Aran Sei

பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறிவைக்கும் வலதுசாரிகள் – காவிக்கொடி ஆட்டியவர்கள் கைது

தாஜ் மஹாலுக்குள் காவிக் கொடியை ஆட்டிய, இந்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கௌரவ் தல்வார், ரிஷி லவாணியா, சோனு பாகேல், விசேஷ் குமார் ஆகிய நால்வரும், இந்து ஜக்ரன் மன்ச் என்ற அமைப்பின், இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்கள் பாதுகாவலர்கள் மெட்டல் டிடெக்டர்களை பயன்படுத்தி சோதனை செய்வார்கள். ஆனால், சிறிய துணியை அதனால் கண்டுபிடிக்க முடியாது. செல்ஃபி ஸ்டிக்குகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அவற்றை கொடியை கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளனர்” என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா –விடம் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், தாஜ் மஹாலுக்குள் காவிக் கொடியை ஆட்டுவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோவில், மூன்றுபேர் காவிக் கொடியை ஆட்டுவது போலவும், ஒருவர் அதை படம் பிடிப்பதுபோலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம், 153A பிரிவின் (மதத்தின் அடிப்படையில் இருபிரிவினரிடையே பகைமையை உருவாக்குவது) கீழும், குற்ற திருத்தச் சட்டம் பிரிவு 7ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகின்றது.

இந்து ஜக்ரன் மன்ச் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, தாஜ் மஹாலுக்குள் நுழைந்து, அதை புனிதப்படுத்துவதாக கூறி, கங்கை நீரை தெளித்துள்ளதாக கூறும் தி வயர் இணையதளம், தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் என்று அந்த அமைப்பினர் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு, பாஜக தலைவர் வினய் கட்டியார், 17 ஆம் நூற்றாண்டில், ஷாஜஹான், இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாஜ்மஹாலை கட்டியதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அதே ஆண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி, இந்திய தொல்லியல் துறை, தாஜ் மஹால் கட்டப்பட்ட இடத்தில், கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று, ஆக்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்