விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை 2006-ம் ஆண்டு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ரத்து செய்ததது ஒரு தவறான முன்னுதாரணம் எனவும், இப்போதைய புதிய விவசாய சட்டங்களுக்கு பீகார் முதல்வர் பாராட்டு கோருவது விவசாயிகளின் நலனிற்கு எதிராக செய்யும் துரோகம் எனவும் சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்) பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா தெரிவித்திருக்கிறார்.
சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்)-ன் பஞ்சாப் கிசான் யூனியன் விவசாய சங்கம் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தீவிர ஆதரவளித்து வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக கார்ப்பரேட் துறைக்கு சாதகமாக ஒன்றிய அரசு இயற்றியிருக்கும் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்ட உத்தியை பலப்படுத்த, பாட்னாவில் இரண்டு நாள் மத்தியக் குழுக் கூட்டத்தை வியாழன் அன்று தொடங்கியது, சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்).
திபாங்கர் பட்டாச்சாரியா தி வயருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் “நிதீஷ் அரசாங்கம் விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை 2006-ம் ஆண்டு ரத்து செய்தது முதல் பீகாரில் விவசாயிகளின் நிலைமை மோசமாகி வருகிறது. 2005-2006-ல் ‘விவசாய தொலைநோக்கு பாதை’ குறித்து பேசிக் கொண்டிருந்த நிதீஷ் குமார், இப்போது விவசாயிகள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் பேசுவதை நிறுத்தி விட்டிருக்கிறார். மாறாக, அவர் ஒன்றிய அரசுக்கு ஒத்து ஊதுகிறார்” என்று கூறினார்.
மகாகட்பந்தன் கூட்டணியில் இணைந்துள்ள ராஷ்ட்ரியா ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்), சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய எல்லா கட்சிகளும் பஞ்சாபிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாள உள்ளன என்கிறார், அவர். “ஒன்றிய அரசு புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது வரை போராட்டத்தை விவசாயிகள் நிறுத்த மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
பீகாரில் பாஜகவிடம் இழந்திருக்கும் இடத்தை மீண்டும் கைப்பற்ற நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முயற்சிக்க வேண்டும் என்றார் திபாங்கர் பட்டாச்சாரியா. “பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளுக்கும் எதிர்ப்பு இருந்தது. கொரோனா பரவத் தொடங்கியதால் ஒன்றிய அரசு எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் முழு அடைப்பை அமல் செய்ததால், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாரின் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். பல்வேறு துறைகளில் பொருளாதாரம் அடி வாங்கியிருக்கிறது. இவை எல்லாமே ஒன்றிய அரசின் முறையாக திட்டமிடாத கொள்கைகளின் விளைவு, இந்தக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் அரசுக்கு எதிரான மனப்பான்மை வளர்ந்திருந்தது” என்கிறார்.
“ஆனால் பீகாரில் தேர்தலுக்கு முன், நிதீஷின் ஆட்சியை தான் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று திசை திருப்பி விட்டு, பாஜக தன்னை பாதுகாத்துக் கொண்டது”. தேர்தலுக்கு முன் வரை மூத்த கூட்டணிக் கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம், இப்போது இளைய கூட்டணி கட்சி எனும் இடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. 2015-ல் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 28 தொகுதிகள் குறைந்து இப்போது வெறும் 43 இடங்களில் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.
“ஒன்றிய அரசின் கொள்கைகளால்தான் ஐக்கிய ஜனதா தளம் அதிகம் பாதிக்கட்டது என்பதையே இது காட்டுகிறது. தனது வாக்காளர் திரளை, பாஜக எப்படி அரித்து எடுத்தது என்று நிதீஷ் குமார் ஆய்வு செய்ய வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதோடு நின்று விடக் கூடாது” எனகிறார் பட்டாச்சாரியா.
மகாகட்பந்தன் குறித்து பேசும் போது இடது சாரிக் கட்சிகள் – குறிப்பாக சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்) – தாங்கள் இழந்த ஆதரவை கைப்பற்றியது மட்டுமல்லாமல் அதை விரிவாக்கவும் செய்திருக்கின்றன, என்றார் அவர். “இடது சாரி கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. அதில் சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்) மட்டுமே 12 இடங்களை வென்றது. தேஜஸ்வி யாதவின் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (2019 பொதுத் தேர்தலில் இழந்த) செல்வாக்கை மீண்டும் கைப்பற்றியது. ஆனால், 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். காங்கிரஸ் பீகாரில் இன்னும் கொஞ்சம் பொறுப்போடு தீவிரமாக இருக்க வேண்டும். காங்கிரஸின் தலைமையை விட தேஜஸ்வி அதிகம் பொறுப்போடு நடந்து கொண்டார்” என்றார்.
வங்காள தேர்தல்கள்
வங்காளத்தில் பத்து நாட்கள் இருந்துவிட்டு பாட்னாவில் நடக்கும் மத்தியக் குழு கூட்டத்திற்காக பாட்னா திரும்பியிருக்கும் பட்டாச்சாரியா, சிபிஐ (எம்) தலைமையிலான இடது முன்ணணி பாஜகவை முதல் எதிரியாக நடத்தவேண்டும் என்றார். “இந்தியாவின் ஆன்மாவை அழித்துக் கொண்டிருக்கும் பாஜக, அரசியல் களத்தில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்ய வங்காளத்தில் இருக்கும் ஜனநாயக சக்திகளோடு சிபிஐ (எம்.எல்-லிபரேஷன்) பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறது” என்றார்.
“இடது சாரி கட்சிகள் மமதா பானர்ஜி அரசை விமர்சிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், பாஜக அரசை விமர்சிப்பது போலவும், அந்த அடிப்படையிலும் விமர்சிக்கக் கூடாது. பீகாரின் பாடங்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள், வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளில் அரசை எதிர்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, உணர்ச்சி பூர்வமான பிரச்சனைகளில் பாஜகவுடன் இணையக் கூடாது” என்றார் திபாங்கர் பட்டாச்சாரியா.
“இடது அமைப்புகள் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பாஜகவுடன் சேர்ந்து போட்டியிடக் கூடாது. திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடது அமைப்புகள் இணைந்து பாஜகவிற்கு எதிராக போட்டியிட வேண்டும். பாஜகவை எதிர்ப்பது தான் இடது சாரி செயற்பாட்டின் அடிப்படை. தேசிய அச்சுறுத்தலாக இருக்கும் பாஜகவை எதிர்த்து இயங்கும் போது, வங்காளத்தின் இடது அமைப்புகள் ஒரு உள்ளூர் அமைப்பு போல செயல்படக் கூடாது” என்றார்.
இது குறித்து மேலும் விவரித்த திபாங்கர், “ரவீந்திரநாத் தாகூர், ராஜா ராம் மோகன் ராய், ஈஷ்வர் சந்திர வித்யா சாகர் போன்றோர் வலியுறுத்திய விடுதலை அளிக்கும் கொள்கைகளின் நீட்சியாகவே இடது சாரிகள் வங்காளத்தில் இருக்க வேண்டும். அவர்கள் ‘சதி’க்கு எதிராக போராடி, கைம்பெண் திருமணங்களை ஊக்குவித்து, இந்துப் பெண்களுக்கு வலுவூட்டினார்கள். இந்த சமூக சீர்த்திருத்தவாதிகளிடம் இருந்து இடதுசாரி பெற்ற கொள்கைகளை அழிக்கவே பாஜக ‘லவ் ஜிகாத்’ என்றும், துர்கா பூஜையின் அர்த்தத்தை தவறாக திரித்தும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. சங் பரிவாரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக இடது சாரிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” என்றார்.
thewire.in தளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.