Aran Sei

டெல்லி கலவரத்தின் படம் – இந்த ஆண்டை வரையறுப்பதற்கான புகைப்படமாக தேர்வு

Image Credits: The Wire

டந்த பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறையின்போது ஒரு இஸ்லாமியரை பலர் தாக்கினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், ‘2020-ம் ஆண்டை வரையறுக்கும் புகைப்படமாக’ சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம், பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி என்பவரால் எடுக்கப்பட்டது. அவர் அட்னான் அபிடி என்பவருடன் கலவரத்தை குறித்து செய்தி சேகரிக்க டெல்லி சென்றபோது இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டை வரையறுப்பதற்கான புகைப்படம் தேர்வு செய்யப்படும். இது உலகளவில் நடைபெற்ற பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு, கொரோனா தொற்று, உலகளாவிய மனிதர்களின் பொதுவான அனுபவமாக மாறியுள்ளது.

இஸ்லாமியர் தாக்கப்படும் இந்த படம் தான் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதியான போராட்டங்கள் உச்சகட்ட வன்முறையாக மாரியதை இது குறிக்கிறது.

“இந்தியாவில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாட்டின் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக பலர் உணர்ந்தனர். எனவே, ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர். பிப்ரவரியில், இந்த சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும் அதற்கு ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டங்கள் வகுப்புவாத கலவரமாக மாறியது. போராட்டம் நடந்துவந்த ஒரு இடத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று ஒருவர் என்னிடம் சொன்னார்” என டேனிஷ் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை புகைப்படக்காரர்கள் விளக்கியுள்ளனர். அது புகைப்படங்களுடன் சிறுகதைகளாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் வெளியிட்டது.

“சம்பவ இடத்துக்கு வந்த சில நிமிடங்களில், இது மிகவும் ஆபத்தான நிலைமை என்பது தெளிவாகியது. கனமான கற்கள் மற்றும் அமில பாட்டில்கள் வீசப்பட்டன. காவலர்கள் இருந்தபோதிலும், பதின்வயதினர் முதல் முதியவர்கள் வரை வெள்ளை ஆடை அணிந்த ஒரு இஸ்லாமியரை தாக்குவதை நான் கவனித்தேன். கட்டைகள், கிரிக்கெட் ஸ்டம்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தி, அந்த மனிதனை கொடூரமாக தாக்கினார்கள். அவரது தலையில் இருந்து ரத்தம் வெளியானது, அவர் தடுமாறி கீழே விழுந்தார்” என்றும் டேனிஷ் தெரிவித்துள்ளார்.

சாலையின் மறுபுறத்தில் இருந்த இஸ்லாமியர்கள் கற்களை வீசத் தொடங்கியதால், ஒரு நிமிடத்திற்குள் தாக்குதல் முடிந்தது, என்று அவர் நினைவு கூர்ந்தார்.

தாக்கப்பட்ட நபர் முகமது சுபைர். அவர் தாக்குதலில் இருந்து தப்பினாலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

“நான் தனியாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள், அவர்கள் என் குள்ள தாடி, சல்வார் கமீஸ் ஆகியவற்றை பார்த்து நான் ஒரு இஸ்லாமியன் என்பதை கண்டறிந்தார்கள்” என்று முகமது சுபைர் டேனிஷிடம் தாக்குதல் நடைபெற்றதற்கு இரண்டு நாள் கழித்து கூறியுள்ளார். “அவர்கள் தாக்கத் தொடங்கினர், முழக்கங்களை எழுப்பினர். இது என்ன வகையான மனிதநேயம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பான விசாரணைகள் சர்ச்சையால் நிரம்பியுள்ளன என்பதற்கு டேனிஷின் புகைப்படம் முக்கியமான சாட்சி. மேலும் பலரின் பங்கேற்புக்கான புகைப்பட ஆதாரங்கள் இருந்தபோதிலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் மீது குற்றம் சாட்டுவது காவல்துறையின் நிலைப்பாட்டில் உள்ள சிக்கலை காட்டுகின்றது என தி வயர் இணையத்தளம் கூறுகின்றது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்