Aran Sei

ஷாஹீன்பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜார், பாஜகவுக்கு ஏன் முக்கியமானவர்? – அலிஷான் ஜாஃப்ரி

ழுங்காக வீட்டுப்பாடம் செய்ததற்காக, உங்களை வகுப்பை விட்டு வெளியேற்றினால் எப்படி உணர்வீர்கள்? ஆசிரியர்களின் அறிவுரைகளை விடாமல் பின்பற்றும் ஒரு நம்பிக்கையான மாணவன் மீது, ஒழுங்கீனத்திற்காக எப்படி குற்றம் சாட்ட முடியும்? கடின வேலை செய்ததற்காக ஒரு ஊழியரை நிறுவனத்திலிருந்து அவருடைய மேலதிகாரி பணிநீக்கம் செய்தால் அவர் எவ்வாறு உணர்வார்?

உங்களைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், என் இதயம் ஆயிரக்கணக்கான துண்டுகளாக சிதறி விடும். அப்படித்தான் தற்போது கபில் குஜ்ஜாரும் கூட உணர்ந்திருப்பார். அர்ப்பணிப்புள்ள இந்துத்துவா தேசியவாதியாக கபில்,  தனது மிக உயர்ந்த கடமையைச் செய்தார். ஆனால்  இன்று பாஜக அவரை புறக்கணித்து விட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டம் நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த போது, நரேந்திர மோடி, கபில் போன்ற லட்சக்கணக்கான தேசியவாதிகளுக்கு “கலவரக்காரர்களை அவர்களது ஆடையை வைத்து அடையாளம் காணுங்கள்” என்று கட்டளை இட்டார். பிரதமரின் செய்தியில் ரகசிய குறியீடாக இருந்த இஸ்லாமோஃபோபியாவை, கபில் மிக மிகத் துல்லியமாக  புரிந்து கொண்டார். அமித்ஷா, ஷாஹீன்பாக்கில் ஒரு ‘மின் அதிர்ச்சி’ (electric shock) தருமாறு வேண்டுகோள் விடுத்ததை அதைவிட தீவிரமாக எடுத்துக் கொண்டார் கபில்.  அதே போல் சரியாக அதிர்ச்சியைக் கொடுத்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “துப்பாக்கி குண்டு மொழியை புரிந்து கொண்ட மக்கள்” என்று பேசிய போது, அவர் யாரை குறித்து பேசுகிறார் என்று கபிலுக்குத் தெரிந்திருந்தது. ஷாஹீன்பாக்கில் அதே மொழியில் பேசினார்.

வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி

இறுதியாக,சில நாட்களுக்குப் பிறகு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “தேஷ் கே காடரன் கோ, கோலி மாரான் சாலோன் கோ (தேசத்தைப் காக்க துரோகிகளை சுடு)” என்று முழக்கிமிட்டுச் சென்ற பாஜக ஆதரவாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கபில் அங்கு சென்று போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

துரோகிகளை அடையாளம் காண்பதிலிருந்து, இறுதியாக ஒழிக்கும் வரை, அனைத்திற்கும் பளிங்கு போல் தெளிவான உத்தரவுகள் வந்தன. கபில் குஜ்ஜார் மிக ஒழுங்காக அதைப் பின்பற்றினான். இருந்தாலும் தற்போது பாஜக, குறைந்தது வெளிப்படையாக, அவனால் தனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை என்று முடிவு செய்து விட்டது.

சிலர், கபில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராக  இருந்ததால் பாஜகவில் சேர்க்கவில்லை என்கின்றனர். ஆனால் அவர்கள், இன்னொரு கபில், ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக மட்டுமல்ல, அமைச்சராகவும் இருந்து பாஜகவில் இணைந்திருப்பதை மறந்து விட்டார்கள். மிஸ்ராவை பாஜகவில் சேர அனுமதிக்கும் போது, ஏன் குஜ்ஜாரைச் சேர்க்கக் கூடாது?  தில்லி கலவரத்திற்கு வித்திட்ட மௌஜ்பூர் வெறுப்பு பேச்சுத்தான் மிஸ்ரா, பாஜகவில் மிகப் பெரிய ஆளாக புகழ் பெற அவருக்கு உதவியது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர், தில்லி பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, உள்துறை  அமைச்சர் அமித்ஷா, போன்ற பாஜக தலைவர்களும் கூட, மிஸ்ராவை விமர்சனம் செய்தனர். இருப்பினும், வகுப்புவாத கலவரங்களுக்குப்பின் மிஸ்ரா இந்துத்துவா சூழல் அமைப்பிலும் பாஜகவிலும் தனது நிலையிலிருந்து பத்து மடங்கு உயர்ந்து விட்டார். பாஜகவுக்கு தில்லியில் கெஜ்ரிவாலுக்கு நிகராக ஒருவரை நிறுத்துவதற்கான முகம் கிடைக்கவில்லை. இப்போது மிஸ்ராதான் அந்த முகம். அவர் தில்லியின் அடுத்த முதல்வரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் படுத்திய அமித் மால்வியா – எச்சரித்த டிவிட்டர்

கபில் குஜ்ஜார் போன்ற இளைஞர்களை, சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை செயல்களைச் செய்ய, தொடர்ந்து தூண்டிவிடுபவர்கள் பதவியில் நீடிக்கும் போது,  துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த இளைஞன் ஏன் அவனது செயலுக்காக தண்டிக்கப்பட வேண்டும்? ஒருவேளை அவன் தனது குறியை சரியாகப் பார்த்து சுடத் தெரியாமல் தவறு செய்து விட்டதனால் இருக்குமோ? சில கடுமையான பயிற்சிகள், ஊக்கம், ஊக்கத் தொகை ஆகியவை கொடுத்தால் அவனும் சிறந்து விளங்குவான் என நான் உறுதியாகக் கூறுகிறேன். நிச்சயமாக காவி பயங்கரவாதம்தான், அவனது பயங்கரவாத செயல்களின் மீதான ஈடுபாடுதான் ஒரு வேளை அவனை விரைவாக வெளியேற்றியதற்குக் ஒரு காரணமாக இருக்கக் கூடும். மக்கள் அவனை துப்பாக்கிச் சூடு நடத்தியவன்  எனக் கூறும்போது, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அவனை தீவிரவாதி என்கிறார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் கபில் குஜ்ஜார் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவிய போது நட்டா, “பயங்கரவாதிகளை” ஆம்  ஆத்மி கட்சியில் சேர்த்துக் கொண்டிருப்பதற்காக கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தார். தில்லி காவல்துறை கபிலுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியது. ஆனால் சாத்வி பிரக்யா (பாஜக எம்.பி) கூட, பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்தான். அது நட்டாவையோ பாஜக தலைவர்களையோ சங்கடப்படுத்தவில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய பிரக்யா தாக்கூரை நாடாளுமன்ற உறுப்பினராக்க முடியுமென்றால், ஏன் கபில் குஜ்ஜாரை பாஜகவில் சேர்க்கக்கூடாது? அதுவும், பிரதமர் “இந்துக்கள் ஒரு போதும் பயங்கரவாதச் செயல்களை செய்ய மாட்டார்கள்” என்று கூறும்போது, எப்படி நட்டாவுக்கு  இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்ப முதலில் துணிவு வந்தது?

பல பாஜக தலைவர்கள், ஷாஹீன்பாக் போராட்டத்தை அச்சறுத்தியதை, இங்கு கவனத்தில் மீண்டும் கொண்டுவருவது மிக அவசியம். சிலர் கோத்ரா படுகொலையை மீண்டும் நடத்துவோம் என்றும் முஸ்லீம்களை உயிரோடு தோலுரிப்போம் என்றும் கூடக் கூறினார்கள். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரவேஷ் வர்மா, “ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள், இந்துக்களின் வீடுகளில் புகுந்து இந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வார்கள்,” என எச்சரித்தார். கபிலுக்கு, ஷாஹீன்பாக்கை எதிர்ப்பதற்கும், ஐயப்படுவதற்கும் வலுவான காரணங்கள் உள்ளன. முஸ்லீம்களுக்கு எதிராக தங்கள் அனல் தெறிக்கும் பேச்சுக்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல், பல தலைவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கும் போது, ஏன் கபிலை இவ்வாறு நடத்துகிறார்கள்?

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

சிறையிலிருந்து பிணையில் வந்த ஒராண்டிற்குள், தாக்குதல் நடந்த ஒரு வாரத்தில் கபில், வலதுசாரி சமூக வலைதளங்களில் தொடர்ந்து வளர்ந்து வரும் பின்தொடர்பவர்களுடன் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார். ஜாமியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய அவரது “சிறு” சகாவான ராம்பக்த் கோபாலும் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்தில் விடுதலை செய்யப்பட்டதும், அதிலிருந்து அவர் இந்துத்துவா தீவிரவாதிகளின் காணொளிகளில் தோன்றி, தனது செயலை நியாயப்படுத்தியதும் கவனத்திற்குரியது.

கபில் குஜ்ஜார் தொடர்ந்து ‘ஜிகாதிகளுக்கு’ எதிராக காணொளிகளை வெளியிட்டு வருகிறார். தனது இஸ்லாமோஃபோபியா காணொளிகளை சீராக வெளியிட்டு வரும் அவரது முகநூல் பக்கம் மோடி, அமித்ஷா, ஆதித்ய நாத் ஆகியோரது புகழ்பற்றி நிரம்பி உள்ளது. அவன் ஒரு மிகப் பெரிய ஆர்எஸ்எஸ் ஆதரவாளன். சர்ச்சைக்குரிய ‘லவ் ஜிகாத்’ சட்டத்திற்காக, யோகி ஆதித்யநாத் எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கபில் போன்றவர்கள் அந்த சட்டத்தை ஆதரிக்கக்கூறி வன்முறை வார்த்தைகளால் இந்துக்களை ஊக்கப்படுத்துகிறார்கள். யோகி ஆதித்யநாத் துவங்கிய, இந்து யுவ வாஹினி அமைப்பின் உறுப்பினராக இருப்பதாக கூறிக்கொள்கிறார் கபில்.

இன்று பாஜக, கபிலின் கடந்தகால குற்றவியல் வாழ்க்கையை மறந்து விட்டதாகக் கூறுகிறது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்பது கடினமாக உள்ளது.‌ கபில் குஜ்ஜார் மற்றும் ராம்பக்த் கோபாலுடனான பாஜகவின் உறவு, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கும், லட்சக்கணக்கான இந்துத்துவா சித்தாந்தவாதிகளுக்குமிடையிலான உறவு போன்றது. ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பாசத்தை பகிரங்கமாக கூறவும் முடியாது. இரகசியமாக வைத்திருக்கவும் முடியாது.

வழக்கமாக திரைமறைவில்,  இந்த தனிநபர்களின் செயல்களை பாராட்டுவதால், அந்த தனிநபர்களே தானாக ஒப்புதல் அளிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது. ஒரு பெரிய நோக்கத்திற்கான அடிமட்டத் தொண்டனாக இந்த தனிநபர்கள் இருப்பதால், அவர்களும் அதை பொருட்படுத்துவதில்லை. அவர்கள் “இந்து தேசத்திற்காகவும், நோக்கத்திற்காகவும்” வாழ்ந்து செத்து மடிவார்கள். ஆனால் இதுதான் அவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து வெளிப்படையாக்க வேண்டிய சரியான தருணமாகும்.

(www.thewire.in இணையதளத்தில் அலிஷான் ஜாஃப்ரி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்