Aran Sei

சிறையில் மனிதாபிமானம் ததும்புகிறது – ஸ்டேன் சாமி உருக்கம்

ல்கர் பரிஷாத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 83 வயது ஸ்டேன் சாமி, சிறையில் உள்ள நிலைமைகள் குறித்து தன்னுடைய நண்பர்களுக்கு எழுதியுள்ள கடிதம் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஸ்டேன் சாமியின் நண்பரும், மனித உரிமை ஆர்வலருமான ஜான் தயால் அந்த கடிதத்தின் ஒரு பகுதியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தில், மும்பை தலோஜா சிறையில், ஒரு சிறிய அறையில் இரண்டு பேருடன் அடைக்கப்பட்டிருப்பதாக ஸ்டேன் சாமி கூறியுள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களான வரவர் ராவ், வெர்னான் கொன்சால்வேஸ் மற்றும் அருண் ஃபெரேரா மற்றொரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாலை 5.30 முதல் காலை 6 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும் சிறையில் அடைக்கப்படுவதாகவும், திறந்த விடப்படும் சமயத்தில் மட்டும் மற்றவர்களை சந்திக்க முடிவதாக ஸ்டேன் சாமி குறிப்பிட்டுள்ளார்.

பார்கின்சன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டேன் சாமி, ஃபெரேராவின் உதவியுடனே உணவு உண்பதாக கூறியுள்ளார். கொன்சால்வேஸ் தன்னை குளிப்பாட்டுவதாகவும், சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில் தன்னுடன் இருக்கும் இரண்டு கைதிகள் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்காகவும் சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்காகவும் ஜெபியுங்கள். இந்த சங்கடங்களுக்கெல்லாம் அப்பால், தலோஜா சிறையில் மனிதாபிமானம் ததும்புகிறது” என்று தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள மற்றவர்கள் குறித்து ஸ்டேன் சாமி தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மற்றும் 2018ஆம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையை தூண்டினார் ஆகிய குற்றச்சாட்டின் பேரில், ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஸ்டேன் சாமியை என்ஐஏ கைது செய்தது. உடனடியாக மும்பை அழைத்து வரப்பட்ட ஸ்டேன் சாமி, நீதிமன்ற உத்தரவின் பேரில், அக்டோர் 9 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

`ஸ்டேன் சாமி நிரபராதி’ – அருட் தந்தைகள் ஆதரவு

மருத்துவ காரணங்களால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி ஸ்டேன் சாமி தாக்கல் செய்த மனுவை, தேசிய விசாரணை முககை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

கை நடுங்குவதால் தண்ணீரைக் கூட குடிக்க முடியவில்லை என்பதால், தனக்கு உறிஞ்சு குழல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று ஸ்டேன் சாமி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, அரதரப்பு 20 நாட்கள் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து, நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை – ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு

அந்த மனுவில், தன்னுடைய இரண்டு காதுகளும் கேட்கும் திறனை இழந்துவிட்டதாகவும், சிறையில் பலமுறை கீழே விழுந்துவிட்டதாகவும், ஏற்கனவே அறுவை சிகிச்சை நடைபெற்ற வயிற்றுப் பகுதியில் தற்போது வலி இருப்பதாகவும் ஸ்டேன் சாமி தெரிவித்திருந்தார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 81 வயதான எழுத்தாளர் மற்றும் கவிஞர் வரவர் ராவ், நரம்பியல் பிரச்சனை மற்றும் கொரோனா பாதிப்பிற்குப் பிறகான பிரச்சனைகளில் அவதிப்படுவதை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ள உயர்நீதிமன்றம் அவருக்கு காணொலி மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

முன்னதாக, வரவர் ராவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக வருவதால், அவரை தலோஜா சிறையிலிருந்து நானாவதி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங் வைத்த கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்