Aran Sei

“கோச்சிங் கிளாஸ் போகலனா நீட்ல தேறியிருக்க மாட்டேன்” – ஜீவித்குமாருடன் நேர்காணல்

நேற்று வெளியான மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளில், இந்தியாவிலுள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில், பெரியகுளத்தை அடுத்த சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பெற்றுள்ளார். கடந்தாண்டு ப்ளஸ் 2 முடித்த அவர், ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றுள்ளார். நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண் பெற்று, அகில இந்தியத் தரவரிசையில் 1823 வது இடம் பிடித்து சாதனை படைத்த அவர், அரண்செய்-க்கு அளித்த பேட்டி.

நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் மற்றும் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

சொந்த ஊர் பெரியகுளத்தை அடுத்த வாடிப்பட்டி, தேனியில் இருந்து 1 மணிநேரப் பயணதூரம். அப்பா ஆடு மேய்ப்பார்; அம்மா 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளி. மொத்தம் 3 பிள்ளைகள், நான் இரண்டாவது பிள்ளை. அக்கா பி.எஸ்.சி கணிதம் படித்துமுடித்துள்ளார், தம்பி 10- வது படிக்கிறான்.

சிறுவயதிலிருந்தே அரசு பள்ளியில்தான் படித்தீர்களா? தமிழ் வழிக் கல்வியா, ஆங்கில வழிக் கல்வியா?

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசு பள்ளிதான்; என் ஊருக்கு அடுத்து இருக்கும் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்; முழுவதும் தமிழ்வழிக் கல்விதான்.

மருத்துவக் கல்வியில் சேரவேண்டும் என்ற விருப்பம் எப்போதிருந்து ஏற்பட்டது? வாழ்வில் நடந்த ஏதேனும் குறிப்பிடத்தக்க நிகழ்வு?

மற்றவர்கள் சொல்வதுபோல் மருத்துவம் படிக்கவேண்டும் என்பது என்னுடைய சிறுவயது ஆசையெல்லாம் ஒன்றுமில்லை; சாதாரணமாகத்தான் படித்தேன். ப்ளஸ் 2 படிக்கும்போதுதான் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நீட் கட்டாயமாக்கப்பட்டபோது, உங்களால் மருத்துவக்கல்வியில் சேரமுடியும் என்று நம்பினீர்களா?

கட்டாயம் இல்லை. நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது வரைகூட, நீட் என்றால் என்ன, அதற்கு எந்தப் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும், எந்தெந்தப் பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்பார்கள் என்பது பற்றிய எந்தப் புரிதலும் எனக்கில்லை. ப்ளஸ் 2 வில்தான் ஒரு ஆசிரியர் 720 மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்படும், இந்தந்த பாடப்பிரிவில் இருந்து இத்தனை கேள்விகள் கேட்கப்படும், தவறாகப் பதிலளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் என்றெல்லாம் சொன்னார்.

ப்ளஸ் 2-வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு?

600-க்கு 548 மதிப்பெண் வாங்கினேன். என் பள்ளியிலும் மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளிலும் முதலிடம். ஆனால் முழுவதும் என் சொந்த முயற்சியிலேதான் அத்தனை மதிப்பெண் பெற்றேன். ஏனெனில், நான் படித்த அரசு பள்ளியில் (மற்ற அரசு பள்ளிகளைப் போலவே) சரியாகப் புரிகின்ற வகையில் சொல்லித்தர மாட்டார்கள். பல பாடங்களை நடத்தாமலேயே தவிர்த்துவிடுவார்கள். அவர்களின் இலக்கு மாணவர்களை 35 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கவைத்து, தேர்ச்சி விகிதத்தை 100% காட்டவேண்டும் என்பதுதானே தவிர, எந்த மாணவனையும் 80, 90 மதிப்பெண்ணுக்குமேல் எடுக்கவைக்க ஆசைப்பட மாட்டார்கள்.

அரசு சார்பில் அளித்த இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றதுண்டா? அந்தப் பயிற்சிமுறைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ம்ம் பங்கேற்றேன்… வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும் நடக்கும்; ஆனால் அவர்களும் அவ்வளவு சரியாக நடத்தமாட்டார்கள். ஒருவாரம் நடத்தவேண்டிய பெரிய பாடத்தையே, சுருக்கமாக ஒரு மணிநேரத்திற்குள் மிகச் சாதாரணமாக நடத்திவிட்டுப் போய்விடுவார்கள். தவிர, இணைய வசதியும் அங்கு பெரிதாகக் கிடைக்காது. என் ஊரிலிருந்து முக்கால் மணிநேரம் பயணித்துதான் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்பதால், ஒரு கட்டத்தில் அரசு பயிற்சி மையத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். கடைசியாகத் தேர்வுக்கு முன்பு ஒருமாதகாலம் பயிற்சி அளித்தார்கள். ஆனால் அதிலும் பெரிதாக ஒன்றும் நடத்தவில்லை.

முதல்முறை நீட்தேர்வுக்குத் தயாராகும்போதும், எழுதியபோதும் சந்தித்த சிரமங்கள்?

ரொம்ப சிரமப்பட்டேன்; 193 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். அதிலும் இயற்பியலில் தியரி (Theory) சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது; பிராப்ளம் (Problem solving) சம்பந்தமாக எதையுமே எனக்குச் சொல்லித்தராத காரணத்தால், அதற்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. உயிரியலிலும் எந்தக் கேள்வியும் பெரிதாகத் தெரியவில்லை; நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாகப் பள்ளியில் எதையுமே நடத்தவில்லை. வேதியியலும் அப்படிதான்; வெறும் 5 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தேன்.

சென்ற ஆண்டு, மருத்துவ இடம் கிடைக்காது என்று தெரிந்தவுடன் உங்கள் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது? ஓராண்டுப் பயிற்சி பெற யார் ஊக்குவித்தார்?

கொஞ்சம் வருத்தப்பட்டேன்; ஆனால், இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்றதால், ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தால், நிச்சயம் இந்தமுறை மீதி இரண்டு பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறமுடியும் என்று நம்பினேன். ஆகவே இந்த ஒருவருடம் மட்டும் முழுமையாகச் செலவுசெய்து நீட் பயிற்சி பெறவிரும்புகிறேன், என்று நானாகத்தான் வீட்டில் சொன்னேன். பிறகு, நாமக்கல்லை அடுத்த ராசிபுரத்தில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துவிடுவதாக, என் அம்மா ஊக்கமளித்தார்.

தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க எவ்வளவு செலவானது? யாரெல்லாம் உதவினார்கள்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை, 10 மாதங்கள் முழுமையாக அங்கேயே விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்றேன்; மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் கட்டணம் சொன்னார்கள்; பிறகு அதில் 30,000 ரூபாய் அந்தப் பயிற்சி நிறுவனமே சலுகை அளித்தனர். என் அம்மா 50,000 ரூபாய் வரை செலவு செய்தார். பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, 20,000 ரூபாய் அளவிற்கு நிதியுதவி செய்தனர். பிறகு சபரிமாலா என்கிற முன்னாள் ஆசிரியர், அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர் மூலமாக 10,000 ரூபாய் நிதியுதவி பெற்றுத்தந்தார்.

பயிற்சி மையத்தில் ஆங்கிலத்தில்தானே பயிற்சி அளித்தருப்பர், அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?

ஆம், அங்கு தமிழில் பயிற்சி வழங்காத காரணத்தால் ஆங்கிலத்தில்தான் பயிற்சி பெற்றேன். இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்வழியில் படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பயிற்சி பெறும்போது, முதல் ஓரிரண்டு மாதங்கள் மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் சில ஆசிரியர்கள் என்மீது தனிக் கவனம் செலுத்தித் தமிழிலேயே புரியும்படி பயிற்சி அளித்தனர். அங்கிருந்த நண்பர்களும் எனக்குப் பெரியளவில் உதவினர்.

தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்காமல், நீங்களாகவே ஒருவருடம் முழுவதும் சுயமாகப் புத்தகங்கள் வாங்கிப் படித்து தேர்வுக்குத் தயார் செய்திருந்தால், இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

நிச்சயம் இல்லை, அதிகபட்சம் 250 – 300 மதிப்பெண்தான் எடுத்திருப்பேன்; அதற்குமேல் வந்திருக்காது. இந்த ஒருவருடம் முழுமையாகப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதால்தான், இவ்வளவு மதிப்பெண் எடுத்தேன்; இல்லையென்றால் எடுத்திருக்க வாய்ப்பில்லை. தவிர, என்சிஇஆர்டி (NCERT) புத்தகங்கள் தமிழில் கிடைப்பதில்லை. அதனால் தமிழில் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவது மிக மிகக் கடினமானது. அதனால்தான் நான் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன்.

இந்த லாக்டவுன் சமயத்தில் இணையவழியில்தானே தேர்விற்குத் தயாராகியிருக்க முடியும், அதில் சிரமத்தைச் சந்தித்தீர்களா?

பெரிதாக இல்லை; ஏனெனில் அனைத்துப் பாடங்களையுமே மார்ச்சுக்கு முன்பே நடத்தி முடித்துவிட்டார்கள். இந்த 4 மாதங்களில் ஆன்லைனில் ரிவிசன் வகுப்புகள் மட்டுமே நடத்தினார்கள். மேலும் என் பள்ளி ஆசிரியர் ஒருவர் நான் படிக்க வசதியாக, அமைதியான அறை ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார். பயிற்சி மையத்தினர் என்சிஇஆர்டி புத்தகங்களைத் தந்தனர். சொல்லப்போனால் இந்தக் கொரோனா காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டதுதான் எனக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இந்தச் சமயத்தில்தான் கடுமையாகப் படித்து, தேர்வுக்குத் தயாராகவும் ரிவிசன் செய்யவும் அது உதவியாக அமைந்தது.

சென்றாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டதாகச் சொல்கிறார்களே அது உண்மையா?

உயிரியல் பாடப்பிரிவைப் பொறுத்தவரையில் அது உண்மைதான். ஆனால் சென்றாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு கேள்விகளும் சற்று எளிமையாகத்தான் இருந்தன. இந்தாண்டு பாடத்திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது; அது மிகக் கடுமையானதும்கூட; அதனால் அதிலிருந்து பல கேள்விகள் வந்திருக்கக்கூடும். ஆனால் எங்களுக்குப் பழைய  பாடத்திட்டத்திலேயே அரசு பள்ளியில் பாதியளவுகூட பாடங்களை நடத்தவில்லை. ஆகவே இந்தக் கடினமான புதிய பாடத்திட்டத்தின்படி எவ்வளவு சதவீத பாடங்களை முழுமையாக மாணவர்களுக்கு நடத்தியிருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள்.

முதல்முறை தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவரால், தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கோச்சிங் எடுக்காமல், மருத்துவ இடம் கிடைக்கும் அளவிற்கு மதிப்பெண்ணைப் பெற முடியுமா?

வாய்ப்புகள் மிகக்குறைவு. உயிரியலில் மட்டுமே பயிற்சி வகுப்பிற்குச் செல்லாமல், பள்ளியில் முறையாக நடத்தினால் அதிக கேள்விகளுக்குப் பதிலளித்திருக்க முடியும்; ஆனால் இயற்பியல், வேதியியல் பாடங்களைப் பொறுத்தமட்டில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கோச்சிங் பெறாமல், பெரியளவில் மதிப்பெண் எடுக்கமுடியாது. இப்பாடப்பிரிவுகளின் ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டோமேயானால், அதில் 250, 300 பிராப்ளம் கேள்விகள் இருக்கும்; அவற்றை சால்வ் (solve) செய்ய முறையாக நமக்கு பயிற்சி தேவை. அப்படி பயிற்சி பெறுவதன் மூலம்தான், தேர்வின்போது ஒரு நிமிடத்திற்குள் பதற்றப்படாமல் அப்போது நம்மால் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும். முன்பே சொன்னதுபோல் உயரியலில் வேண்டுமானால் கோச்சிங் பெறாமல் பள்ளியில் முறையாக நடத்தியதை வைத்து ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருக்க முடியும்; ஆனால் இயற்பியல், வேதியியலில் அது மிக சிரமமானது. இந்தவருடம் ஒருவேளை கேள்வித்தாள் எளிதாக இருந்ததால், சாத்தியப்படலாம்; ஆனால் பொதுவாகக் கடினம்தான்.

உங்களோடு படித்த பள்ளி நண்பர்களில் யாரேனும் நீட் தேர்வில் தேர்ச்சி  பெற்றுள்ளனரா? அவர்கள் தற்போது கல்லூரியில் என்னென்ன பாடப்பிரிவில் படிக்கிறார்கள்?

என்கூட அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் சென்றாண்டு 5 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதினோம்; அதில் நான் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண் பெற்றேன். பிறகு ஒருவருடம் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றதால்தான், இவ்வளவு மதிப்பெண்  பெற்றேன்; ஒருவேளை சென்றாண்டே பாடங்களை முறையாக நடத்தியும், தமிழ்வழியில் சிறந்த பயிற்சி வழங்கியும் இருந்திருந்தால், நான் உட்பட அந்த 5 பேரும் போன வருடமே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருக்கக்கூடும். என் நண்பர்களில் அனைவரும் கலை அறிவியல் படிப்புகளையே தற்போது படித்து வருகின்றனர். ஒரு மாணவி மட்டும் பொறியியல் படித்து வருகிறார்.

இறுதியாக, உங்களைப் போல் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற, என்ன செய்யவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்?

அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் தன்னம்பிக்கையில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை; ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடங்களை முழுமையாக நடத்தவேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், அனைவரும் சொன்னால்தான் அந்த ஆசிரியர் குறிப்பிட்ட அந்த ஒருபாடத்தை முழுமையாக நடத்துவார். ஓரிருவர் சொன்னால் கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர். எனக்கு உயிரியலில் 100 பக்கம் கொண்ட முக்கியமான முதல் பாடத்தில் 50 பக்கங்களுக்குமேல் நடத்தவில்லை. இத்தகைய மெத்தனப் போக்கு நீடிக்கும்வரை, அரசு பள்ளி மாணவரால் நீட் தேர்வில் சோபிக்கமுடியாது. பிறகு என்சிஇஆர்டி புத்தகங்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்து ஒவ்வொரு அரசு பள்ளி மாணவர் கைகளிலும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும். நான் ப்ளஸ் 2 படிக்கும்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2 புத்தகங்களை தமிழில் வெளியிட்டார்கள். பிறகு இந்த வருடம் நீட்டிற்குப் பயிற்சி எடுக்கும்போதுதான் தெரிந்தது. அதுபோல 10 புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன என்று, ஆக மீதி 8 புத்தகங்கள் எங்கே? அதுமட்டுமல்லாமல் அரசு சார்பில் இலவச நீட் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளி இயற்பியல், வேதியியல் ஆசிரியர்களே சரியாக எடுப்பதில்லை என்பதால், அவர்களுக்கே முதலில் பயிற்சி தேவைப்படுகிறது. இதை எதையுமே அரசு செய்யவில்லை என்றால், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படிக்கும், மருத்துவம் சேர விரும்புகின்ற மாணவர்களுக்கு, நீட் தேர்விற்குப் பயிற்சி பெற தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, அரசு சார்பிலே 2 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதியுதவி அளிக்கவேண்டும். அதைச் செய்வதற்கு பேசாமல் இதைச் செய்துவிட்டுப் போகலாம்…

என்று கூறினார் ஜீவித்குமார்.

இதுகுறித்து இந்திய வருவாய் பணியில் இருக்கும் பூ.கொ.சரவணன் அவர்கள் கூறுகையில், “ஜீவித் குமார் அவர்களின் நீட் வெற்றி பெருமைக்குரியது. வாழ்த்தும், பேரன்பும். எளிய பின்னணி கொண்ட அரசுப் பள்ளி மாணவர் மருத்துவராகும் தருணம் மகிழ்ச்சிக்குரியது.

இப்போது சிலவற்றைத் தெளிவாக உரையாடுவோம். குடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தைப் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிறபோது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்தச் சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்தச் சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேகச் சொற்பொழிவு ஆற்றும்.

கள உண்மை என்ன? எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள்? நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டுத் தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவகனவுகளுடன் இருக்கும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன?

நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2வில் வெற்றி பெறுவதும், எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.

நீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. ஆனால் அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலையும் ஒன்றும் கச்சிதமான ஒன்றில்லை. ஆனால் நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதைச் சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை” என்று தெரிவித்தார்.

ஆம், ஜீவித் குமாரின் சாதனை போற்றுதற்குரியது; அதேசமயம் அச்சாதனையை தவறாக நோக்கி திரிபு கதையாடல் செய்யும் வாய்ப்பும் அதிகமுண்டு. ஜீவித் குமார் அளித்த பேட்டியில் இருந்து தெளிவாவது, “அரசு பள்ளியில் படிக்கும் நேரடியாக அந்தாண்டே நீட்தேர்வெழுதும், பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வசதியில்லாத ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது இன்றும், (என்றும்) எட்டாக்கனியாகத்தான் உள்ளது” என்பதுதான். அவர்களில் அத்திப்பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஜீவித் குமார்கள், தங்கள் வறுமை, சமூகச் சூழல் போன்ற பல தடைகளை உடைத்து, தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு உழைத்துப் போராடி, மருத்துவப் படிப்பை அடைகின்றனர். ஆனால் எத்தனை எத்தனை பேருக்கு ஜீவித் குமாருக்கு அமைந்த நல்வாய்ப்பான ஆசிரியர்களின் நிதியுதவியும் ஊக்கமும் முழுமையான ஓராண்டுத் தனியார் பயிற்சியும் கிடைக்கும்? திறமை இருந்தும், கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தும், ‘தகுதி’ என்ற ஒற்றைக் காரணத்திற்காக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, எத்தனை அரசு பள்ளி கிராமப்புற ஏழ்மை பின்புலம் கொண்ட, ஜீவித் குமார்கள், கடந்த 3, 4 ஆண்டுகளில் ப்ளஸ் 2 தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வு காரணமாக தங்கள் மருத்துவப் படிப்பு கனவுகளைத் தொலைத்திருப்பர்? அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்? என்ன சமாதானம் சொல்லப்போகிறோம்?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்