Aran Sei

“மாதவிடாயை தள்ளிவைக்க மருந்துகள் உட்கொண்டேன்” – கொரோனா மருத்துவர்

மருத்துவர் ஜி.கே.திவ்யா

கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பொருளாதார சரிவு, வேலையின்மை போன்ற பல சிக்கல்கள் உருவாகின. பொதுமுடக்கத்தின் போது வீட்டிலிருந்தபடி பலர் பணிபுரிந்தபோதும், மருத்துவத் துறை, துப்புரவுத் துறை, பத்திரிகைத் துறை, பொது நிர்வாகத் துறை போன்றவற்றில் பணி புரியும் முன்னணி தொழிலாளிகளுக்கு இது சாத்தியப்படவில்லை.

இக்காலகட்டத்திலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த, மதுரை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயிற்சி மருத்துவர் ஜி.கே.திவ்யா அவரது அனுபவங்களை அரண் செய்-யுடன் பகிர்ந்துகொள்கிறார்.

கொரோனா பணியில் ஈடுபட்ட முதல் நாள் உங்களது மனநிலை எவ்வாறாக இருந்தது?

பணியின் முதல் நாள் மிகுந்த அச்சத்தில் இருந்தேன். இதற்கு முன் கொரோனா பணியில் ஈடுபட்டதில்லை என்பதால் இச்சூழலை எவ்வாறு கையாளப் போகிறேன் போன்ற குழப்பங்கள் ஏற்பட்டன. பணிநிமித்தமாக எனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக வாழ்கிறேன், இந்நிலையில் எனக்கும் கொரோனா தொற்று உறுதியாகிவிட்டால் என்ன செய்வது போன்ற பல குழப்பங்கள் இருந்தது.

பாதுகாப்பு கவசங்களை எவ்வாறு அணிந்துகொள்வது, அகற்றுவது போன்றவற்றை கற்றறிந்து, கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் நெறிமுறைகளைப் படித்துவிட்டு, முடிந்த அளவுக்குத் தயாராகச் சென்றிருந்தேன்.

கொரோனா பணியில் ஈடுபட்டதால் பொதுவாக நாங்கள் பயணிக்கும் பேருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனக்கும் வாகனம் ஓட்டத் தெரியாது. இதனால் முதல் நாள் மருத்துவமனைக்குச் செல்வதே பெரிய சிக்கலாக இருந்தது. இப்போது என்னுடன் பணிபுரியும் முத்த மருத்துவருடன் சென்று வருகிறேன்.

இரண்டு கட்டிடங்கள் புதிதாகக் கொரோன வார்டாக ஒதுக்கப்பட்டிருந்த காரணத்தால் வழியைக் கண்டறிவதே கடினமாக இருந்தது, அறைகளும் சரியாக லேபிள் செய்யப்படாத நிலையில் தான் இருந்தது. நோயாளிகளுடன் துணைக்கு வந்தவர்கள் தான் எங்களை வார்டுகளில் கொண்டு சேர்த்தார்கள்.

உங்களால் மறக்கமுடியாத அல்லது உங்களை மிகவும் பதித்த சம்பவம் எது?

ஒரு அறையில் 4-5 நோயாளிகள் இருந்தார்கள். உள்ளே நுழைந்தவுடன் தான் ஒரு பெண் கீழே விழுந்திருந்ததை கவனித்தேன். அங்கிருந்த மற்றவர்களை இவர் எவ்வளவு நேரமாக இவ்வாறு இருக்கிறார் என்று கேட்டதிற்கு, அரை மணி நேரமாக இப்படி தான் இருக்கிறார் என்று கூறினார்கள். உடல் நிலை முடியாமல் கீழே படுத்தவர் பல்ஸ் குறைந்து இறந்திருக்கிறார்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்ய இ.சி.ஜி. ஸ்கேன் முடிவுகள் வர வேண்டும். இ.சி.ஜி. இருந்தால் தான் ஒழுங்காக ஆவணப்படுத்த முடியும். அப்போது அங்கு இ.சி.ஜி. கருவி இல்லாத காரணத்தால் மரணத்தை உடனடியாக உறுதி செய்து விட்டார்கள். அவரது மகன் அருகிலிருந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்ததை பார்க்க எனக்குக் கடினமாக இருந்தது. இவை அனைத்தும் எனது கொரோனா பணியின் முதல் சில நிமிடங்களிலேயே நடந்தேறி விட்டது.

மருத்துவர் ஜி.கே.திவ்யா

ஒரு நோயாளியின் உறவினர் நீண்டநேரமாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தார். பணியின் போது அழைப்புகளை ஏற்கக் கூடாது எனும் விதிமுறை அறியாமல் அவருடன் உரையாடினேன். “இன்னாதான் வேலை பண்றீங்க?” என்று கேட்ட அவர், எனக்குச் சிபாரிசு இருக்கிறது என்று கூறி தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டார். பணிச் சுமை காரணமாக நான் பதில் அளிக்கும் நிலையில் கூட இல்லை. சரியாகப் பணிபுரிந்தும் இவ்வகை கருத்துக்களை கேட்பது மனசுக்கு வருத்தமாக இருக்கும்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் எவ்வாறான மருத்துவம் வழங்கப்படும்?

ஒருவரின் ஆக்சிஜன் சேச்சுரேசன்  கணக்கைப் பார்ப்போம். 95 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் சரியான உடல் நிலையில் இருப்பதாக அர்த்தம். இதற்குச் சற்று கீழ் இருந்தால் செயற்கை சுவாச வாயு பொருத்தப்படும். மிகவும் கீழ் இருந்தால் ஊசியின் மூலம் மருந்து செலுத்தப்படும்.

இதுபோல் பல்வேறு புள்ளிகளைச் சோதிப்போம். சி.ஆர்.பி புள்ளி போன்ற பலவற்றை கணக்கில் எடுப்போம். இவை அனைத்தையும் பார்த்துவிட்டு எங்களது விதிமுறைகளின்படி நடப்போம்.

பணிச்சுமை அதிகமாக இருந்ததா?

150 நோயாளிகளுக்கு 3 மருத்துவர்களும் இரண்டு செவிலியர்களும்தான் இருந்தோம். செவிலியர்கள் சரியான நேரத்தில் மருந்து செலுத்தி விடுவார்கள். நாங்கள் மேற்பார்வையிட்டு தேவை என்றால் செயற்கை சுவாச கருவிகளைப் பொறுத்துவோம்.

பல துறைகளைச் சேர்ந்த, மருந்தக மருத்துவர்கள் மற்றும் மருந்தகம் அல்லாத மருத்துவர்கள் (clinical & non-clinical) இருப்பார்கள். ஆய்வுக்கூட மருத்துவர்கள் போன்ற நோயாளிகளுடன் தொடர்பற்ற மருத்துவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், அவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.

பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருப்பதால் 6 மணி நேரம் கழிவறையை கூட பயன்படுத்த முடியாத நிலை இருக்கும். அதனால் மாதவிடாயை ஒத்திவைக்க மருந்துகள் உட்கொண்டிருக்கிறேன்.

கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் வழங்கப்படுமா?

கர்ப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் சிறப்பு கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ளத் தனியாக மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

உங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் சரியாக வழங்கப்படுகிறதா?

21 நாட்களாக இருந்த தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 14 நாட்களாகக் குறைந்து, இப்போது 7 நாட்களாக உள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ளும் விடுதிக்கான செலவை மருத்துவமனை ஏற்றுக்கொள்கிறது.

சரியான செயற்கை சுவாச கருவிகளும் மற்ற மருத்துவ உபகரணங்களும் இருக்கிறதா?

சற்று குறைவாகத் தான் இருந்தது. 10 லிட்டர் வரை செலுத்தக்கூடிய செயற்கை சுவாசக் கருவிகள் மட்டும் தான் இருந்தது. 75 லிட்டர் வரை செலுத்தக்கூடிய உயர் ஓட்டச் சுவாச கருவிகள் ஆரம்பத்தில் இல்லை. இதனால் அதிக இறப்புகள் ஏற்பட்டது. எனது ஒரு பணி நாளில் கிட்டத்தட்ட 3 பேர் இறக்கும் நிலை இருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்