Aran Sei

பாரிஜாதம் மற்றுமொரு இந்துத்துவா குறியீடு; ஒரு தாவரத்தின் கவர்ச்சிக்கதை – எஸ்.நடேஷ்

பிரதமர் மோடி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் வளாகத்தில், ஒரு பாரிஜாத (பவள மல்லி, மரகத மல்லி, என்றும் அழைக்கப்படும்) மரக்கன்றை நட்ட பின்பு, அந்த விழாவின் அளவுக்கு மீறிய ஊடகச் செய்திகளால், டெல்லி முழுவதும், அந்த மரக்கன்றின்  விற்பனை பலமடங்கு கூடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊடக படங்கள் அதன் அடையாளத்தைத் தீர்மானிக்க தவறிவிட்டன. ஏதோ ஒன்று சேர்க்கப்பட்டாமல் இருந்தது. பாரிஜாதம், ‘ஹர்ஸ்ரிங்கார்’ (Nyctanthes arbortristis) என்றும் அழைக்கப்படுகிறது. எனினும் மோடி நட்டு வைத்த மரக்கன்று ‘ஹர்ஸ்ரிங்கார்’ அல்ல. அதன் பிரிந்திருக்கும் இலைகள் (ஐந்து முதல் ஏழு குறுத்திலைகள் உள்ளங்கை விரல்கள் போன்ற அமைப்பில் இருக்கும்)  ஒரு தற்செயலான வெளிப்பாட்டுடன் (Dead giveaway) பாவ்பாப் (Baobab – பொந்தன் புளி, சீமை புளியன்) மரக்கன்றோ என்ற ஐயத்தைத் தோற்றுவிப்பதாக இருந்தன. ‘ஹர்ஸ்ரிங்கார்’ இலைகள் பிரிந்திருக்காது.

தாவரவியலாளர்களின் கருத்துப்படி இதனை சரியாக முடிவு செய்வதற்கான ஒரே வழி நேரடியாகச் சென்று பார்ப்பதுதான். அண்மையில் அயோத்தியாவிற்குச் சென்றது பிரச்சனையைத் தீர்த்து வைத்தது. புதிதாக நடப்பட்ட அந்த மரக்கன்று மாநில வனத்துறையால் தரப்பட்டதுதான். “அதை குரங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக காப்பு வேலியிடப்பட்டிருந்தது.” என அங்கிருந்த ஒரு பாதுகாவலர் தெரிவித்தார். அப்படியானால் புதிதாக நடப்பட்ட மரக்கன்று பாவ்பாப் மரக்கன்று தான் என்பது ஐயமின்றித் தெரிந்தது.

பாரிஜாதத்தின் புராணக் கதைகள்

தெய்வீக மரமாக கருதப்படும் பாரிஜாதம் இந்து புராணங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புராணங்கள் (முதன்மையாக விஷ்ணு புராணம், ஹரிவம்ச புராணம், பாகவத புராணம்) பல ஆர்வமூட்டும் அதே வேளையில் முரண்பாடான கதைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. பாற்கடலை கடையும் போது தோன்றிய பாரிஜாதத்தை  இந்திரன் தனது இந்திரலோகத் தோட்டத்தில் நட்டு வளர்த்தான். கிருஷ்ணனும் அவரது மனைவி சத்தியபாமாவும் இந்திரலோகம் சென்றிருந்த போது அங்கு அதனைக் கண்டனர். அதனை அடைய வேண்டும் என்ற சத்தியபாமாவின் விருப்பத்தை மறுத்துப் பேச முடியாத கிருஷ்ணன், அதை வேரோடு பிடுங்கிக் கொண்டு செல்லும் வழியில் இந்திரன் தனது மதிப்புமிக்க உடைமையைப் மீட்க ஓடி வந்தான். போரில் இந்திரன் தோற்கடிக்கப்படுகிறான். பாரிஜாதம் துவாரகையை அடைகிறது. கிருஷ்ணன் இறந்த பிறகு பாரிஜாதம் மீண்டும் அதன் பிறப்பிடமான சொர்க்கத்திற்குச் சென்று விட்டது.

இன்னொரு முறை, நாரதர் ஒரு பாரிஜாத மலரை கிருஷ்ணனிடம் கொடுக்க அதை கிருஷ்ணன் ருக்மணிக்குக் கொடுத்து விடுகிறார். ஆனால் சத்யபாமா தன்னை மீறி ருக்மணிக்கு அதனைக் கொடுத்ததால் கோபமடைந்து கிருஷ்ணனிடம் இந்திரனின் தோட்டத்தில் இருந்து அந்த மரத்தையே பிடுங்கிக் கொண்டு வருமாறு வற்புறுத்தினாள். இந்திரனுடன் போர் புரிந்து பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணன் கொண்டு வருகிறார். அதேசமயம் ருக்மணியும் அந்த மரம் வேண்டும் என்கிறாள். குழப்பத்திற்குள்ளான கிருஷ்ணன், மரம் சத்யபாமா நிலத்தில் இருக்க, பூக்கள் ருக்மணி நிலத்தில் விழும் வகையில் அந்த மரத்தை நட்டு புத்திசாலித்தனமாக பிரச்சனையைக் தீர்க்கிறார்.

இன்னொரு கதையில், தனது மனைவி உமாவை திருப்திப்படுத்த மந்தார மலையில் ஒரு பாரிஜாத காட்டினை சிவன் உருவாக்கினார். சூரியக் கதிர்களோ, சந்திரனின் ஒளியோ அல்லது காற்றோ கூட அதனுள் நுழைய முடியாது. சிவனின் சக்தியால், காடு தானாகவே ஒளிவிடும். இவ்வாறு சிவனின் சக்தியும், வெளியிலிருந்து எந்த மோசமான தாக்குதலுக்கும் இரையாகாத தன்மையும் இவை, இந்திரனின் பாரிஜாதங்களைவிட உயர்ந்தவையாக இருந்தன. மனிதர்களாக உருமாறக்கூடியத் தன்மைப் பெற்ற அந்த மரங்கள் இறைவனை அவர் அங்கு வரும்போது வணங்கும். சிவன், பார்வதி மற்றும் அவர்களுடைய பரிவாரங்களைத் தவிர நாரதர் மட்டுமே அந்த காட்டினுள் நுழைய அனுமதிப் பெற்றிருந்தார்.  அந்தகன் என்ற மிகப்பெரிய அரக்கன் அந்த காட்டினுள் நுழைய முயன்ற போது சிவனால் கொல்லப்பட்டான்.

அடுத்த கதை, ஒரு முறை காஷ்யப முனிவர் தனது மனைவி அதிபதியின் பக்தியால் மகிழ்ந்து அவருக்கு அவர் விரும்பியதை வரமாக அளிக்க விரும்பினார்.  ஆனால் அதிதியின் விருப்பம் மிக நீண்ட பட்டியலாக இருக்கவே, விரும்பியவற்றை நிறைவேற்றும் பாரிஜாதத்தை கண்டுபிடித்தார். முனிவர் அந்த மரத்தை தனது குடியிருப்புக்கு அருகில் இருந்த ஆற்றின் எதிர்கரையில் உருவாக்கினார். அதனால்தான் அதற்கு ‘அக்கரையில் உள்ள வரம்’ என்ற பொருளைத் தரும் ‘பாரிஜாதம்’ என்ற பெயர் வந்தது.

கடைசியாக ஒரு கதை, பாரிஜாதகா என்ற இளவரசியுடன் தொடர்புடையது. அவள் சூரியனை வெறித்தனமாக  காதலித்தாள். சிறிது கால களியாட்டங்களுக்குப் பிறகு சூரியனுக்கு அவள் மேல் விருப்பமில்லாமல் போய்விடுகிறது. இந்த வேதனையைத்  தாங்க முடியாத பாரிஜாதகா சூரியனின் தீக்குள் குதித்து இறந்துப் போகிறாள்.  அவளுடைய சாம்பலிலிருந்து தோன்றியது பாரிஜாத மரம். அதன் இனிய வாசம் மிகுந்த மலர்கள் இரவில் மட்டுமே மலரும். சூரிய உதயத்திற்கு முன் உதிர்ந்து விடும். அவை சூரியனை பார்க்க விரும்பாததுடன், பார்க்க முடியாது. இதனால்தான் அதற்கு ‘துக்க மரம்’ என்ற பெயர் வந்தது.

உணவு, பானம், நல்ல உடைகள், ரத்தின கற்கள், ஆபரணங்கள், அல்லது இனிய இசை ஆகிய அனைத்தையும் தரவல்ல ஐந்து கற்பக மரங்களில் ஒன்று பாரிஜாதம் என அமரகோஷர் விளக்கி உள்ளார். அது பசியையும், கவலையையும் அகற்றும் வல்லமை பெற்றிருப்பதுடன், தனது வடிவத்தையும், அளவையும் கூட மாற்றிக் கொள்ளக் கூடியது‌. (சமண மத நூல்கள் இதனை பத்து கற்பக மரங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றன) இந்திரனின் பாரிஜாத மரம், முழு துவாரகையும் மூடும், கட்டைவிரல் அளவுக்கு சுருங்கவும் செய்யும். தங்க பட்டையையும், தாமிர செந்நிற இளம் இலைகளைகளையும், எப்போதும் வாடாத, மணம் வீசும் மலர்களையும் கொண்டது‌ பாரிஜாதம்.

தாவரவியலாளர்கள் அடையாளம் காட்டும் பாரிஜாதம் குறித்த பல வெளியீடுகளும் ஹர்ஸ்ரிங்கார் மரத்தைத் தான் உண்மையான பாரிஜாதம் என குறிப்பிடுகின்றன. இரவு மல்லிகை, துக்க மரம், ஷியோலி (Sheoli), ஷெஃபாலி (Shefali) என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இது, இமயமலை அடிவாரத்திலும், மத்திய இந்தியாவிலும் வளரும் சிறிய மரம். ஆனால் இந்தியா முழுவதும் வளர்க்கப்படுகிறது. அதன் பஞ்சு போன்ற வெள்ளை நிற மலர்கள் இறைவனை வழிபட பயன்படுகிறது. அது மாலையில் விரியும் போது இனிய மணம் காற்றில் ஊடுருவுகிறது. மறுநாள் காலை அவை உதிர்ந்து விடும். அதனுடைய இதழ்கள் அடர் ஆரஞ்சு நிற காம்புகளின் நுனியில் உள்ள புல்லிவட்டத்துடன் இணைந்திருக்கும். அதன் இரண்டு விதைக் கொண்ட பழங்கள் வட்டமாக, தட்டையாக இருக்கும். முதிரும் போது பழுப்புநிறத்திற்கு மாறி உடையக் கூடியதாகி விடும். நாற்கர தண்டுகளில் ஒவ்வொரு கணுவிலும் இரண்டிரண்டாக இலைகள் இருக்கும். இலைகளின் அடிப்பகுதி சொர சொரப்பாக இருக்கும். சுஷ்ருதா சம்ஹிதாவில் (அறுவைச் சிகிச்சை மருத்துவ நூல்) இதன் இலைகளை அறுவைச் சிகிச்சைக்கு முன் தோலைத் தேய்த்து சுத்தப்படுத்த பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பிற  தாவரங்களான இந்திய கோரல் மரம் (Erythrina Veriegata), ஃபிடில்வுட் (Citharexylum) ஆகியவற்றை பாரிஜாதம் எனக் கூறினாலும் அவை அதனுடன்  போட்டியிட முடியாது என்பது உறுதி.  பாவ்பாப் கூட(Adansonia digitata) பாரிஜாத மரம் என்றும் உள்ளூரில் கற்பக மரம் என்றும் பெரிதும் மதிக்கப்படுகிறது. லக்னோவிற்கு அருகில் உள்ள கின்டூரில் உள்ள மரம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த மக்களைப் பொறுத்தவரை 5000 ஆண்டுகளுக்கு முன் தனது தாய் குந்தி, சிவனை, பாரிஜாத மலர்களால் வழிபட விரும்பியதால், இந்திரனின் தோட்டத்தில் இருந்து அர்ஜுனன் இந்த மரத்தைக் கொண்டு வந்ததாக கருதுகிறார்கள். இதுபோன்ற மரம் இது ஒன்றுதான் என அவர்கள் கருதுகின்றனர்.

அண்மையில் நடந்த ரேடியோ கரிம காலக் கணிப்பு ஆய்வில் (Radio Carbon dating) அதன் வயது 800 ஆண்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரக்யாராஜிற்கு (அலகாபாத்) அருகில் உள்ள சுல்தான்பூரில், வேறு வகையான பாவ்பாப் மரம் பாரிஜாத மரமாக மதிக்கப்படுகிறது. இதுபோன்ற உள்ளூர் எடுத்துக் காட்டுகள் குஜராத், ராஜஸ்தான், மற்றும் பிற மாநிலங்களிலும் உள்ளன. நமது விவாதத்தின் முடிவாக, இந்த எடுத்துக் காட்டுகள் யாவும் விதிவிலக்குகளே. விதிகள் அல்ல. தமிழில் பொந்தன் புளி அல்லது சீமைப் புளி என அறியப்பட்டுள்ள பாவ்பாப் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது என்பதும், இந்தியாவின் விரிந்த இடங்களில் குறிப்பாக மேற்கு- தென் கிழக்கு கடற்கரைகளிலும், சிந்து-கங்கை சமவெளி, மத்திய இந்தியா, தக்காண பீடபூமி ஆகியவற்றின்  சில தனிப்பட்ட இடங்களிலும் காணப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதன் தாய் நாடான ஆப்பிரிக்காவில், இந்த கவர்ந்திழுக்கும் பாவ்பாப், அதன் பிரம்மாண்டமான அளவு மற்றும் நெடிய வாழ்நாளுக்காக,  முன்னோர்களின் மற்றும்  மந்திர ஆவிகளின் வாழ்விடமாக, மிக உயர்ந்த மரியாதையுடன் பார்க்கப்படுகிறது. மேலும் உணவு, மருந்து, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் பயன்களுக்காக மிக்க மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. அது மழை நீர் சேகரிப்பின் மூலமாகவும், இருப்பிடம் (ஒரு மரத்தின்உடலில் ஐந்தாறு பேர் வரை தங்கலாம்) மற்றும் புனித இடமாகவும் கருதப்படுகிறது.  அதனுடைய அதிக அளவிலான மணம் மிகுந்த வெள்ளை மலர்கள் நீண்ட காம்பில் தலைகீழாகத் தொங்கும். அதன் சுண்டைக்காய் போன்ற பழங்களினுள் கருநிற விதைகள்  உண்ணத் தகுந்த பஞ்சு போன்ற விட்டமின் -சி சத்து நிரம்பிய சதைப்பகுதியில்  பொதிந்திருக்கும். இதனை எளிதாக நீண்ட தூரம் எடுத்துச் சென்று உண்ணக் கூடியவையாக இருக்கும். இந்தியாவில் இதனால் பயன் ஏதும் இல்லை.

பாவ்பாப்களும் ஆப்பிரிக்காவிலிந்து புலம்பெயர்ந்த கதையும்

பாவ்பாபின், ஆப்பிரிக்க தோற்றத்தைப் பற்றி எழுதும் போது,  பெரும்பாலான வெளியீடுகள், எந்தவித வணிக மதிப்பும் இல்லாத மரத்தை, பெயர் தெரியாத ‘அரபு வணிகர்கள்’ இந்தியாவில் அறிமுகப் படுத்தியதற்கான நோக்கம் பற்றி அறிந்து கொள்ளும் எந்தக் குறிப்பையும் தரவில்லை. மறுபுறம் இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான மக்கள், பொருட்கள் போக்குவரத்து மற்றும் கருத்து பறிமாற்றம், இந்தியப் பெருங்கடல் மூலம் வரலாற்று ரீதியாக நேரடியாகவே தொடர்ச்சியாக இருந்தது.  ஆஸ்திரேலிய பேராசிரியர் ஹரிப்ரியா ரங்கன் மற்றும் அவரது உதவியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகள் இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான வணிகம் பற்றிய பகுப்பாய்வு, கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் இணைத்து, பாவ்பாப்களின் மரபணு ஆய்வில் கவனம் செலுத்தினர். சுருக்கமாக கூறினால், அவை இந்தியாவில் உள்ள பாவ்பாப்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை என்றும், இந்திய பெருங்கடல் பகுதிகளில் அவைகளின் இடம் பெயர்வு மீண்டும் மீண்டும் நான்கு விரிவான வரலாற்று காலகட்டத்தில் நடைபெற்றுள்ளன என்றும் கூறலாம்.

(அ) பத்தாம் நூற்றாண்டுக்கு (பொ.ஊ.), முன் (CE) – ஆப்பிரிக்காவிலிருந்து சோளம், முத்து தினை, விரல் திணை, காராமணி ஆகிய உணவுப் பயிர்கள் வந்தன.

(ஆ) 10 ம் நூற்றாண்டில் இருந்து 16 ம் நூற்றாண்டு வரை(பொ.ஊ) – வலிமையான இஸ்லாமிய வணிகத் தொடர்புகள், கிழக்கு ஆப்பிரிக்கா கடற்கரையையும், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் முக்கிய துறைமுகங்களையும் இணைத்தன.

(இ) 16 – 17 ம்நூற்றாண்டு காலம்- போர்த்துகீசிய வணிகர்கள் ஆப்பிரிக்க துறைமுகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து தங்கள் வணிக ஏகபோகத்தை நிறுவினர்.

(ஈ) 18 லிருந்து 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை – வணிகமும், குடியேற்றமும் டச்சு, பிரெஞ்சு, ஆங்கில காலனிய வாதிகளால் கூட்டாக நடந்தபோது  ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடலோடிகள் தங்கள் நீண்ட பயணத்தில் உணவுத் தேவைக்காக பாவ்பாப் காய்களை எடுத்துச் சென்றனர். பாவ்பாப்களின் மரபணு அமைப்பு,  இங்கு வந்து, ஒன்று கலந்து,  இந்தியா முழுவதும் மாலுமிகளாக, படைவீரர்களாக, பணியாளர்களாக, அடிமைகளாக, மதமாற்றம் செய்பவர்களாக மற்றும் வணிகர்களாக பரவிய ஏராளமான ஆப்பிரிக்க மக்களின் வரலாறுகளை பிரதிபலிக்கும், இந்த நிலத் தொடர்பை உறுதி செய்கின்றன. உள்ளூரில் ஆதிக்கம் பெற்றிருந்த மதத்தை ஏற்று அவர்கள் முஸ்லீம்களாகவும், கிறிஸ்துவர்களாகவும், இந்துக்களாகவும் மாறினர். இவர்கள் கூட்டாக ஹப்ஷிகள் அல்லது சிடிகள் என்று அழைக்கப்பட்டனர். தற்போது மொசாம்பிக்கில் கிராமப்புறங்களில், பாவ்பாப் மரங்களுக்கடியில் தங்கள் முன்னோர்களுக்காகக் கட்டப்பட்ட கோவில்களைப் போலவே, மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் சிறிய சிடி கோவில்களை காண முடியும். பலரும் முஸ்லீம் சிடி துறவி பாவா கோர், அவரது சகோதரி மாய், மிஸ்ரா மற்றும் சகோதரர்கள் பாபா ஹாபாஷ் ஆகியோரை மதிப்பவர்களாகவும், மற்றவர்கள் குடியார் எனப்படும் கிராம நீர் (பெண்) தெய்வத்தையும் வணங்குகின்றனர். இது மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் மாமிவாட்டா(தண்ணீர் தாய்) வழிபாட்டை ஒத்துள்ளது. சில பகுதிகளில் ஆப்பிரிக்காவில் பாவ்பாப் மரங்களுடன் தொடர்புடைய சடங்குகளைப் போலவே, இந்து, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் நோயைக் குணப்படுத்தும் சடங்குகளை செய்கின்றனர். பிற இடங்களில், வட மொசாம்பிக்கில் காணப்படுவது போலவே, பாவ்பாப் மரங்களை ‘ருக்தா தாதா அல்லது தாத்தா மரம்’ என உருவகம் செய்து மரத்திற்கடியில் சிறிய கோவிலைக் கட்டி உள்ளனர். கர்நாடகாவில் சாவனூர் என்ற சிற்றூரில் மூன்று மிகப் பெரிய பாவ்பாப் மரங்கள் உள்ளன. உள்ளூர் மக்கள்  கிருஷ்ணர் ஆப்பிரிக்காவிலிருந்து விதைகளைக் கொண்டு வந்து இங்கு நட்டதாக நம்புகின்றனர்.

பாவ்பாப்கள்தான் பாரிஜாதமா?

பாவ்பாப்(பொந்தன் புளி) இவை நமது புராண கதைகளைப் போலவே கவர்ச்சியானவை.  அதை வேளையில், அவை அதிகாரபூர்வ அறிவியல் அடையாளப்படுத்தலுக்கு, அகநிலை விளக்கங்களையைத் தருகின்றனவே ஒழிய, எந்தவித விமர்சன ரீதியான உண்மையைக் கண்டறியும் சான்றுகளையும் தருவதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஹர்ஸ்ரிங்கார், பாரிஜாதமாக வழக்கமாக கருதப்பட்டு வருகிறது. பூர்வீகக் தாவரமாக இருப்பதால் பண்டைக்கால இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமானதாகவும், சில பாரிஜாத மரங்களின் மரபுப் பண்புகளுடன் பொருந்தி இருப்பது போன்றும்  இருந்திருக்கலாம். மறுபுறம், ஆப்பிரிக்க பாவ்பாப்கள் இந்த விடயங்களில் சொந்தம் கொண்டாட முடிவதில்லை. காலப் போக்கில், நில பயன்பாடுகள் பெருமளவில் மாற்றம் அடைந்து இருப்பதால் பாவ்பாப்கள் வளரும் எல்லா இடங்களிலும் ஆப்பிரிக்க – இந்திய சமூகங்கள் இருப்பதில்லை. ஆனால் அவைகளின் இருப்பு, வரலாற்றுடனும், கலாச்சாரத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளன என்பதில் ஐயமில்லை. இறுதியில், நம்புவதை விரும்புவதற்கு வந்து இது முடிகிறது. அயோத்தி கோவில் அதிகாரிகள், பாவ்பாப்களை (பொந்தன் புளி அல்லது சீமைப் புளியன் மரங்களை) பாரிஜாத மரம் என நம்பினால் அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். மீதியுள்ள மற்றவர்கள் அதனை உண்மையில் ‘ஹர்ஸ்ரிங்கார்’ என்றே தொடர்ந்து நம்பலாம்.

(www.thewire.in இணையதளத்தில் எஸ். நடேஷ் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்