Aran Sei

‘இடது சாரிகளின் வலிமையே மக்கள் போராட்டங்கள்தான்’ – சீதாராம் யெச்சூரியோடு நேர்காணல்

Image Credits: DNA India

க்களின் நலனுக்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றுவதால்தான் கேரளா மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களில் இடது சாரிகள் வெற்றிபெற்றுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்றும் தலைமை பதவிகளில் புதிய முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “

சமீபத்தில், கேரளா மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களில் சிபிஎம் வெற்றி பெற்றுள்ளது. எதனால் இந்த வெற்றி ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இரு மாநிலங்களிலும் வெற்றிக்கான காரணங்கள் முற்றிலும் வேறுபடுகின்றன, இருப்பினும் அடிப்படைக் காரணி என்னவென்றால், இடது சாரிகள் மக்களின் நலனுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள். இதனால் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி ஏற்பட்டுள்ளது.

கேரளாவில், கடந்த ஐந்து ஆண்டுகளில், வெள்ளம், கொரோனா தொற்று, நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நெருக்கடி போன்ற சூழல்களில் நிவாரணம் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் செய்த பணியின் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) பாஜகவும் மேற்கொண்ட பிரச்சாரங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக இடது சாரிகள் தொடர்ச்சியாகப் போராடிவருகிறார்கள். ஸ்ரீநகருக்குள் நுழைவதற்காக “இரும்புத்திரை” கடந்து சென்ற முதல் அரசியல் தலைவர் நான் தான். இது மக்களிடையே நம்பகத்தன்மையை அதிகரித்தது. தேர்தல் செயல்திறன் முக்கியமானது, யாரும் அதை மறுக்கவில்லை, ஆனால் இடது சாரிகளின் வலிமை மக்கள் போராட்டங்களை வழிநடத்தும் திறனால் அளவிடப்படுகிறது.

மேற்கு வங்க தேர்தல் – சிஏஏ குறித்து அடக்கி வாசிக்கும் அமித் ஷா – ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜக

மேற்கு வங்கத்திலிருந்து இது போன்ற வெற்றி செய்திகளை நாம் ஏன் கேட்க முடியவில்லை?

வங்காளத்தில் உள்ள முக்கியமான பிரச்சினை தேர்தல்கள் சரியான வழியில் நடத்தப்படவில்லை என்பதே. இது மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இல்லை. தேர்தல் முறைகேடாகவே உள்ளது. இப்போது, ​​காங்கிரஸ் இடது சாரிகளுடன் முறையாகக் கூட்டணி வைக்க ஒரு முடிவை எடுத்துள்ளது, எனவே எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மாநில அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொகுதி பங்கிட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட, மக்கள் பிரச்சனைகள் குறித்து கூட்டு பிரச்சாரங்கள் நடத்துவதை பற்றியும் கூட்டு இயக்கங்கள் நடத்துவதை பற்றியும் விவாதிக்கப்படும்.

மேற்கு வங்காளத்தில் இடது சாரிகளும் காங்கிரசும் கணிசமான பலத்துடன் இருக்கும்போதிலும் பாஜக திரிணாமுல் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிவருவது எப்படி?

அதற்கு முக்கிய காரணம், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான வெறுப்பு அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த வெறுப்பால் யார் பயனடைவார்கள்? இடது சாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக மக்கள் பாஜகவை ஒரு மாற்றாகப் பார்க்கிறார்கள். இதற்கு ஊடக மிகைப்படுத்தலும் மிக முக்கியமான காரணம்.  வகுப்புவாதமும் தன்முனைப்பும் ஏற்பட்டுள்ளது. வங்காளத்தில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. திரிணாமுல் காங்கிரசும் பாஜகவும் இதில் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். இடது சாரிகளும் காங்கிரசும் இப்போது ஒருவித தேர்தல் புரிதலுக்கு வந்துள்ளனர். இது ஒரு முக்கியமான மாற்றாக அமையும். இது பாஜகவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எதிர்ப்பில் தலைமைப் பாத்திரத்தை வகிக்கக் காங்கிரஸ் தவறிவிட்டது என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சில பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதில் சில குறைபாடுகள் உள்ளன. உள்கட்சி சண்டைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் குறைபாடுகளால் காங்கிரஸ் சூழப்பட்டுள்ளது. இதுவும் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இந்தப் பிரச்சனைகள் நமது குடியரசையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது.

இந்தியாவின் முதல் இளம் மேயர் ஆர்யா – கவுன்சில் கூட்டத்தில் பதவி ஏற்றார்

21 வயதான சிபிஎம் தலைவர் ஆர்யா ராஜேந்திரன் மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அரசியல் பணியகம் *(பொலிட் பியூரோ) உட்பட கட்சிக்குள் புதிய முகங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதை பற்றிய உங்களது கருத்து?

எந்தவொரு அரசியல் கட்சியிலும், மேலிருந்து எதையும் திணிக்கக் கூடாது. அது கீழே இருந்து நடக்க வேண்டும். ஆர்யா ராஜேந்திரன் மட்டுமல்ல, கேரளாவில் பல முறை இளம் வேட்பாளர்கள் பஞ்சாயத்து தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் பார்ப்பது இளம் இரத்தத்தைக் கொண்டுவருவதற்கான செயல்முறையாகும். இந்தியாவில் காட்சிகளில் இருப்பவர்களின் சராசரி வயது 40, நமது தலைமை அமைப்புகளில் சராசரி வயது 60 ஆகும். இதனை சரிசெய்ய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே நினைப்பதுண்டு. இந்த ஏற்றத்தாழ்வு தொடரக் கூடாது. இதைத் தவிர்க்க வேண்டும், இது தவிர்க்கப்படும்.

(தி இந்து இணையதளத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்