Aran Sei

பெல்லட் குண்டுகளும், காஷ்மீர் இளைஞர்களின் இருண்டு போன வாழ்க்கையும்

ன்சூர் அஹமத் தார், திருமணம் செய்து கொள்ள பெண் தேடிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் சந்திக்கும் பெண்களிடமும், அப்பெண்களின் குடும்பத்தினரிடமும் தனக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை என்று சொல்வதில்லை.

2019ல் அவருடைய காதலியின் வீட்டிற்கு இது தெரிய வந்ததும், அந்த உறவு முறிந்தது. இன்று, மன்சூரை பற்றி விசாரிக்க குடும்பங்கள் புல்வாமா மாவட்டத்திற்கு வரும் போது, தனக்கு பார்வை குறைபாடு உள்ளதை அவர் சொல்வதில்லை.

மன்சூர் அஹமது தார்

“நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்கும் அவர் குடும்பத்திற்கும், எனக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை என்பது தெரியாது” என்றபடியே உதிர்ந்த வண்ண இலைகள் பரவிக் கிடக்கும் மலைப்பிரதேசத்தில் அவர் ஓட்டிக் கொண்டிருந்த ட்ராக்டரில் இருந்து இறங்குகிறார் மன்சூர். ஒரு வேளை, ஒரு கண்ணில் பார்வை இல்லை என்று சொன்னால், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண், பிரிந்து சென்றுவிடுவார் என அவர் பயப்படுகிறார்.

ஜம்மு காஷ்மீர் போராட்டதின் எதிரொலி: 4ஜி இன்டர்நெட் சேவைக்கு தடையை நீட்டித்த அரசு

ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் கிளர்ச்சிப்படையை சேர்ந்த இளம் போராளியான புர்ஹான் வானி, 2016ஆம் ஆண்டு (பாதுகாப்பு படையினரால்) கொல்லப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. அப்படி ஒரு கலவரத்தை கட்டுப்படுத்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையும், மத்திய ரிசர்வ் படையும் பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த பலரில் மன்சூரும் ஒருவர். அந்த தாக்குதலில் தான் மன்சூர் பார்வையை இழந்தார். அந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இது நடந்தது.

காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர், பெல்லெட் துப்பாக்கியால், சிறு இரும்பு பெல்லெட் குண்டுகளை வைத்து நடத்திய தாக்குதலில், ஆயிரத்திற்கும் அதிகமானோர், முழுமையாகவும் பகுதியாகவும் தங்கள் பார்வையை இழந்தனர். இது சர்வதேச கவனத்தை பெற்ற விஷயமானது.  “இந்திய படைகள் அதை பெல்லெட் துப்பாக்கி என்கின்றனர். ஆனால், அது பம்ப்-ஆக்‌ஷன் ஷாட்கன் (pump-action shotgun)” என இராணுவ தொழில்நுட்பங்களை மேற்பார்வை செய்யும், இங்கிலாந்தை சேர்ந்த கொள்கை வடிவமைப்பு நிறுவனமான ஒமேகா ஆய்வு அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் கூறியதாக டைம் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

வேட்டைக்கு என வடிவமைக்கப்பட்ட இந்த துப்பாக்கிகள், ஒரு மணி நேரத்திற்கு 1,100 கிமீ வேகத்தில் பெல்லெட் குண்டுகளை வெளியேற்றும்.

`காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி

2010 ஆம் ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய பாதுகாப்பு படைகள் பெல்லெட் குண்டு பயன்பாட்டை அறிமுகப்படுத்தியதை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டு, காஷ்மீரில் நடந்த போராட்டங்களினால் பலர் உயிரிழந்ததையொட்டி, உயிரிழப்பை குறைக்கும் நோக்கில் தான், துப்பாக்கிகளுக்கு மாற்றாக பெல்லெட் துப்பாக்கிகள் இருக்கும் என்றே கூறப்பட்டது.

பம்ப்-ஆக்‌ஷன் ஷாட்கன்களால், உடலளவில் மட்டுமே காயங்கள் உண்டாவதில்லை.

பெல்லெட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களில் 85% பேருக்கு உளவியல் சிக்கல்கள் இருந்ததென ஸ்ரீநகர் மன நல & நரம்பியல் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கண்களில் பெல்லெட் குண்டு தாக்கியவர்களில் 92.92 % பேருக்கு மனநல நோய்கள் இருந்தன என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெல்லெட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள் பலர், உயிர் வாழ்தலுக்கு அடிப்படையான திறமைகளை கற்று கொள்ளவே போராடுகிறார்கள். திருமணம் செய்வதற்கு ஒரு துணைவரை தேர்ந்தெடுப்பது என்பது, திடீரென, ஒரு பெரிய வேலையாக இருக்கிறது.  பெல்லெட் குண்டால் தாக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய நெடுநாள் காதலியை திருமணம் செய்து கொண்டது குறித்த ஒரு கட்டுரையை, 2013 ஆம் ஆண்டு, இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டது. ஆனால், அது விதிவிலக்கான ஒரு கதை என்பது வெளிப்படையானது.

2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட, ‘பெல்லெட் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கான அறக்கட்டளை’ எனும் அமைப்பின் தலைவரான மொஹமது அஷ்ரத், அறக்கட்டளையில் பதிவு செய்துள்ள 1,300 பேரில், அவர் உட்பட, மூன்று பேருக்கு மட்டும் தான் திருமணம் நடந்துள்ளது என்று சொல்கிறார்.

காஷ்மீர் – ஆபத்தான அமைதிக்கிடையே தொடரும் போராட்டம்

2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில், மன்சூருக்கும் அவருடைய காதலிக்கும் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. ஆனால், மன்சூருக்கு கண்ணில் அடிபட்டது காதலியின் குடும்பத்திற்கு தெரிய வந்த பிறகு, திருமணம் நிறுத்தப்பட்டது.

“நான் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்பது தெரிந்த பிறகும்  என்னை திருமணம் செய்யவதாகவே முடிவு செய்திருந்தாள்” என்று சொல்கிறார்.

மன்சூரும் இஸ்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பத்தாண்டுகளுக்கு முன், இருவரும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சந்தித்தனர். நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், ஒரு கட்டத்தில் காதலில் விழுந்தனர். அவர்களுக்கு பல கனவுகள் இருந்தன. வாழ்க்கையின் துயரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர்.

பெல்லெட் தாக்குதலால் பார்வையில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்த போது, பிரிந்து போக மாட்டேன் என இஸ்மா கூறியுள்ளார். “ நான் மருத்துவமனைக்கு சென்ற போதெல்லாம் என்னோடு வந்தாள்” என்கிறார் மன்சூர்.

காஷ்மீர் மக்களின் நில உரிமையை பறிக்க விட மாட்டோம் – காங்கிரஸ்

“திருமணத்தை நிறுத்த வேண்டும் என அவளுடைய பெற்றோர் சொன்னதற்கு எதிராக போராடிப் பார்த்தாள்” ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை என்கிறார் மன்சூர்.

மன்சூர் படிப்பை பாதியில் நிறுத்தியவர், இஸ்மா பட்டப்படிப்பு முடித்தவர் என்ற போதிலும் இஸ்மாவில் வீட்டினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். பிறகு, திருமணத்தை நிறுத்தினார்கள். அதை குறித்து யோசிக்கும் போது, யாராக இருந்தாலும் அதை தான் செய்திருப்பார்கள் என்கிறார் மன்சூர்.

“பார்வை இழப்பதற்கு முன்னால், பேக்கரி நடத்தி முப்பாதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்தேன். ஆனால், இப்போது பத்தாயிரம் ரூபாய் மட்டும் தான் சம்பாதிக்கிறேன்” என்கிறார் மன்சூர்.

“எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால், யாரும் எனக்கு பெண் கொடுக்க தயாராக இல்லாததால் அது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. அதனால், நான் உண்மையை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதே நேரம், வலது கண்ணில் பார்வை இல்லாதது குறித்து எதுவும் பேசாமல் ஏமாற்றுவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதியளிக்கவில்லை”  என்கிறார் மன்சூர்.

திருமணம் எனக்கானதனல்ல

மன்சூரின் வீட்டில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில், தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில், ஆமிர் ஹுசைன் தார் என்பவரை சந்தித்தோம். ஆமிர், தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு அருகே ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

‘ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு’ – நிலத்தின் மீது உரிமையை இழந்த மக்கள்

2016 ஆம் ஆண்டு, ஜூலை 9 ஆம் தேதி, புல்வாமா மாவட்டத்திள் உள்ள, ஹால் எனும் பகுதியில், புர்கான் வானியின் இறுதி சடங்கிற்கு பிறகு, கல்லெறிபவர்களோடு இணைந்து கொண்டு போராடிய போது, ஹூசைன் மீது பெல்லெட் தாக்குதல் நடந்தது.

அப்போது வெல்டராக இருந்த ஹுசைனின் கண்கள் உட்பட, உடல் முழுவதும் பெல்லெட் குண்டுகள் தாக்கின. பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு அவருடைய வலது கண்ணில் 80% பார்வை திரும்பியது, ஆனால், இடது கண்ணில் பார்வை திரும்பவில்லை.

2016 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில்,  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெல்லெட் குண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்தது. “வன்முறை இருக்கும் வரை, பெல்லெட் குண்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது” என உயர் நீதிமன்றம் 2020 மார்ச் மாதம் அம்மனுவை நிராகரித்தது.

ஆமிர் ஹுசைன் தார்

இப்படி ஒரு கடினமான காலகட்டத்தில், காதலி தனக்கு ஆதரவாக இருக்காமல் “ஏமாற்றியதனால்” இனி அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று ஹுசைன் சொல்கிறார்.

காஷ்மீரின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு, தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கும் ஹுசைன், தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்.  “இரண்டு வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில்,  ‘ஒரு கண் மட்டுமே இருக்கும் ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு என்னால் வாழ முடியாது’ என்று சொல்லி மறுத்துவிட்டாள்” என்கிறார்.

ஹுசைன், அப்பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், ஒரு வீட்டிற்கு இரும்பு வேலி அமைக்க சென்ற போது, பக்கத்து வீட்டில் அப்பெண் இருந்தார், அப்படித் தான் சந்தித்தோம் என்கிறார்.

“முதல் பார்வையிலேயே காதல் தான். ஒரு காகித துண்டில் என்னுடைய தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்தேன். மூன்று நாட்கள் கழித்து என்னை அழைத்தார்” என முகம் சிவக்க சொல்கிறார் ஹுசைன். ஒரே மாதத்தில் இருவரும் நெருக்கமாகிவிட்டனர்.

மூன்றரை வருடங்கள் காதலில் இருந்தனர். இருவருடைய குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் அளித்து சில காலம் கழித்து, 2017 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

“அவளுக்கு திடீரென என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை. பெல்லெட் தாக்குதல் நடந்து ஆறு மாதங்களான பிறகும் அவள் என்னோடு தான் இருந்தாள். மருத்துவமனைக்கு செல்லும் போது பல முறை என்னோடு வரவும் செய்தாள்” என்கிறார்.

காஷ்மீர் – 24 மணி நேரம் போலீஸ் காவலில் – பத்திரிகையாளரின் அனுபவம்

“அவளுடைய சகோதரி, திருமணம் செய்து கொள் என சமரசம் செய்த பிறகும் கூட, அவள் சம்மதம் தெரிவிக்கவில்லை” என்கிறார் ஹுசைன்.

ஹூசைன் போராட்டத்தில் பங்கேற்றது அவருடைய காதலிக்கு தெரியாது.  “பெல்லெட் குண்டுகளால் தாக்கப்பட்டது குறித்து சில நாட்கள் கழித்து சொன்ன போது, போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கோபமாக திட்டினாள்” என முகத்தை மறைத்து கண்ணீரை துடைத்துக் கொண்டே சொல்கிறார்.

அதன் பிறகு, ஹூசைனின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய பலமுறை முயற்சித்தாலும் கூட, அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.

“எனக்கு இனி திருமணம் செய்து கொள்ள வேண்டாம்” என்றார் அவர்.

“என்னால் என்னையே பார்த்துக் கொள்ள முடியவில்லை எனும் போது, வேறொருவரின் பொறுப்பை என் தோளில் தூக்கி சுமக்க முடியாது” எனும் ஹுசைன், இப்போது கூலி வேலை செய்கிறார். அவருடைய வருவாய் மருத்துவ தேவைகளை பார்த்துக் கொள்ள கூட போதுமானதாக இருப்பதில்லை.

“இப்போது பெரும்பாலும் நான் வீட்டிற்கு உள்ளேயே தான் இருக்கிறேன். இந்த சூழலில், திருமணம் எனக்கேற்ற விஷயம் இல்லை” என்று ஹுசைன் சொல்கிறார்.

ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை 

காஷ்மீரில், பெல்லெட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள், ஒடுக்குமுறைக்கு ஆளாவதாக பெல்லெட் தாக்குதால் பாதிக்கப்பட்டோருக்கான அறக்கட்டளையை சேர்ந்த அஷ்ரஃப், சொல்கிறார்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து, அவர்களை வாழ்க்கையில் முன்னேற செய்யாமல், “நிராகரிப்புகளும், ஏமாற்றங்களும்” நிறைந்த ஒரு உலகில் அவர்களை தள்ளுகிறார்கள் என்று சொல்கிறார்.

“நான் திருமணம் செய்யவே மூன்று வருடங்கள் ஆனது” என்கிறார் விவசாயியான அஷ்ரஃப்.

2015 ஆம் ஆண்டு, அஷ்ரஃபுக்கும், பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணிற்கும் அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், 2016 ஆம் ஆண்டில் அவர் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பிறகு, அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.

புலாவாமா நகரில், இந்தியாவிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, அஷ்ரஃப்ஃபின் இடது மார்பில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்தது( பெல்லெட் தாக்குதலுக்கு முன் நடந்தது இது). ஆனால், தான் அந்த போராட்டங்களில் பங்கேற்கவே இல்லை என அஷ்ரஃப் சொல்கிறார்.

“அப்போது அறுவை சிகிச்சை செய்து, 89 தையல்கள் போட்டனர். இரண்டு மாதங்கள் கழித்து, பெல்லெட் குண்டுகளால் வலது கண்ணில் பார்வை போனது” என்று சொல்கிறார்.

பெல்லெட் குண்டு தாக்குதல் மட்டும் நடக்கவில்லையென்றால், அப்பெண்ணின் தந்தை திருமணத்திற்கு சம்மதித்திருப்பார் என்கிறார் அஷ்ரஃப்.

“ஒரு தோட்டாவினால் காயம் உண்டாகியிருந்தால், மகளை திருமணம் செய்ய அனுமதித்திருப்பார். ஒரு கண்ணில் பார்வை போனதால் மட்டும் தான் திருமணத்தை நிறுத்தினார் என்று அவர் கூறியதை நான் கேட்டேன்” என்கிறார் அஷ்ரஃப்.

“இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்டது ஒரே விஷயம் தான். மனிதனுக்கு கண் பார்வை போன உடனேயே அவன் வாழ்க்கை முடிந்து விடும்” என்கிறார் அஷ்ரஃப்.

(www.article-14.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்