Aran Sei

“பாப்லோ நெருடா படத்தைப் பார்த்துவிட்டு நல்லகண்ணு உருகி அழுதார்” – நாடக இயக்குநர் பகு

`திணைநிலை வாசிகள்’ நாடக் குழுவின் இயக்குநர் பகு மதுரையில் பிறந்தவர். முருக பூபதியின் `மணல் மகுடி’ நாடக் குழுவோடு பல ஆண்டுகளாகப் பயணம் செய்தவர். நாடகம் மட்டுமல்லாது அநாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணிகளையும் தன் குழுவோடு சேர்ந்து செய்துவருகிறார்.

எல்லோரும் தொற்று நோய்க்கு அஞ்சி வீட்டிலேயே முடங்கி இருந்தபோதும், நேரிடையாக மக்களிடம் சென்று பல்வேறு உதவிகளைச் செய்தவர்.

ஆணவக்கொலை, பாலியல் வன்கொடுமை, எழுத்தாளர் படுகொலை, சாதிய வன்கொடுமை ஆகியவற்றிற்கு எதிராகவும் வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான மக்களின் வாழ்வியலையும் தன் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர்.

நாடகம், இசை, சினிமா, கொரோனா பேரிடரை எதிர்கொண்ட விதம் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி ஓர் மழைக்கால மாலையில் சந்தித்து உரையாடினோம்.  அவ்வுரையாடலில் இருந்து…

நீங்கள் பிறந்த நிலத்தின்தன்மை அதன் பின்புலம் பற்றிச் சொல்லுங்கள்?  

மதுரைப் புதூரில் பிறந்தேன். நகரக் கட்டமைப்பில் வளரும் போது, நிலம் எது என்று சொல்லமுடியாத சூழல்தான் இருக்கிறது. கரிசல் மண்ணில் பிறந்தால் கரிசக்காட்டுக்காரர்கள் என்பார்கள். கொங்கு மண்ணில் பிறந்தால் கொங்கு நாட்டுக்காரர் என்பார்கள். நாஞ்சில் மண்ணில் பிறந்தால் நாஞ்சில் நாட்டுக்காரர்கள் என்பார்கள். ஆனால், எந்த நில எல்லைக்குள்ளும் என்னைப் பொருத்திக்கொள்பவன் கிடையாது. எனவே, எல்லா மண்ணையும் என்னுடைய அடையாளமாகப் பார்க்கிறேன் என்று சொல்லலாம்.

மனிதநேயமிக்க மதுரை, சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஊர்தான். ஒருவன் அணிகிற உடையைவைத்து அவனை அடையாளம் காண்பதும் சாதியக் கட்டமைப்பும் எனக்கு மிகவும் நெருடலாக இருந்தது. சினிமா, அரசியல் தாண்டி உலகம் கிடையாதா என்கிற கேள்வி எழுந்தது. கூட்டுக்குடும்பக் கட்டமைப்பில்தான் சாதியக் கட்டமைப்பும் ஓங்கியிருக்கிறது. நிறைய அடக்குமுறைகளும் அங்கிருந்துதான் உருவாகின்றன. சாதி, மத கட்டமைகள் ஓங்க ஓங்க சமத்துவத்தை இழந்துகொண்டே வருகிறோம்.

நம்ம பக்கத்தில் இருக்கும் குளம் சின்ன வயதில் நீர் நிறைந்து இருந்திருக்கும். ஆனால், இப்போது சாக்கடையாக மாறி இருக்கும். காரணம், இயற்கையைப் பிரிந்து வேற ஒன்றை நோக்கிப் போய்க்கொண்டு இருப்பதுதான். அடையாறு, கூவம் போன்ற ஆறுகளைச் சாக்கடையாக மாற்றிவைத்திருக்கிறோம். என்கழிவறையை யாரோ ஒருவன் சுத்தம் செய்கிறான். அவனைக் கீழ்சாதி என்று வரையறுக்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் சுத்தம் செய்பவன்தான் மேல்சாதி. இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் இவ்வளவு வலிமையாக இருக்கிறது என்கிற கேள்வியில்தான் என் கலைப் பயணம் ஆரம்பமானது.

நாடகத்துறையில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது? அதன் ஆரம்பகாலப் பயணம் குறித்து…

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை நுண்ணுயிரியல் படித்தேன். கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே முருக பூபதியுடன் `மணல்மகுடி’ நாடகக்  குழுவில் பன்னிரண்டு வருடங்களாகத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறேன். முருக பூபதிதான் என் குரு. அதற்கு முன்பும் ஊரில் நடைபெறும் நாடகங்களில் நடித்திருக்கிறேன். அங்கு பேசப்படும் அரசியல் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது.

மூணாறு மாதிரி மலைப் பகுதிக்குச் சென்றாலும் தூத்துக்குடி, விளாத்திக்குளம் போன்ற தேரிக்காட்டுப் பாகுதிக்குச் சென்றாலும் நம்முடைய உணவு கிடைக்காமல் ஃப்ரைட் ரைஸ் கிடைக்குது என்றால் சமூகத்தில் அந்த உணாவுகளின் தாக்கம் என்னவாக இருக்கிறது? திணை, கம்பங்கூழ், சுண்டல், அவுல் இவையெல்லாம் கிடைக்காத நிலையில் காட்டுக்குள் துரித உணவுகள் கிடப்பது எப்படி? நம் நிலம், நிலத்துக்கான விதைகள், நமக்கான பறவைகள், பாரம்பரிய உணவுகள் இவை எல்லாம் எங்கே போயின. இப்படியான தேடலின் மூலம் எல்லா நிலத்தையும் சமத்துவத்தோடு பாதுகாப்பது நம் கடமை. குறிப்பாகக் கலைஞனின் கடமை. இவ்வாறான புரிதலோடுதான் என் நாடகப் பயணம் தொடங்கியது.

“ `ஒரு நேர்காணலில் கலை என்பது காரில் வந்துசெல்வோருக்கானது அல்ல; எளிய மக்களுக்கானதுதான்’ என்று சொல்லி இருக்கிறீர்கள். இந்த எளிய மக்கள் கலைத்துறையில் பார்வையாளர்கள் மட்டும்தானா? இல்லை தலைமைத்துவத்திலும் இருக்கிறார்களா? கலை என்பது சாதிய, மதக் கட்டமைப்பை எதிர்த்துப் பேசணும் என்று சொல்கிறீர்கள்? கலைத்துறையில் சாதி இல்லையா?

சாதியக் கட்டமைப்பில் இருந்துவரும் கலைஞர்கள் சாதிக்கொடியைத் தூக்கிட்டுவந்து கலைவடிவத்தைச் செய்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. என் குருநாதர் என்ன சாதி என்று எனக்குத் தெரியாது. பல்வகையான சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவரிடம் நாடகம் பயின்று இருக்கிறார்கள். பின்பு அவர்கள் நாடகத்தைப்  பயிற்றும் வருகிறார்கள்.

சாதியப் பிடிமானத்தால் கலைவடிவம் நீர்த்துப் போவது உண்மைதான். முன்பொரு காலத்தில் அந்தப் பிடிமானம் ஓங்கி இருக்கும்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடம்கிடைக்கவில்லை. அங்கிருந்து சுயசாதி எதிர்ப்போடும் ஒருசிலர் வருகிறார்கள். இங்கே ஒவ்வொருத்தனும் சுய சாதிக்கு எதிராக மாறித்தான் ஆகவேண்டும். நான் இன்னொரு சாதியை எதிர்ப்பதைவிட என்னுடைய சாதியில், என்னுடைய மதத்தில் உள்ள கீழ்மைகளை நானே எதிர்க்கணும். எங்களுக்கு முன்னோடியாக இருக்கிறவர்கள் எல்லாரும் சுயசாதிக்கு எதிரானவர்கள்தான். அந்தப் புரிதலோடுதான் இயங்குகிறார்கள் என்பதை அவர்களிடம் பழகிய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

உங்கள் பார்வையில் கலை என்றால் என்ன? சமூகத்தில் கலைஞனுக்கும், கலைஞனுக்கு இந்தச் சமூகத்தின் பங்கு என்னென்ன? 

எல்லோரும் இப்படித்தான் வாழணும் என்று யாரோ போட்ட பாதையில்தான் செல்கிறோம். அந்தக் கட்டமைப்பை உடைக்கணும். ஒவ்வொரு ஜாதிக்கும் மதத்திற்கும் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. இப்படித்தான் வளரணும் இப்படித்தான் பேசணும் இந்த உடையைத்தான் உடுத்தணும் என்பதையெல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள் என்கிற ஒரு கேள்வி இருக்கிறது. இந்த எல்லையை உடைக்கிற கருவிதான் கலைவடிவம்.

இப்போது எல்லார் வீட்டிலும் டிவி இருக்கிறது. தெருக்கூத்து, மேலை நாடகங்கள், சினிமா எல்லாமே ஒரு கலை வடிவம்தான். இவை எல்லாமே நிகழ்த்துக் கலையில் இருந்துதான் விரிவடைகிறது. மக்கள் தொகை அதிகமாக அதிகமாக ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமாகப் பரிணமித்துக்கொண்டு இருக்கிறது. டிவி, சமூக ஊடகங்களில் வெளிப்படும் எல்லாமே அதன் தொடர்ச்சிதான்.

சாதி, மதம், மொழி, உடல் இவை எல்லாவற்றையும் மறந்து ஒரு கலைவடிவமாகத்தானே பார்க்கிறோம்.

 கலை,முன்பெல்லா திணிக்கப்படாத அரசியலாகத்தான் இருந்தது. இன்று ஏன் எல்லாவற்றையும் திணிக்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம் புரிதலின்மைதான். ஒரு கலைஞன் என்னவாக இருக்கிறான். சினிமா நடிகர் வெண்திரையில் முப்பது நாப்பது ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்து திடீரென்று நாட்டையே ஆளலாம் என்கிற சூழல் வரும்போது, கலைஞனின் முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுகிறது. திரைத்துறையில் அனைவரும் நடிகர்களே, ஒன்றிரண்டு பேர்தான் கலைஞர்களாக இருக்கிறார்கள். கலைஞர்களுக்குத்தான் மக்களின் வாழ்வியல் கூறு தெரியும். அவர்கள், மக்களின் சமநிலைப் பரப்பில் இருப்பார்கள்.

மதுரைப் பக்கம் வலையபட்டி என்கிற கிராமத்தில் நான் வள்ளி திருமணம் நாடகத்தை நேந்திக்கிறேன்; நான் பவளக்கொடி நாடகத்தை நேந்திக்கிறேன் என்று நேர்த்திக்கடனுக்கு நாடகங்கள் நடத்துவார்கள். இப்படியான நாடகங்கள் பார்க்கும் கலாச்சாரம் இப்போது அழிந்துகொண்டே வருகிறது. அதே நேரத்தில் சாதியக் கட்டுப்பாடுகளும் இந்தமாதிரியான ஊர்களின் இருக்க வாய்ப்பு இருக்காது. எல்லா மக்களும் ஊர் முச்சந்தியில் அமர்ந்து எல்லாவற்றையும் மறந்து நாடகம் பார்க்கிறார்கள்.

எங்கெல்லாம் கலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ, அங்கே சுய புரிதல் இருக்கும். அது, மாநகரங்களில் இருக்கிறாதா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. திரையில் தோன்றுகிறவர்களைக் கடவுளாகப் பார்க்கும் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கடவுளைக் கூட வாரத்துக்கு ஒருமுறைதான் பார்க்கிறோம். ஆனால், நடிகர்களை எப்போதும் வழிபட்டுக்கொண்டே இருக்கிறோம்.

 ஒரு கலைஞன் சமூகத்துக்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கலைஞனுக்கும் சமூகத்தைப் பற்றித் தெரிந்து இருக்கவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள்தான் பாலினமாக, மொழியாக, சாதியாக, மதமாக, எல்லையாகப் பல்வேறு வடிவங்களில் நமக்குள் இருக்கின்றன. இப்படியான சமூகக் கட்டுப்பாடுகளை உடைப்பதுதான் கலைஞர்கள் செய்யவேண்டியவை. இதைத்தான் திணைநிலை வாசிகள் குழு செய்துகொண்டிருக்கிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகள் வாழும் ஜீவராசிகள்தான் திணைநிலை வாசிகள். அவர்களில் நாமும் ஒரு ஜீவ ராசி அல்லவா.

எறும்புக்கு ஒரு பிரச்சினை என்றால் எறும்பின் குரலாகப் பேசுவோம். பறவைக்கு ஒரு பிரச்சினை என்றால் பறவையின் குரலாகப் பேசுவோம். சிரியா மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் சிரியா மக்களாகப் பேசுவோம். ஶ்ரீலங்காவுக்குப் பிரச்சினை என்றால் ஶ்ரீலங்கா மக்களாகப் பேசுவோம். பறவைக்கும் மீனுக்கும் மட்டும்தான் எல்லைகளற்ற ஒரு சமூகம் இருக்கிறது. மீன் கடளுக்குள் எங்கு வேண்டுமானாலும் நீந்தலாம். பறவை கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி குஞ்சு பொறிக்கும். ஆனால், விலங்குகளுக்கு எல்லைப் பரப்பு இருக்கிறது.

ஒரு கலைஞன் என்பவன் பறவையைப் போல மேல் நோக்குப் பார்வையோடும், மீனைப் போல உள் நோக்குப் பார்வையோடும் நம்மைச் சுற்றி என்ன அரசியல் போய்க்கொண்டு இருக்கிறது என்கிற புரிதலோடு பயணிக்கவேண்டியது அவசியமாகும்.

நாடகக்குழுவான திணைநிலை வாசிகள் அநாதைப் பிணங்களைத் தத்துஎடுத்து அடக்கம்செய்யும் வேலையை எப்போது ஆரம்பித்தது? இதற்கான தேவையை எப்போது உணர்ந்தீர்கள்.  

நிறைய பேர் இது நாடக மன்றக் குழுவா இல்லை நல்லடக்க மன்றக் குழுவா என்று கேட்பார்கள். ஒரு சினிமாவோ அல்லது நாடகமோ எதுவாக இருந்தாலும் சமூகத்தைப் பிரதிபலிப்பவைதாம். ஒரு மனிதன் அநாதையாகச் செத்துக்கிடக்கிறான் என்றால் அவனை அடக்கம் செய்யக் கூட ஆள் இல்லை என்றால் இதற்கு யார் காரணம். இப்போது இருக்கும் ஆடம்பரமாக இருக்கலாம். தீவிர ரஜினி ரசிகனாக இருக்கலாம். ஏஆர் ரஹ்மானின் ரசிகனாக இருக்கலாம். இப்படியான மனிதர்கள் நிலாவில் இருந்து குதித்தவர்கள் இல்லை.

கொள்கையில் பிடிப்போடு தனிமனிதராகப் போராடும் போது, எல்லோராலும் ஒதுக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். தாய் தகப்பனிடம் சொத்துகளை எழுதி வாங்கும் பிள்ளைகள், பெற்றவர்களைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள். இப்படியான மனிதர்கள்தான் அநாதையாக இறந்துகிடக்கிறார்கள். இறந்தவர்களை எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத் தத்து எடுத்துதான் நல்லடக்கம் செய்கிறோம். இவர்களின் இறப்பில் நம் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. நாடகத்தையும் நல்லடக்கத்தையும் புனிதமாகப் பார்க்கிறோம். எனவே, இந்த பூமியில் யாரும் அநாதை கிடையாது.

கலைஞர்கள் கலைஞர்களாக மட்டும் நின்றுவிடக்கூடாது என்கிற பிரக்ஞையோடுதான் இந்த வேலையைச் செய்கிறோம். மேடையைத் தாண்டி மக்களோடு வேலை செய்யணும். மக்கள்கிட்ட என்ன இருக்கிறதோ அதைத்தான் மேடையில் பயன்படுத்த வேண்டும்; மேடையில் என்ன இருக்கோ அதை மக்கள் நம்முடைய பிரச்சினை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கலையை என்னவாக நாம் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறோம் பெண் என்றால் உடலைத் தாண்டி அவர்களை என்னவாகப் பார்க்கிறோம் என்பதை மையமாகவைத்துதான் வேலை பார்க்கிறோம்.

நல்லடக்கக் காரியங்களில் உங்களால் மறக்கமுடியாத அனுபவமாக எதைக் கருதுகிறீகள்?

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வடமாநிலங்களில் வலுவான போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, சேலத்திருந்து ஒரு அசாமி என்னிடம் பேசினார். மகனுக்கு வயிறு வலி உடனே அசாமுக்கு வா என்று சொல்லி அப்பாவை அழைத்திருக்கிறான். அவர் விமானம் ஏறுவதற்கு முன்பே இறந்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார். சொந்தக்காரர்கள் இருப்பதால் அடக்கம் செய்ய யோசித்தோம். பின்பு உடல் சென்னை எக்மோர் பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, ஐந்து நாட்களாக வைக்கப்பட்டிருந்தது.

நண்பர்கள் இறந்தவரின் மகனை அசாமிலிருந்து சென்னை வரச் செய்தார்கள். ஆனால், இங்கிருந்து அசாமுக்கு உடலை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஏனென்றால், அசாமில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், பேருந்து எரிப்பு உட்பட பல பரிமாணங்களில் தீவிரமடைந்திருந்தது. எனவே, இங்கே உடல் அடக்கம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று குழியெல்லாம் தோண்டியாச்சு, புதைப்பதற்கு முன் இறந்தவரின் ஆதார், அடையாள அட்டை கேட்டார்கள். ஆனால், அசாம் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை  இல்லை. வாக்காளர் அடையாள அட்டைதான். அப்போது அதுவும் அவர்களின் கைகளில் இல்லை. அதனால், அடக்கம் செய்யாமல் அரைமணிநேரம் காத்திருப்பில் இருந்தது உடல். அப்போது அவரின் சாதிச் சான்றிதழ் கொடுத்துதான் அடக்கம் செய்தோம்.

அவர்களின் சொந்த ஊர் அசாமில் மலைக்கிராமப் பகுதியில் உள்ளது. இங்கே நல்லடக்கம் செய்வதை, அசாம் கிராமம் மக்கள் அங்கிருந்து வீடியோ காலில் பார்த்தது. இறந்தவரின் மனைவிக்குச் செய்யும் சடங்கும் வீடியோவிலேயே நடக்கிறது. அதை இங்கிருக்கும் அவரின் மகன்கள் பார்க்கிறார்கள். அப்போது அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதேன். இங்கிருந்து அசாமுக்குச் செல்ல சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுக் கையில் இருக்கும் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து வழியனுப்பினோம். புறப்பட்ட அவர்கள் கண்ணீரிலேயே நன்றி சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

அந்த நேரத்தில் அசாமி – தமிழர் என்கிற இன பேதமின்றி உணர்வுகளால் பேசிக்கொண்டிருந்தோம்.

சமீபத்தில் யாருடைய உடலை அடக்கம் செய்தீர்களா? அந்தச் சூழல் பற்றிச் சொல்லுங்கள்.

காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது 80 வயது பாட்டியின் குரல். அவரது அண்ணனுக்கு 85 வயது. 4 நாட்கள் உடல் நலம் சரியில்லாமல் ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார். எடுத்து அடக்கம் செய்வதற்கு என்னிடம் பணமில்லை. சொந்தங்கள் கைவிட்டு 20 வருடம் ஆகிவிட்டது. நானும் அண்ணனும் மட்டும்தான். கடைகள் பெருக்கி அதில் வரும் வருமானத்தில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தோம். கொரொனா காலகட்டம் என்பதால் உணவிற்குக் கூட பணமில்லை என்றார்.

நல்லமுறையில் பாட்டியின் உறவுகளாய் அந்த முதியவரின் உடலைத் தத்தெடுத்து நல்லடக்கம் செய்தோம். பாட்டி அண்ணன் புதைக்கப்பட்ட இடத்தில் தொழுது வணங்கி கண்ணீர் மல்கச் சென்றார். ஏழைகள் ஏழைகளாய் மாறுகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் நல்லடக்கம் செய்யத் தன்னார்வலர்கள் கூடத் தயங்கினார்கள். ஆனால், நாங்கள் சளைக்காமல் அந்தப் பணியைச் செய்தோம். அந்தமாதிரியான சமயங்களில் நான் தனிமனிதனாகவே நிறைய பேருக்குக் காரியம் செய்திருக்கிறேன். ஆனால், எனக்குக் கொரோனா தாக்கம் ஏற்படவில்லை. வடசென்னையில் நிறைய வடஇந்தியர்கள் ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குதான் எடுத்துச் செல்லப்படுவார்கள். மேலும் யாருமற்றவர்கள் என்றுதான் முடிவுசெய்யப்படுவார்கள். பிள்ளைகளால் கைவிட்டவர்கள், பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு அனுமக்காதவர்கள், குறிப்பாக வேற்று மாநிலத்தவர்கள் எனப் பல தரப்பினரை அடக்கம் செய்திருக்கிறோம்.

திராவிடம், பெண்ணியம், மார்க்சியம் போன்ற சித்தாந்தங்களை மேடை போட்டுப் பேசுபவர்கள் மேடையில் இருந்து இறங்கும்போது சித்தாந்தங்களில் இருந்தும் இறங்கிவிடுகிறார்கள். அவர்களின் வீட்டுக்குள், மூளைக்குள் சாதியும் மதமும் இடம்வகிக்கும் போலியான முகங்கள் இல்லையென்று மறுத்துவிடலாமா?   

பிறவிக்குறைபாடு இருப்பது போல், எல்லாருக்கும் அந்தச் சட்டச் சிக்கல் இருக்கிறது. ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறோம். ஆனால், அங்கும் தலைமையில் இருப்பவர்கள் யாரும் ஊடகச் சுதந்திரத்தோடு இல்லை. நான் சமூகம், நாடகம் இரண்டிலும் இயங்குகிறேன். “நீங்கள் நாடகம் பண்ணும் குழுவா இல்லை நல்லடக்கம் பண்ணும் குழுவா” என்று நக்கலாக ஒரு கலைத்துறையில் உள்ளவரே கேட்கிறார்.

ஒரு கலைஞனே இன்னொரு கலைஞனை இவ்வாறு விமர்சனம் செய்வது ஒருவிதமான ஈகோதான். இப்படி பொது இடத்தில் ஒருவராகவும் உள்ளுக்குள் ஒருவருமான இரட்டைத்தன்மை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. இது சில நேரங்களில் வெளிப்படும் சில நேரங்களில் வெளிப்படாது. எல்லாத் துறையும் இப்படி ஊசிப்போன பழைமைவாத்தில்தான் உழல்கிறது. காரணம் அவனவன் அவனவன் ஊருக்குள்ளேயே தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான்.

மதுரைக்கான் சென்னையின் வாழ்வியலைப் பார்க்காமலும், சென்னைக்காரன் மதுரைக்காரனின் வாழ்வியல் அறிமுகம் இல்லாமலும் இருக்கின்றனர். ஒருவேளை இங்கிருப்பவர்கள் அதைத் தெரிந்துவைத்திருந்தாலும் வட இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இருக்கமாட்டார்கள். இப்படியான பயணமற்றவர்களிடம் எப்படி புரிதல் இருக்கும்.

வேற வேற நிலப்பரப்பையும் அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளணும். சாதியா இருப்பது மொழியாக மாறும்; அடுத்து எல்லையாக மாறும்; அதன்பின் இரண்டு நாடுகள் ஒருநாடாக மாறும். எனவே, இதற்கான தீர்வைப் பயணம் செய்வதின் மூலம்தான் அடையமுடியும்.

கலைத்துறையில் மட்டும் இயங்கும் நிறைய கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். களப் பணியோடு இயங்கும் சமூக நலப் போராளிகளையும் தெரியும். நானும் வேறுமனே கலை வடிவத்தில் மட்டும் இயங்கி இருந்தால் ஒருவேளை எனக்கும் அந்த இரட்டைத்தன்மை இருந்திருக்கலாம். இது ஒருவகையில் பாதுகாப்பின்மைதான்.

என்னமாதிரியான விஷயங்களை மையப்படுத்தி நாடகங்கள் நடத்தியிருக்கிறீர்கள்.

ஆணவக்கொலை, விவசாயிகள் மரணம், மாணவர் தற்கொலை, ஐடி நிறுவனம், மீனவப் பிரச்சினை, எழுத்தாளர் படுகொலை போன்றவற்றை நாம் வெறுமனே வேடிக்கைதான் பார்க்கிறோம். இவற்றை மையப்படுத்தி நாடகங்கள் நடத்தி இருக்கோம்.

யாருமே கண்டுகொள்ளாத, இருண்மையான இடங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இந்த நாடகத்திற்கு`கண்காணிப்பின் இருள்வெளி’ என்று பெயர்வைத்தோம். விவசாயிகளுக்கு விவசாயி மட்டும் போராடுகிறார்கள், மீனவர்களுக்கு மீனவர் மட்டுமே போராடுகிறார்கள், மாணவர்களுக்கு மாணவர்கள் மட்டுமே  போராடுகிறார்கள். இது எப்போது மக்கள் பிரச்சினையாக வெடிக்கிறதோ அன்றுதான் ஒரு விடிவு வரும்.

கோமணத்தோடு பேசும் விவசாயியின் குரலாக, ஆணவக்கொலைகள் செய்யப்பட்டவர்களின் குரலாக, நீதி கேட்கும் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தைகளின் குரலாக எனப் பல்வேறு குரலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறோம்.

விஷுவல் மீடியா கோலோச்சும் காலத்தில் நாடகம் மிகக் குறைவான எண்ணிக்கைகொண்ட மக்கள் பார்க்கும் கலைவடிவமாக இருந்துவருவது ஏன். ஆணவக்கொலை, பாலியல்வன்கொடுமை, சாதிய வன்கொடுமை, புயல்பாதிப்பு, வெள்ளபாதிப்பு போன்ற சமகால அரசியலைப் பேசும் கலை, எல்லா மக்களையும் சென்றடைந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? 

நாடகம் பண்ணும் சூழல் தமிழகத்தில் இருக்கிறதா? அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா? கோடி கோடியாகச் சம்பளம் வாங்கும் திரைத்துறையினருக்கு அந்தப் புரிதல் இருக்கிறதா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதுதான். காரணம் நாடகம், தெருக்கூத்துக் கலைஞர்கள் எல்லாம் வெறுமனே நாடகம் மற்றும் விவசாயம் மட்டும்தான் செய்வார்கள். அதைத்தாண்டி எதுவும் தெரியாது. 1970 களில் நவீன நாடகம் என்கிற பேரில் ந.முத்துச்சாமி அதில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். புதுப் புது சூத்திரங்களைக் கையாண்டு சினிமாவில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். நாசர், பசுபதி, ரோகினி போன்ற நாடகக்கலைஞர்கள் சினிமாவில் இன்றுவரை தமக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாடகம் ஒத்திகை செய்ய இடமில்லாமல், இதோ பாருங்கள் விளையாட்டு மைதானத்தில் செய்துகொண்டிருக்கிறோம். ஒத்திகை பார்க்கும் இடத்தில் ஒரு நாய் படுத்திருக்கிறது; அங்கு கால்பந்து விளையாடுகிறார்கள். ஆனால், இந்த இடத்தில் சினிமா ஷூட்டிங் நடந்தால் இப்படி இருக்குமா? நாடகம் என்பது சினிமா மாதிரி கிடையாது. பிளாஸ்டிக் பூவுக்கும் மரத்தில் பூக்கும் பூவுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா. நாடகம் மரத்தில் பூக்கும் பூவைப் போன்றது. எவ்வளவு பார்வையாளர்கள் நாடகம் பார்க்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. கலப்புத் திருமணம் செய்வது போல்தான் நாடகம் நடத்தும் சூழலும் இருக்கிறது.

பாடல், நடனம், ஆவணப்படம், குறும்படம், சமையல் போன்ற கலைவடிவங்களைத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்கிறார்கள். நாடகத்துக்கு அப்படியான வாய்ப்பு இதுவரை அமையவில்லையா? இதற்காக நாடகக் குழு ஏதேனும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதா?

வாழும் கலை வாழும் கலையாக இருப்பதுதான் அதன் தனித்தன்மையாகும். மொக்கைக் காமெடியை இருபதாயிரம் பேர் பார்த்திருப்பார்கள். அதனால் என்ன பயன். எல்லாரும் பார்ப்பதால் அது பிரமாண்டமாகாது; குப்பைக்குச் சமம்தான். முப்பது நொடிகளுக்கும் மேல் வீடியோ போட்டால் அதைப் பார்க்க ஆள் இல்லை; அதற்கான நேரமும் இல்லை

விசிபிள் ஆடியன்ஸ் இன்விசிபிள் ஆடியன்ஸ் என்று இரண்டுவிதமான ஆடியன்ஸ் இருக்கிறார்கள். இப்போது நாம் உரையாடிக்கொண்டிருப்பது இன்விசிபிள் ஆடியன்ஸ்தான். மக்களைச் சந்தித்து நேரிடையாகப் பேசுவதுதான் நாடகம். இது இப்படித்தான் இருக்கும். தமிழ்நாடு முழுக்கவே பத்து இயக்குநர்கள்தான் நாடகத்துறையில் தீவிரமாக இயங்குகிறார்கள். இதன் தன்மை, அதிர்ச்சி எல்லாம் நேரில் பார்த்தால்தான் புரியும். நாக்கில் உரை போட்டுத் தேனைச் சுவப்பதற்கும் நேராக நாக்கே சுவைப்பதற்கும் வேறுபாடு இருக்கு.

நீங்கள் சொல்வது முக்கியமான விசயம்தான். ஒருவேளை தொலைக்காட்சியில் நாடகங்களை ஒளிபரப்பினால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பார்கள். அதற்கான முயற்சிகளும் செய்தோம். ஆனால், முன்னெடுப்புக்கு யாரும் முன்வரவில்லை. சமூக வலைத்தளங்களிலும் பகிர, நாடகம் பற்றிச் சரியான புரிதல் மக்களிடமும் இல்லை.

மக்களிடம் நாடகம் பற்றிச் சரியான புரிதல் இல்லாததற்கு என்ன காரணம்?

எல்லாம் அரசியல்தான் அரசியல்வாதிகள் இன்று சினிமாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். சிகரெட்டைத் தூக்குப் போட்டுக் குடிக்கிறதும் கோட்டைப் போட்டுக்கிட்டு ஷூ மாட்டிக்கிட்டு நடனம் ஆடுவதும்தான் செய்கிறார்கள். இதுமாதிரியான அரசியல் பேசத் தயாராக இல்லை. இங்கே, நடிகர்களை விலைக்கு வாங்கும் அரசியல் சூழல்தான் இருக்கிறது. இந்தச் சூழலில் மக்களின் அரசியலைப் பேசும் நாடகங்களைச் சமூக வலைத்தளங்களில் எப்படிப் பதிவுசெய்ய அனுமதிப்பார்கள்.

நல்ல மனிதர் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு இல்லை. சில ஊடகங்களில் தொடர்புகொண்டேன். ஆனால் அவர்கள் விரும்பவில்லை. காரணம் நாடகம் குறித்த அறிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை. எளிய மக்கள் நம் அரசியலைப் புரிந்துகொள்கிறார்கள். அரசியல் பேசும் ஊடகங்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றன.

சமூக வலைத்தளங்களைக் குப்பை என்று சொல்கிறீர்கள். ஊடகங்கள் இந்துத்துவாவின் கைக்கூலியாக மாறிவிட்ட இன்றைய சூழலில், உண்மைத்தன்மையை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களை விட சமூகவலைத்தளங்கள் மிகக் கூர்மையாகச் செய்கின்றன என்பதை மறுக்கமுடியுமா?

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் இப்போது தடை ஏற்பட்டுள்ளதே. நியாயமாகப் பேசுபவர்களின் சமூக வலைதளங்களின் கணக்கு எண்ணை முடக்குகிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கு எதிரான யாரோ கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கும் முற்றுப்புள்ளிவைக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் மக்களுக்கான செய்திகளை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துகொண்டு இருந்தார். ஆனால், அவரை இயங்கவிடாமல் அவரின் கணக்கு எண்ணையும் முடக்கிவிட்டார்கள். நம்முடைய மின்னஞ்சலை, தொடர்பு எண்ணை, வங்கி எண்ணை யாரோ ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். எனவே, நாட்டில் மக்களுக்கான சுதந்திரம் என்பது சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்பதே நிதர்சனம்.

இப்போது என்ன நாடகம் இயக்கிக்கொண்டிருக்கிறீர்கள்?

இன்டெர்செக்ஸ் பற்றி ஒரு நாடகம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு பெண்தன்மை அதிகமாக இருந்தால் இந்தச் சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது. சாதியைக் காட்டிலும் எல்ஜிபிடி ஒடுக்கப்படுவது மிக மோசமான செயல். ஒரு பையன் ஃபெமினிட்டியாக  இருந்தால் அவன் உயர்சாதியாக இருந்தாலும் வீட்டிலேயே ஒடுக்கப்படுகிறான். அவனும் தாழ்த்தப்பட்ட வரிசையில்தான் சேர்வான். அவர்கள் உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிப்படுகிறார்கள் என்பதைக் கூறும் நாடகமாக இருக்கும்.

நாடகக் கலைஞர்கள் ஏன் நாடகம் மட்டும் செய்கிறார்கள். சினிமா எடுக்கக் கூடாதா?

நாடகக் கலைஞர்கள் தாராளமாக சினிமா எடுக்கலாம். நாசர், ரோகினி போன்ற கலைஞர்கள் நாடகத்தில் இருந்து சினிமாவுக்குப் போனவர்கள்தான். மேலும், சமூகப் பொறுப்புணர்வுள்ளவர்கள். நாடகக்காரர்களின் வலி என்ன என்று தெரிந்து உதவிசெய்வது மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்திற்கும் உதவும் மனம் வாய்க்கப்பெற்றவர்கள்.

சிலி நாட்டுக் கவிஞரான பாப்லோ நெருடா அவரே மரணிக்கச் செய்துகொள்ளும் அளவுக்கு, அதிகாரம் மிகவும் துன்புறுத்தியுள்ளது. எழுத்தாளர்களைக் கொல்வது இந்தியாவில் மட்டும் நடப்பதல்ல; சர்வாதிகாரம் எங்கெல்லாம் தலைதூக்குதோ அங்கெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாப்லோ நெருடாவின் வாழ்வியலை நாற்பது நிமிட சினிமாவாக எடுத்திருக்கோம். முன்பே, பாப்லோ நெருடா என்கிற நாடகத்தை அரங்கேற்றி இருந்தோம். இப்போது அதே கதையை சினிமாவாக எடுத்திருக்கோம். அதில் நாசர் சார் நடித்திருக்கிறார். காளீஸ்வரி என்பவர் நெருடாவுக்கு எதிரான ரோல் பண்ணியிருக்கிறார்.

.தோழர் நல்லகண்ணுக்கு அந்தப் படத்தைக் காட்சிப்படுத்தினேன். படம் பார்த்த பின் மனது  உருகி தேம்பித் தேம்பி அரைமணி நேரம் அவர் அழுதார். எழுத்தாளர்களைப் பற்றி, இலக்கியங்களைப் பற்றிப் படம் எடுக்க இங்கே ஆள் இல்லை. என் அனுபவத்தில் எழுத்தாளரைப் பற்றி நான் பார்த்த முதல் படம் நீங்கள் எடுத்த பாப்லோ நெருடாதான் என்று மனம் உருகிப் பேசினார். அந்தப் படங்களை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு செல்ல நல்லகண்ணு அய்யா எங்களுக்குப் பக்க பலமாக இருக்கிறார்.

பாப்லோ நெருடா போன்ற மக்கள் கலைஞன் என்று தமிழிலில் யாரைக் கருதலாம். தமிழ் எழுத்தாளர்கள் நிகழ்கால அரசியல் சூழலில் இருந்து தம்மைத்துண்டித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது. மேலும், காதலையும் காமத்தையும் எழுதவே இவர்களுக்கு நேரம் போதவில்லை என்பதுபோல் தோற்றம்கொள்ளவைக்கிறதே!

நடிகர்கள் நடிக்க மட்டுமே செய்வார்கள். கலைஞர்கள் வாழ்ந்துகிட்டே இருப்பார்கள். கலைஞர்களுக்கு எல்லாருடைய பிரச்சினையும் தெரியும். இவர்கள் மக்களுடன் நெருக்கமாகவும் இணக்கமாகவும் இருப்பார்கள். தமிழில் நிறைய எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படித்து இருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல், கலைஞர்கள் எப்படி ஆதிக்கத்தில் இருந்து வருகிறார்களோ, இதே தன்மை எழுத்தாளர்களிடமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. காரணம், ஒருவருக்கு ஒருவர் அதீதமான ஈகோவுடன் இருக்கிறார்கள்.

எழுத்துக்கும் வாழ்வுக்கும் பேசுற அரசியலுக்கும் ரொம்ப நேர்த்தியான ஆள் என்றால் கோணங்கி மட்டும்தான். அவரை எந்தக் கட்டுக்குள்ளும் அடக்கமுடியாது. எந்த அரசியல் கட்சிக்குள்ளும் அவர் வரவில்லை. தன் கொள்கைகளில் ரொம்பப் பிடிவாதமா, பொருளாதாரத்திற்காக யாரிடமும் விலைபோகாமல் அவருடைய பாதையில் நேர்த்தியாகப் போய்க்கொண்டு இருக்கும் ஓர் எழுத்தாளர் யாரென்றால் அது கோணங்கி மட்டும்தான்.

எழுத்தாளர்கள் மத்தியிலேயே கோணங்கி சாதியப் பிடிமானம் கொண்டவர் என்று பேசப்படுகிறாரே? எந்தப் புரிதலோடு பாப்லோ நெருடாவுக்கு நிகராகக் கோணங்கியை வைக்கிறீர்கள்.

சில எழுத்தாளர்களைப் போல் நானும் கோணங்கியை அப்படிச் சொல்லணும் என்று கட்டாயம் இல்லை. நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன். அவருடன் பன்னிரண்டு வருடங்கள் பழகியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை அவருடன் பழகுவதில் எந்தவிதப் பாகுபாடும் இருக்காது. சாதி, மத, இனத்தைத் தாண்டியவராகத்தான் அவரைப் பார்க்கிறேன். கோணங்கியைப் பற்றிச் சிலர் பேசுவது, பிக் பாஸ் ஷோ மாதிரிதான். வீட்டில் நடக்கும் கூத்துதான். அதை எப்படி ரசிக்கிறோமோ விரும்புகிறோமோ அதுமாதிரி இந்த மாதிரியான விமர்சனங்கள் வாய்வழியாக வருபவைதான்.

கல்குதிரை கோணங்கி நடத்தும் பத்திரிகை நம்ம நாட்டின் அரசியல் பேசுபவை மட்டுமல்ல; உலக நாடுகளின் அரசியலைப் பேசுவது. அவர் அரசியல் பேசுவது ஒருபக்கம் என்றால், என்னமாதிரியான அரசியல் எழுத்தாளர்களைத் தன் இதழில் எழுதவைக்கிறார் என்பது இன்னோர் பக்கம் கவனிக்கவேண்டும்.

நாடகங்களில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?

நவீனத் திரையரங்கில்தான் எல்லாவிதமான அரசியலும் பேச வேண்டும். மைம்ல முகபாவனையோடு கடந்து போய்விடுவோம். பிரச்சார, விழிப்புணர்வு நாடகங்கள் எல்லாமே சமகாலப் பிரச்சினையைப் பேசும். மேடை நாடகம், சபா நாடகம், தெருக்கூத்து என நாடகங்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. நவீன நாடகங்கள்தான் இனி வரக்கூடிய காலங்களில் எல்லாருக்குமான மையமாக இருக்கும்.

எல்லா சாதி, மத, மொழி, இனம் கலந்து ஒரு சமூகம் இருப்பதுபோல், நவீன நாடகம் எல்லாக் கலைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆட்டக்கலை, தெருக்கூத்து, சங்கரதாஸ் சுவாமிகளின் மேலை நாடகங்களாக இருக்கட்டும் பழங்குடி இசை, நாதஸ்வர இசை, தபேலா, பறை எல்லாம் கலந்து வெளிவரும் கலையாகத்தான் நவீன நாடகம் இருக்கும்.

பதினைந்து ஆண்டுக்கால நாடக அனுபவத்தில் உங்களுக்கான அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?

பரிசு, விருது எல்லாவற்றையும் தாண்டி, நான் யார் யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அவர்களுடன் என் மாணவர்கள் நடித்திருக்கிறார்கள். நம்மை அறியாமலே நிறைய பேர் நம்மைப் பின்தொடர்கிறார்கள். நமக்கான வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதால் நமக்கான அங்கீகாரமும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

கொரோனா காலத்தைத் திணைநில வாசிகள் எப்படி எதிர்கொண்டது?

மூன்றாம் கட்ட ஊரடங்கின் இறுதிப் பகுதியில் மக்கள் அவரவர் சொந்த ஊருக்குப் புறப்படத் தயாராகிவிட்டனர். நான்காம் கட்ட ஊரடங்கின் போது சென்னையில் இருந்து சூலூர் வரை சென்று பார்த்தோம். மக்கள் கொத்துக் கொத்தாக நடந்துசென்றனர். அது கொரோனா காலத்தில் நடந்துபோன கூட்டம் மாதிரியும் தெரியவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பெட்டிபடுக்கை, குழந்தைளோடு அகதிகள் போலச் சென்றார்கள்.

அவர்களுக்கு நிதியுதவி சேகரிக்க ஆரம்பித்தோம். இயக்குநர் பாலாஜி சக்திவேல் ரொம்ப உறுதுணையாக இருந்தார். நிதியுதவியாகக் கிடைத்த பணத்தைக்கொண்டு, கிட்டத்தட்ட ஐந்நூறு பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தோம். லாட்டரிச் சீட்டை எதிர்பார்த்து இருப்பதுபோல், 6 மணியானால் தொலைக்காட்சியைத்தான் பார்த்து கொரோனா நிலவரம் தெரிந்துகொள்வோம். ஆனால், அந்த நேரத்தில் இங்கிருந்து சென்ற மக்களை ஆவணப்படுத்தியிருக்கோம்.

நாய்களுக்கு, பறவைகளுக்குத் தீனிபோடுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் என் நண்பர்கள். சைதாப்பேட்டையில் ஏழு மான்கள் இருக்கின்றன. அவை நகரக் கட்டமைப்பில் சுதந்திரமாக அலைந்து திரிந்தவை. ரெண்டு நாள் போகாத வழியில் மூன்றாவது நாள் சுவர் எழுப்பப்பட்டிருக்கும். அவற்றின் எல்லைகள் குறுகிக்கொண்டே வந்தன. அவற்றிற்கு ஒருவர் தீனி போடுகிறார். அவர் எனக்கு போன் செய்து, மான்களுக்குத் தீனிபோட காசில்லை எனறார். அதற்கான உணவுகளை ஏற்படுத்திக்கொடுத்தோம். எல்லாக் காலகட்டங்களிலும் கலை, சமூக, செயல்பாட்டு ரீதியாகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் வருகிறோம்.

கொரோனா எல்லாத் துறைகளையும் முடக்கிப்போட்டுள்ளது. நாடகத்துறை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது?

மக்களை ஒண்ணு சேர்ப்பது நிகழ்த்துக் கலைகள்தான். சமூக இடைவெளியால் கூடல் கொண்டாட்டம் இல்லாமல் போய்விடுமோ என்கிற பேரச்சம் கலைஞர்கள் மத்தியில் இருந்தது. நான் சொல்கிறேன், நாடகத்துக்கு என்றுமே அழிவுகிடையாது. அதனுடைய பார்வையில், அதனுடைய போக்கில், அதனுடைய பாதையில் தன்னைத்தானே நகர்த்திக்கொண்டுதான் போகும். காலத்திற்கேற்றவாறு நாடகச் சூழலும் மாறும். இனி வரும் காலத்தில் நாடகம் அசுர வளர்ச்சி பெற எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.

இளைஞர்களுக்கு நாடகம் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் சினிமாவைவிட நாடகத்துக்கு எப்படி முக்கியத்துவம் தருகிறார்களோ அதுபோல் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இது ஏற்கெனவே இங்கு நடந்ததுதான். சிலரால் அது மறைக்கப்பட்டது. இனி அந்தத் தடைகள் உடைவதற்கான எல்லா வாய்ப்புகளும் அதிகமாவே இருக்கின்றன.

சமகாலப் பிரச்சினைகளை நாடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள்? மாஸ் மீடியாவான சினிமாவில் சமகால அரசியலின் பங்கு என்னவாக இருக்கிறது?

காமக்களியாட்ட வார்த்தைகளைத்தான் திரைப்படங்களாக வெளிவருகின்றன. இருட்டுக்குள் முரட்டுக்குத்து, போர்வைக்குள் போராட்டம் இந்தமாதிரி வைத்தால் டீன்ஏஜ் பசங்களுக்குப் பிடிக்கும். இது மக்களைச் சிந்திக்க விடாது.

இப்போது வருவதெல்லாம் நகைச்சுவையா? சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டோன்,  நாகேஷ், வடிவேல் போன்றோரிடம் இருந்த சமத்துவம் சார்ந்த நகைச்சுவை இப்போது வரும் படங்களில் இல்லை. பக்கெட் மூஞ்சி, கக்குஸ் வாய் போன்ற அபத்தமான சொற்களைக் கொண்டு சினிமா செய்வது மிக எளிது. இப்படியான வறட்டு நகைச்சுவையை மக்கள் விரும்புவது கிடையாது. மக்களிடம் திணிக்கப்படுபவைதான்.

பாலாஜி சக்திவேல், மிஷ்கின் பொன்றோரின் படங்கள் சமூகத்தில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில கதைகள் சரியில்லாத படங்களில் கூட, நாசர் தன் கதாபாத்திரங்களை அழகா கட்டமைக்கிறார். இவர்களைப் போன்ற சில அபூர்வக் கலைஞர்கள் பங்காற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிறப்பு முதல் இறப்பு மட்டுமல்லாமல் நம் வாழ்வின் முக்கியத் தருணங்கள் எல்லாவற்றிலும் பாடல்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். நாடகத்தில் பாடலுக்கும் இசைக்கருவிக்குமான இடம் என்னவாக இருக்கின்றன?

இசை என்பது மனிதனின் ஒட்டுமொத்த அழுக்கைக் கழுவுவது. ஒவ்வொரு மனிதனையும் புதினமாக்கும். யானைக்கு ஒரு இசை இருக்கு; பூனைக்கு ஒரு இசை இருக்கு; காக்கைக்கு ஒரு இசை இருக்கு. கொகாலு, துடுக்கு, ஜிம்பே, டிஜிருடூ ஆகிய பழங்குடி இசைக்கருவிகளான இசை இன்னும் பிரமாண்டமாக இருக்கும். அதில்,நாட்டுப் புற பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்,  நேட்டிவ் அமெரிக்கன், ஆப்பிரிக்கன், ஆஸ்ட்ரேலியா பழங்குடிகளின் இசைக்கருவிகள் நம்மை மெய்சிலிர்க்கவைத்து வேறு உலகத்துக்குக் கூட்டிப் போகும்.

திணை நிலவாசிகள் குழுவின் இசை இயக்குநர்கள் சாரு – லியோன் பழங்குடி கருவிகள் வாசித்துப் பாடுறவங்கதான்.

உங்களுடைய எதிர்காலக் கனவுத் திட்டம் என்ன?

நிறைய நாடகக் கலைஞர்களை உருவாக்கணும். சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய புரிதலை உருவாக்கிக் களப் பணி செய்யவைக்க வேண்டும். வீட்டுக்கொரு கலைஞன் இருந்தால் நாட்டில் பல பிரச்சனைகள் குறையும். மேற்கண்டு நம்பேசிய ஜாதி, மதம், உடல், மொழி எந்தப் பிரச்சனையும் வராமலிருக்கும். நாடகக் கலையைக் கற்றுக்கொடுக்கச் சென்னையில் பல கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஆயிரக்கணக்காகப் பணம் வசூல் செய்கிறார்கள். ஆனால், எங்களிடம் கலை கற்றுக்கொள்ள வருபவர்களிடம் கட்டணம் பெறமாட்டோம்.

சில பேர் ஐம்பதாயிரம் கொடுத்தால் போதும் நடிப்பைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஒருபோதும் பாடத் திட்டத்திற்குள் நடிப்புக் கலையைக் கொண்டுவரமுடியாது. படித்த பட்டதாரிகள் வேறுவேறு நிலவியல் பின்புலத்தில் இருந்து வேற வேற சமூகக் கட்டமைப்பில் இருந்து கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுத்தரவேண்டும். சினிமா கட்டவுட்டிற்குப் படித்த பட்டதாரிகள் பாலூத்தும் வேளையில், படித்த பட்டதாரிகள் நாடகம் நடிக்க வந்துகொண்டிருப்பது உத்வேகம்தான். கட்டவுட்டிற்குப் பாலூத்தும் காலம் முடியப் போகிறது.

நாடகம் கற்றுக்கொள்ள நிரந்தர அரங்கு கட்டவேண்டும். அதுதான் பெரிய கனவு. அரங்கு கட்டிவிட்டால், தினமும் பெர்ஃபாமன்ஸ் நடந்துகிட்டே இருக்கும். பிரான்ஸ், ஐரோப்பா நாடுகளில் எல்லாம் அடுத்த வருடம் நடக்கப்போகும் நாடகத்துக்கு இப்பவே ஹவுஸ்புல் ஆகிடும். அந்த மாதிரியான சூழலைச் சென்னையில் கொண்டுவரவேண்டும். இலவச நிரந்த ஒத்திகை அரங்கு கொண்டுவரவேண்டும். இதுதான் எங்களின் தீராக் கனவு.

நேர்காணல் : பச்சோந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்