அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியதை, கொண்டாடவோ அல்லது அதுகுறித்து பெருமைகொள்ளவோ இல்லை என்று, டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சே தெரிவித்துள்ளார்.
டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பிறகு, முதல்முறையாக இதுகுறித்து ஜாக் டார்சே கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “தெளிவான எச்சரிக்கை கொடுக்கப்பட்ட பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிவிட்டருக்கு உள்ளேயும், வெளியேயும், (மக்களின்) உடல் ரீதியான பாதுகாப்பிற்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து, எங்களுக்கு இருந்த தகவலின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது சரிதானே?” என்று ஜாக் டார்சே கேள்வி எழுப்பியுள்ளார்.
“டிவிட்டர் எடுத்த முடிவு சரியானது என்று நான் நம்புகிறேன். நாங்கள் சந்தித்த கடுமையான சூழல், எங்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும், மக்களின் நலனை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளியது” என்று ஜாக் டார்சே கூறியுள்ளார்.
டிரம்பின் கணக்கை முடக்கியது, டிவிட்டர் குறித்த இருவேறு கருத்துகளை கொண்ட உரையாடலை தொடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ள ஜாக் டார்சே, அவை தெளிவுபடுத்துதல், மீட்டெடுத்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான வெளியை குறிக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்ததுபோல் இந்தியாவிலும் நடக்கலாம் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு
“உலகளாவிய பொது உரையாடலின் ஒரு பகுதியின் மீதான கட்டுப்பாட்டை, ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ கொண்டிருப்பது, தவறான முன்னுதாரணம் என்றும்” ஜாக் டார்சே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “எங்களுடைய விதிகளையும், அதை நடைமுறைப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், வேறு ஒரு இணையதள சேவையை தாராளமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்” என்று ஜாக் டார்சே கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் 7ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், டிரம்ப்பின் ஆதரவாளர்கள், ‘கேபிடல் ஹில்’ என்று அழைக்கப்படும், அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். இதனால், நாடாளுமன்றத்திற்குள் இருந்த மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், கலவரக்காரர்கள், காவல்துறையின் தடுப்புகளை மீறி, நாடாளுமன்றத்திற்குள்ளேயே நுழைந்துவிட்டனர்.
இந்த சமயத்தில், கலவரத்தை ஆதரிக்கும் வகையில், டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் எழுதிய மூன்று பதிவுகளை நீக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த டிவிட்டர், அவருடைய கணக்கை 12 மணி நேரத்திற்கு முடக்கி வைத்தது.
As a result of the unprecedented and ongoing violent situation in Washington, D.C., we have required the removal of three @realDonaldTrump Tweets that were posted earlier today for repeated and severe violations of our Civic Integrity policy. https://t.co/k6OkjNG3bM
— Twitter Safety (@TwitterSafety) January 7, 2021
அதன் பிறகு, டிரம்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. இதேபோல், டிரம்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.