Aran Sei

மரங்களின் தாயான திம்மக்காவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம்

ர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்காவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகம் இதை வழங்கி உள்ளது.

“மரங்களின் தாய்” என்று அழைக்கப்படும் திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிக்கையா என்பவரை தன் இளம் வயதில் திருமணம் செய்தவர். திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தையின்றித் தவித்துள்ளனர். இக்குறையைப் போக்க திம்மக்கா பொட்டல் காடாக இருந்த கூதூர்ச் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரக் கன்றுகளை நடத் தொடங்கியதாய்க் கூறப்படுகிறது.

இருமருங்கிலும் மரம்நட்டவர் எனும் பொருள்பட கன்னடத்தில் `சால மருத’ எனும் அடைமொழியோடு `சாலமருத திம்மக்கா’ என அறியப்படுகிறார். நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார். இப்படி கணக்கற்ற மரங்களை நட்டு வளர்த்துவருவதால் மரங்களின் தாய் என அழைக்கப்படுகிறார்.

இடைவிடாத திம்மக்காவின் சாதனைகளைப் பாராட்டி கர்நாடக அரசு கன்னட `ராஜ்யோத்சவா’, `கன்னட ரத்னா’ உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்து சிறப்பித்துள்ளது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சாலுமரத திம்மக்காவிடம் தலைவணங்கி ஆசிபெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கிளை ஒன்றிற்கு, திம்மக்காவின் பெயர் சூட்டப்பட்டிருப்பது அவரின் வியர்வைக்குச் சூடிய கிரீடமாகும். தான் நட்ட மரங்கள் காற்றில் அசைந்தாடும் அழகைக் காண்பதே என் வாழ்வின் பெருமிதம் என்றும் திம்மக்கா கூறுகிறார்.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் தன் கணவரை இழந்த திம்மக்கா, கணவரை நினைவுகூரும் விதமாக தனது கிராமத்தில் ஒரு மருத்துவமனையை நிர்மாணிக்கும் கனவு அவருக்குத் தோன்றியுள்ளது. இந்த நோக்கத்திற்காக ஒரு அறக்கட்டளை நிறுவியுள்ளார். 1999 ஆம் ஆண்டில், `Thimmakka Mathu 284 Makkalu’  என்னும் ஆவணப்படம் எடுக்கப்பட்டு, இது 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

கர்நாடக மத்திய பல்கலைக்கழகம், சுற்றுச்சூழலுக்குத் திம்மக்கா செய்த பங்களிப்பைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் அறிவித்தது. இதையடுத்து நேற்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.எம்.மல்லேஷ்வரய்யா பெங்களூருவில் உள்ள திம்மக்காவின் வீட்டுக்குச் சென்று டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட திம்மக்கா “சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடும் பெண்களுக்கு இந்தப் பட்டத்தைச் சமர்ப்பிப்பதாக” தெரிவித்துள்ளார்.

2016 ல் பிபிசி வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக திம்மக்கா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்