Aran Sei

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

த்திய அரசின் இடஒதுக்கீடு விதிமுறைகளை தமிழ்நாடு பின்பற்ற முடியாது என்பதால், அண்ணா பல்கலைக் கழகத்தில், உயிரி தொழில்நுட்ப துறையில், மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் முதுகலை படிப்புகளில், இந்த கல்வி ஆண்டில் (2020 – 21), மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதனால், எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்ப்யூடேஷனல் பயாலஜி படிப்புகளில் இந்த ஆண்டு, மாணவர்கள் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று உயிரிதொழில்நுட்பவியல் துறை. இந்தியாவிலேயே முதல்முறையாக உயிரிதொழில்நுட்பத் துறையை உருவாக்கிய பெருமை, அண்ணா பல்கலைக்கழகத்தையே சாரும். சுமார் நான்கு தசாப்தங்களாக, செயல்பட்டு வரும் அந்த துறையில், 45 பட்டமேற்படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

போட்டித் தேர்வில் வெற்றி பெற்று மாத உதவித்தொகையாக பன்னிரெண்டு ஆயிரம் ரூபாயுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் என்ற கனவுகளுடன் இருந்த மாணவர்கள், தற்போது கவலையடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் அதிக கவனம் பெற்றுள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவின் பட்ட மேற்படிப்புகளை, அதுவும் மாணவர்கள் போட்டி போட்டு சேரும் சிறப்புமிகுந்த அண்ணா பல்கலைக்கழகத்தில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளதன் பின்னணி என்ன?

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கு மட்டும், டான்செட் (TANCET) நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுவது இல்லை. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளான, சிஇஇபி (Combined entrance exam for biotechnology) மூலமாக எம்.டெக்.பயோடெக்னாலஜி பிரிவிற்கும், பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் மூலமாக எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயாலஜி பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் சிஇஇபி தேர்வை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தியதால் அது ‘ஜெஎன்யூ சிஇஇபி’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இந்ததுறையில், பயோடெக்னாலஜி பயிலும் மாணவர்களுக்கு 12,000 ரூபாயும், கம்ப்யூடேஷனல் பயாலஜி மாணவர்களுக்கு 12,500 ரூபாயும் மாத ஊக்கத் தொகையாக மத்திய உயிரிதொழில்நுட்பத் துறை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு முதல், இந்த இரண்டு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை, மத்திய உயிரிதொழில்நுட்பத் துறைக்கு கீழ் செயல்படும், ஆர்சிபி  (REGIONAL CENTER FOR BIOTECHNOLOGY) என்ற நிறுவனம் ஏற்றுள்ளது. மேலும் சிஇஇபி என்பது, கேட்-பி (Graduate Aptitude Test in Biotechnology) எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை தேர்வுகளை நடத்தி, மாணவர்கள் சேர்க்கையையும் நடத்திய முறைக்கு மாறாக, தேர்வுகளை மட்டும் தாம் நடத்துவதாகவும், மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும் என்றும் ஆர்சிபி விதியை மாற்றியுள்ளது. இங்கு தான் பிரச்சனை தொடங்கியது.

`சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா’ – விசாரணை தொடக்கம்

கடந்த ஆண்டு வரை அவர்களே மாணவர் சேர்க்கையை நடத்தியதால், மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி வந்துள்ளனர். இந்த முறை மாணவர் சேர்க்கையை நடத்தும் பொறுப்பை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்த போது, தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்சிபி, 49.5% இடஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்று நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியாக நீடித்து வந்துள்ளது. இதற்கிடையே டான்செட் மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான கால வரையறையும் முடிவடைந்து விட்டது. எனவே, இதுதான் ஒரே வழி என நம்பியிருந்த மாணவர்களின் கனவு பாழாகும் வகையில், இறுதிவரை தீர்வு எட்டப்படாமல், மாணவர் சேர்க்கை தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

 

நீட்டிக்கப்படும் துணைவேந்தர்களின் பதவிக்காலம் – ’தமிழக ஆளுநர் தன்னிச்சை முடிவா?’ – பொன்முடி கேள்வி

இந்த அகில இந்திய தேர்வுக்காக தயார் செய்து தேர்ச்சியும் பெற்று, டான்சட் மூலம் வேறு கல்லூரிகளில் சேராமல், இதற்காக காத்துக் கொண்டிருந்த மாணவர்களின் ஓராண்டு கல்விக் காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாத ஊக்கத்தொகையுடன் எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி சேர, அண்ணா பல்கலைக்கழகத்தின் வாசல், அந்த மாணவர்களுக்கு இழுத்து மூடப்பட்டுள்ளது.

சீர்மிகு பல்கலைக் கழகம் (INSTITUTE OF EMINENCE) என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டால் கூட, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் உறுதிமொழி வெற்று வாக்குறுதி என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஒரே ஒரு துறையில் உள்ள 45 இடங்களுக்கு கூட 69% இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று அமல்படுத்த இயலாத போது, எவ்வாறு அவர் அவ்வாறு வாக்குறுதி கொடுத்தார் என்னும் கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில், 49.5% இடஒதுக்கீட்டில், இதே கேட்-பி (GAT-B) தேர்வு மூலம் எம்.எஸ்.சி பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள போதும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை எனும் கேள்வியும் மாணவர்களால் முன்வைக்கப்படுகிறது. 69% இடஒதுக்கீட்டு உரிமையை வலியுறுத்திப் பெற வேண்டிய இதர தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள், அந்த உரிமையை எவ்வாறு விட்டுக்கொடுத்தன என்ற கேள்வியும் எழுகின்றது.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான படிப்பு பட்டமேற்படிப்புகள். பட்டமேற்படிப்பு – முனைவர் படிப்பு – ஆராய்ச்சி என்னும் இந்த தொடர்ச்சி அறுபடும் போது, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிகளும் பாதிக்கப்படும். அந்த படிப்புகளுக்காக வரும் சிறப்பு விரிவுரையாளர்களின் பங்களிப்பு தடைபடும். ஒவ்வொரு ஆண்டும் தொடரும் மாணவர்களின் செயல்பாடுகளில் ஒரு தடை ஏற்படுகிறது.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

இந்தியாவிலேயே முதன்முதலில், பயோடெக்னாலஜி துறை தொடங்கப்பட்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தான். ஆனால் அங்கு, முதுகலை படிப்பு தடைப்பட்டுள்ளது, மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்