Aran Sei

83 வயது ஸ்டேன் சாமிக்கு வழங்க உறிஞ்சு குழல் இல்லை – நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

டுக்கவாதத்தால் (பார்க்கின்சன் குறைபாடு) பாதிக்கப்பட்ட ஸ்டேன் சாமிக்கு வழங்க, உறிஞ்சு குழல் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

83 வயதான ஸ்டேன் சாமி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பார்கின்சன் நோயால் அவதிப்படும் தன்னால், சுயமாகத் தண்ணீர்க் குவளையைக் கூட கையில் பிடித்து குடிக்க முடியவில்லை என்ற காரணத்தினால், உறிஞ்சு குழல் மற்றும் உறிஞ்சு குவளை வழங்க உத்தர விட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து பதிலளிக்க என்ஐஏ தரப்பில் 20 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டேன் சாமி கோரிய உறிஞ்சு குழலும், உறிஞ்சு குவளையும் தங்களிடம் இல்லை என்று என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்டேன் சாமி கோரியுள்ள உறிஞ்சு குழல், உறிஞ்சு குவளை மற்றும் பனிக்காலத்து ஆடைகள் வழங்குவது தொடர்பாக மருத்து அதிகாரி பதிலளிக்க நீதிபதி டி.இ.கோதாலிகர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம், மருத்துவக் காரணங்களால் ஜாமீன் வேண்டும் என்று ஸ்டான் சுவாமி சிறப்பு நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பார்கின்சன் நோயால் அவதிப்படுவதாகவும், அவருடைய இரண்டு காதுகளும் கேட்கும் திறனை இழந்து விட்டன எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு முறை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அடிவயிற்றில் பலமான வலியால் துன்பப்படுவதாகவும், சிறை மருத்துவமனையில் பல முறை சுயநினைவை இழந்து கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய ஜாமீன் மனு குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் “ஜாமீன் வழங்குமாறு மனுதாரர் கேட்டுள்ள காரணங்களில் சிறையில் போதுமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவது இல்லை என்பதைக் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக மனுதாரர் அவருக்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்” என்று கூறியது. போதிய வசதிகள் சிறை மருத்துவமனையில் இருப்பதாக கூறிய நீதிபதி டி.இ.கோதாலிகர் அவரது இடைகால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதற்குப் பின்னர், ஸ்டேன் சாமி தனது நண்பரும், மனித உரிமை ஆர்வலருமான ஜான் தயாலுக்கு சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். அதில் சிறையில் உள்ள சக கைதியான ஃபெரேராவின் உதவியுடனே உணவு உண்பதாக தெரிவித்திருந்தார். மற்றொருவரான கொன்சால்வேஸ் தன்னை குளிப்பாட்டுவதாகவும், சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில் தன்னுடன் இருக்கும் இரண்டு கைதிகள் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மற்றும் 2018ஆம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையை தூண்டினார் ஆகிய குற்றச்சாட்டின் பேரில், ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஸ்டேன் சாமியை என்ஐஏ கைது செய்தது. உடனடியாக மும்பை அழைத்து வரப்பட்ட ஸ்டேன் சாமி, நீதிமன்ற உத்தரவின் பேரில், அக்டோர் 9 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்