Aran Sei

மீண்டும் ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ – மகிழ்ச்சியளிப்பதாக அருந்ததி ராய் கருத்து

‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ புத்தகத்தை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்த்தற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு எழுத்தாளர் அருந்ததி ராய் நன்றி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ எனும் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்த முடிவிற்கு எதிராக விவாதங்களும், கண்டனங்களும் எழுந்த காரணத்தால், இப்போது புத்தகம் பாடத்திட்டத்தில் தொடரும் என பல்கலைகழகம் அறிவித்திருக்கிறது.

அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) எனும் வலது சாரி மாணவர் அமைப்பின் இணை செயலாளர் சி.விக்னேஷ், அருந்ததி ராயின் இந்த புத்தகம் “தேச விரோதிகளான மாவோயிஸ்டுகளின்” கலகங்களையும், கொலைகளையும் வெளிப்படையாக ஆதரிப்பதனால் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என பல்கலைகழக துணை வேந்தரை வலுயுறுத்தினார்.

புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட தாமதமானால், மத்திய கல்வி அமைச்சகத்திடம் புகார் செய்யப்படும் எனவும், போராட்டங்கள் நடைபெறும் எனவும் விக்னேஷ் எச்சரித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பல்கலைகழக துணை வேந்தர் பிச்சுமணி, “ஏபிவிபி மட்டுமல்ல, பிறரிடம் இருந்து புகார்கள் வந்ததால், புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குகிறோம்” என அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு பிறகான விவாதங்களினால் தற்போது புத்தகம் மறுபடியும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காக அருந்ததி ராய் பல்கலைகழத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

“புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றும் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழகத்தின் இந்த அறிவிப்பை பல முற்போக்கு அமைப்புகளும் ஆதரித்து பாராட்டியிருக்கின்றன.

“நவம்பர் 23 அன்று நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு கூட்டத்தில் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ நூல் இந்தக் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் பாடமாக தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதை தமுஎகச வரவேற்கிறது” என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ், மத்திய இந்தியாவில், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைவிடங்களுக்கு அருந்ததி ராய் பயணித்ததை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பயண நூலாகும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்