Aran Sei

ஐஐடி பேராசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை – கல்வித் தரம் பாதிக்கும் என்று மத்தியக் குழு கருத்து

ந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) பேராசிரியர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஐஐடி-களில் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய கல்வித்துறை சார்பாக இந்தக் குழு அமைக்கப்பட்டது.

ஐஐடி-களின் கல்வி தரத்தை பாதுகாப்பதும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடத்தை நிரப்புவதற்கு, தகுதியான நபர்கள் கிடைக்காததும் ,இவ்வாறு பரிந்துரை வழங்குவதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியமர்த்தலில் இடஒதுக்கீடு) சட்டம் 2019-ன் அடிப்படையில், உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் வகையில், ஐஐடி-களையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் குழு பரிந்துரைத்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதன் மூலம், ஐஐடி-கள், ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பதில் உலக அளவில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த கல்வி பின்புலமும், ஆராய்ச்சி திறமையும்  கொண்ட குறைந்தபட்சம் முனைவர் பட்டம் பெற்றவர்களே, ஐஐடிகளில் பேராசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதை சுட்டுக்காட்டியுள்ள மத்திய குழு, இடஒதுக்கீட்டு பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களிலிருந்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருப்பதாக கூறியுள்ளது.

இந்த குறைப்பாட்டை போக்க, மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டுப் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டு துணை ஆராய்ச்சி படிப்புகளை படிப்பதற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் ஐஐடியின் ஆராய்ச்சி தரத்தை மாணவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று கூறியுள்ள மத்திய குழு, அவர்கள் ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு அல்லது பிற படிப்பை படிப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.

இருந்தபோதும், இடஒதுக்கீடு பிரிவினர் அவ்வாறு ஆராய்ச்சி படிப்பையோ பிற படிப்பையோ தேர்ந்தெடுத்தாலும் கூட, இடஒதுக்கீட்டின் அடிப்டையில் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு அந்த படிப்பிற்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை முழுமையாக இடஒதுக்கீட்டிற்கு விலக்கு அளிக்க முடியவில்லை என்றால், துணை ஆசிரியர் மட்டத்தில், நிலை I மற்றும் நிலை II ஆகிய பிரிவில் மட்டும் இடஒதுக்கீட்டை பின்பற்றலாம் என்று மத்திய குழு பரிந்துரைத்துள்ளதாக தி இந்து கூறுகிறது.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டெல்லி ஐஐடியின் இயக்குனர் வி.ராமகோபால் ராவ் தலைமையில் இந்த குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் ஐஐடி கான்பூர், சென்னை மற்றும் மும்பை ஐஐடியின் பிரநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன், சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட இந்த தகவலில், மத்திய குழுவின் இந்த பரிந்துரைகள் பரிசீலினையில் இருப்பதாக மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ஹோமி பாபா தேசிய கல்விநிறுவனம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம், இந்திய தொலை உணர்வு கல்வி நிறுவனம் உட்பட 8 நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்