Aran Sei

`மக்கள் உதவுகிறார்கள்; மருத்துவம் பார்க்கிறோம்’ – நடிகர் தவசியின் குடும்பத்தினர்

தென்மாவட்டங்களை மையமாக வைத்து வரும் சமீபத்திய தமிழ்ப் படங்களில், தவிர்க்க முடியாதவராக இருப்பவர் நடிகர் தவசி. வட்டார வழக்குடன் கூடிய நய்யாண்டிப் பேச்சுகளால், அனைவருக்கும் எளிதில் பரிச்சயமானவர். ’டேய் மயனே, மாப்ளேய்,..’ என்று அவர் கூப்பிடும் போது, வெகுளித்தனத்தோடு கொஞ்சம் தோரணையும் சேர்ந்தே வெளிப்படும்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமப் பூசாரியாக வந்த கதாபாத்திரத்தை யாராலும் எளிதில் மறக்க முடியாது. இந்நிலையில், நடிகர் தவசிக்குப் புற்று நோய் ஏற்பட்டுப் பணமில்லாமல் தவிப்பதாகச் செய்திகள் இணையத்தில் பரவின. மேலும், உடல் இளைத்து, நொடிந்து போய்க் கைகளைக் கூப்பியபடி இருக்கும் புகைப்படங்களும் வைரலாகின.

நடிகர் தவசியின் உடல்நிலை குறித்து, அவரின் மருமகனான ராதாகிருஷ்ணனிடம் அரண்செய்  பேசியது.

கடந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் அவரைத் திரையில் அடையாளம் காண முடிகிறது. அதற்கு முன்பே நடிக்கிறாரா? அவரின் தொழில் என்ன?

அவருடைய சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பல வருஷங்களாக விவசாயம் செய்து வருகிறார். இன்று நேற்று நடிக்கவில்லை. கிழக்குச் சீமையிலே காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

எந்த வகையான கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார்?

முதுகில் கட்டி வந்திருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே அறிகுறிகள் இருந்தன. சமீபத்தில் கேமரா மேன் ஸ்டில்ஸ் சிவா ஒரு கார் விபத்தில் இறந்து போனார். அந்த காரில் இவரும் இருந்தார். அப்போதே காயம் ஏற்பட்டது. அது கொஞ்சம் சரியானது. அப்படியே அண்ணாத்த படப்பிடிப்பிற்குச் சென்றுவிட்டார்.

கடந்த 30 நாட்களாகத்தான் உடம்பு வத்த ஆரம்பித்தது. அதற்குப் பின்தான் கேன்சர் என்று எங்களுக்குத் தெரிந்தது. கடந்த 11 நாட்களாகத்தான் உடல் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.

சமூக வலைத்தளங்களில் இப்போது அவர் குறித்த செய்திகள் நிறைய வருகின்றன. இதற்கு முன் யார் யாரிடம் உதவி கேட்டீர்கள்?

அவருடன் நடித்த பலருக்கு போன் செய்தோம். ஆனால் யாரிடமிருந்தும் சரியான பதில் இல்லை. அதனால்தான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தோம்.

துணை நடிகர் சங்கத்தில் இருந்து உதவிகள் வந்ததா? நிர்வாகிகள் வந்து பார்த்தார்களா?

சங்கத்திடமிருந்து எந்த உதவியும் வரவில்லை. யாரும் வந்து பார்க்கவுமில்லை.

இதுவரை எந்தெந்த நடிகர்களிடம் இருந்து உதவிகள் வந்திருக்கின்றன?

சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் கொடுத்திருக்கிறார். பரோட்டா சூரி 20 ஆயிரம் கொடுத்திருக்கிறார். மருத்துவமனையில் தவசி ஐயாவுடன் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு, சூரியின் ஹோட்டலில் இருந்து தினமும் சாப்பாடு ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதுவரை மருத்துவத்திற்கு எவ்வளவு செலவானது?

கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் செலவு செய்திருப்பார்கள். நகை, கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டுதான் கட்டியிருக்கிறோம். நேற்று இந்த மருத்துவமனையின் ஓனர், செலவுகளைப் பார்த்துக்கொள்வதாகப் பேட்டியளித்திருக்கிறார். ஆனால் அவராலும் எத்தனை நாட்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க முடியும்.

தவசியின் வங்கி பாஸ்புக், ஜிபே நம்பர்களும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறுகின்றன. அவற்றில் மக்கள் பணம் போடுகிறார்களா?

தொடர்ந்து மக்கள் அதில் பணம் போடுகிறார்கள். அதை வைத்துதான் மேற்கொண்டு வைத்திய செலவுகளைப் பார்க்க வேண்டும்.

துணை நடிகர்களுக்கு இந்த நிலைமை இன்று நேற்று வரவில்லை. பலகாலமாகவே  தொடர்கிறது. இதற்கு முன், பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு, பரவை முனியம்மா போன்ற, மக்களுக்கு நன்கு பரிச்சயமான துணை நடிகர்கள் பலர் மருத்துவத்திற்குச் செலவு செய்ய முடியாமல் தவித்தார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்