Aran Sei

இது அவசர நிலையை விட மோசமான காலகட்டம் – ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

Image Credits: Financial Times

வம்பர் 16-ம் தேதி, இந்தியாவில் தேசிய பத்திரிகையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தொடங்கப்பட்ட இந்த நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய பத்திரிகையாளர் தின கொண்டாட்டம் சுதந்திரமான மற்றும் பொறுப்புள்ள ஊடக பணியைக் கவுரவிப்பதின் அடையாளமாகும். இந்திய அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை போதிக்கின்றது. ஆனால், உண்மையில் பத்திரிகையாளர்களுக்குச் சரியான செய்திகளை வழங்கும் சுதந்திரம் உள்ளதா?

வெறும் ஐந்து ஆண்டுகளில், எல்லைகள் இல்லாத செய்தியாளர்களின் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் (Reporters Without Borders’ press freedom index) இந்தியா சரிவைக் கண்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 136 வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 142 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உரிமை மற்றும் அபாயத்திற்கான பகுப்பாய்வுக் குழு (The Rights and Risks Analysis Group) வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 55 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவாகியுள்ளன, சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடல்ரீதியான தாக்குதல்கள் கூட நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் நடந்தேறியுள்ளது.

அண்மையில், சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனமும் பெல்ஜியத்தை சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பும், “பணியைச் செய்ததற்காக ஊடகவியலாளர்கள் மீது பதிவாகியுள்ள வழக்குகளை கைவிட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளது. தேசத் துரோக வழக்குகள் உள்ளிட்ட அணைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என்றும்  கூறியுள்ளது.

ஆனால், இதுவரை இந்த அமைப்புகளின் வேண்டுகோளுக்குப் பிரதமர் பதிலளிக்கவில்லை. இன்று, தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு காணொளி மாநாட்டை (webinar) ஏற்பாடு செய்துள்ளது. அப்போது, பிரதமரின் வாழ்த்துச் செய்தியை பிசிஐயின் தலைவர் சி.கே.பிரசாத் படித்துள்ளார்.

அச்செய்தியில், “கொரோனா விழிப்புணர்வை பரப்புவதில் ஊடகங்கள் சிறப்பான சேவையைச் செய்து வருகின்றன. அவை, அரசாங்க முன்முயற்சிகளில் உதவுவதிலும் மிகப் பெரிய பங்காற்றியுள்ளன” என்று பிரதமர் கூறியுள்ளார்.

இது குறித்து, மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அரண்செய்க்கு அளித்த நேர்காணல்:

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி விடுவிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு இன்னும் பிணை வழங்கப்படவில்லை. இந்த வேறுபாடு நிலவுவதற்கான காரணம் என்ன?

அர்னாப் கோஸ்வாமிக்கு ஒரு விதி சித்திக் கப்பனுக்கு ஒரு விதி என்பது தான் இதிலிருந்து தெரியவருகிறது. அர்னாப் கோஸ்வாமி வழக்கில் நீதிபதி சந்திரசூட் சுதந்திரத்தை பற்றி நிறைய பேசியுள்ளார். மாநில அரசு இவ்வாறு செய்யத் துவங்கினால் பத்திரிகை சுதந்திரமே பறிபோகிவிடும் என்று சந்திரசூட் கூறினார். இதை பற்றி அவர் பெரும் உபதேசத்தை அளித்தார்.

‘என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது’ – உத்தவ் தாக்கரேவிற்கு அர்னாப் சவால்

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் அர்னாப் கோஸ்வாமி எப்போது வேண்டுமென்றாலும் நீதிமன்றத்துக்குச் செல்லலாம், அவரது வழக்கு உடனடியாக விசாரிக்கப்படும். இதைப் பற்றி ஒரு மூத்த வழக்கறிஞர் கூடக் கேள்வி எழுப்பியுள்ளார். அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு மட்டும் எப்போது விண்ணப்பிக்கப்பட்டாலும் உடனே விசாரிக்கப்படுவது ஏன் என்று அவர் கேட்டுள்ளார். ஆகையால், உச்ச நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறதோ எனும் சந்தேகம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே எழுந்துள்ள இந்தச் சந்தேகத்தை உச்ச நீதிமன்றம் தீர்த்துவைக்க வேண்டும்.

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

சமீபத்தில், அரசியல் சார்புநிலை உள்ளதாகக் கூறி தமிழக ஊடக நிறுவனங்களிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். இதை பற்றிய உங்களது கருத்து?

அவ்வப்போது இந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள். அணைத்து மாநிலங்களிலும் இது நடைபெறுகின்றது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், கைது சம்பவங்களும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது பரவலாக நடைபெறும் ஒன்று தான். இதனால் ஊடக ஆரோக்கியம் கெட்டுவிடும் என்று நான் நினைக்கிறன். மற்றொன்று, இது மீண்டும் அச்சுறுத்தும் நடவடிக்கையைப் போல் உள்ளது. ‘என்னை பற்றி நன்றாக எழுதினால் நீ பிழைத்துக் கொள்ளலாம், என்னை பற்றி மோசமாக எழுதினால் நீ கைது செய்யப்படுவாய்’ என்பது தான் அரசாங்கத்தின் போக்காக உள்ளது.

‘என்னை பற்றி மோசமாகப் பேசினால் முடிந்தவரை உன்னை சூறையாடுவேன்’ என்பது எதிர்க்கட்சியின் போக்காக உள்ளது. இரண்டும் அச்சுறுத்தலில் தான் ஈடுபடுகின்றன.

இந்தியாவில் அவசர நிலையின் போது கூட ஊடகவியலாளர்கள் செயல்பட்டார்கள். இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

உதாரணங்களை பார்த்தால் இது குறித்து நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அவசர நிலையில் கூடப் பெரும் பத்திரிகை நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைக்காத செய்தியையோ வாக்கியங்களையோ எடுத்துவிடுவார்கள். ஆனால் அந்த இடத்தை வேறு செய்தியை வைத்து நிரப்பாமல் காலியாக விட்டுவிடுவார்கள். அந்தப் பகுதி மட்டும் வெள்ளையாக இருக்கும். அரசாங்கத்துக்கு எதிரான செய்தி இருந்தது, அதை அவர்கள் பிரசுரிக்க விடவில்லை என்பதை மக்களே புரிந்துகொள்வார்கள். அவசர காலத்தில் இவ்வாறு நடந்துகொண்டிருந்தது.

ஆனால் இப்போது, பத்திரிகைகள் அரசாங்கத்தின் பக்கமாகச் சாய்ந்துவிட்டது. ஊடகங்களும் பல உரிமங்களை பெறவேண்டி உள்ளது. ஆகையால், அரசாங்கத்துக்கு எதிராக எதையும் செய்யக்கூடிய நிலையில் ஊடகங்கள் இல்லை. அதனால், அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால், எதிர்ப்பு என்பதையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அன்று இருந்தது அறிவிக்கப்பட்ட அவசர நிலை. இன்று உள்ளது அதைவிட மோசமான நிலை. அன்றும் பல பத்திரிகையாளர்கள் சிறையில் இருந்தார்கள் இன்றும் பல பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர். அன்றும் பல அரசியல்வாதிகள் சிறையில் இருந்தார்கள் இன்றும் பல அரசியல்வாதிகள் சிறையில் உள்ளனர்.

சஞ்சீவ் பட் எதற்காகச் சிறையில் உள்ளார் என்று நம்மால் கேட்க முடியாது. பத்திரிகையாளர் மட்டும் இல்லை, அதே போல், பலர் சிறையில் உள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராடக் கூடாது, சாலைகளை முடக்கி போராட கூடாது என்று எல்லாம் நீதிமன்றங்கள் கூறுகின்றன. ஆகையால் ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லப்படும் துறைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாத சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது.

(தற்போது, ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் இணை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 1992-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் தனது பத்திரிகை பயணத்தைத் தொடங்கினார்.  2017-ம் ஆண்டுஅவர் மும்பை பிரஸ் கிளப்பின் ரெட்இங்க் மீடியா விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்