Aran Sei

OTT காலத்தின் கட்டாயம் – இயக்குனர் விருமாண்டி

KaPeRanasingam

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் க/பெ. ரணசிங்கம், அக்டோபர் 2-ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருமாண்டி இந்த படத்தின் மூலம் திரை உலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

பூ, தோரணை, ஆடுகளம், அழகர்சாமி, கூடல் நகர் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள பெரிய கருப்பு என்பவரின் மகன் பி.விருமாண்டி. இயக்குநர் செல்வா உடன் துணை இயக்குனராக பணியாற்றி, ‘அறம்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களில் இணை மற்றும் துணை இயக்குனராக அனுபவம் பெற்றுள்ளார்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் மே மாதம் 22-ம் தேதி யூ டியூபில் வெளியிடப்பட்டது. படத்தின் சில இறுதிகட்ட பணிகள் பொதுமுடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.

க/பெ ரணசிங்கம் படம் அக்டோபர் 2-ம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. ஜீ ஃப்ளக்ஸ் தளத்தில் ஒவ்வொரு முறையும் கட்டணம் (pay per view) என்ற அடிப்படையில் பணம் செலுத்திப் பார்க்கும் முறையில் இப்படம் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 இந்திய மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் சப்-டைட்டில் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சமுத்திரக்கனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம், பவானி ஸ்ரீ மற்றும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழன், இயற்கை, கள்வனின் காதலி, கந்தசாமி, சுறா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே ஏகாம்பரம். இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பாடல்கள் வைரமுத்துவின் வரிகளில் இயற்றப்பட்டுள்ளன.

25க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள ‘வாகை சூட வா’ ஜிப்ரான் இப்படத்தின் இசையமைப்பாளர். அடங்காதே திரைப்பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி, இந்த திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

படத்தின் இயக்குனர் விருமாண்டியிடம் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் கதைக்களம் குறித்து பேசிய போது “அரசு இயந்திரத்தோடு தொடர்பு இல்லாமல் மக்கள் இயங்க முடியாது. ஒரு சராசரி நபருக்கும் அரசுக்கும் இடையேதான் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதனின் உணர்வு வெளிப்பாடாக படம் இருக்கும். பல்வேறு நாட்டு மக்களுக்கும் அந்த உணர்வுகள் பொருந்தும்” எனக் கூறினார்.

அவர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாதது குறித்து, “படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாகத்தான் திட்டமிட்டிருந்தோம். இது எதிர்பாராத ஒன்று என்றாலும், வருத்தம் ஒன்றும் இல்லை. இயற்கை மீது நமக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அது விளைவிக்கும் மாற்றங்களுக்கு தகுந்தாற் போல தகவமைத்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.” என்று இயக்குனர் கூறினார்.

”நான் சிறு வயதில் அப்பாவோடு நாடக கம்பெனியிலேயே வளர்ந்தவன். திரையரங்குகள் வரத் துவங்கியதும் மக்கள் நாடகத்தை மறந்துவிட்டு திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். மக்களை ஈர்ப்பதற்காக குலுக்கல் பரிசுகள் கூட கொடுத்தார்கள். பொதுமுடக்கத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் ஆகிய தளங்களுக்கு நகர ஆரம்பித்துள்ளனர். அந்த வடிவங்களுக்கு நாமும் மாற வேண்டியதுதான்” என்றார்.

”திரையரங்கில் படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து கைத்தட்டி விசிலடித்து பார்க்க முடியாது என்பது மட்டும் சிறிது கவலை அளிக்கிறது.” எனவும் படத்தின் இயக்குனர் விருமாண்டி கூறினார்.

நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள பிற தமிழ் திரைப்படங்கள், நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ‘பென்குயின்’ ஆகிய திரைப்படங்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்