Aran Sei

’ வெங்காயத்தின் விலையே கண்ணீர் வரவைக்கிறது ’ : அத்தோக்கடை சாந்தி

Atho joint

கொரோனாவினால் வேலையிழந்து புதிய தொழில் முயற்சியாக மாலை நேர தள்ளுவண்டி அத்தோக் கடை நடத்தி வரும் சாந்தி என்பவரிடம் பேசினோம்.

கடை ஆரம்பிப்பதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?

நானும் கணவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக தையல் தொழில் செய்து வந்தோம். லாக்டவுன் அறிவித்ததிலிருந்து தொழில் ரொம்ப சுமாராக இருந்தது. எப்படியும் லாக்டவுன் நீக்கியதும் துணி தைக்க வருவார்கள் என நம்பிக்கையோடு இருந்தேன்.

மூன்று மாதங்களில் மொத்தமாக இரண்டே பேர்தான் துணி தைக்க கொடுத்தார்கள். வாடகை கட்ட கூட பணம் இல்லாத நிலையில் தையல் தொழிலை ஓரங்கட்டிவிட்டு அத்தோக்கடை ஆரம்பித்திருக்கிறோம். கடை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

அத்தோக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

என் அக்கா மாதவரத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அத்தோக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்களோடு ஒத்தாசையாக கடையில் வேலை செய்த அனுபவம் நிறையவே இருக்கு. அக்கா கடையில் கற்றுக்கொண்ட நம்பிக்கையில் இதைக் கையில் எடுத்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் ரொம்ப தடுமாற்றம் இருந்தது. புதுக்கடை என்பதால் சாப்பிட யோசிப்பார்களோ என நினைத்தேன். வாடிக்கையாக சாப்பிட வருபவர்களிடம் சுவை குறித்து கேட்டுக்கொள்வேன்.

கடையில் எத்தனை பேர் வேலை பார்க்கிறீர்கள்?

நானும் கணவரும் மட்டும்தான். ஆள் வைத்து வேலை பார்க்கும் அளவு லாபம் தேறாது. காலை 11 மணியளவில் கோஸ் நறுக்குவது, வெங்காயம் உரிப்பது என துவங்கினால், மாலை 5 மணிக்கு கடை ஆரம்பிக்க சரியாக இருக்கும். அதிகபட்சமாக இரவு 9:30 மணி வரை திறந்து வைத்திருப்போம்.

கடையில் என்னென்ன உணவு வகைகள் விற்பனை செய்கிறீர்கள்?

அத்தோ, வெஜ் அத்தோ, முட்டை அத்தோ, அத்தோ ஃப்ரை, முட்டை மசால், மொஹிங்கா இதெல்லாம் இப்போதைய மெனுவில் உள்ளன. ஆன்லைனில் டெலிவரி செய்ய கட்டாயமாக சிக்கன் ஃப்ரை போட வேண்டுமாம். விரைவில் அதையும் கொண்டு வர உள்ளோம்.

கடைக்காக தேவைப்படும் பொருட்களை எங்கு வாங்குவீர்கள்?

கோஸ், வெங்காயம், பூண்டு, முட்டை, அரிசி மாவு, பொட்டுக்கடலை, எண்ணெய் மற்றும் மசாலாவுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே பக்கத்து கடைகளில் கிடைப்பதால், தேவையான காய்கறிகளை தினமும் வாங்கிக் கொள்வோம். ஃபிரிட்ஜ் இல்லை என்பதால் எதுவும் மொத்தமாக வாங்க முடிவதில்லை.

கடைக்கு வாடிக்கையாக வருபவர்கள் இருக்கிறார்களா?

மெயின் ரோட்டில் இருப்பதால் நிறைய பேர் தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும். பெரும்பாலும் பார்சல் வாங்குபவர்கள்தான் அதிகம்.

அதிகாரிகள் யாரும் வந்து சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்கிறார்களா?

மாநகராட்சியில் இருந்து சிலர் வந்து மாஸ்க், க்ளவுஸ் அணிந்திருக்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்கள். சிலசமயம் போலிஸ் வந்து கூட்டமாக இருப்பது பார்த்தால் இடைவெளி விட்டு நிற்க சொல்வார்கள் அவ்வளவுதான்.

எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள்? என்ன லாபம் கிடைக்கிறது?

தினமும் 800 – 900 ரூபாய் வரை செலவாகும். வெங்காயத்தின் விலையே கண்ணீர் வரும்போல இருக்கிறது. போன வாரத்தில் கிலோ 50 ரூபாய் வரை உயர்ந்தது. கடைக்கு தனியாக வாடகை ஏதும் கிடையாது. லைட்டுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 40 ரூபாய். எல்லா செலவும் போக ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நிற்கும். அதிலிருந்துதான் அடுத்த நாளுக்கான முதலீடு செய்யனும்.

புதுத் தொழில் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தினமும் ஐந்து மணிநேரம் தொடர்ந்து நிற்பது மிகவும் கடினமாக இருக்கிறது. சாப்பாட்டு கடை என்பதால் ராத்திரி பகல் உழைக்க வேண்டும். ஒரு நாள் கடைக்கு லீவு விட்டாலும் சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். கொரோனாவால் பலரும் வேலை இழந்து துன்பப்படுவதை பார்க்கும்போது, இந்த வாய்ப்பாவது இருப்பது குறித்து நிம்மதி.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்