Aran Sei

“அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி!” – கவிஞர் வெய்யில் 

லகமயமாக்கல், முதலாளித்துவம், நகரமயமாதல் காலகட்டத்தில் உருவான நவீன இலக்கியப் போக்கில் அரசியல் பிரக்ஞையோடு கவிதைகள் எழுதி வரும் முக்கியக் கவிகளில் ஒருவர் வெய்யில். சீவலப்பேரி அருகே உள்ள கான்சாபுரத்தில் பிறந்தவர். பின்பு பிழைப்பு தேடி நகரத்துக்கு இடம்பெயர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு வடிவமைப்புப் பணி செய்தவர். கொம்பு சிற்றிதழின் ஆசிரியர்.

புவன இசை, குற்றத்தின் நறுமணம், கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃபிராய்டு, மகிழ்ச்சியான பன்றிக்குட்டி கவிதை நூல்களைத் தொடர்ந்து ஆணவக்கொலையை மையப்படுத்தி 2019 வெளிவந்த இவரின் அக்காளின் எலும்புகள் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நூலுக்காக ஆத்மாநாம் விருது வழங்கப்பட்டது. இவரின் அடுத்த நூலான `அதிகாரத்தின் இறைச்சி’ இந்த ஆண்டு இறுதியில் வெளிவர உள்ளது.

நவீன கவிதைகள் நிலம் சார்ந்த வாழ்வியலை மையப்படுத்துபவை ஒரு வகை என்றால் முற்றிலும் நிலத்திலிருந்து தம்மைத் துண்டித்துக் கொண்டவை மறுவகை. இவற்றில் வெய்யிலின் கவிதைகள் முதல் வகையைச் சேர்ந்தவையாகும். அவை வெறுமனே நிலம் சார்ந்த வாழ்வியலைக் கழிவிரக்கத்தொடு அணுகுபவை அல்ல; நவீன அறிவார்த்தமும் பண்பாட்டு வாழ்வனுபவமும் முயங்கிய அழகியல்தன்மை கொண்டவை. மேலும், பிரமாதமான கூத்து பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்துபவையும்கூட. வெய்யில் கவிதைகளில் இடம்பெறும் உலக்கை, பனை, பன்றி, செவ்வரளி, சாராயம், குறிஞ்சிப் பூ எருமை, எருக்கம் பூ ஆகியவை நவீன கவிதைகளின் வழக்கமான சட்டகங்களுக்கு மீறிய போக்கிரித்தன்மைகொண்ட மாற்று அழகியலை முன்வைக்கின்றன.

ஆணவக் கொலை இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய நிலபரப்பில் நடந்து வருகிறது. பெரும்பான்மைச் சமூகமான ஆதிக்கச் சாதியில்தான் பரவலாக நடக்கின்றன என்றாலும் ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்திலும் அரிதாக நடக்கவே செய்கின்றன. இவர்களில் யார் பக்கமும் தனித்து நின்று பேசாததே இத்தொகுப்பின் தனி இயல்பு. மேலும் சொல்லாமல் விட்ட மர்மங்கள் நம்மைப் பித்துப் பிடிக்கவும் செய்பவையாகும். ஆகப்பெரும் பலமே இந்த மர்மங்கள்தான். அதனால்தான் “அந்த அமாவாசை அன்று என்னதான் நடந்தது அக்காவுக்கு”, “அக்காவின் பிரேதத்தில் எந்த இடத்தில் என்னதான் பச்ச குத்தி இருந்தாள்” போன்ற கேள்விகள் ஒருவித கலக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

தொகுப்பு முழுவதும் பெரும்பான்மையாக ஆதிக்கச் சாதியினரின் குற்றவுணர்வாகச் சன்னமாய் ஒலிக்கிறது. அதுவும் சிறுவனின் குரலில். அவன், ராத்திரி ஆகப்போகிறது ஊருக்குள் சோறு எடுக்கப்போன அக்கா இன்னும் வீடு திரும்பவில்லையே என்று பதறுகிறான். புத்திகாணாத சிறுவனாகி அக்காவின் வெட்டுண்ட தலையின் கண்களை மூடும் வேலையைச் செய்கிறான். அக்காவைக் கொன்ற மச்சானை ஏதும் செய்ய இயலாமல் கிண்ணியைத் தெருவில் வீசுகிறான். அக்காவின் வாழ்க்கையைப் பாழாக்கிய எசப்பாட்டுக்காரனை எங்க பார்த்தாலும் கொல்லணும் என்று வெறியோடும் அலைகிறான். அறிந்தோ அறியாமலோ அவனும் கொலைகளுக்குத் துணைபோகிறான் அல்லது வேடிக்கை பார்க்கிறவனாகவும் இருக்கிறான். ஆகவேதான், துயில் கலைந்திடாது அக்காவின் தலையை அரிந்து செல்லும் கூட்டத்தோடு ஒருவனாக நிற்கிறான்.

சிறுவன் உட்பட அப்பா, அம்மா ஆகியோரின் குற்றவுணர்வின் நிழல் வாசிப்பவரின் மீதும் படிவதைத் தவிர்க்கமுடியவில்லை. அக்குற்றவுணர்வுதான், குலவைச் சத்தத்திற்கு நடுவே ரகசியமாக அப்பாவை அழவைக்கிறது. தம்பியும் தங்கையும் “அக்கா எங்கே, அக்கா எங்கே” என்று கேட்கும் போது அம்மாவை அழவைக்கிறது. அக்காவின் கல்லறையில் அத்தனை பண்டம் வைத்தும் எடுக்காத காக்கை செவ்வந்தி மாலையைக் கொத்திப் பிடுங்குகையில் “நான் பெத்த எடுத்த அதிரசமே” என்று கேவுகிறது.

எத்தனையோ அக்காக்களோடு மாட்டுத்தோல் உரித்தவனும் வேதக்காரனும் பலியாகிறார்கள். மேலும், தந்தையை, தாயை, அண்ணனை, குடும்ப அமைப்பை வலுவாக எதிர்க்கும் அக்காளின் எலும்புகள் பெண்களை மையப்படுத்திய தொகுப்பென்றாலும் வர்ணாஸ்ரமத் தன்மைகொண்ட ஆண்மையவாதத்திற்கு எதிரான பிரதியாக உருவெடுத்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான ஆணவக்கொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்ந்து அதிகரித்துவரும் சமகாலச் சூழலில் கவிஞர் வெய்யிலைச் சந்தித்தேன். மழைக்காலத்தில் வெய்யிலுடன் நடந்த உரையாடலில் இருந்து…

 

நீங்கள் பிறந்த ஊர், குடும்பப் பின்னணி, பால்யம் பற்றிக் கூறுங்கள்…” 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தேன். அப்பா ஒரு விவசாயி மற்றும் கிராமியக் கலைஞர், அம்மா வில்லிசைக் கலைஞர். எங்கள் குடும்பம் ரொம்பப் பெரிது. அதனால் பட்டியலைத் தவிர்க்கிறேன். அம்மாவின் வயிற்றில் கருவுற்ற காலம் முதல் நடை பழகியது வரை என் உலகம் என்பது வில்லுப்பாட்டு மேடையாகத்தான் இருந்தது. மேளம், நாதஸ்வரம், உறுமி, வில்லிசை, களிமண்- மஞ்சள்- சந்தனத்தில் செய்யப்பட்ட திருவுருவங்கள், சாமியாடிகளின் உக்கிரத் துள்ளல், ஆங்கார ஒலி, பூமாலைகளின் வாசனை, பலி விலங்குகளின் ரத்தவாடை என ஒரு கலவையான திருவிழா வாசனையும் காட்சிகளும் இசையும்தான் மங்கலான அந்த நினைவு முழுக்க நிறைந்திருக்கின்றன. இதன் தாக்கம், நான் கவிஞனாய் இருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.

நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. என்னுடனே முளைத்து எழுந்து வளர்ந்த பனைகள், தொழுவம் நிறைய என்னுடனே வளர்ந்த கன்றுகள் என என்னுடைய பால்யம் இருந்தது. அவற்றை மேய்க்கச் செல்வதன் வழியாக, மிகப்பெரிய ஆறும் ஆற்றங்கரையும், குளங்களும், மேய்ச்சல் நிலமும் பெரும் அனுபவத்தைத் தந்தன. தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விளையாட்டு, பாட்டு, விசில் என அக்காலம் சுவாரஸ்யமும் உற்சாகமாகவும் இருந்தது. விளையாட்டு, தின்பண்டம், காதல், திருவிழாக்கள் என அனைத்தும் பனைமரங்களைச் சார்ந்தே இருந்தது.

கோடை காலத்தின் வெப்பம் தாங்காமல் தாமரைகளைப் பறித்து மாலையாக்கிக் கழுத்து நிறைய சூடிக்கொண்டு அழியும் உளுந்து வயல்களில் திரிந்த வெய்யில் எனும் சிறுவனின் மொழியில் அழகியலில் எப்போதும் நீங்காதிருப்பவை எருமைகள், பனைகள், எண்ணெய் பூசிய அம்மன் சிலைகள், நிறைய மின்மினிகள்… இவைதான் என் பால்யம். இதுதான் என் பின்னணி!”

கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம்பெயரும் சூழல் எப்படி ஏற்பட்டது

குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால், பதினாறு வயதில் எனது கிராமத்தை விட்டுப் பிரிந்தேன். வெறுங்கையோடு நகரத்தின் சூடான தார்ச்சாலைகளில் நடக்கத் தொடங்கியதுதான் தாமதம், இரக்கமற்ற எல்லா விஷயங்களையும் எதிர்கொண்டேன். பணம், வன்முறை, தண்டனை, ஏமாற்று, நடிப்பு, பாலியல், துரோகம், வலி என எல்லாம் புரிந்தது. வயதுக்கு அதிகமான அனுபவங்கள்… விதவிதமான பாதைகள் வசீகரித்து அழைத்தன. சில நண்பர்களின் துணையால் நான்  ‘கொஞ்சம்’ சரியான பாதையைத் தேர்ந்துகொண்டேன். ஹோட்டல், பெட்ரோல் பங்க், அச்சுக்கூடம், உரத்தொழிற்சாலை எனத் தொடங்கி, விதவிதமான வேலைகள்… எல்லாவற்றுக்கு இடையிலும் விடாப்பிடியாகப் படித்தேன். கணிப்பொறி பயிற்சியாளராக, தனியார் நிறுவனத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக நல்ல பணியில் இருந்தேன். நவீன இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. பிறகு வாழ்க்கை வேறு ஒரு ஆட்டத்துக்கு மாறியது.”

நவீன இலக்கிய நுழைவு குறித்துச் சொல்லுங்கள்…” 

கிராமம் நகரம் இரண்டிலும் சொல்லிக்கொள்ளும்படியான போராட்ட வாழ்க்கை, பல்வேறு பணி அனுபவம், ஆயிரக்கணக்கான மனிதர்களைச் சந்தித்ததில் சொல்ல கொஞ்சம் விஷயமிருந்தது. வாசிப்பின் வழியே மொழியைச் சற்றுக் கைப்பற்றியிருந்தேன். ‘அர்த்தமுள்ள இந்துமத’த்தில் ஆரம்பித்து விவேகானந்தர், பரமஹம்சர், ஓஷோ என நீண்டு ஆன்மிகத் தேடல் முற்றி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சொற்களில் கொஞ்சம் ஸ்லோவாகி ‘நான் ஏன் நாத்திகன்?’ புத்தகத்தில் வந்து நின்றிருந்தது மனமும் மூளையும். தமுஎகச நண்பர்களால் மார்க்சியம் அறிமுகமாகியிருந்தது. கைக்குக் கிடைத்த இலக்கிய இதழ்களை வாசித்தபோது, இந்தக் களத்தில் நமக்கும் சொல்ல விஷயமிருக்கிறது என்று நினைத்தேன்; எழுதினேன். பிறகு, பலரும் என் பெயருக்குப் பின்னால் கவிஞர் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் நிறைய உழைத்தேன். இதோ இப்போது இந்தப் பயணம் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது, இன்னும் வெகுதூரம் நடக்க வேண்டும்.”

அக்காளின் எலும்புகள் எழுதத் தூண்டுகோலாய் இருந்தது எது?” 

எங்கள் கிராமத்தில் மின்சார வசதி இருந்த சொற்ப வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. வீட்டின் முற்றத்தில் குண்டு பல்பு எரிய, இரவுகளில் விடிய விடிய அக்காக்கள் பீடி சுற்றுவார்கள். நான் பெரும்பாலான இரவுகளில் அவர்களோடுதான் இருப்பேன். நான் சிறுவன் எனக்கு எதுவும் புரியாது என்று நினைத்து அவர்களுக்குள் ‘எல்லாமும்’ பேசிக்கொள்வார்கள். அவர்களின் நட்பு, காதல், குடும்பப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை, மணவாழ்க்கைக்கு வெளியில் உள்ள காதல், நோய், உடல் சார்ந்த விஷயங்கள் எனக் கதைகள், மகாபாரதத்தைவிட நீண்டதும் கிளைக்கதைகள் கொண்டதும் வலியும் சுவாரஸ்யமானதுமாய் இருக்கும். தற்கொலை செய்துகொண்ட, கொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அக்காக்களின் கதைகளைக் கேட்டிருப்பேன். அக்காக்களின் கதைகள் சொல்லப்பட வேண்டும் என்று எப்போதும் நினைத்திருக்கிறேன். எனது முதல் தொகுப்பில், அக்காக்களின் கதை என்று ஒரு கவிதை உண்டு. சற்று பெரிய கவிதை, ‘புளியம் பூக்களின் உள்ளிதழில் ஓடும் செவ்வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது அக்காக்களின் கதை’ என்று அக்கவிதை முடியும். அன்றைக்கு இருந்த புரிதலில் அவ்வளவுதான் எழுத முடிந்தது. அதன் நீட்சிதான் ‘அக்காளின் எலும்புகள்’ என்று நினைக்கிறேன்.

எந்தச் சம்பவம் இக்கவிதைகளை உடனே எழுத வேண்டும் என்று உந்தியது?” 

ஒருமுறை ஊருக்குப் போயிருக்கும்போது, தூரத்து உறவில் ஒரு அக்கா இறந்துவிட்டார். ரொம்ப நாள் தனிமையில் வாழ்ந்தவர். அவரது உடல் எரிக்கப்பட்டு, மறுநாள் மிச்ச எலும்புகளை வைத்துச் சடங்கு செய்துகொண்டிருந்தார்கள். பாலை எலும்பின் மீது ஒவ்வொருவராக ஊற்றிக்கொண்டே இருந்தார்கள். ‘ஏன் எலும்பைப் பாலில் நனைக்கிறீர்கள்… எலும்பு குடிக்கும் என்று ஐதீகமா?’ என்று கேட்டேன். “இல்லை. எலும்பு தீயில் வெந்திருக்குமல்லவா… எலும்பின் சூடு தணிக்க!’ என்று சொன்னார்கள். எனக்குள் கேள்விகள் எழுந்தன, நெருப்புச் சூட்டைத் தணிக்கலாம்…  எலும்பின் தனிமையை? கொலைசெய்யப்பட்ட எலும்பின் கோபத்தை? தற்கொலை செய்துகொண்ட எலும்பின் ஆற்றாமையை? அந்தச் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட எத்தனையோ அக்காக்களின் எலும்புகள் கேள்வி கேட்பதுபோலிருந்தது. அங்குதான் ஆரம்பித்தது!”

முழுத்தொகுப்பாக எழுத வேண்டும் என்று அப்போதே தீர்மானித்துவிட்டீர்களா?” 

இல்லை. ‘அ’வில் தொடங்கி ‘ஔ’ வரையிலான உயிரெழுத்துகளைத் தலைப்பிட்டு 12 கவிதைகள் மட்டுமே எழுதினேன். கல்குதிரையில் அக்கவிதைகளைப் பிரசுரித்த எழுத்தாளர் கோணங்கி, மொத்தத் தமிழ் எழுத்துகளையும் தலைப்பிட்டு 247 கவிதைகள் எழுது என்று உற்சாகமூட்டினார். நானும் முயன்றேன். ஆனால் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்துக்கு ஆளானேன். தூங்க முடியவில்லை. கவிதைகளாக எழுதியது கொஞ்சம்தான், ஆனால் மனதுக்குள் உருபோட்ட கதைகள் ஏராளம். மனம் முழுக்கக் கொலை செய்யப்பட்ட, தற்கொலை செய்துகொண்ட அக்காக்களின் பிம்பங்களாக வரத்தொடங்கின. மற்றொரு சமயத்தில் தொடரலாம் என நிறுத்திவிட்டேன். அப்போது வரை எழுதிய கவிதைகள் மட்டும் தொகுப்பாக வந்தது. கையிலிருந்த குறிப்புகளையெல்லாம் கிழித்து எரித்துவிட்டேன்.”

`அக்காளின் எலும்புகள்தொகுப்பை எல்லோரும் கொண்டாடுவதற்கு மிக முக்கியமான காரணம், தொகுப்பு முழுவதும் ஒலிக்கும் ஓர் அப்பாவிச் சிறுவனின் குரல் என்று எடுத்துக்கொள்ளலாமா

“மிகச் சரியாகச் சொன்னீங்க. வயதுக்கு வராத, உலக நடப்புகள் குறித்து ஒன்றும் தெரியாத, குறிப்பாகப் பாலியல் சார்ந்து ஒன்றும் தெரியாத சிறுவனின் குரலே பிரதானமாய் ஒலிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். அக்காவின் காமம், தனிமை, காதல் குறித்துப் பேசுகிறபோது, கொஞ்சம் பிசகினாலும் மொத்தமாய்ச் சொல்ல வரும் விஷயம் அபத்தமாகிவிடும். எனவே கவனமாக அந்தக் குரலை; அந்தச் சிறுவன் முன்வைக்கும் படிமங்களைக் கையாண்டேன். ‘அக்காவோட தலையில… தாவணியில… நாயுருவி விதை ஒட்டியிருந்துச்சு… அன்னிக்கு வீட்டுல அக்காவ அடிச்சாங்க’னு சொல்லத் தெரியும் அந்தச் சிறுவனுக்கு… அவ்வளவுதான். ஏன் எப்படி ஒட்டியிருக்கும் என்ன நடந்தது என்பது வாசகர்களின் அனுமானத்துக்கானது. ஒரு அப்பாவிச் சிறுவனின் சாட்சியக் குறிப்புகள்… மங்கலான விவரிப்புகள்… அதைக்கொண்டு வயதுக்கு வந்த வாசகர்கள் உண்மையை நெருங்க வேண்டும் என்பதுதான் அக்காளின் எலும்புகள் கவிதைகளின் இயங்குமுறை.”

அக்காளின் எலும்புகள் கவிதை நூலுக்கு வரவேற்பு எப்படி இருந்தது. குறிப்பாகப் பெண்கள் மத்தியில்” 

“கணக்கில்லாத மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது இந்தத் தொகுப்பு. தொகுப்பு வெளியான நாள் முதல், இப்போதும்… வாரத்தில் ஏதாவதொரு நாளில் ஒரு அழைப்பு நிச்சயம் வருகிறது. திடீரென யாரோ நள்ளிரவில் அழைத்து, `அந்த அமாவாசை இரவில் அக்காவுக்கு என்னதான் நடந்தது’ என்று கேட்கத்தான் செய்கிறார்கள். ‘அக்கா, அப்படி எந்த இடத்தில்… என்னதான் பச்சை குத்தியிருந்தால்?’ என்று கேட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட மெயில்கள் வந்திருக்கும். மனிதர்கள் இன்னும் உணர்ச்சி மிகுந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். நிறைய புதிய அக்காக்களை தந்திருக்கின்றன இந்தக் கவிதைகள்”

எந்தப் பெண்ணும் தன்னை தேவதைஎன்றோ தெய்வம்என்றோ சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறார்.  அவர்களை ஒருபக்கம் ஒடுக்கிக் கொன்றுகொண்டே… மறுபக்கம் புனிதப்படுத்தும் ஆண்மையவாதப் பாசாங்கை எப்படிப் பார்க்கிறீர்கள். உங்கள் கவிதைகள் இங்கே எப்படி வெளிப்படுகின்றன?” 

இந்தக் கவிதைகளில், கவிதை சொல்லி ஒரு ஆண் என்றாலும், அவன் சிறுவன். அவனுக்கு ஆண்மைய வாத அதிகாரத்தை, பாசங்கைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், யதார்த்தத்தில் இக்கவிதைகளை எழுதும் வெய்யில் கவிதைக்குள் ஆண்மையவாத அரசியலின் மீதான விமர்சனத்தைப் பொதிந்துவைத்திருக்கிறான். குடும்ப அமைப்பை, சமூக விதிமுறைகளை மீறத்துடிக்கிற; மீறுகிற அக்காக்களுக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்கிறான். இருவராலும் உண்மையில் அவ்வளவுதான் முடியும்.

மேலும் நம் சமூகத்து ஆண் மனதைப் பற்றிக் கேட்டீர்கள் என்றால், இன்னும் கொஞ்சம்கூட நவீனப்படவில்லை என்றே சொல்வேன். ஆணவக்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நம் கல்வி, கலை, ஊடகங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம் எதுவும் பெண்களுக்கு எதிராகச் சிந்திக்கிற ஆண் மனதைப் பக்குவப்படுத்தவில்லை. நம் பெண்தெய்வங்களில் நூற்றுக்குத் தொண்ணுறு தெய்வங்கள், கொலையுண்டவை அல்லது தற்கொலை செய்துகொண்டவைதான். குற்றவுணர்ச்சியும் அச்சமும்கொண்டு பெண்ணை தெய்வமாக்கியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் உண்மையும் இருக்கிறது பாசாங்கும் இருக்கிறது. சுருக்கமாக நான் சொல்ல விரும்புவது; இருக்கிற பெண் தெய்வங்கள் போதும். இனி கொன்று அல்லது தற்கொலைக்குத் தூண்டி ஒரு புதிய பெண்தெய்வத்தை யாரும் உருவாக்க வேண்டாம் என்பதுதான். இதில் இன்னும் நுட்பமாகப் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.”

அக்காளின் எலும்புகளுக்குக் கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக எதைக் கருதுகிறீகள்

அங்கீகாரம் பற்றிய எதிர்பார்ப்போ கவலைகளோ இல்லை. கவிதைகள் வாசிக்கப்பட வேண்டும் அவ்வளவுதான். தொகுப்பை பத்து முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் வாசித்தவர்களை எனக்குத் தெரியும். இன்னுமா இவர்களுக்கு இந்தக் கவிதை தீரவில்லை என்று நினைத்திருக்கிறேன். அந்தக் கவிதைக்குள் நிறைந்திருக்கும் உண்மைக் கதைகள்தான்; உண்மையான உணர்ச்சிகள்தான் அதன் பலம். மொழியும் அழகியலும் இரண்டாம் பட்சம்தான். ஒருநாள், கவிஞர் வண்ணதாசன் ஒவ்வொரு கவிதையாக வாசிக்க வாசிக்க அக்கவிதையிலிருந்தே ஒரு புது கவிதையை எழுதி மெசேஜ் செய்துகொண்டே இருந்தார். அந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் விநோதமாகவும் இருந்தது. மூன்று மூன்று வரிகளில் அமைந்த முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள்… அந்தக் கவிதைகளைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

கவிதையில் வரும் அந்தச் சிறுவனுக்கும் அவனின் சொந்த அக்காவுக்குமான பால்யகால நினைவுகள் பற்றி… 

அக்கா ரொம்பவே யதார்த்தமான மனுஷி. அவளும் வில்லிசைக் கலைஞிதான். நான் என்னை இப்போதும் சிறுவனாக உணர்கிற தருணங்கள் அவளால் மட்டுமே வாய்க்கிறது. எங்கோ சுற்றித்திரிந்துவிட்டு வருகிற என்னிடம், எதோ ஒன்றைப் பேசிக்கொண்டு எந்த பிரயத்தனமும் இல்லாமல் என் தலைக்கு எண்ணெய் பூசிவிடுகிற அக்கா ஆச்சர்யமானவள்தான். இப்போதும் அதுபோன்ற தருணங்களில் நறுமணத்தைலம் தலையில் ஊற்றப்பட்ட இயேசுவைப்போல அப்படியே ஏகாந்தித்து உட்கார்ந்துவிடுவேன். என்னை அதிகம் தூக்கிச் சுமந்தவள் அக்காதான். என் கிராமத்தைவிட்டு, என் பால்ய நினைவுகளைவிட்டு வெகுதூரம் பயணித்து வந்துவிட்டேன். சொல்லப்போனால் என் அசலான மொழியை கதைகளை மனிதர்களை இழந்துவிட்டேன். எனது பால்ய நினைவுகளின் மொழியின் கதைகளின் அகராதியாக இப்போது அக்காதான் இருக்கிறாள்.”

சமகாலக் கவிதையில் அறிவார்த்தமும் மொழிச் செழுமையும் நூதனமும் நவீனமும் இருந்தாலும், தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்க்கமுடியாத தன்மை நிறைந்து இருக்கிறது. ஆனால் உங்கள் கவிதைகள் நம் மரபை அடியொற்றிச் செல்லும் அதேநேரம், சமகால அரசியலையும் பேசுகின்றன. ஆனால், அக்காளின் எலும்புகள் தவிர்த்து உங்கள் ஒட்டுமொத்த நூல்களின் கவிதை உலகமும் அனுபவம் குறைவாகவும் அறிவார்த்தம் மிகையாகவும் இருப்பதாக உணர்கிறேன்.”     

உங்கள் வாசிப்பில் அப்படி நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நான் எப்போதும் அறிவார்த்தங்களை அரசியலை முதன்மையாக முன்வைத்து கவிதைகளைத் தொடங்குகிறவன் அல்ல. அதேசமயம் அப்படித் தொடங்குவது தப்பும் அல்ல. கவிதை முற்றிலும் சூழல் சார்ந்தது. ‘அம்மாவுக்கு வந்த மஞ்சள் காமாலை நோய் – அதைக் குணப்படுத்திய கீழாநெல்லிச்செடி’ குறித்த கவிதையை எழுத ஒரு அணுகுமுறை… ‘ஒரு பெண் துப்பாக்கியைக் கனவில் கண்டால் அதற்கு ஆண்குறி மட்டுமே குறியீடு அல்ல’ என்று ஃபிராய்டுக்குச் சொல்ல ஒரு அணுகுமுறை. என்ன உள்ளீடு என்பதைப் பொறுத்து ஒரு கவிதையின் மொழி, வெளிப்பாடு, உணர்ச்சி மிகுதல் அல்லது அறிவு மிகுதல் ஆகியவை நடக்கிறது. ஒருவர் அறிந்துகொள்ள நான் ஒருபோதும் கவிதை எழுதுவதில்லை; ஒருவர் உணர, அனுபவம் கொள்ள என் பார்வையில் பங்கேற்கவே எழுதுகிறேன்.

`நள்ளென் யாமம்போன்ற சங்கப் படிமங்களை உங்கள் கவிதைகளில் அப்படியே எடுத்துக் கையாள்கிறீர்களே. அக்காளின் எலும்புகள் மட்டுமல்லாது உங்களின் பிற கவிதைகளிலும் சங்கப் படிமங்கள் நிறைந்து கிடக்கின்றன. இதை கற்பனைப் போதாமை என்று எடுத்துக்கொள்ளலாமா

என்ன சொல்கிறீர்கள்… கற்பனை போதாமையா… இரண்டாயிரம் ஆண்டுகளாகக் குறிஞ்சி என்ற மலர்மீது ஒரு தொன்மம் – அர்த்தம் – அழகியல் படிந்துகிடக்கிறது… அதை நான் சரியான தருணத்தில் அதன் அர்த்தம் இன்னும் ஆழமாகும்படி நவீனக் கவிதைக்குள் கொண்டுவர வேண்டாமா? அப்படிக் கொண்டுவருவது கடன் பெறுதலோ காப்பி அடித்தலோ அல்ல, உரிமையோடு சூடிக்கொள்ள வேண்டிய மூதாதையின் சொத்து மற்றும் செய்ய வேண்டிய பணி. அக்காவின் காமம் குறித்துப் பேச முற்படும்போது, ‘அக்கா குறிஞ்சியைச் சூட விரும்பினாள்’  என்று எழுதுகிறேன் இதைவிட சூசகமாக வேறு எப்படி எழுத முடியும்? அதேசமயம் அந்தத் திணைமலர் மீது படிந்திருக்கிற உணர்ச்சியை நான் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு. நான் எடுத்தாளும் ‘நள்ளென் யாமம்’ என்கிற சித்திரத்தையும் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.”

இப்போது நடக்கும் ஆணவக்கொலைகளைப் பற்றியும் ஹத்ராஸ் போன்ற பாலியல் வன்கொடுமைகளைப் பற்றியும் உங்கள் பார்வை என்ன?

மதவாதமும் பிற்போக்குத்தனமும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படும் காலமாக இருக்கிறது. ஏனென்றால், அதன் கையில் இன்று அரசியல் பலம் கூடியிருக்கிறது. ஒரு பெண் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறாள். அவளது இறுதிச்சடங்குக்குகூட அனுமதியின்றி நள்ளிரவில் காவல்துறையே அவளை அவசர அவசரமாக எரித்திருக்கிறது. இதுதான் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அவளது சுயமரியாதைக்கு இந்த மண்ணில் தரப்படும் மரியாதை. கவனமும் நீதியும் கருணையும்கூட வர்க்கரீதியாக சாதிய ரீதியாகத்தான் கிடைக்கிறது. அந்தப் பெண் எரிக்கப்பட்ட புகைகூட இன்னும் காற்றிலிருந்து மறையவில்லை, அதற்குள் இதோ பெண் தெய்வங்களைக் கொண்டாட நவராத்திரி பண்டிகைக்குத் தயாராகிவிட்டோம். நமது குடும்ப அமைப்பு, மத நம்பிக்கைகள், சாதியக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவராமல் பெண்களின் பாதுகாப்பையும் சுயமரியாதையையும் இங்கு சாத்தியப்படுத்தவே முடியாது. இந்திய ஆண்களின் பிற்போக்குத்தனம் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும். அப்படியான சுயவிமர்சனத்தை நாம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும்.

அடுத்து என்ன எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்

“மனிதகுல பரிணாம வரலாற்றை நவீனக் கவிதையாக்க முடியுமா என்று முயன்று வருகிறேன்!”

அக்கா இங்குதான் வாழ்ந்தாள்
ஊழரித்து நிற்கிறது ஒற்றை மண்சுவர்
அதைச் சுரண்டிச் சுரண்டித் தின்கிறாள்
நீலக்கண் சிறுமி
ஞொள்ளென்று அவளை அதட்டினேன்
`இன்னும் கொஞ்சம்தானே
ஒரு வீட்டையாவது முழுசாகத் தின்னவிடுங்களேன்!’
என்பது போலப் பார்க்கிறாள்.

(`அக்காளின் எலும்புகள்’ கவிதை தொகுப்பிலிருந்து)

நேர்காணல் & நிழற்படங்கள் : பச்சோந்தி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்