற்பத்தியை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்று அவர் சொல்கிறார், ஆனால் ராஜஸ்தான் விவசாயிகள் கம்பு பயிர்களை ஹரியானாவில் விற்பதற்கு கட்டர் தலைமையிலான அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

ராஜஸ்தானில் கம்பை, குறைந்தபட்ச விலைக்கும் குறைவாக, ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் நிலைமையில் நாங்கள் இருக்கிறோம். ராஜஸ்தானில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விளையும் சோளத்திற்கும் இதே நிலைமை தான்.

இடைத்தரகர்களை நீக்கி, விவசாயிகள் தங்கள் உற்பத்தியை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பதற்கு வசதி செய்வதாக அரசாங்கம் சொல்கிறது.  அப்படியென்றால், ஏன் அதானி , அம்பானி போன்ற முதலாளிகளுக்கு (விவசாயத்துறைக்குள் நுழைய) வழி அமைத்து கொடுக்கிறது. இந்த புரட்டுக்கு எதிராக தான் எங்கள் போராட்டம்.

விவசாய சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்பி

கேள்வி : ராஜஸ்தான் மாநிலம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் வருகின்றனரா? அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து தான் வருகின்றார்களா? 

ராஜஸ்தான் முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சொல்லப் போனால், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அனைத்திந்திய கிசான் சபை, கிசான் மஹாசபா மற்றும் கனகாநகரை சேர்ந்த கிசான் சபை உட்பட பல விவசாய அமைப்புகள், இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கியுள்ளன.

குளிர்காலத்தில் போராட்டம் நடத்துவதனால், அதற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய உள்ளூர் மக்கள் பெரிய அளவில் உதவி செய்துள்ளனர்.

கேள்வி : இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி நடத்துகிறது என்று சொல்லலாமா? 

இல்லை, இந்த போராட்டத்தை நான் அனைத்திந்திய கிசான் சபையின் உறுப்பினராகவே நடத்துகிறேன், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக அல்ல. இது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான இயக்கம், அரசியல் நடவடிக்கை அல்ல.

ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவல் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

எங்கள் போராட்டக் களத்திற்கு அருகில் அவர்கள் ஒரு பேரணி நடத்தினார்கள். ஆனால், அது முற்றிலுமாக ஒரு அரசியல் கூட்டம். இரண்டு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களும் இங்கே வந்தார்கள்; நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. இங்கே யாராவது வரும் போது வராதீர்கள் என்றா சொல்ல முடியும்?

ஆனால், அவர்களுடைய பேரணிகளும், எங்களுடைய போரட்டமும் முற்றிலும் வேறுபட்டது. எங்களுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை.

கேள்வி : அசோக் கெலட் தலைமையிலான காங்கிரஸ் அரசு , மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கொண்டு வந்த  விவசாய சட்டத்தை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

ராஜஸ்தான் மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் அனுமதியளிக்கவில்லை என்பதால் அது மாற்றத்தை கொண்டு வருமா எனத் தெரியவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக உற்பத்தியை வாங்குபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மசோதா தெரிவிக்கிறது. இது விவசாயிகளின் நலனுக்கான நகர்வு தான். எனவே நாங்கள் அதை ஆதரிக்கிறோம்.

( www.thewire.in  இணையதளத்தில் வெளியான நேர்காணலின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்