Aran Sei

விநாயகர் என்னும் இந்து தேசிய அடையாளம் – வரலாற்றில் ஒரு பயணம்

விநாயகர் சதுர்த்தியின் தற்கால வடிவத்திற்கு வயது 126. காலனிய ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னும் சாதியால் பிளவுபட்டிருக்கும் இந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதற்காகவும், பிற சமூகங்களை மற்றவையாக அறிவிப்பதற்காகவும், இந்துத் தேசியவாதிகள் கையில் எடுத்த மூன்று விவகாரங்கள் – பசு, விநாயகர், ராமர். இந்திய அளவில் இவை மூன்று என்ற போதும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு வெவ்வேறு வடிவங்களும் இருக்கின்றன. சமீப கால உதாரணம், தமிழக பாஜக கையில் எடுத்திருக்கும் முருகன் – வேல் வழிபாடு.
அதுவரை மராட்டியர்களின் வீடுகளில் அனுசரிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தியை 1894ஆம் ஆண்டு, பொது வழிபாட்டிற்குரிய நிகழ்வாக மாற்றினார் பால கங்காதர திலக். மேலும், அதுவரை பம்பாய் நகரில் முஹர்ரம் விழாவை ஊர்வலம் சென்று கொண்டாடிய முஸ்லிம்களுக்கு எதிராக அமைத்தார். 1893ஆம் ஆண்டு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களே திலகரின் இந்த ஒருங்கிணைப்பிற்குக் காரணம். ‘கேசரி’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த திலகர் ஓர் சித்பவன் பார்ப்பனர்.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியை இழந்த பிறகு (பீமா கோரேகான் போர்), சித்பவன் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. அப்போதைய பம்பாய் கவர்னரான எல்பின்ஸ்டோன், பேஷ்வாக்கள் ஆட்சியில் இருந்த சில திட்டங்களைத் தொடர முடிவுசெய்தார். அதில் ஒன்று, சித்பவன் பார்ப்பனர்களுக்குத் ‘தட்சணை’ வழங்குவது. அந்தத் தட்சணையைப் பணமாக வழங்கப்படாமல், பார்ப்பன சிறுவர்களுக்குக் கல்வியில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு கல்வி கற்பவர்களைப் பிற்காலத்தில் ஆங்கிலேய அரசின் பதவிகளில் சேர்த்துக் கொள்வதாகத் திட்டம் உருவாக்கப்ப்ட்டது.
அதே பம்பாய் மாகாணத்தில், சித்பவன் பார்ப்பனர்களைப் போல, அதிக எண்ணிக்கையில் அதிகாரம் பெற்றிருந்தது குஜராத்தி பனியாக்கள். அரசுப் பதவிகளில் இல்லாமல், அதிகளவில் சொத்து வைத்திருந்தது பனியாக்கள். கிழக்கிந்திய கம்பெனிக்கு வங்கிச் சேவை செய்வதற்காக வந்தவர்கள் பனியாக்கள். பிற்காலத்தில் மொத்த நாடும் ஆங்கிலேயர் வசம் சென்றபிறகு, ஆங்கிலேயர்களுடனான பனியாக்களின் கூட்டணி முறிந்தது. மேலும், அதே வேளையில் முஸ்லிம் முதலாளிகளான மேமன்களுடனும், சில ஜெயின் சமூகங்களுடனும் சந்தைப் போட்டியில் ஈடுபடும் நிர்பந்தம் பனியாக்களுக்கு அமைந்தது.
1857 சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தவிர்க்க முடிவு செய்தது வெள்ளையர் அரசு. 1850-60களில், ஜோதிராவ் பூலே பார்ப்பனர் அல்லாதோருக்கான அரசியலை முன்வைக்கத் தொடங்கினார். பள்ளிகள் தொடங்குவது, நாளிதழ்கள் நடத்துவது, தொழிற்சங்கங்கள் கட்டுவது, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு பிரிட்டிஷ் அரசைக் கோருவது என பூலேவின் பணிகள் நீண்டன. பூலே தொடங்கிய ‘தின பந்து’ நாளிதழ், 1880களில் திலகரின் ‘கேசரி’ நாளிதழுக்கு அடுத்ததாக அதிகளவில் விற்றது,
அதே வேளையில், முஸ்லிம்களில் மேமன், போஹ்ரா, கோஜா ஆகிய வணிக சமூகங்கள் உழைக்கும் முஸ்லிம்களுக்கான கல்விக்கூடங்களைத் தொடங்கினர். அரசியலற்ற கல்வியை மட்டும் வழங்குவதாகக் குற்றம்சாட்டிய சில இளைஞர்கள் வணிக சமூகங்களிடம் பணியாற்றுவதை விட்டு விலகி, அரசிடம் வேலைவாய்ப்பு, நிதியுதவி முதலானவற்றைக் கேட்கத் தொடங்கினர்.
ஆங்கிலேய ஆட்சியில் மேற்கத்திய கல்வி கற்ற பார்ப்பன இளைஞர்கள் குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் முதலானற்றை எதிர்க்கத் தொடங்கினர். அதே வேளையில், மேற்கத்திய கருத்துகளால் தமது ‘தேசிய’ கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக மற்றொரு பிரிவினர் அணி சேர்வது தொடங்கியது.
வி.கே.சிப்லுங்கர், திலகர், கவாஸ்கர் ஆகிய மூன்று சித்பவன் பார்ப்பனர்கள், ‘தேசிய கல்வி’ கற்றுத் தருவதற்காக பள்ளிகளையும், ’கேசரி’ என்ற மராத்தி பத்திரிகையையும் தொடங்கினர். 1885ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு பார்ப்பனர் அல்லாத மராட்டிய சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்காக 5 சதவிகித இட ஒதுக்கீடு அளித்ததைப் பூலேவின் ‘தின பந்து’ ஆதரிக்க, அதனைக் கடுமையாக எதிர்த்து தலையங்கம் எழுதியது திலகரின் ‘கேசரி’.
ஆங்கிலேயர் ஆட்சியில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோருக்குப் பொது எதிரியாக அமைந்திருந்தது அதிகளவிலான பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவம். இந்த இயல்பான கூட்டணியை ஒழிப்பதற்காகவும், இந்துமத மீட்சிக்காகவும் பசு, விநாயகர் ஆகிய சின்னங்களைக் கையில் எடுத்தது பம்பாய் வாழ் பார்ப்பன – பனியா கூட்டணி.
பஞ்சாப் உட்பட மேற்கு இந்தியாவில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மத மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியிருந்தது சுவாமி தயானந்த் சரஸ்வதி தலைமையிலான ஆர்ய சமாஜம். தயானந்த் சரஸ்வதி குஜராத்தைச் சேர்ந்த பார்ப்பனர். இஸ்லாம், கிறித்துவம் ஆகிய ’அந்நிய’ மதங்களைச் சேர்ந்த மக்களை மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பும் ‘சுத்தி’ நடவடிக்கை இவரால் தொடங்கப்பட்டது. இந்து மதம் என்பது சைவ உணவுப் பழக்கத்தைப் பிரதானமாகக் கொண்டது எனவும், பசும்பால் மட்டுமே இந்துக்களின் ஊட்டச்சத்து அளிக்கும் எனவும், பசுக்களைப் பிற மதத்தினர் கொல்வது இந்துக்களைப் பலவீனப்படுத்தும் தந்திரம் எனவும் விளக்கம் அளித்த தயானந்த் சரஸ்வதி, பசுப்பாதுகாப்பு என்பது இந்துமதம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் வழி என அறிவித்தார். தற்போதைய பசு குண்டர்கள் நிகழ்த்தும் கும்பல் படுகொலைகளின் பின்னணி, தயானந்த் சரஸ்வதியின் இந்த அறிவிப்பில் உருவானது. தற்போது சிறையில் இருக்கும் சிஏஏ எதிர்ப்புப் போராளி ஷர்ஜீல் இமாம் தயானந்த் சரஸ்வதியின் அறிவிப்பும், அதன் பின் மேற்கு இந்தியாவில் நிகழ்ந்த கும்பல் படுகொலைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்ய சமாஜின் அரசியலை மூர்க்கமாக அமல்படுத்த பம்பாய் மாகாணத்தில் கோரக்‌ஷக் மண்டலி என்ற அமைப்பு குஜராத் பனியாக்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. பசுவைப் பாதுகாக்கக் கோரி அரசுக்கு மனு எழுதுவதில் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே துண்டறிக்கை விநியோகிப்பது வரை அவர்களது பணி நீண்டது. ஒரு துண்டறிக்கையில், பசு நடுவில் இருக்க, ஒரு பக்கம் சித்பவன் பார்ப்பனர் ஒருவர் அதனை வணங்குவது போலவும், மறுபக்கம் இஸ்லாமிய அடையாளங்களைக் கொண்ட ஒருவர், ‘இந்தப் பசு எத்தனை கிலோ இறைச்சி தரும்?’ என மகிழ்வது போலவும் படங்களுடன் விநியோகிக்கப்பட்டன. 1890களில் இது இந்து முஸ்லிம் மோதலாக உருவெடுத்தது. பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விதமாகக் கலவரங்கள் வெடித்தன. பசுப்பாதுகாப்பு என்பது இந்துக்களின் தேச ஒற்றுமைக்கான செயல் என்று பசு குண்டர்களுக்கான அமைப்புகள் பிரகடனப்படுத்தின.
இந்தப் பின்னணியில், இந்துக்களின் பொது விழாவாகவும், இந்துத் தேசம் கட்டமைப்பதற்கான சின்னமாகவும் முன்மொழியப்பட்டது விநாயகர் சதுர்த்தி. 1894ஆம் ஆண்டு, ஷியா முஸ்லிம்களின் முஹர்ரம் பண்டிகையும், விநாயகர் சதுர்த்தியும் ஒரே நாளில் வந்தது. முஹர்ரம் பண்டிகை ஊர்வலமாக நடத்தப்படுவதோடு, அதில் பாடல்கள் பாடுவதற்கும், நடனம் ஆடுவதற்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இந்துக்களே பங்கேற்று வந்தனர். அந்த வழக்கத்தை உடைப்பதற்காக, விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக முன்னெடுத்த இளம் பார்ப்பனர்கள், முஹர்ரம் பண்டிகையில் பங்கேற்ற இந்துக்களைத் துரோகிகள் என அறிவித்தனர். இதன்மூலம் பார்ப்பனர் அல்லாதோரை மராட்டிய இந்து என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைப்பதற்காக முதன்முதலாகத் தொடங்கப்பட்டது விநாயகர் சதுர்த்தி.
அடுத்த சில ஆண்டுகளிலேயே பஞ்சாபில் லாலா லஜ்பத் ராய், வங்காளத்தின் பிபின் சந்திர பால் ஆகியோர் திலகரின் விநாயகர் சதுர்த்தி என்ற இந்துத் தேசிய விழாவை இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காகத் தங்கள் பகுதிகளில் நடத்தத் தொடங்கினர். மராட்டிய இந்து அடையாளத்தை மீண்டும் முன்மொழிவதற்காகத் திலகர், சத்ர்பதி சிவாஜி விழா ஒன்றை முன்னெடுத்து, அது பெரிதும் பிரபலமாகாமல் போனது. ’சிவாஜி என்ற பார்ப்பனர் அல்லாத அரசர், முஸ்லிம் பேரரசரான ஔரங்கசீப்பை எதிர்த்ததோடு, பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகாப்பு வழங்கி, இந்துத் தேசத்திற்கு வழிவகுத்தார்’ என்பது அந்த விழாவின் சாரம்.
இந்துத் தேசியம், இந்து மத மீட்பு முதலான கருத்துகளை முன்வைத்த திலகர் அவற்றை முன்னெடுப்பதற்காக தேசியக் கல்விப் பள்ளிகளைத் தொடங்கினார். இதைத் தேசப்பற்றுக்கான செயல்களாக முன்னெடுக்கக் கோரி, பல்வேறு அமைப்புகள் உருவாகின. அப்படியான அமைப்புகளை வழிநடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவர்க்கர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னோடி. பிற்காலத்தில் இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர். ஹிட்லரின் நாஜி கருத்துகளால் ஈர்க்கப்பட்டதோடு, ஜெர்மானிய நாஜி அரசுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். காந்தி கொலை வழக்கில் போதிய சாட்சியங்களின்றி விடுவிக்கப்பட்ட குற்றவாளி.
இப்படியாக, ‘தேச ஒற்றுமை’, ‘தேச விடுதலை’ என்ற பெயரில் இந்து மதத் திரட்சிக்காக உருவாக்கப்பட்டது விநாயகர் சதுர்த்தி. 1980களின் தொடக்கத்தில், தமிழகத்தில் இந்து முன்னணியால் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், 1990களில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திட்டன. ஒவ்வொரு முறையும், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் அடங்கிய பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் செல்வதும், ஊர்வலத்தின் போது மதத் துவேச கோஷங்கள் இடுவதும், ‘பாரதம் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்ற இந்துத் தேசிய முழக்கங்களை வைத்து மத நல்லிணக்கத்தை ஒடுக்குவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் தொடர் வழக்கம்.
திலகர் தேச விடுதலைக்காக விநாயகரைக் கையில் எடுத்தார் என்ற வாதம் இந்துத் தேசியவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. முதன்முதலாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் “1200 ஆண்டுக்கால அடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலை” என்று முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியைக் குறிப்பிட்டுப் பேசினார். சங் பரிவாரின் வரலாறு குறித்த பார்வை இந்த அணுகுமுறையின் வழியாக இருக்கிறது.
விநாயகர் இந்துக்கடவுளாக மட்டுமே இருந்திருந்தால், அதனை வணங்குவதும் போற்றுவதும் கேள்விக்குள்ளாகியிருக்காது. விநாயகர் இந்துத் தேசியத்தின் சின்னம். இந்துத் தேசியத்தில் ‘நாம்’ யார், ‘மற்றவர்கள்’ யார் என்று தீர்மானிக்கும் கலாச்சார வடிவம். அதனால் தான் அதன்மீதான தடையை சங்கிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்