Aran Sei

இரண்டரை கோடி வன்னியர்களை அடகு வைத்தது பாமக : காடுவெட்டி குரு மகன் கனலரசன்

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் மகன், “மாவீரன்  மஞ்சள்படை”யின் தலைவர் கனலரசன் சமீபத்தில் திமுக இளைஞரணி தலைவர்  உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க விற்குத் தங்கள் இயக்கத்தின் ஆதரவை  தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் நடந்தது என்ன?  திமுகவிற்கு ஆதரவு அளித்தற்கான காரணம் என்ன? என்று  பல முக்கியமான கேள்விகளுக்கு “மாவீரன் மஞ்சள் படை”யின் தலைவர்  கனலரசன் அரண்செய்க்கு அளித்துள்ள சிறப்பு நேர்முகம்.

மாவீரன் மஞ்சள் படையின் அரசியல் பயணத்தைப் பற்றிக் கூறுங்கள்?

மாவீரன் காடுவெட்டி குரு அவர்கள் இறந்த பிறகு இந்த வன்னியர் சமூதாயம் நிர்கதியாக நிற்கிறது. இந்த சமுதாயத்திற்கு என்று ஒரு சரியான தலைமை இல்லை .இந்த இரண்டரை கோடி மக்களும் குடிகார சாதியாக மாற்றப்பட்டுத் தேவைக்கேற்ப நோட்டிற்கும் சீட்டிற்கும் அடகு வைக்கும் ஒரு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதனுடைய ஆதங்கம் மற்றும் இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் ”மாவீரன் மஞ்சள் படை“.தற்போதைய சூழலில் முன்னாள் பாமக நிர்வாகிகளும் மாவீரன் விசுவாசிகளான அனைவரும் மாவீரன் மஞ்சள் படைக்கு முழு ஆதரவு தருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலின் சமயத்தில், சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வன்னியர் சமூகத்திற்காகப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தீர்கள், அந்தக் கோரிக்கைகளின் நிலை தற்போது என்ன?

பாமகவின் முதுகெலும்பாக இருந்தவர் மாவீரன் காடுவெட்டி குரு. அவர் இறந்த பிறகு பாமக பல்வேறு தவறுகளைச் செய்ததாக நாங்கள் குற்றம்சாட்டியிருந்தோம். மாவீரனை நிரந்தர வன்னியர் சங்கத் தலைவராக அறிவித்துவிட்டு அதை மாற்றினார்கள். வன்னியர்களின் கல்வி அறக்கட்டளையை ராமதாஸ் அவர்களின் குடும்பச் சொத்தாக மாற்றினார்கள்.

அது மட்டுமல்லாமல் தங்களின் உயிரை தியாகம் செய்து  108 சாதிகளுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்து, அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் குடும்பங்கள் சரியான வீடு வசதி கூட இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றன. அவர்களை செப் 17-ம் தேதி மட்டும் சந்தித்து விட்டுத் துணி மணிகள் கொடுப்பது சரியான அணுகுமுறை இல்லை.

அந்தத் தியாகிகளின் குடும்பங்களுக்குக் கல் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒரு ஆணுக்கு வேலை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும். அந்தக் குடும்பங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பென்சன் தொகையை ரூ.3000-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கைகள். அவை எதுவுமே இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாக விமர்சித்து வந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 10 அம்ச கோரிக்கையை முன் வைத்தது. அதில் ஒன்றுகூட வன்னியருக்கான கோரிக்கை கிடையாது. அந்த 10 கோரிக்கைகளில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டதா என்றால் அதுவும் தெரியவில்லை .

இந்தக் காலகட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், பாமகவின் பின்னால் இத்தனை கோடி வன்னியர் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். இத்தனை சீட்டு வேண்டும், இவ்வளவு கோடி வேண்டும் என்று பேரம் பேசும் கீழ்த்தரமான அரசியலை பாமக இனியும் தொடர மாவீரனின் விசுவாசிகளான நாங்கள் விட மாட்டோம். மாவீரன் மஞ்சள் படையின் சார்பாக இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் தோற்கடிக்கப்பட்டது காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களால்தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?

நிச்சயமாக! அதுதான் நிதர்சனமான உண்மை. பெரும்பான்மையாக வன்னியர்கள் வசிக்கும் பகுதியான தர்மபுரியில் எந்த வேலையும் செய்யாமல் வெற்றி பெற்ற மாவீரன் எங்கே? இவ்வளவு வேலை செய்தும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி ராமதாஸ் தோற்கடிக்கப்படுகிறார் என்றால் இந்த வன்னியர் சமுதாயம் இந்த மருத்துவர்கள் ( ராமதாஸ் , அன்புமணி ராமதாஸ் ) இருவரையும் புரிந்துகொண்டார்கள்.

பாமகவும் சரி இவர்கள் இருவரும் சரி இதுவரை இந்தச் சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள். இதற்குப் பிறகு என்ன செய்வார்கள், மாவீரனுக்கு என்ன துரோகம் செய்தார்கள், மாவீரன் குடும்பத்திற்கு என்ன துரோகம் செய்தார்கள், வன்னியர் சமுதாய மக்களை வைத்து எப்படி பேரம் பேசுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் சந்தித்த படுதோல்விக்குக் காரணம்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக இளைரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் நடத்திய சந்திப்பிற்கான காரணம் என்ன?

இந்தச் சந்திப்பில் “மாவீரன் மஞ்சள் படை”யின் சார்பாக இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தோம்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு ஐயா கலைஞர் காலத்தில் பெற்றுத்தரப்பட்டது. இன்றைய நிலையைப் பொறுத்தவரையில் இருக்கும்

  • 108 சாதிகளில் வன்னியர்களுக்கு என்று தனியாக 20% உள்ஒதுக்கீடு
  • இந்த வன்னியர் சமுதாயத்துக்காகப் பலநூறு வழக்குகளைச் சந்தித்த மாவீரனுக்குச் சென்னை மாநகராட்சியில் சிலை.

என்று இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். இதை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளோம்.

சென்னையில் சிலை நிறுவப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளாரா ?

ஆமாம். இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம், திமுகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சிலை நிறுவப்படுவதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத் தவறாமல் மேற்கொள்வோம்.

பாமக சார்பில் காடுவெட்டி குருவிற்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது, சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் போதவில்லையா ?

பாமக தரப்பு நூறு சதவீதம் மாவீரனுக்கான அங்கீகாரத்தை தரவில்லை ஏனென்றால் மாவீரன் அவர்களுக்கு ஒரு சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்தால் மட்டும் போதாது. இன்றைய தேதியில் நடக்கும் வன்னியர் சங்க மாநாடுகளில் கூட முன்னால் வன்னியர் சங்கத்தின் தலைவரான மாவீரனின் புகைப்படமும் பெயரும் எந்த ஒரு பதாகையிலும் போஸ்டரிலும் பேனரிலும் போடப்படுவதில்லை. இது இளைஞர்களுக்கு பாமக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமே இவர்கள் மாவீரனுக்கான அங்கீகாரத்தைத் தர மறுப்பதை நாம் உணரலாம்.

சென்னையில் சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கான காரணம் என்ன ?

யார் யாருக்கோ சென்னையில் சிலை இருக்கும்பொழுது இரண்டரை கோடி மக்களைக் கொண்டுள்ள ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் தலைவருக்குச் சிலை அமைக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. அது ஒரு சாதாரண விஷயம்தான். தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சரையே எதிர்த்துப் பேசும் ஒரே தைரியம் மாவீரன் காடுவெட்டியார் அவர்களுக்கு மட்டும்தான் இருந்தது. அதிகமான இளைஞர்களின் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் தமிழ்நாட்டிலேயே மாவீரன் அவர்கள்தான். அப்படிப்பட்ட ஒருவருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது இயல்பான ஒன்றுதான். அது பெரிய விஷயம் இல்லை.

உங்கள் தந்தை கடுமையாக எதிர்த்த திராவிட கட்சிகளுள் ஒன்றான திமுகவிற்கு உங்கள் ஆதரவை அளித்ததற்கான காரணம் என்ன ?

கட்டாயமாக, நீங்கள் கேட்கும் கேள்வியை நாங்கள் மறுக்கவில்லை. அரசியல் என்று வரும்பொழுது மாவீரன் காடுவெட்டியார் அவர்கள் திமுக, அதிமுக, விசிக போன்ற பல்வேறு கட்சிகளையும் பல்வேறு அரசியல் அமைப்புகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஆனால் இது “யார் சொல்லிக் கொடுத்து நடந்தது; யார் பின்னணியில் நடந்தது” என்பதை மக்களும் அறிவார்கள் வன்னியர் சமுதாயமும் அறியும். தற்போது எங்களுக்கு தேவை எங்களுடைய சமுதாய நலன் மட்டுமே. பாமக ஒவ்வொரு முறையும் தாங்கள் சொல்லிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியிருக்கிறார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில்” நானோ என் பிள்ளைகளோ அரசியலுக்கு வர மாட்டோம்” என்று சொல்லிய அன்றிலிருந்து இன்று ”அதிமுக, திமுகவுடன் கூட்டணிக்குச் சென்றால் தன் தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம்” என்று கூறிவிட்டு, இன்றைய வரை அதன் ஒரு வார்த்தையைக் கூட காப்பாற்றவில்லை. அந்தத் தவறை நாங்கள் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு வேண்டியது எங்கள் சமுதாய நலன்.

  • எங்கள் சமூகத்திற்கு 20 % உள்ஒதுக்கீடு.
  • 21 தியாகிகளுக்கு கல் வீடு
  • மாவீரன் காடுவெட்டி குருவிற்கு சென்னையில் சிலை.
  • எங்கள் சமுதாயம் படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் நல்ல ஒரு அங்கீகாரம் தேவை.

இதுதான் எங்கள் கோரிக்கைகள் இந்தக் கோரிக்கைகளை யார் நிறைவேற்றினாலும் மகிழ்ச்சிதான். அது திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி. பாமக அரசியல் செய்வதற்கு திமுகவும் அதிமுகவும் தேவைப்பட்டது. அன்புமணி அவர்களை ராஜ்ய சபாவிற்கு அனுப்புவதற்கு மட்டும் அன்று திமுக தேவைப்பட்டது. இப்படி இருக்கும் சூழலில் எங்கள் சமுதாய நலனுக்காக திமுகவிற்கு ஆதரவு அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த முடிவை குறைகூறும் அளவிற்கு இங்கு யாரும் தகுதியானவர்களும் இல்லை. எங்களின் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாமக இருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்க மாட்டோம் என்று கூறியிருந்தீர்கள் தேர்தல் காலத்தில் காட்சிகள் மாறலாம். ஒரு வேளை திமுக கூட்டணியில் பாமக இடம்பெற நேர்ந்தால் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் ?

நான் அன்று கூறியதைத்தான் இன்றும் கூறுகிறேன் ”பாமக இருக்கும் கூட்டணிக்கு எதிரணியில்தான் மாவீரன் மஞ்சள் படை இருக்கும்” என்பதை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

உங்கள் தந்தை கடுமையாக எதிர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருப்பது பற்றி உங்கள் கருத்து?

மாவீரன் காடுவெட்டியார் விடுதலைச் சிறுத்தைகளை விமர்சித்திருக்கிறார். இல்லையென்று மறுப்பதற்கு இல்லை. எங்களுக்கும் விசிகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் எங்கள் சமுதாய நலனுக்காக சில கோரிக்கைகளை திமுகவிடம் வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது திமுகவின் வேலை. இதில் விசிகவிற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

காடுவெட்டி குரு அவர்கள் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நீங்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதா?

இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்துக் கூடிய விரைவில் அந்த முடிவை நாங்கள் எடுப்போம். நீங்கள் பார்த்துத் தெரிந்துகொள்வீர்கள்.

நேர்முகம் : தேவா பாஸ்கர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்