Aran Sei

யாழ் பல்கலைக்கழகத்தில் முல்லிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – மாணவர்கள் போராட்டம்

லங்கை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம், இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டதாக ஐபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் இறுதி மூன்று நாட்களில் மட்டும், சுமார் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் என்று பல்வேறு அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போரில் உயிரிழந்த மக்களின் நினைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் என்ற பெயரில் ஒரு நினைவிடத்தை மாணவர்கள் கட்டினர். இதற்கு பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த சமயத்திலேயே, அதை நிறுத்த வேண்டும் என்று, இலங்கை உயர் கல்வித்துறையும், பல்கலைக் கழக மானியக் குழுவும் உத்தரவிட்டதாக ஐபிசி தமிழ் தெரிவிக்கின்றது.

ஆனால், அந்த உத்தரவையும் மீறி மாணவர்கள், நினைவிடத்தை கட்டி முடித்ததுடன், அந்த இடத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை, நேற்று (08.01.2021) இரவு, இலங்கை அரசு இடித்துதள்ளியதாக ஐபிசி தமிழ் கூறியுள்ளது. இந்த தகவலை தமிழ் கார்டியன் இணையதளமும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது.

ஐபிசி தமிழ் யூடியூப் தளத்தில், யாழ்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நேரலை செய்தி வழங்கப்பட்டது. அதில் பல்கலைக்கழக வாயிலில், இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்து, மாணவர்கள் தரையில் அமர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதை பார்க்க முடிந்தது. பல்லைக்கழகத்தின் அடைக்கப்பட்ட நுழைவாயிலை மறித்துக்கொண்டு, ஆயுதம் தாங்கிய ராணுவீரர்கள் நின்று கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிக்க கூடாது என்றும், இலங்கை அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்புவதை கேட்க முடிந்தது.

இடித்ததுபோக, தற்போது மீதமுள்ள ஸ்தூபியை இடிக்க மாட்டோம் என்று துணைவேந்தர் உறுதியளித்தால் மட்டுமே, அந்த இடத்தை விட்டு கலைவோம் என்று மாணவர்கள் கூறுவதாக, யாழ்ப்பாண பல்லைக்கழக வளாகத்திலிருந்து பேசிய ஐபிசி தமிழ் ஊடகத்தின் செய்தியாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சிவகொலுந்து ஸ்ரீசத்குணராஜா பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோவை, ஐபிசி தமிழ் ஒலிபரப்பியது. அதில், புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், பல்கலைக் கழகத்திற்குள் அமைந்திருந்த அனுமதி பெறாத கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும், அது இடிக்கப்பட வேண்டியதுதான் என்றும் சிவகொலுந்து கூறியுள்ளார்.

சிவகொலுந்து ஸ்ரீசத்குணராஜா

மேலும், ஒரு சிலர் மட்டுமே இதை எதிர்த்து போராட்டம் நடத்துவதாகவும், அவர்களே கலைந்துபோய்விடுவார்கள் அல்லது அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவகொலுந்து கூறுவது அதில் பதிவாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய மறுநாளே, இலங்கை அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தனது சுற்றுப்பயணத்தில், அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷேவை சந்தித்த ஜெய்சங்கர், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்