Aran Sei

மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி? – சுகியின் தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பும் ராணுவம்

ங் சான் சுகியின் அரசு இரண்டாம் முறையாக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மியான்மரில் ராணுவ சதித்திட்டங்கள் வலுப்பெறுகின்றன.

ஆளும் ஆங் சான் சுகியின் கட்சி, நவம்பரில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பெற்ற வெற்றி குறித்து நடவடிக்கை எடுக்கபோவதாக, மியான்மரின் சக்திமிகுந்த ராணுவம் எச்சரித்துள்ள நிலையில், இது சதிப்புரட்சிக்கான முகாந்திரமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து குற்றசாட்டு வைத்த ராணுவம், மறைமுகமாக அரசியலமைப்பு சட்டத்தை நீக்குவது குறித்தும் பேசியிருப்பதால், சதிப்புரட்சி குறித்த பேச்சு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 1962 ல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பிறகு, அரை நூற்றாண்டு காலம் மியான்மரை ராணுவம் ஆண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மியான்மரின் முன்னாள் அரசியல் கைதியும் சர்வாதிகாரத்துக்கெதிரான நீண்ட போராட்டத்தின் முகமுமாகிய சுகியின் தேசிய ஜனநாயக லீக், நவம்பர் 8, 2020ல், 83% இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி அவரது புத்தம்புது ஜனநாயக அரசுக்கான கருத்துவாக்கெடுப்பு (Referendum) போல அமைந்திருக்கிறது.

மியன்மார் தேர்தல் – ரோஹிங்கியா முஸ்லீம்களின் உரிமைகள் மீட்கப்படுமா?

ஏன் ராணுவம் வெற்றியை ஏற்க மறுக்கிறது?

வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் உள்ளிட்ட முறைகேடுகளைப் பற்றி ராணுவம் அளித்த புகார்கள் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது குறித்து ராணுவம் விமர்சனம் செய்திருக்கிறது. அதேவேளை, தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு இந்த முறைகேடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து ராணுவம் தெளிவுப்படுத்தவில்லை.

முன்னாள் ஆளுங்கட்சியான யூஎஸ்டிபி-யும் (USDP), இதே புகாரை தெரிவித்துள்ளது. ராணுவத்தால் தொடங்கப்பட்ட இந்த கட்சி, கடைசியாக 2011ல் சுகியிடம் ஆட்சியை இழந்ததுடன், இந்த தேர்தலில் மொத்தமுள்ள 476 இடங்களில் வெறும் 33 இடங்களை மட்டுமே பெற்று அவமானகரமான தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் ராணுவம் தலையிடுகிறது?

தாத்மடாவ் என்றழைக்கப்படும் ராணுவம், 2008 ல் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும், புதிய ஜனநாயகத்தை கட்டமைத்ததிலும் முக்கிய பங்காற்றியதுடன், தேச ஒற்றுமை மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக தன்னை கருதுகிறது. எனவே அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை ராணுவம் பெற்றிருக்கிறது.

25% பாராளுமன்ற இடங்களை ஒதுக்கீடாக பெறும் ராணுவம், பாதுகாப்பு துறை, உள்நாடு மற்றும் எல்லை அமைச்சகங்களை கட்டுபடுத்துகிறது. முன்னாள் ராணுவ ஆட்சியால் என்எல்டி (NLD) உறுப்பினர்கள் பலர் சிறையில் வாடிய நிலையில், சுகியின் என்டிடி-யோடு விசித்திரமான ஆட்சி பங்கீட்டு ஒப்பந்தத்தை ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

தாத்மடாவ் தலைவர்களின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாத காரணத்தால், அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக எழுத்தாளர் சான் யு கியூவ் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

என்எல்டி மற்றும் பிற கட்சிகள் கூறுவதென்ன?

என்எல்டியின் வெற்றி குறித்தோ, ராணுவத்தின் குற்றசாட்டு குறித்தோ சுகி இதுவரை எதுவும் கூறாத நிலையில் ராணுவத்தின் குற்றசாட்டு அடிப்படையில்லாதது என்றும், தேர்தல் முறைகேடுகள் வெற்றியை தீர்மானித்திருக்க முடியாது என்றும் என்எல்டி தெரிவித்துள்ளது.

90க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், ஏறத்தாழ 17 கட்சிகள் தேர்தலில் சிறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகாரளித்திருக்கின்றன, இவற்றுள் யூஎஸ்டிபி தவிர, அனைத்தும் சிறு கட்சிகள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல், பெரிய முறைகேடுகள் எதுவுமின்றி நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளது.

ராணுவம் என்ன செய்ய திட்டமிடுகிறது?

ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஜாவ் மின் டுன், தேர்தல் முறைகேடு குற்றசாட்டு குறித்து மீண்டும் பேச செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த போதும் ராணுவத்தின் நோக்கம் குறித்த கேள்விகளுக்கு தெளிவில்லாத பதில்கள் சொல்லி சமாளித்துவிட்டார்.

ராணுவம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த அவர், புதிய அரசு மற்றும் சட்டமன்றத்துக்கு ராணுவம் ஒத்துழைப்பு வழங்குமா என்ற கேள்விக்கு

“பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.

சதிப்புரட்சி நடக்காது என உறுதி கூற முடியுமா என்ற கேள்விக்கு

“அப்படி சொல்ல முடியாது” என்று பதிலளித்தார்.

சதிப்புரட்சி நடக்கவிருக்கிறதா?

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில், சட்டப்படி ராணுவம் எளிதில் தலையிடுவதை அரசியலமைப்பு சட்டம் தடுக்கிறது.

“ஒன்றியத்தின் சிதறல், தேச ஒற்றுமை குலைவு மற்றும் இறையாண்மைக்கு சிக்கல்” போன்ற தீவிர சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய தருணங்களின் போது மட்டுமே, ராணுவத்தலைவர் அதிகாரத்தை கையிலெடுக்க முடியும். அப்போதும் கூட அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், அதையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தான் அறிவிக்க முடியும். தனது படைபலத்தைக் கொண்டு ராணுவம் அதிகாரத்தை பெற முயன்றால் அது சொந்த அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது போலாகிவிடும்.

தலைமை தளபதி ஜெனரல் மின் ஆங் ஹிலாய்ங், ராணுவ வீரர்களிடம் பேசும் போது “அரசியலமைப்பு சட்டம் தான் அனைத்து சட்டங்களுக்கும் தாய். ஆனால் அது ஒத்துவராத போது அதை நீக்க வேண்டும்” என்று பேசி பரபரப்பை கிளப்பினார். இதற்கு முன்பு மியான்மரில் அதுபோல நடந்திருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

“அவர்களது சொந்த நலன்களுக்காக அரசியலமைப்பு சட்டத்தை நீக்க நினைக்கிறார்களோ” என்று சந்தேகமாக இருப்பதாக சொல்லும் சட்ட வல்லுநர் கின் மாங் ஜாவ், அரசியலமைப்பு சட்டத்தை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்